Thursday, December 10, 2020

 

                                மறவாதே நினைக்கின்றேன்             

                                                       சிவபாதசேகரன்


லார்ட் மெக்காலே (Lord Macaulay)என்ற ஆங்கிலேயரைப் பற்றி அநேகர் அறிந்திருக்கக்கூடும். அவர் தனது ஐந்தாவது வயதில் தெருவில் நடந்து செல்லும் போதும் ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட்(Paradise Lost) என்ற நூலின் ஒன்பது பகுதிகளையும் படித்துக் கொண்டே செல்வாராம். நாளடைவில் அவ்விளம் வயதிலேயே அந்நூல் முழுவதும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டதாம். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ட்ரவெல்யான் (Trevelyon) என்பவர் கூறுவதைக் கேளுங்கள்:          “ இந்நூலின் அத்தனை பிரதிகளும் உலகில் காணாமல் போய் விட்டாலும், இதோ மெக்காலே இருக்கிறார், தனது நினைவிலிருந்து அதனை அப்படியே கொண்டு வந்து விடுவார்” என்று எழுதியிருக்கிறார். நினைவாற்றல் என்பது ஒருவகையில் வரப்பிரசாதமே.

எதனை நினைவில் கொள்வது, எதனை மறப்பது என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. எதற்கு எடுத்தாலும் புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்பதாக  நினைத்து, “ களவும் கற்று மற “ என்று சொல்லியிருக்கிறதே, அப்படியானால் திருடத் தெரிந்து கொள்ளலாமா “ என்று கேள்வி எழுப்ப ஆரம்பிக்கின்றனர். “ நன்றல்லது அன்றே மறப்பது நன்று “ என்று வள்ளுவர் கூறியது ஏனோ நினைவுக்கு வருவதில்லை. ஒரு காலத்திலும் பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது என்பதை “ நன்றி மறப்பது நன்றன்று “ என்ற வள்ளுவம் நினைவுக்கு வர வேண்டும். தினை  அளவு உதவியை ஒருவர் செய்திருந்தாலும் அதனை  ஞாலத்தின் மாணப் பெரிதாக எண்ணி அதன் பயன் அறிபவர்கள் அதனைப் பனை அளவாகக் கொள்வர் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

ஒருவர் செய்த தீமையை மறந்து விடலாமா என்பது அடுத்த கேள்வி. சில நேரங்களில் அதுவும் கடினமாகத்தான் தோன்றுகிறது. தன்னிடம் பொய் சொல்லியும், ஏளனமாகப் பேசியும் கொடிய சொற்களை உமிழ்ந்தும் மனம் நோகச் செய்தவர்களை அத்தனை எளிதாக மறப்பது கடினம் தான். ஒருவேளை மன்னித்தாலும் அந்த செய்கைகளும் சுடு சொற்களும் தொடர்ந்து பல்லாண்டுகள் சிந்தையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவேதான், தீயினால் சுட்ட புண் ஆறினாலும் நாவினால் சுட்டது ஆறாது என்றார் திருவள்ளுவர். குறைவாகப் பேசுபவர்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற சங்கடங்கள் நேருவது குறைவாக இருக்கலாம். “ சும்மா இரு சொல் அற “ என்ற அருணகிரிநாதர் சொல்வதும்,  சும்மா இருப்பதே சுகம் என்பதுவும் எல்லோராலும் கடைப் பிடிக்க முடிவதில்லையே.

“ மௌனம் பரம ஔஷதம் “ என்பார்கள்.  தவம் செய்பவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். மௌன குருவான தக்ஷிணாமூர்த்தி சன்னதியிலும், ஞானிகளின் சன்னதிகளிலும் நம்மை அறியாமலேயே நாமும் மௌனிகள் ஆகி விடுகிறோம். ஆனால் அதைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகாவது ஓரளவேனும் அதை நாமும் அனுஷ்டிக்க வேண்டும் என்று தோன்றாதபடி உலக மாயையில் மீண்டும் வீழ்கிறோம். காலம் கடந்து ஞானம் வந்தால் என்ன பயன் ? மீதமுள்ள நாட்கள் எத்தனை என்பதை யார் அறிவார் ?

அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். நமது செயல்களும் சிந்தனைகளும் சிவமயமாக ஆக்கிக் கொள்ள முயல இது முதல் படி. இவ்வாறு நினைக்கப் பழக்கிக் கொள்வதால் நடக்கும் போது அண்ணாமலையை வலம் வருவதாக எண்ணுவது என்பது அடுத்த நிலை.  “சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் “ என்று சேரமான் பெருமாள் நாயனார் கூறுவதுபோல மனத்தை முதலில் செப்பம் செய்து கொண்டு விட்டால் இந்த ஊனுடம்பைக் கோயிலாக இறைவன் கொள்கிறான்.         “ உள்ளம் பெரும் கோயில்” , “ நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “ என்ற திருமுறை வாக்குகள் இங்கே சிந்திக்கத்தக்கன.

அருளாளர்களோ மிகுந்த அடக்கத்துடன், தாங்கள் அவ்வாறு நினைக்கவே இல்லையே என்று ஏங்குகிறார்கள் என்றால் . நம் நிலையை என் என்பது?    “நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னைப், பேயாய்த் திரிந்து எய்த்தேன் “ என்பது சுந்தரர் தேவாரம். 

இறையுணர்வே இல்லாதவர்களுக்கு அவனை வழிபடும் மனம் எவ்வாறு வாய்க்கும் ? மறவாது நினைப்பவர்க்கே இது கைகூடும். அதற்கு முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார் சம்பந்தர். வலஞ்சுழி வாணனை ஏத்தியும் பாடியும் வழிபட வேண்டும் என்றால் முன்னம் செய்த நல்வினைப் பயனே ஆகும் என்பது அவரது அருள்வாக்கு. ஒருவேளை அவனது நினைப்பு வந்தாலும் நமது தீவினை அதனை உடனே மறக்கச் செய்கிறதல்லவா ? அவனது நாமங்களைப் பலகாலும் ஓதும் அடியார்கள் அவ்வாறு எந்நாளும் மறவாது ஓதும் வரத்தையே பெருமானிடம் கேட்பார்கள். “ உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே “ என்பது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பலகாலமும் மறவாது வழிபடும் அடியார்களை எவ்வாறு அருளுகிறான் என்றால், அவர்களுக்கு முன்னே வந்து நிற்பான் என்கிறார் அப்பர் சுவாமிகள்.           “ இவன் என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே.” என்பது அவர் வாக்கு.

உன்னுதல் என்றால் நினைத்தல் என்று பொருள் படும். உறங்கும் போதும் தெய்வ நினைப்புடன் உறங்க வேண்டும் என்பதை, “ உன்னி உன்னி உறங்குவேன் “ என்ற நாவுக்கரசரின் சொன்மாலை நமக்கு அறிவிக்கிறது. “ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் “ என்று அருளிச் செய்தார் ஞான சம்பந்தர்.

எத்தனையோ தலைமுறைகளாக வேதங்களும் பிற ஞான நூல்களும் குரு முகமாகக் காதால் கேட்டே பயிலப்பட்டுப் பிறருக்கு உபதேசிக்கப்பட்டும் வந்தது. அத்தலைமுறைகளை நாம் நன்றியுணர்வுடன் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அச்சில் ஏறிய பிறகுதான்,  மறந்தாலும் புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், இது மறப்பதற்கு வசதியாக அமைந்து விட்டது என்றும் சொல்லலாம். மறக்கக் கூடாது என்பதற்காக அனுதினமும் ஓதி வந்தது போகத் பாராயணம் செய்கையில் புத்தகமும் தேவைப் படுகிறது. போதாக் குறைக்கு மொபைலின் துணை இருக்கவே இருக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, என்றோ ஒரு நாள் கோவிலுக்குச் செல்வதும் என்றோ ஒருநாள் தெய்வீக நூல்களைப் பாராயணம் செய்வதும் என்றோ ஒருநாள் இறைவனை நினைப்பதும் வாடிக்கை ஆகி விட்டபடியால் நீராடுபவர்களின் பாவங்களை நீக்கும் சக்தியை நதிகள்இழப்பது போல,  நியமமின்றிச் செய்யப்படும் பாராயணங்கள் ,ஜபங்கள் ஆகியவற்றால் கோரிய பலன் இல்லாது போகுமாறு மந்திரங்களும் வலுவிழக்கின்றன. இவ்வளவு ஏன், கேட்ட வரங்களை வாரி வழங்கும் தெய்வ சன்னதிகளும் மந்திர பலத்தை இழக்கின்றன. கும்பாபிஷேகம் செய்த மறு நாள் முதலே பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றன. கை மேல் பலன் இல்லையே என்று சொல்பவர்களுக்கு இதுவே பதில்.