Friday, August 29, 2014

எளிய கடவுள்

விநாயகப்பெருமான் எளிமையை விரும்புபவர். தாமும் எளிமையாகத் தோற்றம் அளிப்பவர். தனக்கென்று மேற்கூரைகூட வேண்டாமல் ஆற்றங்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பவர். வெய்யில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் தாங்குபவர். மழை வேண்டுவோர்க்கு ஆலங்கட்டி மழையையே வரவழைப்பவர். இவருக்கு சாத்தனூர் என்ற ஊரில் ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயரும் உண்டு(இப்பெயரை அவருக்குச் சூட்டியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் ஆவார்கள்) சர்வ வல்லமை படைத்த முதல் மூர்த்தியானாலும் எளிய பூஜையை ஏற்பவர். உடனேயே வேண்டிய பலனை அளிப்பவர் . ஆதலால் க்ஷிப்ர பிரசாதர் எனப்படுவார். வள்ளியை வேட்ட கந்தப்பெருமானுக்கு அக்கணமே மணம் அருளிய பெருமான் ஆவார்.

பிள்ளையாரின் அருள் பெறுவதும் இதனால் எளிதான காரியமாகி விடுகிறது. வன்னி,கொன்றை, ஊமத்தை,வெள்ளெருக்கு,வில்வம் போன்றவற்றை விரும்பும் தமது தந்தையாகிய சிவபெருமானைப்போலவே தாமும் எளிமையான, மக்கள் ஏற்காத மலர், இலை போன்றவற்றை ஏற்கிறார். இவருக்கு வேண்டியதெல்லாம் எருக்கம்பூ மாலையும் அருகம்புல்லும் தான். முடிந்தவர்கள் கொழுக்கட்டை,அப்பம் போன்றவற்றையும் நிவேதிப்பார்கள்.
மிக எளிமையாகச்  செய்ய வேண்டிய பூஜையை மிகக் கடினமாகவும், செலவு மிக்கதாகவும், ஆடம்பரம் மிக்கதாகவும் மாற்றிக் கொண்டு வருகிறோம்.எந்த பூஜை ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கமும் பக்தி நிறைந்ததாக இல்லாவிட்டால் ஆடம்பரமே மிஞ்சும்.

மண்ணாலும்,மஞ்சளாலும்,வெல்லத்தாலும் விரல்களால் பிடித்து வைத்து பூஜை செய்து வந்த காலம்போய் , தெரு முனையில் அச்சில் செய்த மண் பிள்ளையார் பிம்பங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். பத்து வருஷம் முன்னால்  ஐந்து ரூபாய்க்கு வாங்க முடிந்த மண் பிள்ளையாரை இப்போது நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த குடையை  இப்போது இருபது ரூபாய் என்கிறார்கள்.  குடையை வீட்டிலேயே சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்னதாகவே வீடுகளில் செய்து வந்த காலம் போய் விட்டது. ஒரு முழம் பூ இருபத்தைந்து ரூபாய் என்று கூசாமல் விற்றாலும் வாங்குகிறார்கள். பழங்களின் விலையோ சொல்ல வேண்டாம்.

இத்தனை விலை கொடுத்து வாங்கியும் பூஜையில் மனம் லயிப்பதில்லை! செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. பூஜை எப்போது முடியப்போகிறது என்று  காத்திருந்துவிட்டு, ஓடிச்சென்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்வது!
கையில் பணம் மிதமிஞ்சிப்போனால் இப்படிதான் ஆகும். எல்லாம் செயற்கை ஆகிவிடும். பணத்தை வீசினால் எதையும் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விடும். விநயம்,பக்தி ஆகியவை பறந்து விடும். ஆனால் சுவாமியை ஏமாற்றி விட முடியாது. காலையும் மாலையும் கருத்து ஒன்றி நினைப்பவர் மனமே இறைவனுக்கு ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பணம் வசூலாகி விட்டது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தையும் அலங்காரத்தையும் ஆடம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை. கோயில் இருக்கும் பகுதியில் கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இரவு பூராகவும் அவை ஒளி வீசுகின்றன. இவற்றால் என்ன விளம்பரம் என்பது புரியவில்லை. இராப்பகலாக சம்பந்தமில்லாத பாடல்களை செவி கிழியும்படி ஒலிபெருக்கிகளில் அலற விடுகிறார்கள். அதைக்  கேட்பவர்களுக்குப்  பக்தி தோன்று வதாகவோ அதிகரிப்பதாகவோ எப்படிக் கருத முடியும்?

