Friday, March 11, 2016

சுவாமி புறப்பாடு

" சுவாமி புறப்பாடு "என்பது ஆலயத்திலுள்ள  மூல மூர்த்திகள் உற்சவ மூர்த்திகளில்  ஆவாகனம் செய்யப்பட்டு வீதி உலாவாக எழுந்தருளுவதைக் குறிக்கும். அந்தந்த ஊரின் ஸ்தல புராணத்தில் குறிப்பிட்டபடி உற்சவங்கள் ,தீர்த்தவாரிகள் நடைபெறுகின்றன. எல்லா ஊர்களுக்கும் பொதுவான மார்கழித் திருவாதிரை, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம்  போன்ற விசேஷ நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கொடி ஏற்றத்திலிருந்து தீர்த்தவாரி வரையில் வாகனங்களில் புறப்பாடு செய்வதும் சிவாகம விதிகளை ஒட்டியே நடைபெறுகின்றன.  இவ்வாறு மூலவரே உற்சவராகத் திருவீதிக்குச் செல்வதால், சுவாமி மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்வரை மூலஸ்தானக் கதவுகளை மூடி வைப்பதும் வழக்கம். அவ்வாறு வலம் வரும் வீதிகள் புனிதமாகக் கருதப்பட்டு மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சுவாமியின் வருகையை எதிர் நோக்கிய காலங்களை முதியவர்கள் நன்கு அறிவர். கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையிலிருக்கும் வயோதிகர்களும், நோயாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும்  வீட்டு வாசலிலேயே இறைவனை வழிபட ஏதுவாகப் புறப்பாடுகள் அமைந்துள்ளன. " நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி " எனத் திருவாசகம் கூறுவதைக் காண்க.

ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயத்திற்கு வந்து  சேரும் வரை  புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதை ஆலய சிப்பந்திகளும், நிர்வாகத்தினரும் சுவாமி தூக்குவோரும், இசைக் குழுவினரும்,பொது மக்களும் நினைவில் கொள்ளவேண்டுவது மிகவும் அவசியம்.  வெறும் விக்கிரகம் தானே என்ற அலட்சியம் ஒருபோதும் இருக்கக்கூடாது.

மூர்த்தியை அலங்காரம் செய்வதிலிருந்து இந்த எண்ணம் ஏற்பட வேண்டும். தேவை இல்லாமல் மூர்த்திக்குச் செயற்கையாகக்  கை - கால்கள் வைத்துக் கயிறுகளால் கட்டுவதும்,முகத்தில் மையால் கண் வரைந்து இயற்கை அழகைக் கெடுப்பதும் தவிர்க்க வேண்டிய செயல்கள்.,

வாகனத்தில் மூர்த்தியை ஏற்றி,மலர் அலங்காரம் செய்தபிறகு தரையோடு தர-தர என்று இழுப்பதை ஒருக் காலும் அனுமதிக்கக் கூடாது. வாகன தூக்கிகள்  சட்டை-லுங்கிகள் அணியாதவர்களாகவும் திருநீறு பூசியவர்களாகவும் இருத்தல் அவசியம். ஆங்காங்கே நிறுத்துவதற்குக் கட்டைகளைக் கையில்  ஏந்தி வருவதை விட, அக்கட்டைகளை வாரைகளோடு கட்டியிருந்தால் எதிர்பாராத விதமாக ஒரு  புறத்தில் சுவாமி சாயும்போது நிலத்தில்  விழுந்துவிடாமல் இருக்க இது உதவும்.

காவிரியைக் கடந்து பல்லக்கு மணல் சரிவில் ஏறுதல் 
தோள்களில் ஏற்றிக் கொண்ட பிறகு பல ஊர்களில் மூர்த்தியின்  நடனம் எனச் சொல்லிக் கொண்டு சுவாமி தூக்கிகள் வாரைகளை இறக்கியும் ஏற்றியும் ஆட்டுகிறார்கள். இப்படிச் செய்யும்போது ஒருபுறம் சுவாமியைத் தாங்கிக் கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கீழே விழுந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.

