Friday, May 19, 2017

உண்டியல் முறைகேடு

நந்தியே சாட்சி 
கோயில்களுக்குக் காலம் காலமாக விவசாய நிலங்களும், மனைக் கட்டுக்களுமே வருமானம் தந்து கொண்டிருந்த நிலையில், உண்டியல் ஒன்றை  எப்பொழுது அமைக்க ஆரம்பித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாளடைவில் பிரார்த்தனை செலுத்துவதற்காகவும் பக்தர்களால் அது ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. உண்டியலில் செலுத்தப்படும் தொகை எந்த வகையில் கோயிலுக்குப் பயன் படுத்தப் படுகிறது என்று எவரும் கவலைப் படுவதில்லை. அதற்கான கணக்குகளை மக்கள் முன் வைக்கவேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகளும் உணர்வதில்லை . வேண்டுமானால் சில விடாக் கண்டர்கள் தகவல் அறியும் சட்டம் மூலம் விவரம் அறிய முற்பட்டாலும், முழுத் தகவல் பெற முடியாததோடு அது வெறும் கண் துடைப்பகவே ஆகி விடுகிறது. 

இதற்கிடையில், உண்டியல் வருமானத்தைக்  கோயில்களுக்குச் செலவிடுவதோடு, அரசின் பிற செலவுகளுக்கும்  பயன் படுத்தப் படுகிறது என்ற புகார் எழுகிறது. இதனால் தணிக்கை என்ற ஒன்று ஆண்டுதோறும் முறையாக நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. 

பல கோயில்களில் உண்டியல் நிரம்பி வழியும்போதும் திறந்து எண்ணுவதற்கு அதிகாரிகள் வருவதில்லை என்று மக்கள் தரப்பில் குறை கூறப்படுகிறது. உண்டியலில் கால் வாசியோ அல்லது அரைவாசியோ காணிக்கை வந்தவுடன்  திறந்து எண்ணுவதால் பல நன்மைகள் உண்டு. மொத்தமாகப் பெரிய தொகை களவாடப்படுவது தவிர்க்கப்படுகிறது. எண்ணுவதற்கான நேரமும் குறையும். எண்ணும்  நபர்களும் அதிகம் தேவைப் படாததால் முறைகேடு நடப்பது குறைக்கப்படும். எண்ணுவதற்காகவாவது அதிகாரிகள் கோயிலுக்கு வருவார்கள் அல்லவா? 

பிரபல தொலைக் காட்சி ஒன்றில் கோயில் உண்டியல் எண்ணப்படும்போது ,அதிகாரி ஒருவர்  நோட்டுக் கட்டுக்களைத் தனது பான்ட் பாக்கெட்டில் பதுக்கிக் கொண்டதை (வீ டியோ காமிராவில் பதிவானதைக்)காட்டினார்கள். அப்படிக் களவாடப்பட்ட தொகை இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இதை விடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?  ஆதாரத்துடன் வெளியாகிய தகவலுக்குத் தண்டனை பெற வேண்டிய அந்த அதிகாரியை மற்றொரு பிரபலமான கோயிலுக்கு மாற்றியதோடு பதவி உயர்வும் கொடுத்திருக்கிறார்களாம்!  அங்கு போயும் உண்டியல் பணத்தில் கை வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எந்த தண்டனையும் வழங்கப்படாததற்கு எதற்காக மூலைக்கு மூலை  காமிரா அமைத்துத் தண்டச் செலவு செய்கிறார்கள்? திருடன் உள்ளே இருந்தால் ஒரு நீதி. வெளியிலிருந்து வந்தால் வேறு நீதியா? 

டியூப் லைட்டில் கூடப் பெயர் போட்டுக் கொள்கிறார்கள் என்று கிண்டல் பேசுபவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவ்வாறு போடாவிட்டால், நிர்வாகம் வாங்கிப் போட்டதாக அதிகாரி பொய்க் கணக்கு எழுதிவிட்டு, அதோடு பொய் ரசீதையும் இணைத்து விடுவார் என்ற ஐயமே காரணம். இந்த அதிகாரிகள் ஒன்றும் குறைவாக சம்பளம் வாங்குவதில்லை. அரசாங்க வேலை மற்றும் சலுகைகளை  அனுபவித்துக் கொண்டே உண்டியல், கட்டிட ஒப்பந்தக்காரர்கள், கோயில் மனைகள் மூலமும் நிலங்கள் மூலமும்,பெற வேண்டிய வருமானங்களைக் கேட்காமல் காலம் தாழ்த்தியும்  ஆதாயம் அடைகிறார்கள். இவர்களுள் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கலாம். எனினும் சில புல்லுருவிகளின் செயலால் மொத்தத் துறையே தலை குனிந்து நிற்கிறது. இப்படி இருந்தும், அரசாங்கம் அறநிலையத் துறையை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பானேன் என்று கேட்கலாம். ஏனென்றால் அது பொன் முட்டை இடும் வாத்து. 

