Tuesday, September 24, 2013

"ஆன்மீக மலரில்" பிழை வரலாமா?

ஆன்மீகப் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிடுவதைப் பலமுறை குறிப்பிட்டிருந்தோம். வழக்கம்போலப் பத்திரிகை உலகம் அவற்றைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை. எப்படியோ பக்கம் நிரம்பி விடுகிறது. யார் இதை எல்லாம் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்ற நினைப்போ என்னவோ! " சீதைக்கு ராமன் சித்தப்பா " என்று கூட எழுதுவார்கள் போலிருக்கிறது! ஆன்மீக மலர் என்ற பகுதியை வெளியிடும் தினசரி செய்தித்தாள்  ஆன்மீகத்தில் பயிற்சியும்,அனுபவமும் பெற்றவர்களை நியமிக்கக் கூடாதா? இதன் மூலம் தவறான செய்திகளோ வரலாறுகளோ மக்களைச் சென்று அடையாதபடி பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
24.9.2013 தேதியிட்ட செய்தித்தாளுடன் வெளியான ஆன்மீக மலரில் (நம்பர்  1 ஆன்மீக இதழ் என்று  போட்டுக்கொள்கிறார்கள்) " யார் இந்த பைரவர்? " என்ற தலைப்பில் வெளியான செய்தி  ஆன்மீக மலரின்  தரத்தை எடைபோடுவதாக இருந்தது.

தக்ஷ யாகத்தில் பங்கேற்ற தேவர்களின் அகந்தையை அடக்க "சிவன் பைரவரை  உருவாக்கினார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு " கதை" தொடர்கிறது. தேய் பிறை அஷ்டமி பரிகார வழிபாடு வேறு இருக்கவே இருக்கிறது!

"யார் இந்த பைரவர்" என்பதை நாம் அவர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஐந்து முகம் கொண்ட பிரமன்  , சிவனுக்கும் அதேபோல் ஐந்து முகங்கள் இருப்பதை ஏளனம் செய்கையில் சிவபெருமானது கோபத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தமே பைரவ மூர்த்தம். அவ்வாறு கோபத்துடன் வெளிப்பட்ட பைரவர், பிரமனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி, அதைக் கபாலமாக ஏற்றார். தஞ்சைக்கு அருகிலுள்ள கண்டியூர் வீரட்டானத் தலபுராணமும், கந்த புராணமும் இதையே சொல்லும்.
இப்போது, தக்ஷ யாகத்திளிருந்து வெளிப்பட்டது யார் என்று தெரிய வேண்டாமா? அவரே வீர பத்திரர்   ஆவார். சிவனை இகழ்ந்த தக்ஷனது தலையைக் கொய்து, சூரியனது பற்களைத் தகர்த்து, சரஸ்வதியின் நாசியையும் அக்னி தேவனின் கரங்களையும் சேதித்து, சிவபெருமானுக்கு யாகத்தின் முதல் அவிசைத் தராததற்கான தண்டனையை வழங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு வீர பத்திரர் தோன்றி தக்ஷ யாகத்தை அழித்ததைத் திருவாசகமும்,

பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண் பட்ட பூதப்படை  வீரபத்திரரால்
புண் பட்டவா பாடிப் பூவல்லி கொய்யாமோ.

என்று கூறுவதைக் காணலாம்.

மயிலாடுதுறையிலிருந்து செம்பனார் கோயில் சென்று அதற்கு அருகிலுள்ள பரசலூர் என்று  வழங்கப்படும் பறியல் வீரட்டானத்தில் தக்ஷ சம்ஹார கோலத்தில் வீர பத்திர மூர்த்தியைத்  தரிசிக்கலாம்.. ஸ்காந்த மகா புராணத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

தவறான சேதிகளைத் தருவதும் ஆன்மீகமா ? அரைகுறையாக ஆன்மிகம் படித்திருந்தாலும் இதுபோல் நேரிடலாம். உண்மையான காரணம் அப்பத்திரிக்கைகளுக்கு மட்டுமே தெரியும்.   