சென்ற ஆண்டு சித்திரையில் சப்த ஸ்தானப் பல்லக்கு நிலத்தில் சுவாமியோடு விழுந்ததும், இந்த ஆண்டு மாசி மகத்தில் காரைக்கால் அருகிலுள்ள   ஓர் ஊர் சுவாமியையைத் தூக்கியவர்கள் தவற விட்டு நிலத்தில் விழும்படி செய்ததும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுவாமியை லேசாக அசைத்தாலே போதும். இவர்கள் குக்குட நடனமும் உன்மத்த நடனமும் ஆட ஏன் முயற்சிக்கிறார்கள்?  அவை ஈசன்  ஒருவனாலேயே ஆடப்பட வேண்டியவை. போதாக்குறைக்குப் பல ஊர்கள்  சுவாமி தூக்கிகள் சுய நிலையில் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தோள்களிலே வாகனங்களுடன் மூர்த்திகள் தூக்கப்பட்டு வந்ததுபோக, இப்போது டயர் வண்டிகளிலும், ட்ராக்டர்களிலும் மூர்த்திகள் உலா வருகின்றனர். தூக்கும் ஆட்கள் போதிய அளவு இல்லாததும் முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. எது எப்படி இருந்தாலும்  விழாவின் புனிதம் கெடாமல் இருக்க இன்னும் கவனம் தேவைப் படுகிறது.  வளைக் கடைகளும், பலூன் வண்டிகளுமே விழா என்று ஆகி விடக் கூடாது. உற்சவம் என்பது கேளிக்கை அல்ல. நம்மை வீடுதோறும் நாடி வந்து அருள் செய்யவரும் தெய்வத்தைப் போற்றும் விழா என்பதை நாம் மறக்கவே கூடாது.  

Friday, March 4, 2016

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்

காயத்ரி தேவி- தஞ்சை ஓவியம் 
வேதத்தை எழுதாக் கிளவி என்று தமிழில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது பரம்பரை பரம்பரைகளாக ஏட்டில் எழுதாமல் குரு மூலமாகக் காதால் கேட்டுக் கற்கப்படுவதால் இவ்வாறு அதைக் குறிப்பிட்டு வந்தனர்.  கற்பவர்களும் கற்பிப்போர்களும் நிறைந்த அந்தக் காலத்தில் வேத சம்ரக்ஷணம் என்று தனியாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. வேதம் தான் எல்லோரையும் காப்பாற்றியதே தவிர வேதத்தை நாம் காப்பாற்றவேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. இக்காலச் சூழ்நிலையில் கற்பவர்கள் மிகவும் குறைந்து விட்ட படியால் வேதம் மறைந்து விடாமல் இருக்கப் பல வித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுதாக் கிளவியாகத் திகழ்ந்த வேதம் எழுதப்பட்டு ( அதாவது நூல் வடிவில் அச்சிடப்பட்டு) வருவதும் அம்முயற்சிகளுள் ஒன்று.

வேதத்தை ஒரு பிரிவினர்  பல்லாண்டுகள் தக்க குருவிடம் பயின்று ,பிறர்க்கும் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதால் , வாழ் நாள் முழுவதும் வேத நெறிக்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முடிந்தது. இப்படி எளிய வாழ்க்கை வாழ்வதே போதும் என்ற நிலை அப்போது இருந்தது.