எனக்குப்பிடித்ததை நான் செய்கிறேன். பெரிதாகக் குறை கண்டுபிடிப்பதைப் பார் என்று நம் மேல் சீறுபவர்களையே காண முடிகிறது. இப்படி வாங்கும் ஒவ்வொரு பொருளும் மக்களின் சக்திக்கு அப்பால் பட்டதாக ஆகி விட்டால் வழிபாடு குறையவும், நம்பிக்கை குறையவும் வழி ஆகி விடுகிறது. எத்தனை காலம் ஆனாலும் இவ்வழிபாடுகள் குறையவோ நின்றுவிடவோ விலைவாசி ஒரு காரணமாகி விடக்கூடாது.எளிமை என்று சொன்னால் கஞ்சத்தனம் என்று அர்த்தம் இல்லை. ஆடம்பரமற்ற நிலை என்பதே பொருள். அதைப் பின்பற்றி வந்தால் இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நம்முடைய  கலாச்சாரத்திற்குக் குந்தகம் வந்து விடாது. அதற்கு நாம் நம்மைத்  தயார்படுத்திக்கொண்டு, மெதுவாகப் பழகிக்கொள்ள வேண்டும்.  

Tuesday, August 26, 2014

திருச்செந்தூரில் நடந்த அட்டூழியம்

திருச்செந்தூர் தினமும் திருவிழாக்கோலம் கொண்டு விளங்கினாலும், ஸ்கந்த சஷ்டியில் விரதம் மேற்கொண்டு இங்கு வந்து செந்திலாண்டவனைத் தரிசிப்போர் ஏராளம். அதேபோன்று ஆவணிமாதத்தில் வரும் உற்சவ நாட்களில் ஷண்முகப்பெருமான் பிரம்ம,விஷ்ணு,ருத்ர மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி அளித்து வீதிஉலா வருவார். கந்தப்பெருமானைக் கண் கண்டதெய்வமாகத் தினமும் வழிபடுவோர்  இந்த நாட்களில் திருச்செந்தூர் வந்து இறைவனைத் தரிசிப்பர். கயிலை மலை அனைய செந்தில் பதி என்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பதி  தெய்வப்பதி என்பதால் அதன் சாந்தித்தியம் எப்போதும் போற்றப்படவேண்டும்;அது மட்டுமல்ல. காப்பாற்றவும்படவேண்டும்.

தெய்வமே! உன் கோயிலிலா இப்படி??
கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் ஆவணி உற்சவத்தில் நடைபெற்ற முறைகேட்டை  ஒரு முகநூல் பதிவில் காண நேரிட்டது. பெருமான் உலா வரும் பல்லக்கு பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்குள் சில விஷமிகள் நுழைந்து படுத்திருக்கிறார்கள். அதைவிட அதிர்ச்சிதருவது என்னவென்றால், குடித்துவிட்டு ,மது பாட்டில்களைத் தங்களுக்கு  அருகில் வைத்துக்கொண்டு பல்லக்கில் உறங்குவதை முகநூலில் (Facebook) வெளியிட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்களின்  மனத்தைப் புண்படுத்தியுள்ள இச்செயல் சொல்லொணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கித் தலைகுனியவேண்டிய அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம் இது. இதற்கு ஆலய அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்களா? தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா? அறநிலையத்துறை விசாரணை நடத்துமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டாலும் விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிடும். பக்தர்களும் போராடப்போவதில்லை. இதுவே தொடர்கதை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பல ஊர்களில் உற்சவங்கள் நடைபெறும்போது, குடித்துவிட்டு வந்து சுவாமி தூக்குவதைக் கண்டிருக்கிறோம். பல்லக்கிற்குள்ளே போதை மேலிடத் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற அக்கிரமங்கள் எவ்வளவு நடக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. தவறுகள் தண்டிக்கப்படாத போது,  தெய்வமே அப்பாவிகளைத் தண்டிப்பதுதான்  முறை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் தண்டித்தால் தான் உலகம் திருந்தும். செந்திலாண்டவன் சூரனைத் தண்டித்துத் திருத்தியது போல் இவர்களிடத்து இன்னமும் இரக்கம் காட்டாது தண்டித்துத் திருத்தவேண்டும். நடைபெற்ற பாவச்செயலுக்குப் பரிகாரங்களை ஆகம முறைப்படி நிர்வாகத்தினர் உடனே மேற்கொள்ளவேண்டும். என்னதான் பரிகாரம் செய்தாலும், இதனால் முருகபக்தர்களின் மனத்தில் ஏற்பட்ட வடு ஒருபோதும் அழியாது.   

Saturday, August 16, 2014

பாழடையும் குளங்கள்

தலயாத்திரையில் தீர்த்தயாத்திரையும் அடங்கிவிடுகிறது. உதாரணமாகக் காசிக்குச் செல்பவர்கள் விச்வநாதரையும்,கங்கையையும் தரிசிப்பதும் , இராமேச்வரத்திற்குச் சென்று இராமனாதரைத் தரிசிப்பதோடு, அனைத்துத் தீர்த்தங்களிலும் நீரா டுவதும் தொன்றுதொட்டு நடந்து வருபவை. தீர்த்தங்கள் எல்லாம் சிவவடிவமாகவே கருதப்படுபவை. "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்கிறது அப்பர் தேவாரம்.

