Saturday, December 27, 2014

சக்தி அருள்வாய் சிவனே

மனித உடலில்  எதிர்ப்பு சக்திகள் குறைந்தால்  நோய்கள் தாக்குவது எளிதாகி விடுகிறது என்கிறார்கள். எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே நம்மைக் கவசம் போல் காப்பாற்றும். அதற்காகச்  சத்துள்ள உணவை  உட்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.அது மட்டுமல்ல. நியமம்,விரதம், தியானம்,ஜபம் போன்றவையும் நம்மைக் கவசமாகக் காக்கின்றன என்று பெரியோர் கூறுவர்.  துன்பம் வந்தபிறகு கடவுளைத் தொழுவது, நோய்ப்பட்டபின்பு மருந்தைத் தேடுவது போலத்தான். வருமுன் காப்பதே உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பதால் பிராணாயாமம், தியானம்,ஆலய வழிபாடு  போன்றவற்றை நமது  முன்னோர் கடைப்பிடித்து, நல்வழி காட்டியுள்ளனர்.

 ஒருவகையில் பார்த்தால் ஆலயங்களையும் இவ்வரையறைக்குள் இணைத்துப் பார்க்கலாம். மேற் சொன்ன நியமம் , நெறிமுறை ஆகியவற்றோடு ஆலய பூஜைகள் நடைபெற்றால் மூர்த்தியின் சாந்நித்தியம் அதிகரித்து, வேண்டுவோர் வேண்டிய வரமனைத்தும் கிடைக்கும். . இவ்வளவு நடைபெற்றும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் ஆகமமுறையில் நடத்துவதால் மூர்த்திகரம் அதிகரிக்கிறது.

நம்மை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நோய்கள் மட்டுமல்ல. நம்மையும், நம் ஊராரையும், நம் சமயத்தையும் , நம் நாட்டையும் எதிர்க்கும் சக்திகள் ஒன்று திரண்டு வரும்போது செயலற்றுப் போய் விடுவோம். அதற்குப் பிறரைக் காரணம் காட்டுவதைக் காட்டிலும் நமக்கு எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். எதிர்ப்பு என்றால் மற்றவர்களுடன் சண்டை போடுவது என்று அர்த்தம் அல்ல. நம்மிடம் நியமமோ,மந்திர பலமோ, நம்பிக்கையோ, நித்திய வழிபாடோ  குறைந்தால் இதை எல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். எங்கோ சிலர் இன்னமும் பழைய நெறிகளோடு வாழ்வதால் இந்த அளவாவது நாம் காப்பாற்றப்படுகிறோம் .

உலகம் உய்ய அந்தணர்கள் நித்திய கர்மாவுடன்,அழல் ஓம்பவேண்டியதை, " எரி  ஓம்பிக் கலியை வாராமே  செற்றார் " என்று சம்பந்தர்  அருளுவதால் அறியலாம்.  மூவேளையிலும் காயத்திரி மந்திரத்தால் உபாசிப்பதோடு  விடுமுறை நாட்களில் ஆயிரம் முறை ஜபம் செய்வதால் தனக்கும் ஊருக்கும் நன்மை ஏற்படுவதோடு அதுவே கவசமாகக் காக்கும் என்பதையும் உணர வேண்டும். உலகியலிலிருந்து கொஞ்சமாவது விலகி நியமத்தோடு வாழ முயல வேண்டும். அப்போது எந்த எதிர்ப்புச் சக்தியும் நம்மை நெருங்க அஞ்சும். செய்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கோவில் நடைமுறைகளும் நியமத்தோடு விளங்கினால் ஆலயங்களுக்குள் தவறுகள் நடக்க இடம் தராது. இல்லாவிட்டால் சன்னதிகள் காட்சிக் கூடங்கள் ஆகி விடும். வியாபார நோக்கில்/லாப நோக்கில் செயல் படும். வழிபாட்டு நோக்கமே பாழாகி விடும். ஒரு கால பூஜையே செய்ய முடிகிறது என்னும்போது சாந்நித்தியத்தை எப்படி எதிர் பார்ப்பது ?

திருக்குளங்களைச் சுற்றிலும் சிறுநீர் கழிப்பது, குப்பைகளைக் கொட்டுவது என்று நெறிகெட்டு இருக்கும்போது, திருக்குளத்தின் புனிதத்துவத்தை எப்படிக் காப்பாற்றுவது ? அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? அனைத்து  நதிகளும் வந்து சேரும் புனிதம் வாய்ந்த கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் பாருங்கள் !  இப்படி அதன் சாந்நித்தியம் பறிபோவதால் பிற மதத்தவர்  குளத்தைச் சுற்றித் தங்கள் பிரசார போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் !  இதற்கெல்லாம் மூல காரணம் என்ன ? நம்மை நாம் சுத்தப் படுத்திக் கொள்ளாமல் மனம் அழுக்கேற விட்டிருக்கிறோம் என்பதே. நமது ஆலயம், நமது திருக்குளம் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். இந்த சுய சக்தியை / ஆத்ம சக்தியைத் தான் எதிர்ப்பு சக்தி என்கிறோம். பிரளய  காலத்தில் மீண்டும் சிருஷ்டி பீஜத்தைக் கும்பத்திலிருந்து வெளிக் கொணர்ந்து உலகைத் தோற்றுவித்துக் காத்தருளும் ஆதி கும்பேசுவரப் பெருமானே இந்த ஞானத்தையும் சக்தியையும் அருள வேண்டும். 

Thursday, December 25, 2014

ஸ்ரீ வாஞ்சியத்தில் நடந்த அட்டூழியம்

குப்த கங்கையும் திருக்கோயிலும் 
சிவமுக்தி தரும் தலங்களுள்  நன்னிலத்திற்கு 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  ஸ்ரீ வாஞ்சியமும்  ஒன்று. மூவர் தேவாரமும் இதற்கு உண்டு. திருவாசகத்திலும் இதன் பெருமை  பேசப்படுகிறது. கார்த்திகை ஞாயிறுகளில் இங்கு உள்ள குப்த கங்கை என்ற திருக்குளத்தில் நீராடுவோர் ஏராளம். வெளிப் பிராகாரத்தில் யமனுக்குத் தனி சன்னதியும் உண்டு. இங்கு மட்டுமே, சுவாமிக்கு யம வாகனம் உண்டு. இப்படிப் பல்வேறு பெருமைகளை ஏற்கனவே கொண்டுள்ள இத்தலத்திற்கு மேலும் நாம் பெருமை சேர்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாகக் களங்கம் விளைவிக்கக் கூடாது. இதை  எல்லாத்   தலங்களுக்கும் பொதுவாகச் சொல்வதாகக் கருத வேண்டும்.

 திருவள்ளுவர் எத்தனையோ நீதிகளை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றும், இன்று நாம் நடை முறையில் பார்ப்பது என்ன ? கள் உண்ணாமை, புலால் உண்ணாமை என்று அவர் சொல்லியும் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் மக்களை என்னென்பது!   வாயளவில் குறளைப் புகழ்ந்து விட்டு இரட்டை வேடம் போடும் போலிகளா  தமிழர் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது ?  வெட்கப்பட வேண்டிய விஷயம் .

இவர்கள் எப்படியாவது தொலையட்டும் ,  திருத்தப் பட மாட்டாத ஜன்மங்கள் என்று விட்டு விடுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எதையாவது தின்றுவிட்டு வீட்டோடு  இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நடுத் தெருவிலும் மக்கள் மத்தியிலும் அட்டகாசம் செய்கிறார்கள். நம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற திமிர் வேறு!  இந்த அக்கிரமத்தைக் கோவிலிலும் சென்று தொடருகிறார்கள். என்பதைக் காணும் போது கேவலமாக இருக்கிறது. குடித்த வாடையோடு இவர்களும் சேவார்த்திகள் அருகில் நிற்க எப்படித்தான் துணிந்து வருகிறார்களோ தெரியவில்லை. குடித்துவிட்டு சுவாமி தூக்க வருபவர்களைக் கோவில் நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது?

சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல்லக்கின் உள்ளே, சிலர் குடித்துவிட்டுக் கிடந்ததைச் செய்தித் தாளில் பார்த்தோம். அதன் பின்னர் கோவிலார் என்ன விசாரணை செய்தார்கள் என்பதோ என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றோ மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஸ்ரீவாஞ்சியம் கோவில் வளாகத்திற்குள் உள்ள நிர்வாக அதிகாரியின் அறையில் இப்படிப்பட்ட செயல்கள் நடந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு அறநிலையத்துறை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது அந்த வாஞ்சிநாதப் பெருமானுக்கே  தெரியும்.

கார்த்திகை ஞாயிறுகளில் நம்பிக்கையோடு செல்லும் பக்தர் கூட்டம் இம்முறைகேட்டை ஏன் தட்டிக் கேட்பதில்லை? உள்ளூர்க் காரர்களும் ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை? மடாதிபதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. இதில் அவர்களது பங்கு முக்கியம் இல்லையா? ஆர்வலர்கள் பலர் முகநூலில் கருத்துத் தெரிவிப்பதோடு சரி. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் ஏற்படப்போவதில்லை. களத்தில்  இறங்கி எதிர்க்க வேண்டிய காலம் இது. முன்னின்று நடத்துவார் எவரும் இல்லாதது குற்றத்தை மறைமுகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது போல இருக்கிறது.  இந்த அக்கிரமத்தைப் பத்திரிக்கையாவது வெளிக்கொண்டு வந்ததால் அரசின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உண்டு. அப்பத்திரிகைக்கு நமது நன்றி.

சேவார்த்திகள் தங்களுக்கு உள்ள உரிமைகளை  மறந்து விடுவது நல்லதல்ல. கோவில் வளாகத்துள் செருப்போடு திரிபவர்களையும், எச்சில் துப்புவோரையும்,திருக் குளத்தை அசுத்தப்படுத்துவோரையும் ,மலஜலம் கழிப்போரையும் சீட்டு விளையாடுவோரையும், குடிபோதையில் வருவோரையும் தட்டிக் கேட்கத் தயங்கம் காட்ட வேண்டாம். இதையெல்லாம் அவர்கள் வேறு எங்காவது செய்து தொலையட்டும். ஆலயத்தின் புனிதம் கெடும்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காணாதது போல் நமக்கேன் என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு வந்தது போதும். இனியாவது தட்டிக்  கேட்போம். திருத்துவோம். கோயில்களின் புனிதம் காப்போம்.நல்ல சமுதாயம் உருவாக நம்மால் ஆனதைச் செய்வோம்.  

Tuesday, December 16, 2014

கோயிற் கலைப் பாதுகாப்பு

கலைகள் கற்கப்படவேண்டியவை. ஆதரிக்கப்படவேண்டியவை. நுட்பமாக ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டியவை. பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியவையும் கூட. அதேபோல் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதெல்லாம் நெடுங்காலமாக நடந்துவந்தபோதிலும், இந்த விஞ்ஞான யுகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. வலைத்தளங்கள் மூலமும் செய்தித் தாள்கள் மூலமும்,பத்திரிகைகள் மூலமும் நம் வீட்டுக்கே வந்து சேர்ந்து விடுகின்றன.

எத்தனையோ கலைகள் இருந்தபோதிலும், கோயில் சம்பந்தமான  கற்சிற்ப- உலோக சிற்ப - மர  சிற்ப வேலைகள் பல தலைமுறைகள் ஆனாலும் அக்கலைஞர்களின் பெருமையைப் பகர்வதாக  இருப்பதை மறுக்க முடியாது. இவை எல்லாம் நேரில் சென்று அனுபவிக்க வேண்டியவை. நேரில் செல்ல முடியாதவர்கள்  புகைப்படங்கள் மூலம் அவற்றின் அழகை உணரமுடிகிறது என்றாலும் அதன் மறுபக்கம் அச் சிற்பங்களுக்கே ஆபத்து விளைவிப்பதாக ஆகிவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

 நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு, படங்களை வெளியிட்டுப்  பத்திரிகைகள் ஊதிக் கெடுத்து விட்டன. விக்கிரங்களின் மதிப்பை வியாபார ரீதியில் மதிப்பிட்டுச்  செய்திகளை வெளியிடுகின்றன. இந்தத் தவறான அணுகு முறையால்  பலர் அவற்றைக் களவாடத் துணிந்து விட்டனர். களவு போனவற்றில் சில மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவையும் பெரும்பாலும் உரிய கோயில்களில் சேர்ப்பிக்கப் படாமல் பாதுகாப்பு என்ற பெயரில் வேறு மையங்களுக்கு அடைக்கலமாக அனுப்பி வைக்கப் படுகின்றன.