Tuesday, September 10, 2013

நாமே வாய் இல்லா ஜீவன்கள்

ஸ்ரீ  பரமேசுவரனுக்கு  வழங்கப்படும் எத்தனையோ பெயர்களில் பசுபதி என்பது  முக்கியமானது ஆகும். உலகத்து உயிர்களாகிய பசுக்களுக்கெல்லாம் பதியாக அவன் இருப்பதால் அப்பெயர் ஏற்பட்டது. கரூர், ஆவூர், திருக்கொண்டீச்வரம் போன்ற தலங்களில் சுவாமிக்கு இப்பெயரே வழங்கப்படுகின்றது. நேபாளத்திலுள்ள  காத்மாண்டு மகாதேவர் கோவிலும் பசுபதிநாத்  மந்திர் என்றே அழைக்கப்படுகிறது. பசுக்கள் எல்லாம் தங்களைப் பிற விலங்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள  திருவாமாத்தூர் என்ற தலத்தில் இறைவனை வழிபட்டுக் கொம்புகளைப் பெற்றதாக அந்த ஊர்த்  தலபுராணம் கூறும். எனவே, அத்தலத்தை, கோ மாத்ருபுரம் என்பர். ஆனால் மனிதர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அக்காலத்தில் இல்லாத படியால் அதற்காகத் தவம்  செய்யவில்லை போலும் !

ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டித் தனது உடல் சதையை அரிந்து கருணை காட்டிய சிபிச் சக்கரவர்த்தியும் , தனது கன்று , அரசகுமாரனின் தேரில் சிக்கி உயிர் நீத்தபின், அரண்மனை வாயிலில் கதறிய தாய்ப்பசுவின் கதறலைக் கண்டு மனம் பதறி, அதற்கு இணையாகத் தனது மகனையே தேர்ச்சக்கரத்தில் ஏற்றிய மனுநீதிச் சோழனும் வாழ்ந்த நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ?

வெறிபிடித்த நாய்கள் எத்தனையோ வழிப்போக்கர்களையும் குழந்தைகளையும் கடித்தும் , அவற்றைக் கொல்லக்கூடாது என்று பிராணி நல அமைப்புக்கள் சொல்கிறார்கள். அதுவும் நியாயம் தான். எந்த வாயில்லா ஜீவனையும் கொல்லக்கூடாதுதான். அதே சமயம் கழுத்து ஓடியும்படி மாடுகள் வண்டிச்  சுமை ஏற்றிச் செல்லும்போது, வண்டியை இழுக்கமுடியாமல் வாயால் நுரை தள்ளுவதைக் கண்டும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அவற்றைப் பிரம்பால் விளாசுகிறார்களே, அக்காட்சியை இந்த அமைப்பினர் கண்டதே இல்லையா! அல்லது கண்டும் காணாததுபோல் பாசாங்கு செய்கிறார்களா?

ஈரோட்டில் இறைச்சிக்காகக் கொண்டுவரப்படும் மாடுகளை மூச்சு முட்டும்படியாக லாரியில் திணித்து ,அவற்றின் கால்கள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில், அவற்றைக் காலால் உதைத்துக் கீழே தள்ளும் காட்சியை இன்றைய {10.9.2013 தேதியிட்ட )  தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்தது. அத்துடன் வெளியான புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள் (நன்றி: தினமலர்) அச்செய்தியின் ஒரு பகுதி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது : " அப்போது தலை குப்புற விழுந்த மாடுகளின் கதறல் சத்தம் அவ்வழியாகச் சென்றவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. .. மாடுகள் சித்திரவதை செய்யப்படுவது வாடிக்கையாக நடக்கிறது."

ஒவ்வொரு சுங்கச்சாவடியைக் கடந்தும் இந்த லாரிகள் மாடுகளை ஏற்றிச் செல்லும்போது       போலீ சாரும், பிராணி நல அமைப்பினரும் மனம் வைத்தால் இதைத் தடுக்க முடியாதா? ஒவ்வொருவாரமும் சந்தைகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் கால்நடைகள் அனுப்பப் படுவதைத் தடை செய்ய முடியாதா?