வேதத்தைப் பிறர் படிக்கும் படி அச்சிட்டு வெளியிடக் கூடாதா  என்று கேட்கத் துவங்கியபோது கற்பவர்களும் குறைவதால் வேறு வழி இல்லாமல் அச்சிடும்படி ஆகி விட்டது. அப்படித் தயங்கியதன் காரணம் நமக்குப் புரியாமல் இருந்தது. இப்போது புத்தக வடிவில் வெளி வந்ததோடு கேசட், சி .டி என்றெல்லாம்  ஆகிக்  குரு முகமாகக் கற்க வேண்டிய மந்திரங்கள் பகிங்கரமாக ஒலி  பெருக்கிகள் மூலம்  அலற விடப்படுகின்றன. எல்லாத் தேவதைகளின் மூல மந்திரங்களும், தியானங்களும் புத்தகங்களில் அச்சாகியுள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இப்படி வியாபாரம் செய்கிறார்கள். காலிங் பெல்லை அழுத்தினால் காயத்திரி மந்திரம் ஒலிக்கிறது. அதில் என்ன  தப்பு என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

 என்ன தப்பு என்று இப்போது பார்ப்போம்.  அதனால் மந்திரங்களின் சக்தி வலு இழந்துவிடும் என்று நாம் சொல்லப்போவதில்லை. அப்படிச் சொன்னால் அவற்றை ஏற்றுக்கொள்ளாததோடு ஏளனம் செய்பவர்கள் இருக்கும் இக்காலத்தில் அது எடுபடாது என்று தெரியும். நாம் இங்கு சொல்லப்போவது வேறு. முகநூலில் பார்த்த செய்தி ஒன்றே இதற்குத் தக்க  பதிலாக அமையும் என்பதால் அதைப் பகிரலாம் என்று எண்ணுகிறோம்.

வேற்று மதத்தைச் சார்ந்த ஒரு டைரக்டர்  எடுத்த தமிழ் திரைப் படத்தில் காயத்திரி மந்திரம் கேலிக்கூத்தாக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியே அது. இப்போது சொல்லுங்கள். மந்திரங்களைப் புத்தகமாகவும் எலெக்ட்ரானிக் வடிவிலும் வெளியிட்டதன் விளைவுதானே இது?  குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிப்பவர்கள் இவ்வளவு நடப்பதைக் கண்டும், " எதோ ஒருவன் தவறு செய்வதால் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லலாமா" என்று கேள்வி  எழுப்புவர். இது ஒரு குடம் பாலில் சிந்திய ஒரு துளி விஷம் அல்லவா?   ஒரு துளி தானே என்று கூறுவீர்களா என்று அவர்களைக் கேட்கிறோம். அந்த ஒரு துளிகூட  விழுந்துவிடக் கூடாது என்பதாலும் உலகம் காக்கப்படுவதற்கு வேதங்கள் குரு மூலமாகக் காக்கப் படவேண்டும் என்றும் தீர்க்க தரிசன நோக்குடன் நமது முன்னோர்கள் காட்டிய பாதையைக் குறை சொல்லலாமா?  அதை மீறியதன் விளைவை இப்போதாவது அறிந்து கொண்டு அவர்களது மகிமையை உணர்கிறோமா?     

Wednesday, March 2, 2016

கலைகளே காலக் கண்ணாடிகள்

கலைகள் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லனவற்றை எடுத்துக் கூறும் பொக்கிஷங்களாகத் திகழ வேண்டும்.  தீய எண்ணங்களுக்கு வித்திடுபவற்றையும் தற்காலத்தில் கலைகள் என்று  பெயரிடுகிறார்கள். அவற்றை உருவாக்குபவர்களைப்   பட்டமளித்துக் கௌரவிப்பது காலத்தின் கொடுமை. ஆலயங்களே பெரும்பாலும் கலைகளுக்கு ஊற்றுக் கால்களாகவும் அவற்றைத் தொடர்ந்து ஆதரிப்பனவாகவும் திகழ்ந்தன. தற்காலத்திலோ கலைச் செல்வங்கள் களவாடப்படுகின்றன. அவற்றின் பெருமை அறிந்து ஆதரிப்போர்  சிலரே!