தேர்நிலைகளுக்குப் பாதுகாப்பு இல்லாததால் மரச் சிற்பங்கள் பல இடங்களில் களவாடப்பெற்று சக்கரமும்,மரக்கட்டைகளுமே எஞ்சிய நிலையில் தேர்கள் காட்சி அளிப்பதைக் கண்டால் மனம் பதறுகிறது. புதிதாகச் செய்யப்படும் தேர்களில் பழைய கலைநுட்பத்தைக் காண முடியுமா?

உற்சவ மூர்த்திகளின் நிலையும் அதேபோலத் தான். பத்திரிகைகளும் வலைத்தளங்களும் படங்களை வெளியிடுவதால் அவற்றுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆலய மூலவர்களையும் உற்சவர்களையும் புகைப்படம் எடுத்துப்  பத்திரிகைகளிலும், முகநூலிலும் (Face book) வலைத்தளங்களிலும், வெளியிடுகிறார்கள். தகுந்த பாதுகாப்பு இல்லாத ஆலயங்கள் ஏராளமாக இருப்பது தெரிந்தும் இவ்விதம் செய்யலாமா? எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் செய்தோம் என்பர். ஆனால் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லாத நிலையை அது ஏற்படுத்தக்கூடும் என்று இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

பிராகாரங்களில் உள்ள மூர்த்திகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எந்த மூர்த்தியையும் தயவு செய்து படம் எடுத்து வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அன்னியர் படைஎடுப்பினால் பல கலைச் செல்வங்களை இழந்தோம். பணத்தாசை பிடித்த நம் நாட்டுக் கயவர்கள் எஞ்சியவற்றைக் களவாடவோ அன்னியருக்கு விற்கவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இது வரை வெளியிட்ட படங்களே போதும். முடிந்தால் இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள படங்களை, உரியவர்கள் பெரிய மனத்தொடு நீக்கிவிடுவது இன்னும் நல்லது.

இவ்வளவு களவு போயும் அறநிலையத்துறை உறங்கிக்கொண்டு இருப்பது வேதனை தான். சுற்றுச் சுவரே இல்லாமல் ஆலயங்கள் இருப்பதைக் கண்டும் காணதது போல் இருப்பதுதான்  அவர்கள் செய்யும் நிர்வாக லட்சணமா ? உற்சவர்களை  இடம் மாற்றி விட்டது போல் ,தேவ -    கோஷ்டங்களையும்  மூலவர்களையும் அப்படி மாற்றிவிடுவார்களோ என்னவோ?

வேதனைக் குரல் எழுப்ப வேண்டியவர்களும் , மடாதிபதிகளும் வாய் திறவாமல் இருப்பது அதை விட வேதனை. அதற்காக நாமும் மௌனிகளாகி விடக் கூடாது. மூர்த்தி களவாடப்பட்ட ஊரிலேயே அவ்வூர் மக்கள் கவலைப்படாமல் இருக்கும்போது நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அடியார் கூட்டங்கள் இவ்வளவு இருந்தும் கோயில்களுக்கு எப்பொழுது விடியல் வருமோ தெரியவில்லை. பாட்டுப் பாடுவதும், வாத்தியங்கள் இசைப்பதும் மட்டுமா நமது பொறுப்பு? பாதுகாப்பே பறந்தோடும்போது எதை நோக்கிப் பாடுவது? எதை நோக்கி இசைக் கருவிகளை முழக்குவது? 

Monday, December 1, 2014

உழவாரப் பணி செய்ய ஏற்ற காலம்

திருப்பணி என்றால் கோயிலைப் புதிப்பிக்கும் கட்டுமானப் பணி  மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இறைவனுக்குச் செய்யப்படும் எல்லாப்பணிகளும் திருப்பணிகள். பிற வேலைகளைப் " பணி" என்று மட்டும் குறிப்பிடுகிறோம். கோவிலைச் சுத்தம் செய்யும் அலகைத் " திரு அலகு " என்கிறோம்.கோவிலுக்கு அலகிடுதல்,மெழுகுதல்,பூமாலை தொடுத்துச் சார்த்தச் செய்தல்,நந்தவனத்தையும், திருக்குளத்தையும் நன்கு பராமரித்தல், உழவாரப்பணி செய்தல் முதலியவை இத் "திருப்பணி" யில் அடங்கும். எனவே அடியார்களும் தம்மால் இயன்றவரை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது தினமும் செய்து வர வேண்டும். உழவாரம் கையில் ஏந்தி நித்தலும் திருக்கோயிலைச் சுத்தம் செய்துவந்தார் திருநாவுக்கரசர். ஆனால் நாமோ. " என் கடன் பணி செய்து கிடப்பதே "என்று வாயளவில் மட்டும் சொல்லிக்கொண்டு, பிராகாரங்களில் புதர்கள் மண்டிக் கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டுக்  கோவிலுக்குச் சென்று வருகிறோம்.

பல ஊர்களில் உழவாரப் பணி மன்றங்கள் செயல் படுகின்றன. மாதம் தோறும் குழுக்களாகச் சென்று உழவாரப்பணி செய்கிறார்கள். மாதம் ஒரு கோவில் என்று இப்படிச் செய்தாலும், ஒரு விஷயத்தை நாம் இங்கே  குறிப்பிட வேண்டியிருக்கிறது. மண்வெட்டி, கடப்பாரை அரிவாள் ஆகியவற்றால் செடி,கொடி மரங்களை அகற்றினாலும் பல இடங்களில் அவை வேரோடு முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை. அடுத்த மழை பெய்ததும் அவை மீண்டும் அதே இடத்தில் ஆக்ரோஷத்துடன் வளர ஆரம்பித்து விடுகின்றன. பணி மன்றமோ மீண்டும் அதே கோவிலுக்குச் செல்லாமல் வேறு கோவில்களுக்குச் சென்று  உழவாரம் செய்வதால், ஏற்கனவே உழவாரம் செய்த அரும் பணி வீணாகப் போய் விடுகிறது.

உழவாரப்பணி செய்வதற்கு ஏற்ற காலம் மழைக் காலம் என்று பலமுறை சொல்லியும், பழையபடி சௌகரியப்பட்ட நாட்களில் செய்யும் முறையே பின்பற்றப்படுவதால் எதிர் பார்த்த பலன் விளைவதில்லை.மழை பெய்து நின்றவுடன் பூமி ஈரமாக இருப்பதால், ஒரு  அடி வரை வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளைப் ப்ராகாரங்களிளிருந்து கையாலேயே வேரோடு பிடுங்கி விட முடியும். இதனால் உபகரணங்களைக் கொண்டு நாள் முழுவதும் செய்தும் வேரோடு அகற்ற முடியாமல் போவது தடுக்கப்படுகிறது. நெடிது வளர்ந்த மரங்களையும் முட்புதர்களையும் மட்டும் பிற நாட்களில் வெட்டலாம். இதன்மூலம் பெரும்பாலான சிறு முட் செடிகள் வளர்ந்து பெரிய மரங்கள் ஆவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.

உழவாரப்பணிகளைப் பெரும்பாலும் வெளியூர்க்காரர்களே வந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரியோ அல்லது உள்ளூர் மக்களோ போதிய கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மரங்கள் மண்டிப்போய் மதில்களும் மண்டபங்களும் விழும் அபாயம் நேரிடுகிறது. பிராகாரங்கள் வலம் வரும் நிலையில் இல்லை. மேலும் பாம்புப் புற்றுக்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. மழைகாலங்களில் பாம்புகள் கோவிலுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றன. நிலைமை இப்படி இருந்தும் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை! உள்ளூர் மக்கள் மழை நின்றவுடன் கைகளால் ஆளுக்குப் பத்து செடிகளைக் களைந்தாலே ஓரளவு பிராகாரங்கள் சுத்தமாகிவிடும். எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் வந்து செய்து கொள்ளட்டும் என்று இருப்பது தவறு. நம் ஊர்க் கோவிலுக்கு நாம் தான் முன்னின்று பணி செய்ய வேண்டும். அடுத்தவர்கள் துணை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படித் துணை செய்ய முன்வருபவர்களுக்கு வேண்டிய தேவைகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

நாம் கோவிலுக்குச் செல்வதால் கோவிலுக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் விளைய வேண்டும். இதை மனத்தில் வைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யப்போக வேண்டும்.அப்பொழுது நமக்கும் அடியார்களுடன் இணைந்து பணி ஆற்றும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. சுய நல எண்ணம் நம்மை விட்டு நீங்கத் தொடங்கி விடும். செய்து பார்த்தால் தானே அதன் அருமை புரியும்?  

Saturday, November 29, 2014

தாய் மொழியும் வட மொழியும்

மொழி என்பது நம் எண்ணங்களைப் பிரதிபலித்துப் புரியவைப்பதற்காகவே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் வாழும் இடம் தாண்டி வேறோர் இடத்தில் வேறு மொழி பேசப்படுமானால் அம்மொழியையும் தேவையானால் கற்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் அங்கு உள்ளோரிடம் நம் எண்ணங்களைப் புரியவைக்க முடியும். அவ்வளவே. அதை விட்டு விட்டுத் துவேஷ அடிப்படையில் இதைப் பிரச்சனை ஆக்குவது வாடிக்கை ஆகி விட்டது.

ஒருவனது தாய் மொழி காலத்தால் மிகவும் பழையதாக இருக்கலாம். எல்லா மொழிகளும் ஒரே காலகட்டத்தில் தோன்ற முடியாது. மேலும் நாளடைவில் அவை பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன. அதை வைத்துக்கொண்டு பிற மொழிகளை வெறுப்பதோ,ஒதுக்குவதோ முறை ஆகாது. நமது தாய் மொழியில் பற்று இருக்க வேண்டுவது அவசியம் தான். சூழ்நிலைகளால் மொழி ஏற்கப்படாமலோ, வளர்ச்சி பெறாமலோ ஆகி விடலாம். அந்தக் கோபத்தைப் பிற மொழிகளிடம் காட்டுவது எப்படி நியாயமாகும்?

பணம் பணம் என்று அலையும் இக்காலத்தில், தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்படி , பள்ளிப் படிப்பிலேயே அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பெற்றோருடைய பங்கும் உண்டு. வேலைக்குப் போனபின் , படித்தவை பெரும்பாலும் மறந்து விடுவது வேறு விஷயம்! அதே நேரத்தில், வழக்கில் பிற மொழிக் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.காலம் காலமாக கட்டிக் காத்த மொழி அழிந்து விடுமோ என்ற அச்சமும் பலருக்கு ஏற்படுகிறது. மொழியை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதால் மட்டும் என்ன சாதிக்க முடிந்தது?

பிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் ஹிந்தியைக் கற்பதைக்  காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது மொழிகளைக் கற்காமல் ,பிற நாட்டு மொழிகளைக்  கற்கிறார்கள். அந்த நாடுகளுக்குச்  சென்றால் பயன் படுமாம்! அப்படி எத்தனை பேர் போகப்போகிறார்களோ தெரியவில்லை. அப்படிப் போவோர்களுக்காக இங்கு இருப்பவர்களும் அவர்களோடு சேர்ந்து நம் நாட்டு மொழிகளைப் புறக்கணிக்கவேண்டுமா?

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு அதன் இலக்கியங்களில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதிலும் பக்தி இலக்கியங்களால் அம்மொழி வளம் பெற்றதை ஒருக்காலும் மறக்கலாகாது. பக்தி இலக்கியங்களை ஒதுக்குவதும் தமிழை ஒதுக்குவதும் ஒன்றே. தெய்வத்தமிழ் என்ற தனிச் சிறப்பு இதன் மூலமே பெறப்பட்டது. இதேபோன்று, காலத்தால் மிகப்பழையதும், பக்தி இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் ஆன வட மொழியை நாம் போற்ற வேண்டும். இந்தியத் தாய்நாட்டில் ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் பொதுவாக இருப்பதுபோல் வழிபாட்டு மொழியும் சமஸ்கிருதமாக இருந்து மக்களை இணைக்கிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது பாடமாக  சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்  என்று புரியவில்லை.பிற நாட்டு மொழிகளைக் கற்றால் தான் கெளரவம் என்பதாலா? ஒன்பதாம் வகுப்பு முதல் இரு மொழிகள் தானே கற்கப்போகிறார்கள். அதுவரையிலாவது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் மொழியைக் கற்பதில் என்ன தவறைக் கண்டுவிட்டார்கள்? மொழி துவேஷத்தைத் தவிர வேறு காரணம் புலப்படவில்லை.

