Tuesday, December 3, 2013

தில்லையில் ஏன் இந்தப் போராட்டம் ?

அகில உலகங்களுக்கும் பொதுவான இறைவனை நமக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லிக் கொள்கிறோம்.  அவனை வழிபடுவதிலும் எத்தனையோ வேறுபாடுகள்! அவரவரும் தன் வழியே உயர்ந்தது என்றும் நினைக்கிறார்கள்  ஆனால் அவனோ " எல்லா மொழியாலும்" வணங்கப்படுபவன் என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். அது மட்டுமா ? எல்லா உயிரினங்களாலும் வணங்கப்படுபவனும் அவனே. ஆனால்  கோயில் பூஜை முறை  என்பது தொன்றுதொட்டுப்  பின்பற்றப்படுவது. அதில் பலவித நியமங்களும் அடங்கும். அதில் முக்கியமானது காலம் தவறாத பூஜை . அதாவது உரிய நேரத்தில் பூஜை செய்யப்படுவதன் அவசியத்தை இது குறிக்கும். " முட்டாத முச்சந்தி மூவாயிரவருக்கும் மூர்த்தி" என்று சுந்தர மூர்த்தி நாயனார்,, சிதம்பரத்தில் கால லோபம் இல்லாமல் பூஜைகள் நடத்தப்படுவதை சிறப்பித்துள்ளார். தில்லை மூவாயிரவர்கள்  அக்காலத்தில் எவ்வாறு காலம் தவறாது பூஜைகள் செய்து வந்தார்களோ தற்காலத்தும் தில்லை பொது தீக்ஷிதர்கள் தொடர்ந்து அந்த நியமத்திலிருந்து சிறிதும் மாறாமல் அம்பலக்கூத்தனை ஆராதிப்பதை நேரில் சென்று  கண்டவர்கள் அறிவர்.

அடுத்தது நியமலோபமின்றி செய்யப்படும் பூஜை. இதிலும் பொது தீட்சிதர்கள் நிகரின்றி  விளங்குகிறார்கள். மந்திர லோபம்,தந்திர லோபம்,ச்ரத்தா லோபம் ஆகிய குறைபாடுகளும் இன்றி தினசரி  பூஜைகளும், விசேஷ நாள் பூஜைகளும்,உற்சவகால பூஜைகளும் நடத்தப்படுகின்றன.  ஒவ்வொரு நாள் பூஜையையும் ஒவ்வொருவர் செய்வதால், தங்கள் முறை வராதா என்று காத்திருந்து, அப்படி வந்தவுடன் முழு ஈடுபாட்டோடு அதனைச் செய்வதால், நியமப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன
.
கோயில் பூஜை என்னும்போது சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது இயற்கை. நியாயமும் கூட. வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளை காலத்திற்கேற்பவும், சொந்த விருப்பங்களுக்கேற்பவும் மாற்ற முயலக்கூடாது. வீட்டில் செய்யப்படும் ஆத்ம பூஜையிலும் இத்தகைய நியமங்கள் பின்பற்றப்படும் போது பரார்த்த பூஜையான ஆலய பூஜையை எப்படி மாற்ற முடியும்? விதிமுறைகளைக் கைவிடக்கூடாது என்போருக்கு எதிராகக் குரல்கள் எழும்புகின்றன.