மாடு வைத்திருப்பவர்களும் சுயநலமாக நடந்து கொள்வதும் ஒரு காரணமே! ஓர் மாடு காளைக் கன்று போட்டால் அது தேவையற்றது என்று கருதுகிறார்கள். அதேபோல் பசுவும் பால் கறப்பது குறைந்து விட்டாலோ,நின்றுவிட்டாலோ அதனை  விற்று விடுகின்றனர் (விரட்டி விடுகின்றனர் என்று சொல்வதே பொருத்தம் என்று தோன்றுகிறது!) அதுவரையில் கோமாதா என்றும் மாட்டுப் பொங்கல் என்றும் பேசியவர்கள் எப்படி மாறுகிறார்கள் பார்த்தீர்களா? கேட்டால் ,  அவற்றை எப்படிப் பராமரிப்பது என்று கேட்கிறார்கள்.

அண்மையில் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்ட செய்தி. காஞ்சிப் பெரியவர்கள் ஒரு காட்டுப் பகுதியின் வழியாக யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், அவர் இருக்கும் இடத்தை நோக்கி ஒரு மான் ஓடி வந்தது. அதைப் பல நாய்கள் துரத்திக்கொண்டு வந்தன. மானைக் காப்பாற்றுவதற்காக நாய்களின் மீது மடத்து சிப்பந்திகள் கற்களை வீச முற்படும்போது அதைத் தடுத்த பெரியவர்கள், " நாயும் வாய் இல்லா ஜீவன்தானே, அதைக் கல்லால் அடித்து விரட்டுவதற்குப் பதிலாக, அவற்றின் கவனத்தைத் திருப்புவதாக, சில பிஸ்கட் பாக்கெட்டுக்களை அவற்றிடம் போட்டால் அவை மானை விரட்டுவதை விட்டுவிட்டு,    பிஸ்கெ ட்டை நோக்கித் திரும்பிவிடும். இதனால் மானும்  காப்பாற்றப்படும் அல்லவா "  என்றார்களாம். இந்த உத்தியைக் கையாண்டதும், மானும்  காப்பாற்றப்பட்டது. இப்படி எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் மகான்கள் அளவுக்கு நமக்குக் கருணையும் ஞானமும் இல்லாவிட்டாலும் வயிற்றை நிரப்புவதற்காக நமக்குத் தாயாகப் பால் அளிக்கும் ஜீவன்களைக் கொல்லலாமா?

கோசாலைகள் பல இருந்தாலும் காளை மாடுகள் வேண்டாதனவாக ஆகிவிட்டன ! அவற்றையும் பராமரித்தால் இயற்கை உரம், எரி வாயு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.உழவுக்கும் வண்டிகளுக்கும் பயன் பட்டு வந்த அந்த காளை இனமே இல்லாமல் போய் விடும் அபாயம் வந்திருக்கிறது. பசுவினத்தைத் தெய்வமாகப் பாவிக்கிறோம். காமதேனு, பட்டி ஆகியவை பூஜித்த தலங்கள் என்று தலங்களின் புராணங்களில் காண்கிறோம். அப்படி இருந்தும் சண்டேச நாயனார் போல் அவை எல்லாம் நம் நந்திதேவரது குலம் என்று எண்ணுவதில்லை. இதைக் கேட்க வாய் இல்லாதவர்களாகிய நாமே உண்மையில் வாய் இல்லா ஜீவன்கள். செயலற்றவர்களாக இன்னும் எத்தனை நாள் இக்கொடுமையைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமோ தெரியவில்லை. ஆனேறு ஏறும் ஆனிலையப்பரே அருள வேண்டும்.

Thursday, September 5, 2013

இறைவா ஏன் இந்த சோதனை ?