வட மாநிலத்தவர் இங்கு வந்து திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசும் போது மட்டும் காது குளிரக் கேட்கிறோம்.  நம் வீட்டுக் குழந்தைகள் திருக்குறள் , தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வத்தமிழ் நூல்களைக் கற்க வழி வகுக்கிறோமா என்று ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல் இது. அதுவரையில் தமிழ், வட மொழி இரண்டையும் இரு கண்களாகப் போற்றிவந்தனர். கோயில்களில் வழிபாட்டை வட மொழி ஆகமப்படியும் , தோத்திரத்தைத் தமிழ் மறைகளாலும் செய்து வந்த காலம் போய் இரண்டும் கெட்டு விடும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு மணலிலோ , சிலேட்டுப் பலகையிலோ தாய்மொழியில் கையைப்பிடித்துக் கொண்டு எழுதச் சொல்வர். விஜயதசமி அன்று சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, பள்ளியில் சேர்ப்பார்கள். இப்பொழுது, குழந்தை பேச ஆரம்பித்தது முதல் ஆங்கிலத்தையே போதிக்கும் பெற்றோர்கள் இருக்கும்போது எதை நொந்து கொள்வது?

எல்லா மொழியாலும் துதிக்கப் படுபவன் இறைவன் என்கிறது சம்பந்தர் தேவாரம். திருவொற்றியூர்  இன்னம்பூர்  ஆகிய ஊர்களில் இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்று பெயர். அப்படியானால் அப்பெருமான் தமிழ் மொழியை மட்டும் அறிந்தவனாகக் கொள்ள முடியுமா? தாய் மொழி எதுவானாலும் எல்லா மாநிலத்திற்கும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் பொதுவானதாக உள்ளது. எல்லா மாநிலத்தவர்களையும் வழிபாட்டு அளவில் இணைக்கும் பாலமாக அது விளங்குகிறது.எனவே அம்மொழியைப் பள்ளிக்கூட அளவில் எட்டாம் வகுப்பு அளவிலாவது தெரிந்து கொள்வது நல்லது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வர். முடிந்தால் மக்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும். மக்களைப் பிரிக்கும் பாவச்செயலில் இறங்க வேண்டாம். கலைவாணியின் அருள்  அனைவருக்கும் கிட்டுவதாக.      

Friday, November 7, 2014

அன்னாபிஷேகமா அன்னாலங்காரமா ?

அலங்காரம் செய்வது என்பது ஒரு கலை. வரம்புகளுக்கு உட்பட்டு செய்யப்படுவது. சொந்தக் கற்பனை சிறிதளவு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவு மீறப்படும்போது அது பரிமளிக்காததோடு, வரம்புமீறல்கள் அதிகரிக்கவும் வழியாக அமைந்துவிடும். கோயில் வழிபாட்டு முறைகளில் இது எவ்வளவு தூரம் உண்மை என்பது பலருக்குத் தெரியும். வழி வழியாகச் செய்யப்படுவதை மையக் கருத்தாகக் கொண்டு, ஒருசிறிதளவு மட்டும் கற்பனை சேரும்போது பாரம்பர்யத்திற்குக் குந்தகம் நேராதபடி  காப்பாற்றப்படுவதைக் காணலாம்.

திருவிழாக்கள் வரும்போது வழிமுறைகளில் மாற்றங்கள் காணப்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். உதாரணத்திற்கு , சந்தனக்காப்பு என்று எடுத்துக்கொண்டால்  மூல மூர்த்தியின் உருவ அமைப்பில் மாற்றம் செய்யப்படாமல் சந்தனத்தைச் சார்த்தி, அதன்மீது வண்ணக் கலவைகளையும்,ஜரிகைகளையும் உபயோகித்து , அலங்காரம் சோபிக்கும் படி செய்வது வழக்கம்.

 மூலவருக்குக் கை ,கால் முதலியவற்றை இணைத்து, ஆண்டுக்கொரு அலங்காரம் என்று சொல்லிக்கொள்ளும் "அலங்கார ரத்தினங்களும்" இருக்கிறார்கள் . உற்சவருக்கோ இத்தகைய இணைப்புகள் சகஜமாகி விட்டன. " புதிய "கைகளில் சூலம் ஏந்தியபடியும் கால்களை இணைத்து மூர்த்தியை பெரிதாகக் காட்ட முயல்வதும் , மூர்த்தியின் இயற்கை வடிவை அடியோடு மாற்றி , என்ன சுவாமி ஊர்வலம் வருகிறார் என்று கேட்க வைத்து விடுகிறது. நகை சார்த்துவதோ,, மாலைகள் சார்த்துவதோ மூர்த்தியின் உருவ அமைப்பை மறைக்காதபடி இருக்க வேண்டும். பிள்ளையாரையாவது தும்பிக்கையை வைத்துக் கண்டு பிடித்து விடலாம். மற்ற மூர்த்திகளை முகம் மட்டும் தெரிவதை வைத்துக்கொண்டு எவ்வாறு கண்டுபிடிப்பது ???




                                                                                                                                                                                                                                                                                                                                 

மூலஸ்தான மூர்த்திகளுக்கு  அலங்காரம் செய்யப்படும்போது சொந்தக் கற்பனையை கொஞ்சம்  குறைத்துக் கொண்டால் நல்லது. எடுத்துக் காட்டாக, ஐப்பசி மாத அன்னாபீஷேகத்தில், அன்னம் அபிஷேகிக்கப்படுவதைக் காட்டிலும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவகையில் பார்த்தால் தினமும் செய்யப்படும் பல்வேறு அபிஷேகப்பொருள்களில் அன்னமும் ஒன்று என்பதை சிதம்பரம் கோயிலில் நடைபெறும், சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் அறிவார்கள்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீச்வரருக்கு அன்னாபிஷேகம் மணிக்கணக்கில் அனைவரும் காணும்படி அபிஷேகமாகச் செய்யப்படுகிறது.
கண் கொள்ளாக் காட்சி அல்லவா அது

அலங்காரம் என்னும்போது, அன்னத்தை அபிஷேகம் செய்தபின், நிறைவாக அன்னம் கலையாதபடி மாலைகள் சார்த்தலாம் . அப்பம்,வடை ,பட்சணங்கள், காய்கறிகள் ஆகியவைகளைக் கொண்டு சிவலிங்க மூர்த்திக்கு அலங்காரம் செய்யப்படுகியது. இவற்றால் அலங்காரமே பிரதானமாக ஆகிவிடுகிறது அல்லவா/ பிறவற்றை சுவாமிக்கு முன்பு வைத்து நைவைத்தியமாகச் செய்தால், மூலவரை அன்னாபிஷேகத்தில் முழுமையாகத் தரிசிக்கலாமே என்ற ஆசையால் இந்த எண்ணம் தோன்றுகிறது.

இது ஒருபக்கம் இருக்கும்போது, பல இடங்களில், அன்னத்தின் மீது முகம் வரைகிறார்கள். மேலே சொல்லியபடி இது எல்லோ ருக்கும் எளிதில் கைவராத  கலை.இன்னும் சொன்னால் முகத்தை  அழகாக அமைக்கத் தெரியாமல் கோரப்படுத்தி விடுகிறார்கள். அதில் ஒட்டு வேலைகள் வேறு!! சிவாசார்யப் பெருமக்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாபிஷேகத்தில்  அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் தந்து, கற்பனைகள் இல்லாமல், ஆராதித்தாலே, பரமேச்வரனைத் திருப்தி படுத்துவதோடு, சேவார்த்திகளும் மகிழ்வர். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக அலங்காரம் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டம் இந்த வைபவத்தில் தவிர்க்கப் படலாம் அல்லவா?  அன்னத்திற்குப் பதியான பசுபதியை நன்றியுடன் ஆராதனை  செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் சென்று சேர வைப்பது சிவாச்சார்யப் பெருமக்களின் கரங்களில் உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்து நமக்கு வழி காட்டுவார்கள் என நம்புகிறோம்.
  

Friday, October 31, 2014

" முன்னவனே , முன் நின்று அருள் "


ஆலயத் திருப்பணி செய்பவர்களை " திருப்பணிச் செல்வர் " என்றும்    திருப்பணிச் சக்கரவர்த்தி " என்றும் தற்காலத்தில் பட்டங்கள்  தந்து கௌரவிக்கிறார்கள்.  உண்மையில் பார்த்தால் இவர்கள் ஏற்கனவே செல்வந்தர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரிய மனம் படைத்தவர்களாக இருப்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். ஒருகாலத்தில் பிரம்மாண்டமான அளவில் இதனைச் செய்த மன்னர்களுக்கும், அண்மைக்காலத்தில் திருப்பணிகள் பல செய்த நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் கிடைக்காத கெளரவம் இது. காளஹஸ்தி கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரையும் திருப்பணிச் செட்டியார் என்றுதான் அழைத்தார்கள். இதுவோ  பட்ட மழை பொழியும் காலம்!.

உண்மையில்,இந்தப் பட்டங்களுக்கெல்லாம் சொந்தக்காரன் யார்  தெரியுமா? பரமேச்வரன் தான். அவன்தான் " செல்வன்"  " சக்கரவர்த்தி " என்ற  புகழுக்கெல்லாம் உரியவன். திருஞான சம்பந்தரும் , " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்றார். கையில்  செல்வமே இல்லாத அடியார்  ஒருவர்  வீதிதோறும் கையில் பாத்திரம் ஏந்தியவராக, " சிவ தர்மம் " என்று அறைகூவி, அதனால் கிடைத்ததைக்கொண்டு கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலைத் திருப்பணி செய்தார்.  கண் இரண்டும் இல்லாத தண்டியடிகள் நாயனார், திருவாரூர் கமலாலயத்தில் கயிறைப் பிடித்தவாறு  மெதுவாக இறங்கிக் கைகளால் மணலை  வாரிக் கரையில் சேர்க்கும் தூர்வாரும் தொண்டினைச் செய்து வந்தார். நமிநந்தி அடிகள் நாயனாரோ, அக்குளத்து நீரால் தியாகேசப் பெருமானுக்குத் தீபம் ஏற்றினார். திருக்குளத்தின் மகிமையும், அதில் திருப்பணி செய்த அருளாளர்களின் பெருமையும் அளவிடற்கரியது.

திருவாரூரில் " கோவில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி , செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி  " என்பார்கள். அத்திருக் குளத்தைக் கமலாலயம் என்பார்கள். சோழர் காலத்தில் அது "தீர்த்தக் குளம் என்று அழைக்கப்பட்டது. பங்குனி உத்திரம் முதலிய விசேஷ நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதும் இங்குதான். இதில்  64 புனித கட்டங்கள் இருப்பதாகக் கூறுவர். திருவாரூர்த் திருக் கோயிலையே  கமலாலயம் என்று கூறுவதும் உண்டு. வன்மீக நாதர் சன்னதிக்குப் பின்புறம் மகாலக்ஷ்மியின் சன்னதி உள்ளது. திருமகள் பூஜித்ததால் திருவாரூர், கமலாபுரம், ஸ்ரீ புரம் ,   கமலா நகரம்,ஸ்ரீ நகரம் என்றெல்லாம் போற்றப்படுவது இந்த ஊர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விட்டது. பெரிய மனிதர்கள் வரை எல்லோரும் பார்த்தும் அதனைச் சரி செய்ய வில்லை. சமீபத்தில் பெய்த மழையால் சுவற்றின் இன்னொரு பகுதியும் இடிந்து விட்டது. இந்நிலையில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராததாலோ என்னவோ, அரசின் இந்து சமய அறநிலையத்துறையே முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான டெண்டர் விவரம் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறது. மேற்குப் புறம் உள்ள சுவற்றைத் திரும்பக் கட்ட உத்தேச மதிப்பீடு ரூ 7644018 என்று வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையில் கும்பாபிஷேகமே செய்து விடலாமே என்று கேட்கத்தான் செய்வர். உயரம் குறைவாக உள்ள அச் சுவருக்கு இவ்வளவு ஆகுமா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படியே ஆனாலும், வேலையின் தரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழாமலும் இல்லை. இப்படி ஒப்பந்தம் செய்து விடப்பட்ட வேலைகளின் தரத்தைத் தான் அற நிலையத்துறைக் கோயில்களில் பார்க்கிறோமே!

கட்டுமானப் பொருள்களை அறநிலையத் துறை வழங்கி, உபயதாரர்கள் , கட்டும் பணியைத் தகுந்த ஆட்கள் மூலம் செய்து கொடுத்தால் வேலையின் தரம் நிச்சயம் நன்றாக இருக்கும். ஒதுக்கப்பட்ட தொகை தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படும். இதெல்லாம் நடக்கக் கூடியது தானா என்று நினைக்கக் கூடும். நம்மில் எத்தனை பேர்  இது பற்றிக் கவலைப் படுகிறோம்?   ஏதாவது,யாராவது செய்துவிட்டுப் போகட்டும் என்று தானே கண்ணை மூடிக்கொண்டு செயலற்று இருக்கிறோம்!