பொதுவாக எல்லாத் திருக்கோயில்களின் அண்மையிலும் திருக்குளங்கள் இருக்கக் காண்கிறோம். இவை அனைத்தும் இறைவனுக்குச் சமமான புனிதத்துவம் வாய்ந்தவை. வேண்டிய அனைத்தும் வழங்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவை. தீரா நோய்களைத் தீர்த்து அருள வல்லவை. எடுத்துக்காட்டாக  வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்திற்குள் உள்ள சித்தாமிர்தத் தீர்த்தத்தின் சிறப்பைக் கூறும்பொழுது அதன் துளி ஒன்று நம் மீது பட்டாலே வினையும் நோயும் நீங்கப்பெறும் என்று நூல்கள் வாயிலாக அறிகிறோம்.

 திருவாரூருக்கு அண்மையில் உள்ள திருக்காரவாசல் (திருக்காறாயில்)என்ற பாடல் பெற்ற சிவத் தலத்தின் திருக்குளப்படிக்கட்டுக்களைக் கருங்கல்லால் அமைத்துக்  கட்டியுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பக்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதன் எழிலான காட்சியையே மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஆலயத்தோடு தொடர்புடைய குளம் , திருக்குளம் எனப்படுகிறது. ஏனையவற்றைக் குளம் என்று மட்டும் அழைக்கிறோம். அவை மக்களின் அன்றாட தேவைகளுக்காக அகழப்பெற்றவை. கிராமங்களில் அத்தகைய குளங்கள் நீராடுவதற்கும், துணி தோய்க்கவும், பாத்திரங்களைக் கழுவவும் பயன்படுத்தப்படுகின்றன.. இவற்றைத் திருக்குளங்களில் ஒருபோதும் செய்யக்கூடாது. நமது பிற தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குளங்கள் கால்நடைகள் நீர் பருகவும்,நீராடவும் எதுவாக ஒருபுறம் படிக்கட்டுக்கள் இல்லாமல் அப்பிராணிகள் எளிதாக இறங்கும் வகையில் சரிவாக அமைக்கப் பட்டிருக்கும். இவற்றை சிறந்த தருமங்களாக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்தார்கள்.   "குளம் பல தொட்டும்"  என்பது சம்பந்தர் வாக்கு. குளம் அமைப்பது சிறந்த சிவதருமம் என்பது இதனால் அறியப்படுகிறது. இவற்றைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய நாம் பாழடிக்கிறோம் என்பது உண்மை. புதிய குளங்களை அகழும் புண்ணியத்தை ஏற்காவிடினும், பழைய திருக்குளங்களையும் ஏனைய குளங்களையும் தூர்க்கத் துணிந்துவிட்டோம்.

கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளம், திருவாரூரிலுள்ள கமலாலயத் திருக்குளம்  போன்றவற்றில் மக்கள் பெருந்திரளாக வந்து நீராடுவர். எனவே இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டியது நம்  ஒவ்வொருவரின் கடமை. திருக்குளங்களிலேயே,குப்பைகளையும் பிற கழிவுகளையும் வீசத் துணிந்துவிட்ட நாம், ஏனைய குளங்களை அலட்சியப்படுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. பல இடங்களில் கிராம ஊராட்சிக் கட்டிடங்களே கோயில் நிலங்களிலும் நீர்நிலைகளை ஒட்டியும்  ஆக்கிரமித்துக்   கட்டப்பட்டிருக்கும்போது, பிறருக்கும் தைரியம் வந்துவிடுகிறது.

இந்நிலையில் வயதானவர்களைத் திருத்துவதென்பது சாத்தியமாகத் தோன்றவில்லை. கிராமப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நமது ஊரிலுள்ள திருக்குளமும் பிற குளங்களும் எவ்வாறு பாழாகிக் கிடக்கின்றன என்பதை அவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று நேரில் காட்டி விளக்க வேண்டும். அவை தூர்க்கப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு பாதிப்படைகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும். குளம் , வாய்க்கால் ஆகியவற்றிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கோடைக்காலத்தில் அகற்ற முன்வர வேண்டும்.குளங்களைச் சுற்றிக் கருவேலி மரங்கள் இருந்தால் அவை அருகிலுள்ள நிலத்தடி நீரைப் பெரிதும் உறிஞ்சி விடுகின்றன என்று அறியப்பெற்று, அவற்றைப் பலர் நீக்க முன்வருகின்றனர். இளைய சமுதாயத்தின் சீரிய பங்கினால்  திருக்கோயில்களும்  திருக்குளங்களும்  மீண்டும் பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்விளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆணி வேராகவும் ஏணிகளாகவும் திகழும் ஆசிரியப்பெருமக்கள் ,கல்வி புகட்டுவதோடு நின்றுவிடாமல் சமூக சிந்தனையையும் உருவாக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும் என்பது நமது வேண்டுகோளும் ஆசையும் ஆகும். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாங்கம்  நல்லாசிரியர் விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும். ஆசிரியர்கள் முன்வருவார்களா? நல்லாசிரியர்களாகத் திகழ்வார்களா?