Saturday, November 29, 2014

தாய் மொழியும் வட மொழியும்

மொழி என்பது நம் எண்ணங்களைப் பிரதிபலித்துப் புரியவைப்பதற்காகவே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் வாழும் இடம் தாண்டி வேறோர் இடத்தில் வேறு மொழி பேசப்படுமானால் அம்மொழியையும் தேவையானால் கற்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் அங்கு உள்ளோரிடம் நம் எண்ணங்களைப் புரியவைக்க முடியும். அவ்வளவே. அதை விட்டு விட்டுத் துவேஷ அடிப்படையில் இதைப் பிரச்சனை ஆக்குவது வாடிக்கை ஆகி விட்டது.

ஒருவனது தாய் மொழி காலத்தால் மிகவும் பழையதாக இருக்கலாம். எல்லா மொழிகளும் ஒரே காலகட்டத்தில் தோன்ற முடியாது. மேலும் நாளடைவில் அவை பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன. அதை வைத்துக்கொண்டு பிற மொழிகளை வெறுப்பதோ,ஒதுக்குவதோ முறை ஆகாது. நமது தாய் மொழியில் பற்று இருக்க வேண்டுவது அவசியம் தான். சூழ்நிலைகளால் மொழி ஏற்கப்படாமலோ, வளர்ச்சி பெறாமலோ ஆகி விடலாம். அந்தக் கோபத்தைப் பிற மொழிகளிடம் காட்டுவது எப்படி நியாயமாகும்?

பணம் பணம் என்று அலையும் இக்காலத்தில், தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்படி , பள்ளிப் படிப்பிலேயே அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பெற்றோருடைய பங்கும் உண்டு. வேலைக்குப் போனபின் , படித்தவை பெரும்பாலும் மறந்து விடுவது வேறு விஷயம்! அதே நேரத்தில், வழக்கில் பிற மொழிக் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.காலம் காலமாக கட்டிக் காத்த மொழி அழிந்து விடுமோ என்ற அச்சமும் பலருக்கு ஏற்படுகிறது. மொழியை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதால் மட்டும் என்ன சாதிக்க முடிந்தது?

பிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் ஹிந்தியைக் கற்பதைக்  காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது மொழிகளைக் கற்காமல் ,பிற நாட்டு மொழிகளைக்  கற்கிறார்கள். அந்த நாடுகளுக்குச்  சென்றால் பயன் படுமாம்! அப்படி எத்தனை பேர் போகப்போகிறார்களோ தெரியவில்லை. அப்படிப் போவோர்களுக்காக இங்கு இருப்பவர்களும் அவர்களோடு சேர்ந்து நம் நாட்டு மொழிகளைப் புறக்கணிக்கவேண்டுமா?

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு அதன் இலக்கியங்களில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதிலும் பக்தி இலக்கியங்களால் அம்மொழி வளம் பெற்றதை ஒருக்காலும் மறக்கலாகாது. பக்தி இலக்கியங்களை ஒதுக்குவதும் தமிழை ஒதுக்குவதும் ஒன்றே. தெய்வத்தமிழ் என்ற தனிச் சிறப்பு இதன் மூலமே பெறப்பட்டது. இதேபோன்று, காலத்தால் மிகப்பழையதும், பக்தி இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் ஆன வட மொழியை நாம் போற்ற வேண்டும். இந்தியத் தாய்நாட்டில் ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் பொதுவாக இருப்பதுபோல் வழிபாட்டு மொழியும் சமஸ்கிருதமாக இருந்து மக்களை இணைக்கிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது பாடமாக  சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்  என்று புரியவில்லை.பிற நாட்டு மொழிகளைக் கற்றால் தான் கெளரவம் என்பதாலா? ஒன்பதாம் வகுப்பு முதல் இரு மொழிகள் தானே கற்கப்போகிறார்கள். அதுவரையிலாவது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் மொழியைக் கற்பதில் என்ன தவறைக் கண்டுவிட்டார்கள்? மொழி துவேஷத்தைத் தவிர வேறு காரணம் புலப்படவில்லை.