சிவ பூஜை என்று சொன்னாலே அபிஷேகம் தான் முதல் இடம் வகிக்கிறது. அதற்குப் பிறகு பெருமானுக்கு மலர்களாலும் வில்வம் போன்ற இலைகளாலும்   செய்யப்படும்  அர்ச்சனை. இதனைத் திருமூலரும்,                       " புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீர் உண்டு " என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். இவ்வளவும் அன்பு கலந்து செய்யப்படுவது. " இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்..." என்கிறது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பூக்களையும் அபிஷேக நீரையும் சுமந்து செல்பவர்களின் பின்னால் ஆலயத்தை அடைவேன் என்றார் அப்பரும். "பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய்..." என்று சம்பந்தரும் அடியார்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கிறார்.

பூஜை என்பது நியமத்தோடு செய்யப்படுவது.  அதற்குத் தேவையான பசும்பால், மலர்கள் போன்றவற்றின் விலை  இப்போது எட்டாத அளவுக்கு உயர்ந்திருகிறது.  நகரங்களில் பசுக்களைப்  பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், பாக்கெட் பாலே பல இடங்களில் அபிஷேகத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது. ஆகவே, பசும்  பால், பசுந்   தயிர் ஆகியவை சுத்தமாக இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பூ  வாங்கினாலும்  இதே நிலை. பழைய  பூக்களைக் கூடத் தொடுத்து , முழம்  ரூபாய் இருபது, இருபத்தைந்து என்று விற்கிறார்கள். லாபம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை. அதற்காக இப்படியா? பூக்கள் வரத்து குறைந்து விட்டது என்றும், லாரி வாடகை அதிகரித்து விட்டது என்றும் , பண்டிகை  நாள் என்றும் முகூர்த்த நாள் என்றும் பல  காரணங்கள் சொல்லி  விலையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.  பண்டிகை நாட்களின் போது மல்லிகைப் பூவை சேர் ஆயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். வேறு வழி இல்லாமல்  நான்கு முழம் வாங்கப் போய் , விலையைப் பார்த்து  அதிர்ச்சி அடையும் மக்கள் ஒரு முழம் மட்டும் வாங்கி வருகிறார்கள். எப்படிப் போனால் என்ன. வியாபாரிகளுக்கு அவர்கள் நிர்ணயித்த விலையில் பூக்கள் அத்தனையும் வியாபாரம் ஆகி விடுகிறது. கேட்பார் அற்றுக்கிடக்கும் எருக்கம்பூக்களை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே பறித்து வந்துவிட்டுக் காசாக்குகிறார்கள். எந்த மூல தனமும் இல்லாமல் கிடைத்த பொருள் தானே? அதைக் கூடவா மலிவாக விற்க மனம் வரவில்லை? பழத்தையோ கிலோ கணக்கில் விற்கிறார்கள்! நிலைமை இப்படிமோசமாக  இருக்கும்போது, தினமும் வீட்டில் பூஜை செய்பவர் என்ன செய்வார்!

அபிஷேகத்திற்குத் தூய நீராவது கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை தான்! கிணறுகள் வற்றிப்போன நிலையில் குழாய்த் தண்ணீரே  கிடைக்கிறது. அப்பழந் தண்ணீரில் எத்தனை எத்தனையோ அசுத்தங்கள்! ஆழ்குழாய் நீரைப் பயன் படுத்தலாம் என்றால் உப்பு கலந்ததாக இருக்கிறது. ஒரு சில ஊர்களில் அருகாமையில் காவிரி போன்ற புனித நதிகள் ஓடக் கூடும். ஐம்பது ஆண்டுகள் முன்வரை அவற்றின் புனிதமும் தூய்மையும் காப்பாற்றப்பட்டு வந்தது. இப்போது அவற்றில் கலக்கப்படாத அசுத்தமே இல்லை எனலாம்!

