திருவிடைமருதூர் |
திருவிடைமருதூர் தேரழகு |
வேதாரண்யத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேரடியில் ,எஞ்சிய பாகங்களுடன் பரிதாபமாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தேரைக் கண்டவுடன் நெஞ்சம் கலங்கியது.இப்படி அக்கறையின்றி நமது புராதனத் தேர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கிறோமே என்று பதறிப் போனோம். தேரடியில் தகரக் கொட்டகைக்குள் தேரை நிறுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்குமா? ஏனைய ஊர்களில் உள்ளவர்களும் இந்நிலையைக் கண்ட பிறகும் பாடம் கற்கவில்லை. புதிய தேர் செய்து விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சில ஊர்களில் முன் வருகின்றனர். ஆனால் , அவ்வாறு செய்யப்படும் தேர்களில் பழைய தேர்களில் இருந்தது போல அற்புதமான மரச் சிற்பங்களை அமைக்காமல் பெயருக்குச் சிலவற்றையே அமைக்கிறார்கள்.
புதிய தேர் - திருவாரூர் |
பழைய தேர்- திருவாரூர் |
பிரமாண்டமான தேர் என்றால் திருவாரூர் தியாகப்பெருமானது தேரே நினைவுக்கு வரும். இதனை " ஆழித் தேர்" என்று தேவாரம் குறிப்பிடுகிறது. அப்பழைய தேரைப் பழுது பார்த்து இயக்க முடியாத நிலையில் ( ?) புதிய தேரை வடிவமைக்கிறார்கள். இருந்தாலும் பழமைக்கு ஈடாகாது என்பதை இங்குள்ள படங்களால் அறியலாம்.
திருப்பயத்தங்குடி-கொட்டகைக்குள் ரதம் |
திருச்செங்காட்டங்குடிக்குச் சென்றாலோ தேரடியில் பழைய தேரின் சில மரக் கட்டைகளே எஞ்சி நிற்கக் காணும்படி ஆகி விட்டது!. இதெல்லாம் அலட்சியத்தால் ஏற்பட்ட நிலையா? கோயில் நிர்வாகிகளும் உள்ளூர் வாசிகளுமே பதில் சொல்ல முடியும்.
வேதாரண்யத் தேர் |
திருமீயச்சூரிலும் கைவிடப்பட்ட தேரினைக் கண்டோம். என்னதான் புதிய தேருக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதானாலும் பழைய தேரினைத் தெருக்கோடியில் மழையிலும் வெய்யிலிலும் நிற்க வைத்ததன் விளைவுதானே இது? புதிய ஒன்றைப் பெரும் பொருட் செலவில் செய்தாலும் பழைய தேர் ஆகுமா?
மக்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாததால் இந்நிலை நீடிக்கிறது. தொலைக் காட்சிகளும், மயிலாப்பூர், மதுரை,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பிரபலமான ஊர் ஆலயத் தேரோட்டங்களைக் காட்டுவதோடு , பராமரிப்பு அறவே இல்லாத தேர்களின் பரிதாப நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். திருப்பணி செய்பவர்கள் தேர்த் திருப்பணியைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவதால் பழைய தேர்கள் மீண்டும் பழுது பார்க்க இயலாத நிலைக்கு வந்து விடுவதோடு, புதிய தேர் செய்யப் பெரிய தொகை தேவைப்படுகிறது. அவ்வாறு செய்தாலும், மீண்டும் அவற்றைத் தகரக் கொட்டகைக்குள் மூடி வைக்காமல் திறந்த வெளியில் வைப்பவர்களுக்கு என்ன சொல்வது? சமூக விரோதிகள் தேரடியில் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. மரச் சிற்பங்களும் பாதுகாப்பின்று கைவிடப்படுகின்றன. கலை, வரலாறு என்று மார் தட்டுபவர்கள் கூடக் குரல் எழுப்பக் காணோமே!
No comments:
Post a Comment