வட மாநிலத்தவர் இங்கு வந்து திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசும் போது மட்டும் காது குளிரக் கேட்கிறோம்.  நம் வீட்டுக் குழந்தைகள் திருக்குறள் , தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வத்தமிழ் நூல்களைக் கற்க வழி வகுக்கிறோமா என்று ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல் இது. அதுவரையில் தமிழ், வட மொழி இரண்டையும் இரு கண்களாகப் போற்றிவந்தனர். கோயில்களில் வழிபாட்டை வட மொழி ஆகமப்படியும் , தோத்திரத்தைத் தமிழ் மறைகளாலும் செய்து வந்த காலம் போய் இரண்டும் கெட்டு விடும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு மணலிலோ , சிலேட்டுப் பலகையிலோ தாய்மொழியில் கையைப்பிடித்துக் கொண்டு எழுதச் சொல்வர். விஜயதசமி அன்று சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, பள்ளியில் சேர்ப்பார்கள். இப்பொழுது, குழந்தை பேச ஆரம்பித்தது முதல் ஆங்கிலத்தையே போதிக்கும் பெற்றோர்கள் இருக்கும்போது எதை நொந்து கொள்வது?

எல்லா மொழியாலும் துதிக்கப் படுபவன் இறைவன் என்கிறது சம்பந்தர் தேவாரம். திருவொற்றியூர்  இன்னம்பூர்  ஆகிய ஊர்களில் இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்று பெயர். அப்படியானால் அப்பெருமான் தமிழ் மொழியை மட்டும் அறிந்தவனாகக் கொள்ள முடியுமா? தாய் மொழி எதுவானாலும் எல்லா மாநிலத்திற்கும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் பொதுவானதாக உள்ளது. எல்லா மாநிலத்தவர்களையும் வழிபாட்டு அளவில் இணைக்கும் பாலமாக அது விளங்குகிறது.எனவே அம்மொழியைப் பள்ளிக்கூட அளவில் எட்டாம் வகுப்பு அளவிலாவது தெரிந்து கொள்வது நல்லது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வர். முடிந்தால் மக்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும். மக்களைப் பிரிக்கும் பாவச்செயலில் இறங்க வேண்டாம். கலைவாணியின் அருள்  அனைவருக்கும் கிட்டுவதாக.      

Friday, November 7, 2014

அன்னாபிஷேகமா அன்னாலங்காரமா ?

அலங்காரம் செய்வது என்பது ஒரு கலை. வரம்புகளுக்கு உட்பட்டு செய்யப்படுவது. சொந்தக் கற்பனை சிறிதளவு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவு மீறப்படும்போது அது பரிமளிக்காததோடு, வரம்புமீறல்கள் அதிகரிக்கவும் வழியாக அமைந்துவிடும். கோயில் வழிபாட்டு முறைகளில் இது எவ்வளவு தூரம் உண்மை என்பது பலருக்குத் தெரியும். வழி வழியாகச் செய்யப்படுவதை மையக் கருத்தாகக் கொண்டு, ஒருசிறிதளவு மட்டும் கற்பனை சேரும்போது பாரம்பர்யத்திற்குக் குந்தகம் நேராதபடி  காப்பாற்றப்படுவதைக் காணலாம்.

திருவிழாக்கள் வரும்போது வழிமுறைகளில் மாற்றங்கள் காணப்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். உதாரணத்திற்கு , சந்தனக்காப்பு என்று எடுத்துக்கொண்டால்  மூல மூர்த்தியின் உருவ அமைப்பில் மாற்றம் செய்யப்படாமல் சந்தனத்தைச் சார்த்தி, அதன்மீது வண்ணக் கலவைகளையும்,ஜரிகைகளையும் உபயோகித்து , அலங்காரம் சோபிக்கும் படி செய்வது வழக்கம்.