ஆயிரம் வேலி நிலங்களைக் கொண்டது எனப்படும் இப்பெருங் கோயில் இப்படி உரிய வருவாய் இன்றி அரசையும், உபயதாரர்களையும் நம்பும்படி ஆகிவிட்டது  கொடுமையிலும் கொடுமை. குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்றில் கோயில் நிலத்திலிருந்து நெல் தவறாமல் வழங்க ஏற்படுத்திய சாசனத்தைப் படித்தால், அந்த வருமானம் இக்காலத்தில் இருந்தால் தியாகேசனது கோயில் திருப்பணிக்கோ, தேர் திருப்பணிக்கோ, திருக்குளத் திருப்பணிக்கோ , திரு விழாக்கள் நடத்துவதற்கோ , கும்பாபிஷேகம் செய்யவோ யார் தயவும் வேண்டியதில்லை தானே !

தில்லையைப்போல் திருவாரூரிலும் அறநிலையத் துறை ஒதுங்கிக் கொண்டு இறை அன்பர்களால் ஆலய நிர்வாகம் நடைபெற்று முறைப்படி வருவாய் வசூலிக்கப்பெற்றால் இது சாத்தியமே ! நடக்குமா என்று கேட்கலாம்.    "முன்னவனே முன் நின்றால்  முடியாத பொருள்  உளதோ " என்றபடி வீதி விடங்கப் பெருமான் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும். அதற்கு நாம் உரியவர்களாவதுதான் முக்கியம். " முன்னவனே,  முன் நின்று அருள் என்று எல்லோருமாக வேண்டினால் தியாகேசன் நிச்சயம் செவி சாய்த்து அருளுவான்.   

Tuesday, October 21, 2014

" தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே "

அனைவருக்கும் இன்ப மயமான தீபாவளி வாழ்த்துக்கள், அதென்ன " இன்ப மயமான தீபாவளி " என்று கேட்கலாம். உலகில் அனைவரும் இன்பத்தை மட்டுமே விரும்புவர். " இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று திருமுறையில் சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக்காட்டுவர்.. யாருக்கு எந்நாளும் இன்பமே வரும்  என்று யோசித்தால், திருமுறையிலிருந்தே விடை கிடைப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.. மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்க வேண்டும்:
 " பெருந்துறைப் பெருமான்,  உன் நாமங்கள் பேசுவார்க்கு இன்பமே வரும்; துன்பம் ஏது உடைத்து ? என்பது திருவாசகம். அதாவது இறைவனை பக்தி செய்து, அவனது நாமங்களையே எப்போதும் இடைவிடாமல்  பேசுபவர்களுக்கு  ( " சிவாய நம  என்று இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று ஔவையார் சொன்னபடி) ஒவ்வொரு நாளும் இன்ப மயம் தான். அப்படிப்பட்ட பக்குவவான்களுக்குத் துன்பத்தையும் இன்பமாகவே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். அவர்களுக்கு எந்த வித அச்சமோ, பாவமோ, நோயோ  அண்டாது. இதைதான் சம்பந்தரும்,  "அச்சம் இலர்  பாவம் இலர் கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு நோயும் இலர் " என்று அருளினார்.  ஒருக்கால் வினைப்பயன் காரணமாக நோய் வந்தாலும் அவர்கள் இறைவனது நாமங்களையே உச்சரிப்பர். இதனை ,   " நோயுளார்  வாய் உளன் " என்றார்  ஞான சம்பந்தர் .

ஆனந்த மயமான தீபாவளிப் பண்டிகையன்று  எத்தனையோ  பேர்  அம்மகிழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் போகிறது என்பதனையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பண்டிகை தினத்தன்று ஆஸ்பத்திரிகளில் நோய்வாய் பட்டுக் கிடப்போர்  , பண்டிகைச்  செலவுகளுக்குத் தேவையான பொருளாதார வசதி இல்லாமல் கவலைப் படுவோர், பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்போர் , உறவினர்  எவரேனும் ஓர் ஆண்டுக்குள் உயிர் நீத்திருந்தால் பண்டிகை இல்லாமல் போகும் நிலை என்று இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்நன்னாளில் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது.  அவர்களும் இனி வரும் ஆண்டுகளில் ஏனையோருடன் மகிழ்ச்சியாக தீபாவளித் திருநாள் கொண்டாடி மகிழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிவபெருமானுக்கு உகந்த சதுத்தசி தின இரவில் உதயத்திற்குச் சற்று முன்பாக இதனைக் கொண்டாடி அவனருளைப் பெறுகிறோம். இறைவன் ஒளி மயமானவன் . ஒளி வடிவானவன். ஒளிக்கு ஒளி தருபவன். சூரியன்,சந்திரன் ,அக்னி ஆகிய மூன்றும் அவனது திருக் கண்கள். எனவே உலகுக்கு ஒரு சுடராய் நிற்கும் அப்பெருமானை தீப ஒளியில் வழி  படுவது மிகவும் பொருத்தம் தானே!  " சோதியே,சுடரே,சூழொளி விளக்கே" என்றும், " ஒளி வளர் விளக்கே " என்றும் ,        " கற்பனை கடந்த சோதி" என்றும் திருமுறைகள் அவனது பெருமையைப் பேசுகின்றன.

கல்விக்கூடங்களில் புன்சென் பர்னர் (Bunsen Burner) என்பதைக் கொண்டு பொருள்களைச் சூடேற்றுவதைப் பலரும் கண்டிருப்பர். அதனை ஒரு நிலைக்குக் கொண்டு வரும் போது, நீல நிறத்தோடு சுடர் எரிவதைக் காணலாம். அதை விட முக்கியம், அச்சுடருக்குள் மற்றொரு சுடரும் தெரிவதைக் காண முடியும். "சோதியுட் சோதி" என்று பரமேச்வரனைத் திருவிசைப்பா வருணிப்பது அப்போது நினைவுக்கு வர வேண்டும். அவனோ சுயம் பிரகாசனாகத் திகழ்பவன்.

ஆகவே, தீப ஒளியைக் காணும் போதெல்லாம், ஒளிக்குக் காரணனாக விளங்கும் சிவனது கருணையை நன்றியுடன் தியானிக்க வேண்டும்.  "தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே, திருவையாறு அகலாத செம்பொற்   சோதி"  என்று அப்பர்  பெருமான் கூறுவதும் இதன் காரணமாகத் தான்.
  சிவசன்னதியில் விளக்கிட்டால் ஞானம் உண்டாகும் என்று தேவாரம் உணர்த்துகிறது. அரச பதவியும் கிடைக்கும் என்று வேதாரண்யத் தல  புராணமும்   கூறுகிறது. வேதாரண்யம் சிவாலயத்தில் தீபத்து நெய்யை ஒரு எலி உண்ண  வந்தபோது, அதன் மூக்கு,  தீபச் சுடரில் பட்டுவிடவே, அதற்குச் சுட்டுவிட்டது. அதனால், மூக்கைப் பின்னுக்கு அது இழுத்துக் கொண்டபோது, தீபத் திரியும் சிறிது வெளிவர, அத்தீபம் முன்பைவிட அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வேதாரண்யப்பெருமான் அந்த எலி, தீபத்தைத் தூண்டிவிட்டதாகக் கொண்டு, அதனை அடுத்த பிறவியில் மகாபலி என்ற அரசனாக்கினார். இதனால், சிவசன்னதியில் விளக்கேற்றுவதன் சிறப்பை அறியமுடிகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்பார்கள். நாம் அங்கு சென்று அந்த அழகைக் கண் குளிரத்  தரிசிக்க வேண்டாமா?

தீபாவளித் திருநாளன்று நம் இல்லங்களிலும், அருகிலுள்ள சிவாலயத்திலும் அகல் விளக்கினை ஏற்றுவோம். வினைகள் அகல வேண்டுவோம்.  விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்ற நிலை இனிமேல் ஒரு கோவிலில் கூட நிகழக் கூடாது. இதனை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு உறுதி மொழியாக ஏற்கலாம். எல்லாவற்றையும் நம் சுகத்திற்காகவே அமைத்துத் தந்த இறைவனுக்குப் பிரதியாக இதைக் கூட செய்யக் கூடாதா? 

Thursday, October 2, 2014

ஆலயத் தூய்மை

நியமம்  என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் நம்மை வகுத்துக் கொள்வது எனலாம். ஒரு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பின்னர் விட்டுவிடுவதை எப்படி நியமம் என்று சொல்ல முடியும்? சண்டேச நாயனார் அருகிலுள்ள மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவி, சிவபூஜையில் தூய பசும் பாலால் அபிஷேகித்து வருவதைத் தினமும் பின்பற்றிவந்ததாகப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மார்க்கண்டேயரது சிவபூஜையும் அப்படித்தான்.            ' நித்தலும் நியமம் செய்து " என்று அதனைச் சிறப்பிப்பார் அப்பர் பெருமான். நியமங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆகார நியமம்,ஆசார நியமம் என்று இப்படிப்பட்டவை நம்மை ஒழுங்குபடுத்தவே ஏற்பட்டுள்ளன. அகத் தூய்மை, புறத் தூய்மை என்பார்களே, அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கண்டதை /அனுபவித்ததை இப்பொழுது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் சரஸ்வதியின் படம் மாட்டியிருப்பார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்தியும், தூய வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்தும் ,தூய வெண்ணிற அன்னம் அருகிருக்க,  தூய நீரோடையின் அருகில் தேவியானவள் ,புத்தகத்தையும், மாசில் வீணையையும் ஏந்திய அருட்கோலம் அது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளே தூய்மையின் வடிவமாகவும் தூய்மையின் இருப்பிடமாகவும் காட்சி அளிப்பது போல் தோன்றியது. நம்மை அறியாமலே, அத் தூய்மைக்குத் தலை வணங்கத் தோன்றியது.அதன் பலன் தானோ என்னவோ திடீரென்று ஒருநாள் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குவந்து அவ்வகுப்பிலேயே தூய்மையாக உடை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருபவன் என்று அறிவித்துவிட்டுப் புத்தகங்களைப் பரிசாக அளித்துச் சென்றது இன்னமும் பசுமையான நினைவாகவும் சரஸ்வதி தேவியின் கருணையாகவும் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.  இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்று நாட்டையே தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது இவ்வாறு  பழைய நினைவைத் திரும்பிப்பார்க்க நேரிட்டது.

சுத்தம்,சுகாதாரம் என்று பள்ளிக்கூடங்களில் சொல்லிப்பார்த்தோம். சுத்தம் சோறு போடும் என்று எழுதியும் வைத்தோம். கண்ட இடங்களில் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் கண்டித்தும் பார்த்தோம். தெருக்களைக் குப்பைக்கூடங்களாக்குவதையும் , ஆறுகளை மாசுபடுத்துவதையும் தவிக்கவேண்டும் என்று ஆண்டு தோறும் கத்தியும் பார்க்கிறோம். கடற் கரை  மணல் களங்கப் படுத்தப்படுகிறது. கண்டு கொள்வாரைக் காணோம்! தூய்மை நாள் அல்லது தூய்மை வாரம் என்று ஒரு நாள் இதையெல்லாம் சரிப்படுத்த முனைவதோடு சரி. தொடர்ந்து கண்காணிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் பரவினால் குப்பை அள்ளுவதும், கொசு மருந்து அடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இந்நிலையில் சுத்தமான இந்தியாவை எப்படி உருவாக்குவது? எத்தனை ஆண்டுகள் தான் நம் மக்கள் அசுத்தத்திலேயே வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்? ஒருவேளை அசுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களோ?

மனத்தூய்மையே இல்லாதபோது புறத் தூய்மை எங்கிருந்து வரும்? தெய்வம் குடிகொள்ளும்  கோயிலுக்கு   உள்ளும் புறத்தும் அசுத்தப்படுத்தும் மக்களை எப்படித் திருத்தப்போகிறோம்?  இன்று காலை சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற போதும் இதே நிலையைத்தான் காண வேண்டியிருந்தது.  வடக்கு மாட வீதியிலிருந்து, மேற்கு கோபுர வாசலுக்குச் செல்லும் பாதையில் கொட்டியுள்ள குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு வீசும் துர்நாற்றத்தைச்  சகிக்க முடியாமல் மூக்கைப்பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை! கோவிலுக்கு ISO சான்றிதழ் பெறுவது முக்கியமல்ல. ஆலயத்தின் தூய்மைதான் இறைவனை வழிபட வருவோர் பெறும் முதல் அருட் பிரசாதம். பல  கோவில்களில் பிரசாதக் கடைகளை அனுமதித்துள்ளதால்   அவற்றைச் சுற்றிலும் எச்சில் இலைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டு   மனம் சுளிக்கத்தான் செய்கிறது. அன்னதானம் செய்யட்டும் . அதே சமயத்தில் அன்னதானக் கூடம் குப்பைக் கூடமாக மாறாமல் இருக்கக் கூடாதா? எனவே , கோயில்கள் அமைதிக் கூடங்களாக விளங்கத் தூய்மைதான் முதல் படி. இதை மக்களும், நிர்வாகிகளும் உணருவது எப்போது?     