மகாமண்டபத்திலிருந்து ஒதுவாமூர்த்திகள் அறநிலையத்துறை ஆலயங்களில் திருமுறை விண்ணப்பம் செய்யும்போது, சிதம்பரம் கோயிலில் மட்டும் எதற்காக நந்தியெம்பெருமான் வீற்றிருக்கும் அர்த்த மண்டபத்திலிருந்து பாட வேண்டும் என்று சிலர் போராடுகிறார்கள் என்பது புரியவில்லை. எல்லோரும் தரிசிக்க வசதியாக, நடராஜ மூர்த்தி யின் சிற்சபையாகிய கருவறையும், பஞ்சாட்சரப் படிகள் விளங்கும் அர்த்த மண்டபமும் உயரத்தில் அமைந்துள்ளன. மகாமண்டபம் என்பது சேவார்த்திகள் நின்று வழிபடும் இடம். பூஜா காலங்களில் அர்த்த மண்டபக் கதவுகள் திறக்கப்பட்டவுடன் தீபாராதனையை அடியார்கள் கண்டு களிப்பர். எல்லோருக்கும் முன்பாக நின்று கொண்டு கைகளைத் தலைமேல் கூப்பியபடி  ஓதுவா மூர்த்திகள் திருமுறை இசைப்பார். திருமுறை பாட யாருமே இல்லாத சமயத்தில், அவ்விண்ணப்பத்தைத் தவிர்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் மகாமண்டபத்திற்கு வந்து, தீக்ஷிதர்களில் பலர் பஞ்சபுராணம் பாடுவதை ஆன்மீக உலகம் அறியும்.அதன் பிறகு மீண்டும் தீபாராதனை நடந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும். இதில் என்ன குறை  கண்டார்களோ தெரியவில்லை. மகாமண்டபம் தாழ்வாக இருப்பதால் தானோ என்னவோ , தாங்களும் தாழ்ந்து விட்டதாகத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாய், அர்த்த மண்டபத்தில் திருமுறை ஓதினால் என்ன என்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர்கள் மற்றக் கோயில்களில் முதலில் கேட்கட்டும். சன்னதி அமைப்பைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும், காழ்ப்பு உணர்ச்சி கொண்டவர்களுக்கும் எப்படி விளக்கம் அளிக்க முடியும்? உண்மையைச்  சொல்லப்போனால் இறைவனை விட நாம் தாழ்ந்தவர்கள் தானே?  அப்படி இருக்கும்போது , சற்றுத் தாழ்வான இடத்தில் இருந்து கொண்டு, மரபு மாறாமல் பாடினால் குறைந்துவிடப்போகிறோமா என்ன? இறைவனைப் போற்றும்போது எதற்கு இந்த சர்ச்சைகள்?

கேரளத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் ஏராளமாக உண்டு. அங்கு மக்கள் சம்பிரதாயத்தை மதிக்கிறார்கள். மாற்றத் துடிக்கவில்லை. ஆண்கள் மேல்சட்டை இன்றியே எல்லாக் கோயில்களிலும் தரிசனத்திற்கு வருகிறார்கள்.  ஆனால் இங்கு அதை சொல்லப்போனால் எதிர்ப்புக்கள் ! அதை நியாயப்படுத்தவும் முனைவர். உள்ளம்  சுத்தமாக இருந்தால் போதாதா என்பர். உள்ளத்தைத் தூய்மை ஆக்குவதற்காகவும் அமைதிக்காகவும் தானே கோயிலுக்குச் செல்கிறோம். நுழையும்போதே ஆணவம் தலை தூக்கினால்,  எவ்வாறு தூய்மையும் அமைதியும் பெற முடியும்? எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று முற்பட்டால்  நெறியற்ற சமுதாயமே மிஞ்சும். உச்சிக் காலம் ஆனவுடன் கதவுகளைச் சாத்துவது மரபு. சிலர் பாடுவதற்காக மூலவர் சன்னதியைத் திறந்து வைக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. யோசித்துப் பார்த்தால் இதற்கு மூல காரணம் நெறிகளுக்கு அடங்காமை என்ற குணம் தான் என்பது புரியும். திருநள்ளாற்றில் அப்பர் அருளிய பாடல் ஒன்றில் " குணம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான்" என்பதற்கு,  அடியார்களுக்கு நல்ல குணங்களைக் கொடுத்து, நவகோள்களின் பாதிப்பிலிருந்து நீக்குபவன் என்று பொருள் சொல்வார்கள். அதே வரிக்கு, " குணம் கெடுத்துக் கோள் நீக்க வல்லான்" என்ற பாடமும் உண்டு. அதாவது, நம்மிடம் உள்ள தீய குணங்களைக் கெடுத்து(நீக்கி) கோள்களின் உபாதைகளிலிருந்து  காப்பவன் என்றும் பொருள் கொள்வர்.  இரண்டாவதாகச் சொன்ன பாடம் தற்காலத்திற்கு உகந்ததாகத் தோன்றுகிறது.   " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர்" என்ற தேவார வாக்கிற்கு ஏற்றபடி, நற்சிந்தனைகளும், நற்பண்புகளும் நம்மிடையே நிலவுமாறு நிலவுலாவிய நீர் மலி வேணியனாகிய அம்பலத்தாடுவானை இறைஞ்சுவோமாக.