ஆலயக்கலை  என்பது கட்டிடக் கலை மட்டுமல்ல. இசை, நாட்டியம், சிற்பம் போன்ற அருங் கலைகளின் காப்பகமாகவும் ஆலயங்கள் அமைந்துள்ளன. ஸ்தபதிகளில் தான் எத்தனை வகை! ஆலய நிர்மாணத்தை நன்கு அறிந்தவரே   ஆகம விதிப்படி ஆலயம் அமைக்க இயலும். ஒரு சன்னதி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எத்தனை அங்கங்கள் உண்டு என்பதை அவரே அறிவார்.

விமானங்கள் சதுரமாகவும்,உருண்டையாகவும்,கஜப் பிருஷ்டமாகவும், பல தளங்கள் கொண்டும் விளங்குவதைக் கண்டு வியக்கிறோம்.கருங்கற்களை  இயந்திர வசதிகள் இல்லாத காலத்தில் உயரத்திற்கு ஏற்றி விமானங்கள் அமைத்த ஸ்தபதிகளை எத்தனை பேர் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்?

தற்சமயம் ஒரு சிற்பம் செய்வதற்கே பல மாதம் பிடிக்கும்போது கோயில் முழுவதும் சிற்பக் களஞ்சியங்களைப் படைத்த அக்கரங்களைப் பாராட்ட வேண்டாமா? பாராட்டத் தவறுவதோடு அவர்கள் வியர்வை சிந்தப் படைத்த விமானங்களையும் கோபுரங்களையும் மரங்கள் ஆக்கிரமித்து அழியும் நிலையில் இருப்பதைக் கண்டும் மௌனிகளாகத் தானே இருக்கிறோம்?

ஒரு கல் எவ்வாறு தெய்வ உருப் பெறுகிறது , பிறகு  அவ்வுருவமானது  எவ்வாறு கோயிலில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு சாந்நித்தியம் பெறுகிறது என்பதை  ஆகமங்கள் அறிவிக்கின்றன.

பண்டைக்காலம் போல் தற்காலத்தில் சிற்பங்கள் செய்பவர்கள் குறைந்து விட்டாலும் அந்த வழி முறைகள் இன்னமும் பின்பற்றப்படுகின்றன.  கல்லிலும் ஆண் கல்,பெண் கல்,தேரை இல்லாக் கல் என்று உரிய கற்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவ்வாறு தேர்ந்தெடுத்த  கல்லை பூசித்த பிறகே அதனை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். சிற்பக் கல்லூரிகளில் பயின்றவர்களும் இதில் அடங்குவர். கல்லிலோ மரத்திலோ உலோகத்திலோ உருவாக்கப்படும் ஒவ்வொரு மூர்த்திக்கும்  தியான சுலோகம் உண்டு. அவற்றை மனப்பாடமாகக் கூறும் ஸ்தபதியார்களைக்  கண்டதுண்டு.

சண்டிகேசுவரர் வரலாறு 
கடினமான வேலைப்பாடு கொண்ட சிற்ப வரிசைகளைக் காணும்போது மலைப்பாக இருக்கிறது.  பூத கண வரிசையும் யாளிகளின் வரிசையும் நம்மை அயர வைக்கின்றன. சில ஊர்களில் சுமார் நான்கு அங்குலங் கொண்ட வரிசையில் பல புராணச் செய்திகளை அருமையாகச் செதுக்கியுள்ளார்கள். பெரிய அளவில் அமைந்துள்ள துவார பாலகர்கள், தேவ கோஷ்டங்கள் , ஒரே கல்லாலான மாபெரும் தூண்கள் - அவற்றின் நான்கு புறமும் உள்ள சிற்பங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம் ? ஒரே நாளில் வேன்- பஸ் வைத்துக் கொண்டு பத்து பதினைந்து கோவில்கள் பார்ப்பதில்தானே நமது கவனம் இருக்கிறது!
                                                                                                                      ---கலைகள் வளரும்