Monday, June 10, 2019

இராஜராஜ மாமன்னர்

இராஜராஜரும் கருவூர்த்தேவரும் 
ஒருவரைத் தமிழ் மொழியில் சுட்டிக்காட்டும்போது , அவன் ,அவள், என்று இரண்டு  வகையில் சுட்டிக்காட்டுவதும் , மரியாதை நிமித்தமாக வயதில் பெரியவர்களைக் குறிக்கும்போது அவர் என்றே சொல்வதும் வழக்கம். உரிமை காரணமாகவோ அல்லது பக்தி மேலீட்டாலோ இறைவரை மட்டும் இறைவன் என்று சுட்டுதல் வழக்கம். ‘” பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே “ என்றார் ஞானசம்பந்தக் குழந்தை. நாடாளும் அரசரையும் அரசன்  என்கிறோம். முன்னோர்களைக் குறிப்பிடும்போதும் அன் அல்லது அள் விகுதியைப் பயன்படுத்தாது அர் விகுதியைப் பயன்படுத்துவது நமது மரபாகும். இத்துணை நாகரீகச் சொற்கள் இருக்கும்போது “ கனியிருக்கக் காய் கவர்ந்தற்று “ என்றபடி, மரியாதை குறைவான விகுதிகள் மக்களிடையே பயன் படுத்தப்படுகின்றன.

பரம்பொருளையும் பாராளும் வேந்தர்களையும் குறிப்பிடுகையில் அதீதமான பற்றின் காரணமாக இருவகை விகுதிகளையும் பயன்படுத்துகிறோம். ஆன்மிகம் மற்றும் சரித்திர நூல்களும் இதனையே பின்பற்றுவதைப் பார்க்கலாம். தசரத மன்னரின் திருமகனாரைக் குறிப்பிடுகையில் “ சக்கரவர்த்தித் திருமகன் “ என்ற தலைப்பிலும், சோழ குலத்திற்கே திலகம் எனத் திகழ்ந்த அருள்மொழி வர்மரைப் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலும்  குறித்த நூல்கள் மக்களிடையே பிரபலமானவை என்று சொல்லத் தேவை இல்லை.

இன்றைக்குத் தமிழர்களுக்குத் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளின் வரலாறு கிடைக்கிறது என்றால் அவை யாவும் பெரும்பாலும் கல்வெட்டுக்களின் மூலமும் , செப்பேடுகளின் மூலமும் நமக்கு அறிவித்த சோழ மன்னர்களது கொடை என்பதை நாம் மறத்தலாகாது. அம்மாமன்னர்களை நன்றி உணர்வோடு போற்றாவிட்டாலும் போகட்டும். அவன் இவன் என்று மரியாதைக் குறைவாக சுட்டிக் கொள்ளட்டும். ஆனால் அவர்களை ஏசத் தொடங்கும் அளவிற்கா நன்றி கெட்ட ஜன்மங்களாக மாறி வருகிறோம்?

சரித்திர நூல் வரிசையில் ஒப்பற்ற இடத்தைப் பெற்ற “ பொன்னியின் செல்வன் “ ஆசிரியர் கல்கி அவர்களும் அந்நூலில் இராஜராஜ சோழரை அர் விகுதியில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். சோழர்கள் கோவில்களைக் கட்டி, பராமரிப்புக்காக நில தானம் வழங்கினார்கள் என்று கூறுபவர்கள், அம்மன்னர்கள் வேறு யாருடைய நிலத்தையும் பிடுங்கி நிபந்தங்களை வழங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் நன்மை பெறுவதற்குக் கோயில்கள் நிலைக் களங்களாக விளங்கின என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் தெளிவு பெற வேண்டி சற்று விரிவாகவே அது பற்றிக் காண்போம்.