 மூலவருக்குக் கை ,கால் முதலியவற்றை இணைத்து, ஆண்டுக்கொரு அலங்காரம் என்று சொல்லிக்கொள்ளும் "அலங்கார ரத்தினங்களும்" இருக்கிறார்கள் . உற்சவருக்கோ இத்தகைய இணைப்புகள் சகஜமாகி விட்டன. " புதிய "கைகளில் சூலம் ஏந்தியபடியும் கால்களை இணைத்து மூர்த்தியை பெரிதாகக் காட்ட முயல்வதும் , மூர்த்தியின் இயற்கை வடிவை அடியோடு மாற்றி , என்ன சுவாமி ஊர்வலம் வருகிறார் என்று கேட்க வைத்து விடுகிறது. நகை சார்த்துவதோ,, மாலைகள் சார்த்துவதோ மூர்த்தியின் உருவ அமைப்பை மறைக்காதபடி இருக்க வேண்டும். பிள்ளையாரையாவது தும்பிக்கையை வைத்துக் கண்டு பிடித்து விடலாம். மற்ற மூர்த்திகளை முகம் மட்டும் தெரிவதை வைத்துக்கொண்டு எவ்வாறு கண்டுபிடிப்பது ???
                                                                                                                                                                                                                                                                                                                                 

மூலஸ்தான மூர்த்திகளுக்கு  அலங்காரம் செய்யப்படும்போது சொந்தக் கற்பனையை கொஞ்சம்  குறைத்துக் கொண்டால் நல்லது. எடுத்துக் காட்டாக, ஐப்பசி மாத அன்னாபீஷேகத்தில், அன்னம் அபிஷேகிக்கப்படுவதைக் காட்டிலும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவகையில் பார்த்தால் தினமும் செய்யப்படும் பல்வேறு அபிஷேகப்பொருள்களில் அன்னமும் ஒன்று என்பதை சிதம்பரம் கோயிலில் நடைபெறும், சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் அறிவார்கள்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீச்வரருக்கு அன்னாபிஷேகம் மணிக்கணக்கில் அனைவரும் காணும்படி அபிஷேகமாகச் செய்யப்படுகிறது.
கண் கொள்ளாக் காட்சி அல்லவா அது

அலங்காரம் என்னும்போது, அன்னத்தை அபிஷேகம் செய்தபின், நிறைவாக அன்னம் கலையாதபடி மாலைகள் சார்த்தலாம் . அப்பம்,வடை ,பட்சணங்கள், காய்கறிகள் ஆகியவைகளைக் கொண்டு சிவலிங்க மூர்த்திக்கு அலங்காரம் செய்யப்படுகியது. இவற்றால் அலங்காரமே பிரதானமாக ஆகிவிடுகிறது அல்லவா/ பிறவற்றை சுவாமிக்கு முன்பு வைத்து நைவைத்தியமாகச் செய்தால், மூலவரை அன்னாபிஷேகத்தில் முழுமையாகத் தரிசிக்கலாமே என்ற ஆசையால் இந்த எண்ணம் தோன்றுகிறது.

இது ஒருபக்கம் இருக்கும்போது, பல இடங்களில், அன்னத்தின் மீது முகம் வரைகிறார்கள். மேலே சொல்லியபடி இது எல்லோ ருக்கும் எளிதில் கைவராத  கலை.இன்னும் சொன்னால் முகத்தை  அழகாக அமைக்கத் தெரியாமல் கோரப்படுத்தி விடுகிறார்கள். அதில் ஒட்டு வேலைகள் வேறு!! சிவாசார்யப் பெருமக்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாபிஷேகத்தில்  அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் தந்து, கற்பனைகள் இல்லாமல், ஆராதித்தாலே, பரமேச்வரனைத் திருப்தி படுத்துவதோடு, சேவார்த்திகளும் மகிழ்வர். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக அலங்காரம் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டம் இந்த வைபவத்தில் தவிர்க்கப் படலாம் அல்லவா?  அன்னத்திற்குப் பதியான பசுபதியை நன்றியுடன் ஆராதனை  செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் சென்று சேர வைப்பது சிவாச்சார்யப் பெருமக்களின் கரங்களில் உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்து நமக்கு வழி காட்டுவார்கள் என நம்புகிறோம்.