Sunday, April 15, 2018

ஆலயங்கள் வழிபாட்டுக்கு மட்டுமே

தஞ்சைக் கோயில் பிராகாரத்தில் பேருந்து 
கோவில் என்பது வழிபாட்டுக்கு மட்டுமே உரிய இடம் என்பது சிலருக்கு நினைவில் இருக்காது போலிருக்கிறது. காற்று வாங்கவும்,பொழுதைக் கழிக்கவும்,ஊர் வம்பு பேசவும்,கூச்சல் போடவும், கிடைத்ததை எல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு விட்டுக்  குப்பைகளை நினைத்த இடத்தில் வீசவும், சன்னதி வரையில் வாகனங்களில் வந்து இறங்கவும், சுவர்களில் கிறுக்கவும் கைபேசியில் பேசிக்கொள்ளவும்,படம் எடுக்கவும் பிராகாரங்களில் அன்பைப் பரிமாறவும் ஏற்ற இடங்களாக இருப்பதைப் பலரும் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். 

திரைப்படம் எடுக்கவும்,சின்னத்திரையில் தொடர்கள் எடுக்கவும் கோயில் ப்ராகாரங்களும், மேற்கூரைகளும் பயன்படுத்தப் படுகின்றன. ஆலய நிர்வாகிகளோ பக்தர்களோ ஆட்சேபிக்காமல் இருப்பதோடு தாங்களும் நின்றுகொண்டு அதை வேடிக்கை பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்வது ?  ஒரு பிரபலமான கோவிலில் இதுபோல படப் பிடிப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ல நேரிட்டது. உள்ளே யாரும் படப்பிடிப்பு முடியும் வரை செல்லக் கூடாது என்று படக் குழுவினர் தடுத்தார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளே சென்றபோது பின் தொடருவோர் எவருமே இல்லை !! தாமாகத் தான் தடையை மீறி வழிபடும் உரிமையை நிலை நாட்டாவிட்டாலும், அப்படிச் செல்வோரைத் தொடரலாம் அல்லவா? அப்படியானால் இவர்கள் பக்தியோடுதான் கோவிலுக்கு வருகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படத் தான் செய்கிறது. அங்கு எடுக்கப்படும் காட்சிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். புத்தியைக் கெடுப்பதற்கான அத்தனை வழிகளும் விவாதிக்கப்படுவதும், அரங்கேறுவதும் இங்கு தான் ! 

திருவிழாக் காணச் செல்பவர்கள் கண்காட்சிக்குப் போகிறவர்களைப் போல இருக்க வேண்டாமே ! அப்பளக் குழவியும்,அரிவாள் மனையும் ,சீப்பு, வளை போன்றவை அங்கு மட்டுமா கிடைக்கும் ? பெண்மணிகள் சிந்திப்பார்களாக. கோயில்களுக்குள் நிரந்தரமாகவே பல இடங்களில் இக்கடைகள் புகுந்து விட்டன. கோயிலில் உள்ள கடைக்குப் போய்விட்டு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு அப்படியே சுவாமியையும் பார்த்து விட்டு வரலாம் என்ற அளவில் அல்லவா போய் முடிகிறது ? 

கோயில்களில் பிரசாதம் என்பது மார்கழி விடியலில் மட்டும் இருந்தது போக வருஷம் முழுவதும் நடைபெறுவதால் சாப்பாட்டுக் கூடங்களாகக் காட்சி அளிக்கின்றன. இன்ன தினத்தில் இன்ன கோவிலுக்கு இன்ன நேரத்தில் சென்றால் இன்ன பிரசாதம் கிடைக்கும் என்று எண்ணும்  அளவுக்கு மக்களது மூளையை மழுங்க அடித்திருக்கிறார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வைத்துக் கொண்டு நிர்வாகமும் அன்னதானக் கூடம் கட்டி அதில் வியாபார நோக்கைப் புகுத்தி விட்டது. ஏழை எளியவர்களுக்காகத் தானம் செய்யப்  போய், நாளைக்கு மூன்று வேளை மூக்கைப் பிடிக்கச்  சாப்பிடும் வசதி உள்ளவர்களும் வரிசையில் நின்று பிரசாதம் ( ? ) பெறுவதைப் பார்க்கிறோம் . பிரசாதம் விநியோகித்தால் தான் கூட்டம் வரும் என்று வியாக்கியானம் வேறு !  ஒரு கோவிலில் பிரசாதம் விநியோகிக்கப்பட்டு இருந்ததைத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும்போது,  வரிசையில் இருந்த ஒருவன் கேட்டான்  " வெறும் தயிர் சாதம் கொடுத்தால் எப்படி ? கூடவே ஊறுகாயும் கொடுக்க வேண்டாமா ? " என்றான். !!

கோயில் யாகசாலைகளில் காபி விநியோகம் நடுநடுவில் அமோகமாக நடைபெறுவதைப் பார்த்திருக்கலாம். குடித்துவிட்டு வெற்றுக் "கப்"  களைக்  காலடியிலேயே எறிபவர்களை எப்படித் திருத்துவது?  இதை விட மோசமான நிலையை மற்றோரிடத்தில் காண நேரிட்டது. திருப்பணி நடந்து முடிந்ததும் மேற்கூரையில் ஏறி வர்ணம் அடிக்கச் சென்றவர்கள் அங்கு ஏராளமான மது பாட்டில்கள் இருப்பது கண்டு அதிர்ந்து போனார்கள். ஸ்தபதிகளையும், கட்டுமானத் தொழில் செய்வோரையும் இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். இது இறைவன் நீங்காது உறைந்து அருள் வழங்கும் இடம். தயவு செய்து அதன் தூய்மையையும் பவித்திரத்தையும் களங்கப் படுத்தாதீர்கள். அது உங்களை மட்டுமல்ல. உங்கள் வாரிசுகளையே பாதிக்கும்.அவ்வாறு தண்டிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்த்த பிறகும் இப்பாவச் செயலில் ஈடுபடலாமா ?  பாவத்தைத்  தீர்த்துக் கொள்ளத்தான் கோயில்களே தவிர பாவம் செய்யும் இடங்களாக அவற்றை மாற்றி விடக் கூடாது.