Friday, August 3, 2018

ஆலய சன்னதிகளில் தீபம் ஏற்றத் தடையா ?

பாவை விளக்கு 
கோயில்களில் ஒரூ குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளதை அடுத்து பெரிய கோயில்கள் பலவற்றில் அம்முறை அமல்  படுத்தப்பட்டுள்ளது.  ஒரு சாரார் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீதிப்பேர் வழக்கம்போல் மௌனம் சாதிக்கின்றனர். இம்மௌனமே பல தவறுகள் ஆலயங்களில் நடைபெறுவதற்குச்  சாதகமாக அமைந்து விடுகிறது. கண்டனக் குரல் கூட எழும்பாத நிலையில் ஆலயங்களில் தவறுகள் நடந்தாலும் வருவாய்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டாலும் யார் தான் தட்டிக் கேட்கப் போகிறார்கள் ?  

ஆலயங்களின் விவசாய நிலங்களும், கட்டிட வாடகைகளும், ஆபரணங்களும் பல்லாண்டுகளாகச் சூறையாடப் பட்டபோதும் வாய் திறக்காத மாக்களா  இப்போது எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்கள்?  இந்த ஒற்றை தீபமும் தடை செய்யப்பட்டாலும்    " வீட்டிலேயே விளக்கேற்றிக் கொள்ளலாம்" என்று பேசக்கூடிய மேதாவிகள் வாழும் பூமி இது. விழாக்காலங்களில் கூட்டம் அலை மோதி என்ன பயன்? முதுகெலும்பு இல்லாத பக்தர்கள் இருக்கும் வரை நாம் ஒவ்வொன்றாக இழக்க வேண்டி இருக்கும்.

விளக்கேற்றினால் நமது தீய வினைகளும், அவற்றால் ஏற்பட்ட துயரங்களும் நீங்கும் என்று புராணங்கள் அறிவிக்கின்றன. விளக்கிட்டார்களது பேற்றினை அவரவர்களே உணர முடியும். வேதாரண்யத்தில் இறைவனது சன்னதியில் இருந்த விளக்கில் இடப்பட்டிருந்த எண்ணையைப் பருகவந்த எலி ஒன்று, திரியை இழுக்கும்போது மூக்கு சுட்டு விட்டதால் அத்திரியை லேசாக வெளியில் இழுத்தது. அதனால் அத்திரி மீண்டும் பிரகாசமாக எரிந்தது. விளைக்கைத் தூண்டி விட்டது போன்ற இச் செயலால் மகிழ்ந்த இறைவன் அந்த எலியை  மாவலிச் சக்கரவர்த்தி ஆக்கினான் என்பது புராணம் தரும் செய்தி.   

விசேஷ நாட்களின் போது பல்வேறு சன்னதிகளிலும் மக்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பிரதோஷத்தன்று நந்தியிடமும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கும், அஷ்டமியில் பைரவருக்கும்,சனிக்கிழமைகளில் சனைச்சரன் சன்னதியிலும் விளக்கேற்றும் பக்தர்களைத தடுத்து ஒரே இடத்தில் விளக்குப் போடச் சொல்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஒரு சன்னதியில் செய்யப்படும் வேண்டுதல்களையும் பரிகாரங்களையும் வேறு ஒரு சன்னதியில் எவ்வாறு செய்வது ?  அம்பிகை சன்னதியில் குத்து விளக்கு பூஜை செய்யும் அன்பர்கள் அதனை  வேறெங்கு செய்வது? 

விளக்கு ஏற்றும் பெரும்பாலான பெண்கள் அந்த இடங்களில் எண்ணையைச் சிந்தி விடுவதால் இந்த முறை தேவைப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுவார்கள் . உண்மைதான்! நாம் தான் தீபம் போடும் சன்னதிகளை அசுத்தம் செய்வதிலும், கையில் உள்ள எண்ணெய் , விபூதி,குங்குமம் ஆகியவற்றை அருகிலுள்ள சுவற்றிலும், தூணிலும் சமர்ப்பிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே!  போதாக் குறைக்கு எண்ணெய்  கையால் சுவற்றில் கோடுகள் போடுவதும், செல் நம்பர், தேர்வு எண் ஆகியவற்றை எழுதுவதும் நமக்குக் கை வந்த கலை ஆயிற்றே!  நமது இந்த செயலுக்கு வெட்கப்பட வேண்டும். இதுபோன்ற பொறுப்பற்ற செய்கைகளால் ஒழுங்காகச்  செய்யப்படும் பூஜை முறைகளும் பாதிப்பு அடைகின்றன. 

முதலில் கற்பூரம் ஏற்றக்  கூடாது என்றார்கள். நெய் தீபம் போடவேண்டும் என்று சொல்லி, முக்கிய சன்னதிகளின் அருகில் நெய்க் கடைகளுக்கு ஒப்பந்தம் வழங்கிப் பலன் அடைந்தார்கள்  பிரசாதக் கடைகள் என்ற பெயரில் பெயரளவில் கூடப் பிரசாதம் அல்லாத தின் பண்டக் கடைகளைக் கோயிலுக்குள் அனுமதித்தார்கள். அவற்றை வாங்கித் தின்றுவிட்டு அவ்விடத்தில் கை அலம்புவதும், வாய் கொப்பளிப்பதும்,எச்சில் இலைகளையும் தட்டுக்களையும் வீசி எறிவதை ஏன் கண்டு கொள்வதில்லை ?  எல்லாவற்றுக்கும் மேலாகத் துர்நாற்றம் வீசும் பிராகாரங்கள், மதில் சுவர் ஓரங்கள் போன்றவற்றைச்  சரிசெய்ய முன்வராமல் பக்தர்களது காணிக்கையை மட்டும் வாங்குவதில் குறியாக இருந்து கொண்டு அவர்களை அதிகாரம் செய்வது நியாயமா?  

கோயிலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம் தான். அதற்காக வழிபாட்டு முறையையே மாற்ற முயலுவதுதான் தவறு. காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள  கடம்பூர்க் கோயிலில் தீபங்கள் ஏற்றப்படும் இடங்களில் கை துடைத்துக் கொள்ள ஒரு துணியைத் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் குப்பைகள் போடுவதற்குத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும்  அவ்வூர் நண்பர் தெரிவித்துள்ளார். பாராட்டப்பட வேண்டிய செயல். பிற கோயில்களிலும் இது பின்பற்றப்பட வேண்டும். மக்கள் பின்பற்றுவார்களா என்று உடனே கேட்கலாம் . மாற்றங்கள் மறுநாளே ஏற்பட்டுவிடுவதில்லை. சிறிது கால அவகாசம் தேவைப் படலாம். ஆனால் அது விரைவிலேயே நடைமுறையில் வரவேண்டியது முக்கியம். கொடுக்கப்படும் விபூதி குங்குமத்தில் ஏற்றுக்கொண்டது போக எஞ்சியதைக்  கொட்டக்  கிண்ணங்கள் இருந்தும் தூண்களில் கொட்டும் பக்த சிகாமணிகளை உடனே திருத்துவது அவ்வளவு எளிதா என்ன?