இப்படியாகப் பூஜை செய்யக் குந்தகம் ஏற்பட்டுள்ள வேளையில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற சிந்திக்க வேண்டியிருக்கிறது. விநாயக சதுர்த்தி என்று எடுத்துக் கொண்டால், நாமே சிறிய அளவில் களிமண்ணால் பிள்ளையார் செய்து பூஜை செய்யாலாம். விலை கொடுத்து வாங்கினால் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக விற்பதில்லை. காகிதத்தால் ஆன குடையையும் நாமே செய்ய முடியும். இதுவும் வாங்கினால் குறைந்தது பத்து ரூபாய் ஆகிறது. முதல் நாளே அக்கம் பக்கம் சென்றால் நிறைய எருக்கம் பூக்களைப் பறித்து வந்து மாலையாகத் தொடுத்துச் சார்த்தலாம். அருகம் புல்லும் இப்படியே.

வீட்டில்  மல்லிகை,முல்லை,நந்தியாவட்டை,அரளி, பாரிஜாதம் போன்ற பூச்செடிகளை வளர்த்தால் பூஜைக்கும் குறைவு வராது. அதேசமயம்  தூயனவும், அன்றைய தினம் மலர்ந்தனவும் ஆகிய பூக்களைக் கொண்டு பூஜை செய்யலாம். வில்வம்,கிளுவை,நொச்சி போன்ற இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இப்படிச் செய்துவந்தால் பூஜைக்கான பூக்களை விலை கொடுத்து வாங்குவதில்லை என்ற நிலை ஏற்படும்.

விலை அதிகம் ஆகிவிட்டது என்பதால் 108 அல்லது 1008 நாமாக்களால் செய்யப்படும் அர்ச்சனையைக் கையில் இருந்த மலர்கள் குறைவாக இருப்பதால் எப்படிச் செய்ய முடியும்? நியமத்துடன் 1008 தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் சக்கரம் பெற வேண்டித் திருமால் சிவபூஜை செய்தபோது, ஒரு மலர் குறையவே, தாமரைக்குச் சமமான தனது கண்ணையே ஈசன் திருவடிக்குச் சாத்தினார்  என்று புராணம் சொல்கிறது அல்லவா? ஆகவே, புஷ்பத்தாலோ , வில்வ இலைகளாலோ அர்ச்சனை செய்தால் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
இதற்கும் சௌகரியப்படாதவர்கள் உண்டு. வீட்டில் இடமே இல்லாதபோது பூச்செடிகளை எங்கே வளர்ப்பது என்கிறார்கள். அடுக்குமாடிகளில் குடியிருப்போர் நிலை பரிதாபத்திற்குரியது. அங்கு வளர்க்கப்படும் செடிகள் பெரும்பாலும் காட்சிப் பொருள்கள் தான்! நித்திய பூஜை செய்யாதவர்கள்,  அருகில் யாராவது செய்தால் அதைப் பார்ப்பதோடு இயன்ற உதவியும் செய்யலாம். கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொடுத்து ஆலய மூர்த்திகளுக்குச் சார்த்தச் சொல்லலாம்.

ஆனால் வீட்டில் நித்திய பூஜை செய்பவர் நல்ல பசும்பாலோ , மலர்களோ, இலைகளோ கிடைக்காமல் படும் சிரமம் சொல்லுக்கு அடங்காது.  
 " ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் உன்னைப் பூஜிக்க ஆசைப் படுகிறேன், அதைத் தேவரீர் அருள மாட்டீரா, ஏன் இந்த சோதனை " என்று கண்ணீர் பெருக்குவதைத் தவிர என்ன செய்ய முடியும்?  ஒருவாறு மனத்தைத்  தேற்றிக்கொண்டு, " அர்ச்சனை பாட்டே ஆகும் " என்று சொல்லியிருப்பதால் தேவார திருவாசகங்களைப் பாடலாம். ஆனால் அத்தோத்திரங்களிலேயே, இறைவனைத் தூய காவிரியின் நன்னீர் ஆட்டி, சந்தனக் குழம்பும் இண்டை மாலையும்  சார்த்தி, தொடுத்த பூவொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வழிபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறபடியால்  அப்படிப்பட்ட பூஜை செய்யும் பாக்கியத்தை அப்பெருமான் அல்லவா அருள வேண்டும்!