Tuesday, October 25, 2016

பூர்வீகக் கலாசார மறுமலர்ச்சி வேண்டுவோம்

முன்னோர்களின் கனவை இப்படிச் சிதைய விடலாமா ? 
பாட்டனாரும் முப்பாட்டனாரும் வசித்த ஊரைப் பூர்வீகமாகக் குறிப்பிட்டு  வந்த காலம் போய்  ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு ஊர் என்று ஆகி விட்டபடியால் எந்த ஊரைப் பூர்வீகமாகப் பிற்கால சந்ததிகள் குறிப்பிட முடியும்? கடந்த ஒரு நூறே ஆண்டுகளுக்குள்  ஏற்பட்ட மாற்றங்கள்  நமது பூர்வீகம், பரம்பரை,புராதனம்,பண்பாடு ,கலாசாரம் ஆகிய வார்த்தைகளுக்குச் சவால்களாக ஆகிவிட்டன. பணம்,நவீன வாழ்க்கை ஆடம்பரம் என்பவை தலை தூக்கி நிற்கும்போது இந்த மாற்றங்களை எப்படித் தவிர்க்க முடியும் என்று தெரிய வில்லை. ஒருவேளை அப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் பின்னோக்கிப் போவதாகப் பட்டம் கட்டி விடுகிறார்கள். பழைய பஞ்சாங்கம், பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டங்களும்  வந்து குவிகின்றன.  

இந்த அசுர வேகத்திற்குத் துணையாகப் புதுப் புதுத் தொழில்களால் கவரப்படும் இளைய சமுதாயம் எவ்வாறு நமது பழம் பெருமைகளை அறிய முடியும்? இவை எல்லாம் தவிர்க்க முடியாத மாற்றங்கள் என்கிறார்கள். ஒளி  மயமான எதிர் காலம் என்று கற்பனை செய்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம்.  இருண்ட காலத்தை நோக்கிப் பயணிக்கிறோம்  என்பதை  அறியாத அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? 

 ஊரை விட்டுப்  பெரும்பாலானோர்  நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிலரே "எனது ஆயுள்  காலம் முடியும் வரை  பூர்வீக கிராமத்தை விட்டுப் போக மாட்டேன் " என்று உறுதியாய்  இருக்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர்  கிராமக் கோயில்களில் பல பரம்பரைகளாகப் பணி  செய்பவர்கள். உலகம் இவர்களை அங்கீகரிக்காதபோதும் இந்த உறுதியிலிருந்து அவர்கள் தளர்வதில்லை. அப்படியும் வறுமையின் விளிம்புக்கே சென்றவர்கள் அந்த உறுதியைக் கைவிடும் கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இதைத் தான் நாம் பல கிராமங்களில் பார்க்க முடிகிறது.  

கிராமத்தை விட்டு நகருக்குச் சென்றது போக இப்போது நாட்டை விட்டே செல்லத் தொடங்கிய நாளிலும் சிலர்  அங்கு இருந்து கொண்டே நமது பண்டைய கலாசாரத்தின் மீது காட்டும் ஈடுபாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கோயில்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார்கள். எனவே, ஆலயத் திருப்பணியும் வெளியூர் மற்றும்  வெளி நாட்டு அன்பர்களாலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. இதைப் பார்த்த பிறகாவது  கிராம மக்கள் தினமும் தங்கள் ஊர்க் கோவிலுக்கு வருகை தரமாட்டார்களா என்ற ஒன்றையே  இந்த நன் கொடையாளர்கள்  எதிர்பார்க்கிறார்கள். 

முற்றோதுதல், உழவாரப் பணிகள், கயிலாய வாத்தியம் இசைத்தல் போன்ற பல்வேறு பணிகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் பிரபலமான கோவில்களில் நடை பெறுகின்றன. பல சிவாலயங்கள் அமைந்துள்ள கிராமங்கள் வருவோர் இல்லாததோடு பிற மதத்தோர் பெரும்பான்மையாக வாழும் ஊர்களாகி  வருவது அனைவரும் அறிந்த செய்தி ஆகும். மேற்கண்ட பணிகளை நகரங்களில் செய்வதை விட இது போன்ற ஊர்களில் செய்யலாம் அல்லவா? நீடூர், சக்கரப்பள்ளி, இலம்பயங்கோட்டுர்,திருப்பாசூர் , தலையாலங்காடு,திருக் கோழம்பம்  போன்ற தலங்களில் அடியார்கள் இவற்றை மேற்கொள்ளலாம். இங்கெல்லாம் ஏதோ ஒரு நாள் தேவாரம் படித்த சிலர் போவதை விட , ஆலயப் பணி  செய்யும் அன்பர்கள் குழுக்களாக அடிக்கடிச் சென்றால் அவை மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு உண்டு.  தலைக்கு மேல் போன பிறகு அங்கலாய்ப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததோடு நமது கடமையும்  ஆகிப்  பிறருக்கு நல்வழி காட்டும். அதனால் அங்குள்ள சன்னதிகளிலும் தீபம் எரியும். அதைச் செய்யாத வரையில் எந்த வகையிலும் நமது புராதன ஆலயங்கள் நம் கண்ணுக்கு முன்னால்  அழிவதைத் தவிர்க்க முடியாது. கை நிறைய சம்பாதிக்கும் பூர்வீகக் குடி மக்களும் தொண்டர் குழாங்களும்  சிந்திப்பார்களா?   நமது பூர்வீகக்  கலாசாரம் பொலிவும் புனிதமும்பெறத் திருவருள் துணை நிற்பதாக. 