Monday, September 29, 2014

மூலவர் தனி நபரா ?

இவர் தனி நபரா ?
ஒரு கால கட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்த கோயில்கள் பலவற்றின் தல வரலாற்றுப் புத்தகங்களில், அந்த ஆலயங்களின் சொத்து விவரமும் ஆண்டு வருமானமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது அவ்விவரம் தரப்படுவதில்லை. அண்மையில் சில ஆலயங்களின் முழு விவரங்களை  வலைத்தளத்தில் தரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது பூர்த்தி அடையப் பல்லாண்டுகள் காக்க வேண்டியிருக்கும்.

சமீப காலமாக மக்களுக்கு அறநிலையத்துறையின் செயல் பாடுகளில் நம்பிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. கோயில் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த விஷயத்தில் மட்டும் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்காததால் , மக்களின் குரல்கள் மங்கிப்போகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இந்நிலையில் யாரை யார் திருத்துவது ? இதற்குக் கூட்டுக் கொள்ளை என்று பெயரிட்டாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.

கிராமக்கோயில்களில் பணியாற்றிவந்த மடைப்பள்ளி ஊழியர்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், துப்புரவாளர்களும் ,மாலை கட்டுவோரும் இப்போது எங்கே போயினர்? அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள்? எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள்? அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா? அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை? வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு  நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத்  தான்  எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ ? இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா ? . இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும். அதனால் எத்தனை கோயில்களைக் காப்பாற்ற முடியப் போகிறது?

சொத்து விவரம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால் ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பு அண்மையில் சட்டத்தின் துணையை நாடியது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் கேட்டால் சென்னைக் கோயில்கள் இரண்டின் செயல் அலுவலர்கள் அதிர்ச்சிதரும் பதிலைத் தந்துள்ளதை 29. 9. 2014 தேதியிட்ட தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அவர்கள் தந்த பதிலாவது: "கங்காதரேஸ்வரர் /ஏகாம்பரேஸ்வரர்  சட்டப்படி தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது. கோயில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை  அவரே இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சட்ட நபர்(தனி நபர்) ஆவார். "  சட்ட வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட செய்தியைக் கண்ட அன்பர் ஒருவர் தினமலர் வலைத் தளத்தில் தந்துள்ள கருத்தை இப்போது காண்போம்:  " செயல் அலுவரை நியமித்தது மூலவரா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அரசால் நியமிக்கப்பட்டவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் .  இல்லாவிட்டால் உண்டியல் வசூலை மூலவரே எண்ணிக்கொள்ளட்டும். செயல் அலுவலர் தனது சம்பளத்தை மூலவரிடமே வாங்கிக்கொள்ளலாம் ."  இந்த அன்பரின் மனக்குமுறலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டால் தகுந்த விளக்கம் தரப்படுவதில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் அறநிலையத்துறை தக்க விளக்கத்தை அளிக்கவேண்டும்.  

Friday, September 12, 2014

சிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்?

                                                                                                        படம்: நன்றி,தினமலர்
ஸ்ரீ புரந்தரன் ப்ருஹதீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் விருத்தாசலம் ஆலயத்திலிருந்தும் களவாடப்பட்ட தெய்வத் திருமேனிகள் மீண்டும் நமது நாட்டை வந்து அடைய உதவிய இந்திய அரசுக்கும் பிற அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோலவே  முன்பும்  சிவபுரம் , திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் மூர்த்திகள் களவாடப்பட்டு மீட்டுக் கொண்டுவரப் பட்டன.  இதுபோலப் பறிகொடுப்பது பல ஊர்களில் நடந்தும், நாம் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நமது அஜாக்கிரதையாலும்,அலட்சியத்தாலும் இவ்வாறு ஒவ்வொன்றாகக் களவாடப் படுகின்றன.கூட்டுக் கொள்ளையும் ஒரு  காரணமாகலாம். இல்லாவிட்டால் மிகக்கனமான மூர்த்தியை மிகப்பெரிய விமானமான  ஜம்போ ஜெட்டில் மட்டுமே கொண்டு வர முடிகிறது என்றால் எப்படித் திட்டமிட்டு இச் சதியைச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். சட்டத்தின் பிடியில் இக்கொள்ளைக்காரர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 இனிமேல் ஒரு ஊரில் கூட இதுபோன்ற கொள்ளை நடக்கக் கூடாது என்பதற்கு நாம் என்ன செய்கிறோம்? சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள்? ஒவ்வொரு ஆலயமும் தகுந்த பாதுகாப்புடன் இருந்தால் இதற்கான அவசியம் ஏற்படாது. வருடக்கணக்கில் இம்மையங்களில் பூட்டப்படுவதால் அவை பாசியும் தூசும் படர்ந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன.

களவாடப்பட்ட மூர்த்திகள் எங்கெங்கெல்லாமோ  அம்மூர்த்திகளுக்கான மரியாதை கிடைக்காத இடங்களில் காட்டப்பட்டு சிலவேனும் தாயகம் திரும்புகின்றன. அவற்றைத் தெய்வமாகக் கருதாமல், வெறும் கலைப் படைப்புக்களாகவே சிலரால் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில் இறை நம்பிக்கை மிகுந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு நியமத்தோடு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் பக்திக்குப் பாத்திரமாக அவை திகழ்ந்தன என்று நினைத்துப் பார்ப்பர்களேயானால் இங்ஙனம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஆலயம்தோறும் அவற்றை அளக்கவும் எடைபோடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

எப்படியோ தாயகத்துக்குத் திரும்பி வந்து விட்டாலும் அவை உரிய கோயில்களில் மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றனவா? கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர்? இதற்கு மாறாக ஸ்ரீ புரந்தரன் ஊர் மக்கள் தங்கள் ஊர் ஆலய மூர்த்தி மீண்டும் கோயிலுக்கே திரும்ப வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற பத்திரிக்கை செய்தி ஆறுதலைத் தருகிறது. அவ்வூராரை மனதாரப் பாராட்டுகிறோம்.

உற்சவர்கள் சன்னதியைத் திறக்க அதன் கதவுகள் வங்கிகளில்  பாதுகாப்பு அறையில் உள்ளதுபோல் இருவர் சாவி போட்டால் மட்டுமே திறக்கும்படி அமைக்கப்படவேண்டும். அர்ச்சகர், மெய்காவல்/ ஆலய அதிகாரி ஆகியோர் தனித்தனிச் சாவிகள் போட்டுத் திறக்கும்படி அமைக்கவேண்டும். தொங்கும் பூட்டால் எந்தவிதப்பயனும் இல்லை.

அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் மதில்  சுவர்கள் உயரமாகவும், சன்னதிக் கதவுகள் உறுதியாகவும், எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டதாகவும் உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கான அறிக்கையை அத்துறையிடம் மக்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். செய்வார்களா?

நிறைவாக ஒரு வார்த்தை. விக்கிரகங்களைக் கொள்ளை அடித்தவனைக் கைது செய்வது ஒரு பக்கம். அச்செய்தியை வெளியிடும் நாளிதழ்கள் இன்னமும் கொள்ளைக்காரனைக் "கடத்தல் மன்னன் " என்ற பட்டம் தந்து  "கௌரவிக்கிறார்கள்" இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

Friday, August 29, 2014

எளிய கடவுள்

விநாயகப்பெருமான் எளிமையை விரும்புபவர். தாமும் எளிமையாகத் தோற்றம் அளிப்பவர். தனக்கென்று மேற்கூரைகூட வேண்டாமல் ஆற்றங்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பவர். வெய்யில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் தாங்குபவர். மழை வேண்டுவோர்க்கு ஆலங்கட்டி மழையையே வரவழைப்பவர். இவருக்கு சாத்தனூர் என்ற ஊரில் ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயரும் உண்டு(இப்பெயரை அவருக்குச் சூட்டியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் ஆவார்கள்) சர்வ வல்லமை படைத்த முதல் மூர்த்தியானாலும் எளிய பூஜையை ஏற்பவர். உடனேயே வேண்டிய பலனை அளிப்பவர் . ஆதலால் க்ஷிப்ர பிரசாதர் எனப்படுவார். வள்ளியை வேட்ட கந்தப்பெருமானுக்கு அக்கணமே மணம் அருளிய பெருமான் ஆவார்.

பிள்ளையாரின் அருள் பெறுவதும் இதனால் எளிதான காரியமாகி விடுகிறது. வன்னி,கொன்றை, ஊமத்தை,வெள்ளெருக்கு,வில்வம் போன்றவற்றை விரும்பும் தமது தந்தையாகிய சிவபெருமானைப்போலவே தாமும் எளிமையான, மக்கள் ஏற்காத மலர், இலை போன்றவற்றை ஏற்கிறார். இவருக்கு வேண்டியதெல்லாம் எருக்கம்பூ மாலையும் அருகம்புல்லும் தான். முடிந்தவர்கள் கொழுக்கட்டை,அப்பம் போன்றவற்றையும் நிவேதிப்பார்கள்.
மிக எளிமையாகச்  செய்ய வேண்டிய பூஜையை மிகக் கடினமாகவும், செலவு மிக்கதாகவும், ஆடம்பரம் மிக்கதாகவும் மாற்றிக் கொண்டு வருகிறோம்.எந்த பூஜை ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கமும் பக்தி நிறைந்ததாக இல்லாவிட்டால் ஆடம்பரமே மிஞ்சும்.

மண்ணாலும்,மஞ்சளாலும்,வெல்லத்தாலும் விரல்களால் பிடித்து வைத்து பூஜை செய்து வந்த காலம்போய் , தெரு முனையில் அச்சில் செய்த மண் பிள்ளையார் பிம்பங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். பத்து வருஷம் முன்னால்  ஐந்து ரூபாய்க்கு வாங்க முடிந்த மண் பிள்ளையாரை இப்போது நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த குடையை  இப்போது இருபது ரூபாய் என்கிறார்கள்.  குடையை வீட்டிலேயே சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்னதாகவே வீடுகளில் செய்து வந்த காலம் போய் விட்டது. ஒரு முழம் பூ இருபத்தைந்து ரூபாய் என்று கூசாமல் விற்றாலும் வாங்குகிறார்கள். பழங்களின் விலையோ சொல்ல வேண்டாம்.

இத்தனை விலை கொடுத்து வாங்கியும் பூஜையில் மனம் லயிப்பதில்லை! செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. பூஜை எப்போது முடியப்போகிறது என்று  காத்திருந்துவிட்டு, ஓடிச்சென்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்வது!
கையில் பணம் மிதமிஞ்சிப்போனால் இப்படிதான் ஆகும். எல்லாம் செயற்கை ஆகிவிடும். பணத்தை வீசினால் எதையும் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விடும். விநயம்,பக்தி ஆகியவை பறந்து விடும். ஆனால் சுவாமியை ஏமாற்றி விட முடியாது. காலையும் மாலையும் கருத்து ஒன்றி நினைப்பவர் மனமே இறைவனுக்கு ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பணம் வசூலாகி விட்டது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தையும் அலங்காரத்தையும் ஆடம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை. கோயில் இருக்கும் பகுதியில் கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இரவு பூராகவும் அவை ஒளி வீசுகின்றன. இவற்றால் என்ன விளம்பரம் என்பது புரியவில்லை. இராப்பகலாக சம்பந்தமில்லாத பாடல்களை செவி கிழியும்படி ஒலிபெருக்கிகளில் அலற விடுகிறார்கள். அதைக்  கேட்பவர்களுக்குப்  பக்தி தோன்று வதாகவோ அதிகரிப்பதாகவோ எப்படிக் கருத முடியும்?