வரலாற்று ஆசிரியர்  திரு S.R. பாலசுப்பிரமணியம் அவர்கள் சோழர்கள் பற்றி எழுதிய நூலின் ஒரு பகுதியை இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம்:

“ கோயில் கல்வியின் நிலைக் களனாக இருந்தது. அவற்றுள் பள்ளிகளும் கல்லூரிகளும் இடம் பெற்றன. ( அவ்வளவு பரந்த நிலப்பரப்பைக் கொண்ட கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் யார் என்று அரைகுறை ஞானிகள் விளக்கட்டும்). ஆசிரியர்களுக்கும், அங்குப் பயிலும் மாணாக்கர்களுக்கும் தேவைப்பட்ட வசதிகள் செய்துதரப் பலராலும் அறக் கட்டளைகள் நிறுவப்பெற்றன. 

கோயில்களில் சிற்சில இடங்களில் உணவு விடுதிகள் அமைக்கப்பெற்றன. சிறந்த நூல்கள் பனை ஓலைகளில் எழுதப்பெற்றுக் கோயில் நூல் நிலையங்களில் சேகரித்து வைக்கப்பெற்றன. வேதங்களையும் வேதாங்கங்களையும் ,தேவாரம்,திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றைக் கற்பிக்கப் பல நன்கொடைகள் வழங்கப்பட்டன. திருவாமாத்தூரில் தேவாரம் விண்ணப்பம் செய்யக் கண் ஒளி  அற்றவர்கள் பதின்மர் நியமிக்கப்பட்டனர்.இத்தகைய விழியற்றோர் குழாத்தின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்குப் பழைய ஊதியத்துடன் நன்கொடை வழங்கியதோடு, அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு இருவரை நியமித்தார் மன்னர். சிறந்த சிற்பிகளும் ஓவியர்களும் ஊக்குவிக்கப்பெற்றனர். திருவிழாக்காலங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சந்தைகள் அமைக்கப்பெற்றன.

சிறந்த புலவர்கள் தாம் இயற்றிய நூல்களைக் கோயில்களிலேயே அரங்கேற்றினர். அரசர்களது நன்கொடைகள், கோயில்களின் நித்திய பூஜைக்குப் பயன்பட்டதோடு, திருவிழாக்கள் நிகழ்த்துதல், கோயில்களைப் பழுது பார்க்கும் கொத்தர்கள், தச்சர்கள், கொல்லர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் பயன்பட்டது.

கோயில்கள் மக்களுடைய வாழ்க்கையைப் பெரிதும் சீர்திருத்தி அவர்களுடைய நல்வாழ்விற்குப் பெரிதும் துணை புரிந்தன. அக்காலத்தில் மக்கள் உண்மையான தெய்வ நம்பிக்கையோடு கோயில் காரியங்களை நிர்வகித்து வந்ததனால் மட்டமான மனப்பான்மையும், தன்னலப் பேராசையும் சிறிதும் இடம்பெறவில்லை. நிர்வாகத்தில் ஊழல் ஏற்பட்டாலோ, முறைகேடாகக் கோயில் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டாலோ அரசரால் விசாரணை செய்யப்பெற்றுக் கோயில் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டன. 