Monday, May 15, 2017

கை விடப்படும் தேர்கள்

திருவிடைமருதூர் 
பெரிய ஆலயங்களில் நடைபெறும் பிரமோற்சவ விழாக்களில் ஒரு நாள் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பிரபலமானதும், வருமானம் உள்ளதுமான கோயில்களின் தேர்கள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும்,அவற்றை ஆண்டு முழுதும் வெய்யிலிலும்,  மழையிலும் பாதிக்காதபடி நிறுத்தி வைப்பதற்குத்  தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. தேர் நிலைகளின் தரமோ சொல்லும் படி இல்லை. சில இடங்களில் மரம் முளைத்துப் போய் முற்றிலுமாகக் கை விடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆலயத் திருப்பணி செய்பவர்களுக்குக் கூட ஏற்படாதது பரிதாபம்! 


திருவிடைமருதூர் தேரழகு 
தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் பேருதவியோடு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியின் தேர் புதிதாகச் செய்யப்பட்டபோது தேர் நிலையும் பழுதுபார்க்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டது. ஐந்து தேர்கள் பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஓடியதைக்  கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். 
வேதாரண்யத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேரடியில் ,எஞ்சிய பாகங்களுடன் பரிதாபமாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தேரைக் கண்டவுடன் நெஞ்சம் கலங்கியது.இப்படி அக்கறையின்றி நமது புராதனத் தேர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கிறோமே என்று பதறிப் போனோம். தேரடியில் தகரக் கொட்டகைக்குள் தேரை நிறுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்குமா?  ஏனைய ஊர்களில் உள்ளவர்களும் இந்நிலையைக் கண்ட பிறகும் பாடம் கற்கவில்லை. புதிய தேர் செய்து விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சில ஊர்களில் முன் வருகின்றனர். ஆனால் , அவ்வாறு செய்யப்படும் தேர்களில் பழைய தேர்களில் இருந்தது போல அற்புதமான மரச் சிற்பங்களை அமைக்காமல் பெயருக்குச் சிலவற்றையே அமைக்கிறார்கள். 
புதிய தேர் - திருவாரூர்

பழைய தேர்- திருவாரூர் 
                                             
பிரமாண்டமான தேர் என்றால் திருவாரூர் தியாகப்பெருமானது தேரே நினைவுக்கு வரும். இதனை " ஆழித் தேர்" என்று தேவாரம் குறிப்பிடுகிறது. அப்பழைய தேரைப்  பழுது பார்த்து இயக்க முடியாத நிலையில் ( ?) புதிய தேரை வடிவமைக்கிறார்கள். இருந்தாலும் பழமைக்கு ஈடாகாது என்பதை இங்குள்ள படங்களால் அறியலாம்.
திருப்பயத்தங்குடி-கொட்டகைக்குள்  ரதம் 

திருச்செங்காட்டங்குடிக்குச் சென்றாலோ தேரடியில் பழைய தேரின் சில மரக் கட்டைகளே எஞ்சி நிற்கக் காணும்படி ஆகி விட்டது!. இதெல்லாம் அலட்சியத்தால் ஏற்பட்ட நிலையா? கோயில் நிர்வாகிகளும் உள்ளூர் வாசிகளுமே பதில் சொல்ல முடியும்.   
வேதாரண்யத் தேர் 

திருமீயச்சூரிலும் கைவிடப்பட்ட தேரினைக் கண்டோம். என்னதான் புதிய தேருக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதானாலும் பழைய தேரினைத்  தெருக்கோடியில் மழையிலும் வெய்யிலிலும் நிற்க வைத்ததன் விளைவுதானே இது? புதிய ஒன்றைப் பெரும் பொருட் செலவில் செய்தாலும் பழைய தேர் ஆகுமா? 

மக்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாததால் இந்நிலை நீடிக்கிறது. தொலைக் காட்சிகளும், மயிலாப்பூர், மதுரை,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பிரபலமான ஊர் ஆலயத் தேரோட்டங்களைக் காட்டுவதோடு , பராமரிப்பு அறவே இல்லாத தேர்களின் பரிதாப நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். திருப்பணி செய்பவர்கள் தேர்த் திருப்பணியைப்  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவதால் பழைய தேர்கள் மீண்டும் பழுது பார்க்க இயலாத நிலைக்கு வந்து விடுவதோடு, புதிய தேர் செய்யப்  பெரிய தொகை தேவைப்படுகிறது. அவ்வாறு செய்தாலும், மீண்டும் அவற்றைத்   தகரக் கொட்டகைக்குள் மூடி வைக்காமல் திறந்த வெளியில் வைப்பவர்களுக்கு என்ன சொல்வது? சமூக விரோதிகள் தேரடியில் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. மரச் சிற்பங்களும் பாதுகாப்பின்று கைவிடப்படுகின்றன. கலை, வரலாறு என்று மார் தட்டுபவர்கள் கூடக் குரல் எழுப்பக் காணோமே!