எனக்குப்பிடித்ததை நான் செய்கிறேன். பெரிதாகக் குறை கண்டுபிடிப்பதைப் பார் என்று நம் மேல் சீறுபவர்களையே காண முடிகிறது. இப்படி வாங்கும் ஒவ்வொரு பொருளும் மக்களின் சக்திக்கு அப்பால் பட்டதாக ஆகி விட்டால் வழிபாடு குறையவும், நம்பிக்கை குறையவும் வழி ஆகி விடுகிறது. எத்தனை காலம் ஆனாலும் இவ்வழிபாடுகள் குறையவோ நின்றுவிடவோ விலைவாசி ஒரு காரணமாகி விடக்கூடாது.எளிமை என்று சொன்னால் கஞ்சத்தனம் என்று அர்த்தம் இல்லை. ஆடம்பரமற்ற நிலை என்பதே பொருள். அதைப் பின்பற்றி வந்தால் இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நம்முடைய  கலாச்சாரத்திற்குக் குந்தகம் வந்து விடாது. அதற்கு நாம் நம்மைத்  தயார்படுத்திக்கொண்டு, மெதுவாகப் பழகிக்கொள்ள வேண்டும்.  

Tuesday, August 26, 2014

திருச்செந்தூரில் நடந்த அட்டூழியம்

திருச்செந்தூர் தினமும் திருவிழாக்கோலம் கொண்டு விளங்கினாலும், ஸ்கந்த சஷ்டியில் விரதம் மேற்கொண்டு இங்கு வந்து செந்திலாண்டவனைத் தரிசிப்போர் ஏராளம். அதேபோன்று ஆவணிமாதத்தில் வரும் உற்சவ நாட்களில் ஷண்முகப்பெருமான் பிரம்ம,விஷ்ணு,ருத்ர மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி அளித்து வீதிஉலா வருவார். கந்தப்பெருமானைக் கண் கண்டதெய்வமாகத் தினமும் வழிபடுவோர்  இந்த நாட்களில் திருச்செந்தூர் வந்து இறைவனைத் தரிசிப்பர். கயிலை மலை அனைய செந்தில் பதி என்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பதி  தெய்வப்பதி என்பதால் அதன் சாந்தித்தியம் எப்போதும் போற்றப்படவேண்டும்;அது மட்டுமல்ல. காப்பாற்றவும்படவேண்டும்.

தெய்வமே! உன் கோயிலிலா இப்படி??
கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் ஆவணி உற்சவத்தில் நடைபெற்ற முறைகேட்டை  ஒரு முகநூல் பதிவில் காண நேரிட்டது. பெருமான் உலா வரும் பல்லக்கு பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்குள் சில விஷமிகள் நுழைந்து படுத்திருக்கிறார்கள். அதைவிட அதிர்ச்சிதருவது என்னவென்றால், குடித்துவிட்டு ,மது பாட்டில்களைத் தங்களுக்கு  அருகில் வைத்துக்கொண்டு பல்லக்கில் உறங்குவதை முகநூலில் (Facebook) வெளியிட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்களின்  மனத்தைப் புண்படுத்தியுள்ள இச்செயல் சொல்லொணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கித் தலைகுனியவேண்டிய அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம் இது. இதற்கு ஆலய அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்களா? தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா? அறநிலையத்துறை விசாரணை நடத்துமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டாலும் விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிடும். பக்தர்களும் போராடப்போவதில்லை. இதுவே தொடர்கதை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பல ஊர்களில் உற்சவங்கள் நடைபெறும்போது, குடித்துவிட்டு வந்து சுவாமி தூக்குவதைக் கண்டிருக்கிறோம். பல்லக்கிற்குள்ளே போதை மேலிடத் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற அக்கிரமங்கள் எவ்வளவு நடக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. தவறுகள் தண்டிக்கப்படாத போது,  தெய்வமே அப்பாவிகளைத் தண்டிப்பதுதான்  முறை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் தண்டித்தால் தான் உலகம் திருந்தும். செந்திலாண்டவன் சூரனைத் தண்டித்துத் திருத்தியது போல் இவர்களிடத்து இன்னமும் இரக்கம் காட்டாது தண்டித்துத் திருத்தவேண்டும். நடைபெற்ற பாவச்செயலுக்குப் பரிகாரங்களை ஆகம முறைப்படி நிர்வாகத்தினர் உடனே மேற்கொள்ளவேண்டும். என்னதான் பரிகாரம் செய்தாலும், இதனால் முருகபக்தர்களின் மனத்தில் ஏற்பட்ட வடு ஒருபோதும் அழியாது.   

Saturday, August 16, 2014

பாழடையும் குளங்கள்

தலயாத்திரையில் தீர்த்தயாத்திரையும் அடங்கிவிடுகிறது. உதாரணமாகக் காசிக்குச் செல்பவர்கள் விச்வநாதரையும்,கங்கையையும் தரிசிப்பதும் , இராமேச்வரத்திற்குச் சென்று இராமனாதரைத் தரிசிப்பதோடு, அனைத்துத் தீர்த்தங்களிலும் நீரா டுவதும் தொன்றுதொட்டு நடந்து வருபவை. தீர்த்தங்கள் எல்லாம் சிவவடிவமாகவே கருதப்படுபவை. "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்கிறது அப்பர் தேவாரம்.

பொதுவாக எல்லாத் திருக்கோயில்களின் அண்மையிலும் திருக்குளங்கள் இருக்கக் காண்கிறோம். இவை அனைத்தும் இறைவனுக்குச் சமமான புனிதத்துவம் வாய்ந்தவை. வேண்டிய அனைத்தும் வழங்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவை. தீரா நோய்களைத் தீர்த்து அருள வல்லவை. எடுத்துக்காட்டாக  வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்திற்குள் உள்ள சித்தாமிர்தத் தீர்த்தத்தின் சிறப்பைக் கூறும்பொழுது அதன் துளி ஒன்று நம் மீது பட்டாலே வினையும் நோயும் நீங்கப்பெறும் என்று நூல்கள் வாயிலாக அறிகிறோம்.

 திருவாரூருக்கு அண்மையில் உள்ள திருக்காரவாசல் (திருக்காறாயில்)என்ற பாடல் பெற்ற சிவத் தலத்தின் திருக்குளப்படிக்கட்டுக்களைக் கருங்கல்லால் அமைத்துக்  கட்டியுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பக்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதன் எழிலான காட்சியையே மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஆலயத்தோடு தொடர்புடைய குளம் , திருக்குளம் எனப்படுகிறது. ஏனையவற்றைக் குளம் என்று மட்டும் அழைக்கிறோம். அவை மக்களின் அன்றாட தேவைகளுக்காக அகழப்பெற்றவை. கிராமங்களில் அத்தகைய குளங்கள் நீராடுவதற்கும், துணி தோய்க்கவும், பாத்திரங்களைக் கழுவவும் பயன்படுத்தப்படுகின்றன.. இவற்றைத் திருக்குளங்களில் ஒருபோதும் செய்யக்கூடாது. நமது பிற தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குளங்கள் கால்நடைகள் நீர் பருகவும்,நீராடவும் எதுவாக ஒருபுறம் படிக்கட்டுக்கள் இல்லாமல் அப்பிராணிகள் எளிதாக இறங்கும் வகையில் சரிவாக அமைக்கப் பட்டிருக்கும். இவற்றை சிறந்த தருமங்களாக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்தார்கள்.   "குளம் பல தொட்டும்"  என்பது சம்பந்தர் வாக்கு. குளம் அமைப்பது சிறந்த சிவதருமம் என்பது இதனால் அறியப்படுகிறது. இவற்றைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய நாம் பாழடிக்கிறோம் என்பது உண்மை. புதிய குளங்களை அகழும் புண்ணியத்தை ஏற்காவிடினும், பழைய திருக்குளங்களையும் ஏனைய குளங்களையும் தூர்க்கத் துணிந்துவிட்டோம்.

கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளம், திருவாரூரிலுள்ள கமலாலயத் திருக்குளம்  போன்றவற்றில் மக்கள் பெருந்திரளாக வந்து நீராடுவர். எனவே இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டியது நம்  ஒவ்வொருவரின் கடமை. திருக்குளங்களிலேயே,குப்பைகளையும் பிற கழிவுகளையும் வீசத் துணிந்துவிட்ட நாம், ஏனைய குளங்களை அலட்சியப்படுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. பல இடங்களில் கிராம ஊராட்சிக் கட்டிடங்களே கோயில் நிலங்களிலும் நீர்நிலைகளை ஒட்டியும்  ஆக்கிரமித்துக்   கட்டப்பட்டிருக்கும்போது, பிறருக்கும் தைரியம் வந்துவிடுகிறது.

இந்நிலையில் வயதானவர்களைத் திருத்துவதென்பது சாத்தியமாகத் தோன்றவில்லை. கிராமப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நமது ஊரிலுள்ள திருக்குளமும் பிற குளங்களும் எவ்வாறு பாழாகிக் கிடக்கின்றன என்பதை அவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று நேரில் காட்டி விளக்க வேண்டும். அவை தூர்க்கப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு பாதிப்படைகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும். குளம் , வாய்க்கால் ஆகியவற்றிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கோடைக்காலத்தில் அகற்ற முன்வர வேண்டும்.குளங்களைச் சுற்றிக் கருவேலி மரங்கள் இருந்தால் அவை அருகிலுள்ள நிலத்தடி நீரைப் பெரிதும் உறிஞ்சி விடுகின்றன என்று அறியப்பெற்று, அவற்றைப் பலர் நீக்க முன்வருகின்றனர். இளைய சமுதாயத்தின் சீரிய பங்கினால்  திருக்கோயில்களும்  திருக்குளங்களும்  மீண்டும் பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்விளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆணி வேராகவும் ஏணிகளாகவும் திகழும் ஆசிரியப்பெருமக்கள் ,கல்வி புகட்டுவதோடு நின்றுவிடாமல் சமூக சிந்தனையையும் உருவாக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும் என்பது நமது வேண்டுகோளும் ஆசையும் ஆகும். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாங்கம்  நல்லாசிரியர் விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும். ஆசிரியர்கள் முன்வருவார்களா? நல்லாசிரியர்களாகத் திகழ்வார்களா?  

Friday, July 25, 2014

இராஜேந்திர சோழருக்கு நினைவஞ்சலி

கங்கை கொண்ட சோழபுரம் 
இராஜேந்திர சோழ மாமன்னர் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைத் தமிழ் உலகம் நினைவு கொள்ளக் கடமைப் பட்டுள்ளது. அப்பேரரசர் சிவன் கோயில்கள் கட்டியதும் சோழப் பேராசை விரிவடையச் செய்ததும் பற்றி மட்டுமே நாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது பிற குண நலன்களையும் நாம் இத்தருணத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். " தன்  கரங்களால் எல்லா உலகுக்கும் உபகாரம் செய்பவனும்..." என்று கரந்தைச் செப்பேடு இவரைப் புகழ்ந்து உரைக்கிறது.

கங்கைகொண்டசோழபுரம் கலைமகள் 
திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சூழ்ந்த ஐம்பத்தோறு கிராமங்களைத் தக்கோருக்குத் தானமாகத் தந்துள்ளார் இம்மன்னர்.   1073 பேருக்கு இவர் கொடை அளித்த செய்தியைக் கரந்தைச் செப்பேட்டின் மூலம் அறிகிறோம். சதுர்வேதி பட்டர்களுக்கும், உகச்சர்களுக்கும் நாவிதர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் நில தானம் செய்யப்பட்டது. பல ஊர்களில் சிவாலயங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. திருமழபாடி சிவாலயத்தைப்  புதுப்பிக்கும் பணி கி.பி. 1026 ல்நிறைவு பெற்றது. திருவாலங்காட்டில் கோயில் ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரவும், நிலத்தைப் பயிரிடவும் உதவப்பட்டது. கல்வி வளர்ச்சிக்காக எண்ணாயிரம் என்ற ஊரில் கல்லூரிக்கு முன்னூறு ஏக்கர் நிலத்தை மானியமாக அளித்துள்ளார் இராஜேந்திர சோழர். மேலும் வேப்பத்தூர்,திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்க் கல்லூரிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான கொடை அளித்துள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் - எழில்மிகு நந்தி 
சோழகங்கம் என்ற பெரிய ஏரியை உண்டாக்கியும் பூம்புகாருக்கு அருகில் கங்கை கொண்டான் கால்வாய் வெட்டுவித்தும்,சோழபுரத்தில் கன்னி  நங்கை ஏரியை உண்டாக்கியும், மக்களுக்காக நீர்ப்பாசன வசதி செய்துள்ளார். வடமொழியிலும் தமிழிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவராய் பல புலவர்களை ஆதரித்தார். இளமையில் தன்னை வளர்த்து நற் பண்புகளைப் புகட்டியவரும் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் நினைவாக நாகைக்கு அருகில் செம்பியன் மாதேவி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் அவருக்குப் படிமம் நிறுவி , நிவந்தமும் அளித்துள்ளதால் இராஜேந்திர சோழரின் நன்றி மறவாத பண்பு விளங்குகியது. அது மட்டுமல்ல. தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும்   தானங்கள் செய்து நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார். பிற  சமயங்களையும் போற்றியுள்ளார். இவரது கலை ஆர்வத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களே சான்று. திருக்கோயில் அமைப்பில் புதுமையாகப் பிரதானக் கோயிலருகே அம்பிகைக்குத் தனிச்  சன்னதி கட்டுவித்தார்.
விஜயாலய சோழர் முதல் இராஜராஜ சோழர் வரை தலை நகரமாக தஞ்சை இருந்தது.இவரது காலத்தில் அது கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தந்தையைப் போலவே பிரம்மாண்டமான சிவாலயத்தை அங்குக் கட்டுவித்தார். திருக்கோயில்களில் ஒதுவார்களும், இசைக்கருவி வாசிப்போர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆடல், ஓவியம்,சோதிடம்,வான நூல், மருத்துவம். மல்யுத்தம், சமையல், அணிகலம் செய்தல் போன்ற கலைகள் ஊக்கம் பெற்றன.