Tuesday, October 4, 2016

ஆகம விதி மீறல்கள்

இப்படியும் மொழியின் பெயரில் திணிக்கப்படும் மாற்றங்கள்.
மனிதன்  நுட்பமாகச்  சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவனை ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆய்தல் என்பதிலிருந்து ஆராய்தல் என்பதிலிருந்து வந்தது என்று கூடச் சொல்லலாம். ஆய்தல் என்பதற்குத் தேர்ந்து எடுத்தல் என்றும் பொருள் சொல்லலாம். நல்லது கெட்டதைப் பிரித்து எடுத்தல் என்றும் சொல்வதுண்டு. அவ்வாறு ஆய்ந்து எடுக்கும் அறிவை இறைவன் அனைத்து உயிர்களுக்கும்  அருட்கொடையாக வழங்கியுள்ளான். அதில் முக்கியமானது தனக்குத் தேவையான உணவை ஆய்ந்து எடுப்பது. தேவையற்றவற்றை அதிலிருந்து நீக்கி, உண்ணுவதை மனிதர்கள் மட்டுமல்ல. மிருகங்களும் பறவை இனங்களும்  பின்பற்றுகின்றன.

மனிதனோ தன்  வயிறு நிரம்பிவிட்டால் தன்னைச் சுற்றி உள்ளவற்றை ஆராயத் தொடங்குகிறான்.  இதற்கு ஆறாவது அறிவு என்று  பெயர் வைத்திருக்கிறார்கள். சிந்தனைகள் பலவிதம். ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் அவை இயங்குகின்றன. தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொள்ள ஆரம்பிப்பதோடு, காலம் காலமாக  வழி காட்டிய பாதைகளை  மாற்றிக் கொள்ளவும் தயாராகி வருவதைத்  தனி மனிதனது சுதந்திரம் என்று அழைப்பதைப்  பார்க்கிறோம். 

ஆன்மீகத்தையும் இந்தத் தனி மனித சுதந்திரம் விட்டு வைக்கவில்லை. இதைத்தான் திருஞான சம்பந்தர், " புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு " என்று குறிப்பிடுகிறார். நம்மை நல்ல கதிக்கு அழைத்துச் செல்வதற்கு இறைவன்  வேதங்களையும், ஆகமங்களையும், திருமுறைகளையும் தோற்றுவித்தான். அதிலும் ஆகம வழியில் இறைவனை வழிபடுவது தமிழகத்திற்கு உரிய தனிச் சிறப்பு. ஆகமம் இறைவனது வடிவேயாதலை மாணிக்க வாசகப் பெருமானும் , "  ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் " என்று பாடியருளினார். எனவே, ஆகமத்தைப் புறக்கணிப்பது என்பது சிவபெருமானையே புறக்கணிப்பதற்குச் சமம். ஆகமம் முத்தி நெறியை  அறிவிப்பது. அதனை ஒதுக்கினால் மூடர்களாகத்தான் ஆக ஏதுவாகிறது. " முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை" என்பது திருவாசகம்.  

ஆகமம் வடமொழியில் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காகச் சிலர் அதனைப் புறக்கணிப்பதோடு தமிழில் உள்ள திருமுறைகளைக் கொண்டே பூஜைகளையும் கும்பாபிஷேகங்களையும் நடத்துகிறார்கள். ஆகமத்தில் ஆலய பிரதிஷ்டை, விழாக்கள் நடத்தும் முறை, கும்பாபிஷேகம் நடத்துதல் போன்ற கிரியைகள் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் திருமுறைகளோ இறைவனைத் துதிப்பதற்கு உரிய தோத்திரங்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டுமே நமக்கு முக்கியம்தான்.  ஒன்றிற்குப் பதிலாக ஒன்று என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் இவ்விரண்டையுமே இறைவன் விரும்பி ஏற்கிறான் என்பதைப்  புராணங்கள் மூலமும், அருள் நூல்கள் வாயிலாகவும் அறிகிறோம். தவறாக வழிகாட்டுபவர்களால் ஏற்பட்ட விபரீதப் போக்கு இது. எப்படி வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு என்றும் வாதிடுவர்.

