Saturday, April 7, 2012

கோயிலுக்குள் ஆக்கிரமிப்பு


 தேசீய நெடுஞ்சாலைத் துறையின் நால்வழிச்சாலைத் திட்டத்தால் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள தேவாரப் பாடல் பெற்றதும், சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டதுமான ஆயிரம் வருடத்திற்கும் முற்பட்ட பனையபுரம் சிவாலயத்தை இடிக்கும் பேரபாயத்தைச் சுட்டிக்காட்டியதோடு, சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளுக்கும் கடிதம் எழுதி, இச்செய்கையைக்  கைவிடுமாறு விண்ணப்பித்திருந்தோம். அதிர்ச்சிக்கு உள்ளான  பல அடியார் பெருமக்களும் இவ்விதம் கடிதம் எழுதியதோடு,தலத்திற்கு நேரில் சென்று, இறைவனிடம் பிரார்த்தித்தனர். அரசாங்கம் இப்போக்கைக் கைவிட்டு, மாற்று வழியில் பாதை அமைக்கும் என நம்புகிறோம். அதற்கான அதிகார பூர்வமான அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும்.

இப்படிப் பலவகைகளிலும் ஆலயங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்பு ஏற்படுத்துவதில் சில ஊர் மக்களே ஈடுபடும்போது  யாரிடம் முறையிடுவது? நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பணி செய்யப்படாத கிராமக் கோயில்கள் ஏராளம். அவற்றில் விமானங்கள் மரம்  முளைத்துப் பிளவு பட்டுக் காட்சி அளிக்கின்றன. நாளடைவில் சுற்றுச் சுவர்கள் விழுந்து விடுகின்றன. இதைப் பயன்படுத்திக் கோயிலுக்குள்ளேயே வீடுகளும் குடிசைகளும் கட்ட ஆரம்பித்து விட்டனர். கேட்பார் இல்லை. கோயில் திறந்தே கிடப்பதால், கோஷ்ட மூர்த்திகள் தீய சக்திகளால் மூளியாக்கப் படுகின்றன. கோயில் வளாகம் அவர்களால், தீய செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

இங்கு நீங்கள் காண்பது ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டம். மதில் சுவர்கள் இல்லாவிட்டால், இப்படிச்  சுற்றுக்கம்பிகளின் மீது துணிகளைக் காயப் போடுகிறார்கள். சில ஆண்டுகளில் கம்பிகளை இணைக்கும் கம்பங்கள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்து விடுகின்றன. ஆலயம் இவ்வாறு அதன்  எல்லையை இழக்க ஆரம்பித்தவுடன் , மெதுவாக ஒருவர் பின் ஒருவராகக் குடிசைகளைக்  கட்டிக் கொள்கிறார்கள். கட்ட ஆரம்பிக்கும்போது மற்ற ஊர் மக்களோ ,நிர்வாக அதிகாரியோ எதிர்ப்பு தெரிவிக்காமல் , நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுகிறார்கள். அரசியல்வாதிகளோ, தங்களுக்கு வரவிருக்கும் குடிசை வாழ் மக்களின் ஓட்டுக்களை இழக்க விரும்பவில்லை. இப்படி இருக்கும் போது, சட்டம் மட்டும் தன் கடமையை எப்படிச் செய்யும்?

இதோ நீங்கள் பார்ப்பது, முள் வேலி கழல ஆயத்தமாக இருக்கும் நிலை. அதை ஒட்டியிருக்கும் குடிசைகள் , இவ்வேலிகள் விழுந்தவுடன் ,தங்கள் பரப்பளவை அகலப்படுத்த ஆயத்தமாக உள்ளன. அதுவரை பொறுமை காக்க முடியாதவர்கள் ,எந்நேரமும் ஆக்கிரமிக்கக் கூடும்.

இன்னும் சில துணிச்சல் காரர்கள் (!) வீடுகளையே கட்டிக்கொள்கிறார்கள். இவர்களை யார் அகற்றப் போகிறார்கள்? எல்லாவற்றையும் இழந்து, கோயிலும் விழுந்தபிறகு , ஒரு சில மூர்த்திகள் மட்டுமே எஞ்சுகின்றன.
 நல்ல மனம் கொண்ட சிலர், இவற்றைச் சிறிய  ஓலைக் கொட்டகைகளில் வைத்து வழிபடுகிறார்கள். ஓலைக் கொட்டகை திரும்பவும் ஆலயம் ஆவது எப்போது? இதைக் கண்ட யாராவது மீண்டும் முயற்சி செய்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லாவிட்டால் ஆலயம் இருந்த இடமே தெரியாமல் வீடுகளைக் கட்டி நிரப்பி விடுவார்கள். நம் கிராமம், நம் கோயில் என்ற உணர்ச்சி இருந்தாலொழிய இந்த  நிலை நீடிக்கும் அபாயம் இருக்கிறது.