இவரது காலத்திய ஊராட்சி முறை பாராட்டுக்குரியது. சொந்த வீடும், அரைக்கால் வேலி  நிலம் மட்டுமே  உடையவர்களும், அறவழியில் பொருள் ஈட்டியவர்களும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களும் மட்டும்  ஊராட்சி உறுப்பினராகத் தகுதி உடையவர்கள். லஞ்சம் வாங்கியவர்கள்  உறுப்பினராகும் தகுதியை இழந்தார்கள். குடவோலை முறைப்படி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். நேர்மை அற்றோர் தண்டிக்கப்பட்டனர்.

மானம்பாடி- நாகநாத சுவாமி சன்னதி  
கடாரத்தையும்,கங்கையையும்,ஈழத்தையும் வென்ற இம்மாமன்னர் மா வீரர் மட்டுமல்ல. மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதை நினைவு கூறவே ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டோம். மக்கள் பணியும் மகேசன் பணியும் கண்ணெனக் கொண்டு ஆண்ட இராஜேந்திர சோழரை நாம் இப்போது எவ்வாறு நினைவு கூர்கிறோம் தெரியுமா? கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியிடுதல், சொற்பொழிவு ஆற்றுதல் இப்படிப் பலப்பலவற்றை இரண்டு தினங்கள் நடத்துகிறார்கள். இதற்காகும் செலவு 25 லட்சம் என்று சொல்லப்படுகிறது. அரசு இதில் பங்கேற்பதாகத் தெரியவில்லை.

இவ்வளவு பெரிய தொகையை அம்மாமன்னர் எவ்விதம் நடந்து காட்டினாரோ அவ்வழிகளில் செலவிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும்? அவர் கட்டிய கோயில்களைப் புனரமைத்தல், ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு உதவுதல் பல்கலைகளை ஆதரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதால் , அவரை நினைவு படுத்தும் போது அவரது நற்பண்புகளில் சிலவாவது நமக்கும் வர எதுவாக இருக்கும்.

              மானம்பாடி சிற்பம் 
குடந்தைக்கு அருகிலுள்ள மானம்பாடி சிவாலயத்தைச் சென்று பாருங்கள். எவ்வளவு ஆண்டுகளாக அது சிதைவதை அரசும் மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். கலைச் சின்னமாகத் திகழும் இந்த ஆலயத்தை தேசீய சாலை அமைப்பவர்கள் சென்ற ஆண்டு இடிக்கவும் நினைத்தார்கள். அவ்வளவு தூரம் இருக்கிறது நாம் பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் போற்றும் லட்சணம்!  ஒரு வழியாக நல்லோர் சிலரின் முயற்சியால் இக்கோயிலைத் திருப்பணி செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது முழுமையாக நிறைவேறும் காலம் தான் தெரியவில்லை!  இதுபோல எத்தனையோ கோயில்கள் பராமரிப்பின்றி மரங்களால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

மாமன்னர் ராஜேந்திர சோழரது பள்ளிப்படைவீடு பிரம தேசம் என்ற ஊரில் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. தொல்பொருள் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. நாளடைவில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

விழாக்கள் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், வெறும் சொற்பொழிவோடும் மலர் வெளியீட்டோடும் அவை நின்றுவிடக்கூடாது. மக்களும் அரசாங்கமும் நமது கலைச் சின்னங்களை அழிய விடக்கூடாது. வாய்ப்பேச்சாலும் கட்டுரைகள் எழுதியும் சாதிப்பதை விடக் களத்தில் இறங்கிப்  பணியாற்றுவதே அம்மாமன்னருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலி.  

Saturday, July 19, 2014

துவேஷம் மறைந்து அன்பு மலரட்டும்

இந்தியாவுக்கென்று தனிப்பட்ட கலாசாரம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது எப்படி யாரால் ஏற்பட்டது என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை பலவீனப்படுத்துவதாக இவ்வரலாற்று ஆராய்ச்சி முடிந்து விடும். இன்று நாம் ஒற்றுமையாகத் தேச வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோமா என்பதே கேள்வி. இதில் மக்களின் பங்கு ஒருபுறம் இருக்க அரசியல்வாதிகளின் பங்கும் உண்டு. தங்களது  நலனுக்காக அவர்கள் ஒருபோதும் இவ்வொற்றுமை குறைய அனுமதிக்கக் கூடாது.

பாடப்புத்தகங்களில் வரலாறு எழுதுபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு   சாராரைப் பற்றி அவதூறுகள் பாடப்புத்தகங்களில் அள்ளி வீசப்படுகின்றன. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தங்களுக்குத் தேர்தலில் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற எண்ணமே இதற்குக் காரணம். அதற்காக ஒரு வரை முறை வேண்டாமா? அவர்கள் இந்நாட்டுக்கு ஏராளமான தொண்டுகள் செய்தும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கலாம் அல்லவா?

அரசு வெளியிட்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு சமூக நூலில் ஒருசாரார் மற்றவர்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் கொடுக்காமல் தாங்களே அத்துறைகளில் விளங்கி வந்தார்கள் என்று பொருள் படும்படி  குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த துவேஷ பிரசாரம் தற்காலத்திற்குத் தேவையா? பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவும் செயல் அல்லவா இது? ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அறிவுறுத்த வேண்டிய உபயோகமான தகவல்கள் எத்தனையோ இருந்தும் இது போன்ற வெறுப்பை உமிழும் வாசகங்கள் எவ்விதம் உபயோகமாக இருக்கும்?

தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்தது அல்ல.  அதற்கென்று தனி இடம் என்றும் உண்டு. அதைச்  சிறப்பிக்கும்போது மற்றொரு மொழியைத் தாழ்த்தி எழுதாமல் இருப்பது நல்லது. மத்திய அரசு பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழுக்கு ஒருபோதும் ஆபத்து வந்து விடாது. அந்நிய மொழிகளைக் கற்கும்போது நமது நாட்டு மொழியைக் காப்பதிலும் கற்பதிலும் மட்டும் ஏன் இந்த துவேஷம்? கிராமங்களிலும் தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்லும்போது இந்தத்தேவை இல்லாத பாய்ச்சல் என்? தனி மனிதனின் நலத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தும் அரசியல் கட்சிகள் ஏன் இப்படி செத்த பாம்பையே அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.  

அதே போலத்தான் இந்த "வேட்டி" விவகாரமும். தனியார் கிளப்களில் வேட்டி அணிந்து வருவதை  அனுமதிக்காவிட்டால் தமிழ்ப் பண்பாட்டுக்கே அவமானம் என்று நினைப்பவர்கள், கோயில்களில் நமது பண்பாட்டின்படி பான்ட் -சட்டை அணியாமல் வேட்டி அணிந்து  வரவேண்டும் என்று உத்தரவு இட வேண்டியது தானே! கேரளத்தில் இன்றும் ஆண்கள் மேல்சட்டை இன்றி வேட்டி அணிந்து செல்வதைப் பார்க்கிறோம். நாகரீக உடைகள் கேரளக் கோயில்களில் அனுமதிக்கப் படுவதில்லை. தமிழகக் கோயில்களில்  மட்டும் நமது பாரம்பரிய உடையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லையே!

நீதியும் நேர்மையும் ஆட்சியாளர்களின் இருகண்கள். அவற்றை நிலை நிறுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்  மாணவர்களிடையே துவேஷத்தை வளர்க்கும் பாடப்பகுதிகளை நீக்கி விட்டு நாட்டு ஒற்றுமை, மத நல்லிணக்கம், மொழி துவேஷமின்மை  ஆகியவற்றை வளர்ப்பதாக அவற்றை மாற்றி அமைக்கவேண்டும். ஆட்சியாளர்கள் இதற்குத் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பும் கூட. 

Friday, June 13, 2014

ஆதிகுருவும் வியாழகுருவும்

                                                              

நேற்று ஆன்மீகப்பத்திரிகைகளை அரைகுறையாகப் படித்துவிட்டு இன்று ஆன்மிகம் பற்றித்  தப்பும் தவறுமாகப் பலர்  பேசியும் எழுதியும் வருகிறார்களே என்று அலுத்துக்கொண்டார் நண்பர். அவர்  சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் காலத்தில் யாரையும் யாராலும் திருத்த முடிவதில்லை. தான் சொல்வதே நூற்றுக்கு நூறு உண்மை என்று வாதம் செய்யத் தொடங்கி விடுவார்கள். திரும்பத்திரும்ப அதே தவற்றை மக்களிடையே பரப்பி விடுகிறார்கள்.பத்திரிக்கை ஸ்தாபனங்களே தாங்கள் வெளியிட்ட  தவறான செய்திகளைத்  திருத்திக் கொள்ள முன்வராதபோது, தனி நபர்களிடம் இப்பண்பாட்டை எதிர்பார்க்க முடிவதில்லை.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு மற்றொரு ராசிக்குப் பெயரும் போது குருபெயர்ச்சி வழிபாடுகள் கோயில்களில் நடை பெறுகின்றன. அப்போது குருவுக்கு  அபிஷேக ஆராதனைகள் அர்ச்சனைகள்  நடைபெற்று வருகின்றன. இவர் தேவ குரு எனப்படும் பிரஹஸ்பதி பகவான் ஆவார். நவக் கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவ்வகையில், வியாழனாகிய குருவுக்கு அதி தேவதை தக்ஷிணாமூர்த்தி ஆவார். அதற்காக நவக்கிரக குருவுக்கு சார்த்தப்படும் மஞ்சள் வஸ்திரம் , கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை தக்ஷிணாமூர்த்திக்கு சார்த்தக்கூடாது. பல ஆலயங்களில் சிவாச்சாரியார்களே இத் தவற்றைச் செய்கிறார்கள் என்பது வேதனைக்கு உரியது.

தட்சிணாமூர்த்தியாக பரமேச்வரன் கல்லால் நீழலில் சனகாதியரோடு அமர்ந்ததை ஸ்காந்த புராணத்தில் விரிவாகக் காணலாம். இந்நாளில் ஆதி குருவாகிய பரமேச்வரனுக்கும் நவக்கிரக குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் மயக்கத்திற்கு ஆளாக்கப் படுகிறார்கள்.

இன்று வெளியான தமிழ் செய்தித்தாள் ஒன்றில் " வித்தியாசமான கோலத்தில் தக்ஷிணாமூர்த்தி" என்ற தலைப்பில் தமிழகக் கோயில்களில் உள்ள பல தக்ஷிணாமூர்த்தி  வடிவங்களின் தொகுப்பு தரப்பட்டுள்ளது. குருபெயர்ச்சிக்கும் இதற்கும் இப்படி தொடர்பு படுத்தியிருக்கிறார்கள்! ஏதாவது எழுதிவிட்டுப் போகட்டும் என்று  பார்த்தால் தஞ்சைக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் வித்தியாசமாக ராஜ குருவாக தனிச் சன்னதியில் இருக்கிறார் என்று எழுதியிருக்கிறார்கள். அங்கும் சுவாமி சந்நிதியின் கர்பக்கிருக கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உண்டு. ஆனால் இவர் குறிப்பிடும் தனிச்சன்னதி கொண்டுள்ளவர் நவக்கிரகக் குரு ஆவார்.

இதற்கு மேலேயும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கோவிந்தவாடி சிவாலயத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது " இங்கு சிவனே குருவாக இருப்பதாக ஐதீகம்"  என்று எழுதியுள்ளார்கள். மற்றோர்  தலத்தில் சிவ தக்ஷிணாமூர்த்தி என்று பெயராம்!  இங்கு மட்டுமல்ல. எங்கும் ஆதி சிவனான பரமேச்வரன் தான் சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை  உபதேசிப்பதற்காக ஆதி குருநாதனாகக் கயிலையில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இன்னமும் குழப்பம் உள்ளவர்கள் ஸ்காந்த புராணத்தைப் புர ட்டிப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நண்பர் புன்னகைத்தார். இந்த விளக்கத்தால் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். கேள்வி என்னவோ நியாயம் தான். அதற்காக அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை. நூறு பேருக்குச் சொன்னால் இரண்டு பேராவது ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்!  