கோயில் அமைப்புக்களிலும் தங்களுக்குப் பிடித்தவகையில்  சிலர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். உதாரணமாகச் சிவாலயங்களில் கிராம தேவதைகள்   மற்றும் குருமார்களின் சிலைகளை வைக்கிறார்கள். மற்றும் சிலர் அக்குருமார்களுக்குத் தனி ஆலயங்களே எழுப்புகிறார்கள். வேத மந்திரங்கள் கொண்டு அவற்றிற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இப்புதிய குருமார்கள் மீது காயத்திரி மந்திரம், சுப்ரபாதம், அஷ்டோத்திரம் போன்றவை  இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. 

மக்களும் இவற்றால் கவரப்பட்டுத் தங்களது பரம்பரைகள் போற்றி வந்த தெய்வ வழிபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு  புதியதோர் வழிபாட்டை ஏற்கிறார்கள். துறவிகள் சிலரும் தங்கள் மடத்துக் கோட்பாடுகளை மதியாமல் இதுபோன்ற ஆலயங்களுக்குச் சென்று , தாங்களே தீபாராதனையும்,பூமி பூஜை முதலியவற்றையும் செய்கிறார்கள். கேட்டால் எல்லாவற்றிலும் சிவத்தைப் பார்க்கிறேன் என்று சமாதானம் சொல்வார்கள்.

மற்றும் சிலர் கயிலாய வாத்தியம் என்று பெயரிட்டு வாத்தியங்களை செவிப் பறை கிழியும் அளவுக்கு முழக்குகின்றனர். அவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் வேறு. அதில் சுய நினைவில்லாமல் சிலர் போடும் ஆட்டம் பாட்டம்,  முகத்தைச் சுளிக்கச் செய்கிறது. விழாக் காண வந்த மனோநிலை நம்மை அறியாமலேயே பறந்தோடி விடுகிறது. 

மேற்கண்ட மாற்றங்களுக்கு /  மாயைகளுக்கு இதுவரையில் வைணவ சமயம் ஆட்படவில்லை என்றே தெரிகிறது. திவ்வியப்பிரபந்தத்தைக் கொண்டு சம்ப்ரோக்ஷணம் செய்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? " மண்ணில் நல்ல வண்ணம் " பாடி சில சைவக் குழுக்கள் திருமணம் செய்வதைப்போல வைணவத்தில் பார்த்திருக்கிறோமா? கைலி  கட்டிய சுய நினைவில்லாத சுவாமி தூக்கிகளை வைணவம் அனுமதிக்காது. இவர்கள் கைலாய வாத்தியம் என்று முழக்குவதைப் போல் அவர்கள் வைகுண்ட வாத்தியம் என்று முழக்கமிடுவதில்லை. அந்த அளவுக்கு ஆகம நெறிகளைப் பின்பற்றுகிறார்கள். இப்படி இருக்கும்போது சைவத்தில் மட்டும்      ஏன் மாற்றம் ஏற்படுத்தத் துடிக்கிறார்கள்? அனுமதிகள் எப்படித்  தாராளமாக வழங்கப்படுகிறது? அப்படியே ஆகம மீறல்கள் நடைபெறும்போது  மடாதிபதிகள் ஏன் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிப்பதில்லை?  " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்றும், "  ஆகம சீலர்க்கோர்  அம்மானே " என்று திருமுறைகள்  கூறியும் அதற்காகவாவது பின்பற்றலாம் அல்லவா? 

சில மடங்களின்  கண்காணிப்பில் இருந்துவரும் ஆலயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பணி காணாது மரம் முளைத்தும் மேற்கூரை விரிசலோடு இருப்பதைக்  கண்டும், அம் மடாதிபதிகள் மௌனிகளாக இருப்பதைக் காணும்போது , இவர்கள் தமக்கு முந்தைய மடாதிபதிகள் காட்டிய வழியிலிருந்து மாறுகிறார்களோ என்ற ஐயம் உண்டாகிறது. இதனால் தானோ என்னவோ மக்களுக்கும் ஆகம விதி மீறுவதற்குத் தைரியம் வந்து விடுகிறது. வழி நடத்தி உய்விக்க வேண்டியவர்களே விலகி நிற்கும்போது மக்களை எப்படிக் குறை சொல்வது?