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தம சோழரின் அன்னையாரும் கண்டராதித்த சோழரின் மாதேவியாரும், சோழர் குல மங்கையர் திலகமும் ஆகிய செம்பியன் மாதேவியார் திருநல்லம் கோயிலுக்கு அறக்கொடையாகப் பெரிய நிலத்தை வழங்கினார். அதன் வருவாய் மூலம், அந்தணர்,அறவோர் மட்டுமல்லாது, யாத்திரீகர்கள், திருவீதி உலாவின்போது குடை பிடிப்போர் , பூமாலை கட்டி வழங்குவோர், கோயிலைச் சுத்தம் செய்வோர், மெய்க்காவலர்கள், திருப்பதிகம் பாடுவோர், கோயில் கணக்கை சரிபார்க்கும் அரசுத் தணிக்கையாளர், கோயிலுக்கு மண்பாண்டங்கள்,ஆடைகள் அளிப்போர், திருமஞ்சன நீர் கொணர்வோர், பஞ்சாங்கம் வாசிப்போர், கொத்தர், தச்சர், கொல்லர், மடைப்பள்ளிப் பணியாளர்கள் ஆகிய பல்வேறு இனத்தாரும் ஆதரிக்கப்பெற்றனர். வீடுகள் கட்டித் தரப்பட்டன. கோயில் புதுப்பிக்கப்படும்போது, அங்கிருந்த பழைய கல்வெட்டுக்கள் பாதுகாப்பாகப் படிஎடுக்கப்பட்டுப் புதிய கல்வெட்டுக்களாக அமைக்கப்பெற்றன. இம்முறையில் திருமழபாடி ஆலயம் இராஜ ராஜ சோழரது ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது. உத்தரமேரூர்க் கல்வெட்டால் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை அறிகிறோம். அதுமட்டுமல்ல. சோழப்பேரரசானது பின்னர் வடதிசையில் கங்கை வரையிலும், தென்திசையில் ஈழத்தையும், குடதிசையில் மகோதையையும், குண திசையில் கடாரத்தையும் எல்லைகளாகக் கொண்டு தமிழர் வீரத்தை மட்டுமல்லாது, நாகரீகத்தையும் பறை சாற்றியது.”

இராஜராஜ சோழர் தனது பெயரை சிவபாதசேகரன் என்றே கல்வெட்டுக்களில் பொறிக்கச் செய்தார். சிவபெருமானது திருவடிகளை சிரத்தின் மீது சூடியவன் என்பது அதன் பொருள். ஆனால் தஞ்சைக் கோயிலில் பணி புரிந்த அத்தனை சிப்பந்திகளின் பெயர்களையும் கல்வெட்டில் பொறித்து வைத்தார். எண்ணற்ற ஏரிகளை உண்டாக்கி நீர்ப்பாசனத்தை மேம்படுத்தினார். புதிய வாய்க்கால்கள் வெட்டப்பெற்று நீர் வளமற்ற இடங்களும் பயன் பெறலாயின. இந்த நீர்நிலைகளை வரும் தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்டவர்களின் பாதங்கள் தன் தலையின் மீது என்றும் இருப்பன என்றும் கல்வெட்டில் குறிப்பிட்ட பண்பு வேறு யாருக்கு வரும் ?

இம்மாபெரும் மன்னரின் பெருமையையும்,கொடையையும்,வீரத்தையும் பற்றிச் சற்றும் அறியாத அறிவிலிகள், மக்களது நிலங்களை மன்னர் பறித்துக் கொண்டது போலப் பேசுவது நகைப்புக்குரியது. கண்டிக்கத்தக்கதுமாகும். அந்த நிலங்களை யார் தற்போது அனுபவிக்கிறார்கள் என்று பட்டியலிட இவர்களுக்குத் துணிவு உண்டா? அவற்றை மீட்கத்தான் ஆண்மை உண்டா? அம்மாமன்னரின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதி இல்லாதவர்கள் சூரியனைப் பார்த்து ஏதோ குரைப்பது போலக் கூப்பாடு போடட்டும். ஐப்பசி சதயத்தன்று அரசரது பிறந்தநாள் விழாவைக் காணச் செல்பவர்களாவது அவரது மாண்பைப் பற்றி ஓரளவேனும் அறிய வேண்டுவது அவசியம். நமக்கு அது பற்றி அக்கறை இருக்கிறதோ இல்லையோ, வட நாட்டில் இராஜ ராஜரின் பெயரும்,இராஜேந்திரர் பெயரும் பல இடங்களில் சூட்டப்பெறுகின்றன. ஆனால் நாமோ கோயில் சொத்தைத் திருடியவர்களையும் கோயில்கள் அழியும்படிப் பார்த்துக்கொண்டு வாளா இருப்பவர்களையும், தண்டிக்கப்பட வேண்டியவர்களைக் கொண்டாடியும் நமக்கு நாமே களங்கத்தையும் அழிவையும் தேடிக் கொள்கிறோம்.