Monday, June 9, 2014

அறம் நிலைப்பதோடு தழைக்கவேண்டும்

அறநிலையத் துறை பற்றிப் பத்திரிகைகளில் அண்மையில் வரும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாகவும் கவலை அளிப்பனவாகவும் உள்ளன. " எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்" என்று லஞ்ச ஊழல்கள் தலைவிரித்து ஆடும் தற்காலத்தில் இத்துறையும் அதற்கு ஆளாகி இருப்பதை அறியும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. அதிகாரிகள் கோயில் பணத்தை லஞ்சமாக அள்ளுகிறார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகளும் மோசடிகளும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்  36488 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றுள்  34336 கோயில்களில் ஆண்டுவருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிக்குத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்களைக் "கவனிப்பவர்"களுக்கும் அதிகாரிகள் பணி நியமனம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது சம்பந்தமான தகவல்கள் வெளியாகி உள்ளதாகப் பத்திரிக்கை செய்தி உறுதிப்படுத்துகிறது. எனவே, ஆணையர் உத்தரவின் பேரில் சில அதிகாரிகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு இணை ஆணையர் "சஸ்பெண்ட் " செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த நியமனங்கள் மூலம் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆணையரின் இந்த நடவடிக்கையால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் உரிய தண்டனை பெறுவர் என்று நம்புகிறோம். பிறருக்கும் இது ஓர் எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.

மற்றொரு அதிர்ச்சித் தகவல்: விக்கிரகங்களைப் புகைப்படம் எடுக்கவும் அவற்றை அளவு எடுக்கவும் எடை போடவும் அறநிலையத் துறை உத்தரவு போட்டிருப்பதாகத் தெரிகிறது. வஸ்திரங்கள் இன்றி அவற்றைப் படம் பிடிப்பதும் எடைபோடுவதும் பல ஊர்களில் துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது.இதுபோல எடைபோடுவதற்கு அர்ச்சகர்கள்  சில ஊர்களில் எதிர்ப்புத் தெரிவித்தும் கேட்பதாக இல்லை. களவாடுவதைத் தடுக்கும் வழிகளைச்  செயல் படுத்தாமல் இவ்வாறு தெய்வ விக்கிரகங்களை எடைபோடுவதாலும் படம் பிடிப்பதாலும் கள வாடப்படுவதைத் தடுக்க முடியாது. அவை அயல் நாட்டுக்கு விற்கப்பட்டபின்  அவற்றை மீட்பதற்கு ஆதாரங்களாக மட்டும்  இருக்கும். அப்பொழுதும் அவற்றை மீட்டுக் கொண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும்.  " தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்தானாம்" என்று ஒரு பழ மொழி கூறுவார்கள். அதுபோல, களவாடப் படுவதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, இதுபோன்று தெய்வ சாந்நித்தியத்தைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆணையர் இதற்கும் உடனே ஆவன செய்ய வேண்டும்.

ஆன்மீக அன்பர்களும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதைக் கண்டித்தால்  அதிகாரிகள் தவறு செய்ய அஞ்சுவர். ஆதாரத்துடன் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் ஆணையர் தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். தகவல் அறியும் சட்டமும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. நமக்கு என்ன வந்தது என்று இருந்தால் கோயில் சொத்துக்கள் கொஞ்ச நஞ்சம் பாக்கி இருப்பதும் பறி  போய் விடும். பிறகு புலம்புவதில்  எந்த உபயோகமும் இல்லை.  அற  நிலையத்துறை நிறுவப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் போய் மக்களுக்கு அதன் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனே தக்க நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசின் விழிகளும் செவிகளும் திறக்கப்பட வேண்டும். எந்தத் துறைக்கு மட்டும் அறத்தின் பெயர் இருக்கிறதோ அப்பெயருக்குக் களங்கம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அரசின் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.   அறம் வளத்த நாயகி துணை இருப்பாளாக.

Friday, June 6, 2014

தாராள நிதி விரைவாக ஒதுக்குக

ஒரு பெரிய பணக்காரர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் எப்படி இருக்கும்! பெயருக்கு மட்டுமே சொத்தை வைத்துக் கொண்டு, பிறரிடம் கை ஏந்தும் அவரது பரிதாப நிலையைப் போன்று நமது திருக்கோயில்களும் முன்னோர் எழுதி வைத்த நிலங்களைப் பெயர் அளவுக்கே வைத்துக் கொண்டு இருக்கின்றன.. நகரங்களிலும் பிரபலமான தலங்களிலும் இருக்கும் கோயில்கள் உபயதாரர்களால் பராமரிக்கப்படுகின்றன. அவற்றைத் திருப்பணி செய்து தருவதில் அறநிலையத் துறையும் தாராளமாக நிதி வழங்குகிறது. ஒரு பிரபலமான கோயிலுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுத் திருப்பணிகள் செய்வதற்குப் பத்து கோடி ரூபாய் வழங்குகிறார்களாம். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்ய இருக்கிறார்களாம். இந்த அளவு தாராளத்தைத் திருப்பணி கண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கும் காட்டலாம் அல்லவா?

முதல் கட்டமாகத் திருப்பணிக்கு மதிப்பீடு செய்வதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேண்டும். அதற்கு முன் நின்று நடத்தித் தர வேண்டிய நிர்வாக அதிகாரி அலட்சியமாக இருந்தால் ஊர்க்காரர்களே அறநிலையத்துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டி மன்றாட வேண்டியிருக்கிறது. அவ்வாறு மதிப்பீடு செய்த பிறகு பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சுமார் ஓராண்டு ஆனதும் ஒதுக்கப்பட்ட தொகை இவ்வளவு என்று தெரிவிப்பார்கள். வேலைக்குத் டெண்டர் விடப்பல மாதங்கள் பிடிக்கும். டெண்டர் எடுத்தவர்கள் செய்யும் வேலையின் தரமோ நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். எங்களால் இவ்வளவு மட்டுமே முடியும். மீதியை நன்கொடையாளர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவர். நன்கொடையாளர்களைத்தேடும் படலம் ஆரம்பமாகிறது. இப்படியே போய், பல ஆண்டுகளுக்குப் பின்னரே திருப்பணி நிறைவு அடைகிறது.

திருப்பணி நிறைவு அடைந்து விட்டால் மட்டும் போதுமா? கும்பாபிஷேகச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் எழுகிறது. அற நிலையத்துறையோ அதற்காக உதவித் தொகை எதுவும் வழங்குவதில்லை. திரும்பவும் கை எந்த வேண்டிய நிலை!

 இத்தகைய காலகட்டத்தில் அற  நிலையத் துறை செய்யக்கூடியது ஒன்றுதான். கும்பாபிஷேகம் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆன கோயில்களின் திருப்பணிக்குத் தாராளமாக நிதி வழங்க வேண்டும். கால தாமதம் ஆகாதவாறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு அடைய வேண்டும். திருப்பணி செலவில் பாதிக்குக் குறையாமல் அற நிலையத் துறை ஏற்க வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்குத் தாமதம் ஏற்படாமல் நிதி வழங்கப்பட வேண்டும். பிரபலக் கோயில்களுக்கு எவ்வாறாவது திருப்பணியும் கும்பாபிஷேகமும் அன்பர்கள் ஆதரவோடு நடந்து விடுகிறது. ஏனைய கோயில்கள் தான் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. பல ஆலயங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.

எவ்விதப்பாகுபாடும் இல்லாமல் நடு நிலையோடு புராதனக் கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையேல் பாரபட்ச நிலை நிலவுவதாக மக்கள் குறை கூறுவர். " ஒரு எருதுக்குப் புல்லும்,மற்றொரு எருதுக்கு வைக்கோலும் போடுவது நடு நிலை ஆகுமா "என்று தில்லை அம்பலவாணனிடம் முறை இடுகிறார் திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான வேணாட்டடிகள் என்பவர்.  ".... இடுவது புல் ஓர் எருதுக்கு ; ஒன்றினுக்கு வை இடுதல் ; நடு இதுவோ திருத்தில்லை நடம் பயிலு நம்பானே. " என்பது அப்பாடலின் ஒரு பகுதி.  நாமும் தில்லைக்கூத்தனிடமே முறையிடுவோம்.  

Sunday, May 4, 2014

சிவாசார்யர்களுக்கு ஓர் அழைப்பு


சிவாலயங்களில் நித்திய பூஜை செய்வதற்குத் தனி  உரிமை உடையது சிவாசார்யர் குலம். சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் இப்பரம்பரை, ஆதிசைவப் பரம்பரை என்று வழங்கப்படும். இவ்வாறு முப்போதும் திருமேனி தீண்டும் ஆதி சைவர்கள் அரசர்களாலும் மக்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தனர். கோவில் வருமானம் இல்லாமல் போனதாலும், போதிய ஆதரவு இல்லாததாலும் இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதோடு தங்கள் குழந்தைகளையும் கோயில் பூஜைக்கு விடத் தயங்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது..


செலவினங்கள் அதிகரித்து வரும் தற்காலத்தில் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகக் கடினமாகிவிட்டபடியால், அடுத்த தலைமுறையினரைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இவ்வாறு ஒரு சாரார் , தங்கள் பரம்பரைத்தொழிலை விட்டு விட்டுப் பிற வேலைகளுக்குச் செல்வதால் கோயில்களில் பூஜை செய்வோர் குறைந்து பல கோயில்களில்  ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் நிலையும்  ஏற்பட்டுள்ளது.

சிவாகம பாடசாலைகள் பல கற்பார் இன்றி  மூடப்பட்டும், எஞ்சியவைகளில் கற்போர் எண்ணிக்கை குறைந்தும் வருவது கவலை அளிப்பதாக உள்ளது.  பாடசாலைகளில் தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள் பலர் நல்ல ஊதியம் சம்பாதித்த போதிலும் , அவர்களுக்குத் திருமணம் நடப்பது மிகக் கடினமாக ஆகி வருகிறது. காரணம், ஆதிசைவ குலப்பெண்கள் பலர்தங்கள் எதிர் காலம் பற்றிய கவலையினால் வேலைக்குச் செல்லும் தங்கள் குலத்து ஆண்களையே மணம் செய்ய விரும்புவதுதான்! 

உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜைக்குக் குந்தகம் ஏற்படாதவாறு நம்மால் ஆனதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பின் வரும் திட்டம் மூலம் ஆர்த்ரா பவுண்டேஷன்சிவாசார்ய பரம்பரையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி நற்பயனை அளிக்க ஆகமங்களை அளித்த முழு முதற்கடவுளான பரமேச்வரனது பாத கமலங்களைச் சிந்தித்துப் பிரார்த்திக்கிறோம்.
·         + 2 படித்த சிவாசார்ய குல மாணவன் , சிவாலயத்தில் காலையிலும் மாலையிலும் பூஜை செய்யும் பட்சத்தில், PF இணைந்த நல்ல சம்பளத்துடன் , கம்ப்யூடர்  தொடர்பான  வேலை அளிக்கப்படும். இதனால் , கோவிலில் பூஜை நடைபெறுவது பாதிக்கப்படாததோடு, அதிக வருமானம் ஈட்டவும் வகை செய்யப்படுகிறது. இவ்வாறு வேலைக்குச் செல்வதால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடையும் நீங்கப்பெறும்.
·         ஏழ்மையில் வாடும் சிவாசார்யர்களுக்கு ஆதரவாக, அவர்களது குழந்தைகளை சிவாகமப் பள்ளிகளில் சேர்க்கும் பட்சத்தில், ஒவ்வொரு குழந்தைக்காக ரூ 2000 , மாதந்தோறும் அக் குழந்தையின் தந்தைக்கு வழங்கப்படும். உபநயனம் ஆன  8 முதல்  10 வயதுக் குழந்தைகளை இவ்வாறு ஆகம பாடசாலைகளுக்கு அனுப்புவதால், தேர்ச்சி பெற்ற சிவாசார்யர்களை உருவாக்க முடியும்.

சிவாசார்ய குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்  இத்தகைய முயற்சியானது  மேற்கொள்ளப்படுகிறது. அணுகுமுறையில் மாற்றம் ஏதேனும் தெரிவித்தால் அதனை நிச்சயம் பரிசீலிக்கலாம். இதனை ஏற்கும் விருப்பம் உள்ளவர்கள் ஆர்த்ரா பவுண்டேஷனை 9840744337 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.