Tuesday, January 12, 2016

குருவும் சிவமும்

காஞ்சி காமகோடி பெரியவர்கள் மொழி,இனம்,மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு  விளங்கி அனைவராலும் வணங்கப்பட்டவர்கள். தாம் வாழ்ந்த ஒரு நூற்றாண்டில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களை நல்வழிப் படுத்தியவர்கள். அவரது எளிமை அனைவரையும் கவர்ந்தது. எல்லோரிடத்தும் சமமாகக் கருணை பாலித்த தனிப் பெருமை வாய்ந்தவர்கள் என்று சமய நம்பிக்கை அற்றவர்களும் ஏற்கும் அளவிற்கு நடந்து காட்டியவர்கள். குக்கிராமங்களுக்கும் நடந்தே சென்று எந்த வசதியும் இல்லாத அங்கு பல நாட்கள் தங்கிய பெருமையும் அவர்களைச் சாரும். அதே நேரத்தில் தனது நியமத்திலிருந்து கடுகளவும் தவறியதில்லை  மடத்தின் உயர்ந்த பாரம்பர்யத்தைக் காப்பதில் மிக்க அக்கறை காட்டியபடியால் குறுக்கு வழிகளையோ,மாற்று வழிகளையோ மக்களுக்கு ஒருபோதும் உபதேசித்தது கிடையாது. எனவே ஆதிசங்கரருக்குப் பின் வந்த ஆசார்யர்களில் இவருக்கும் சிறப்பிடம் உண்டு.

காஞ்சி மகான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்றும் பல தடவைகள் அவரை தரிசனம் செய்தோம் என்றும் அப்போது பெற்ற அனுபவங்கள் பற்றியும் நம்மில் அநேகர் பகிர்ந்து கொள்வது உண்டு. பெரியவர்கள் ஸித்தி ஆனாலும் இன்னும் நம்மிடையே கருணை பாலித்து வருவதாகப் பலர் மனம் நெகிழ்ந்து கூறுவதைக் கேட்கிறோம்.

காமகோடி பீடத்தில் ஆசார்யர்களாகத் திகழ்ந்த பலரது அதிஷ்டானங்கள் பல ஊர்களில் உள்ளன. கும்பகோணம்,கலவை,இளையாத்தங்குடி போன்ற இடங்களில் உள்ள அதிஷ்டானங்களுக்குப் பல முறை சென்று தங்கி குரு பக்தியின் முக்கியத்தைக் காட்டியதோடு, வடவம்பலம் என்ற ஊரில் ஒரு ஆச்சார்யரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தியும் பெரியவர்கள் காட்டி அருளினார்கள்.

குருவே சிவத்தைக் காட்டுபவர். ஆகவே குரு மூலமாக மந்திரோபதேசம் செய்துகொள்வது நமது தேசத்தில் பன்னெடுங் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உபதேசம் செய்த குருவை தியானித்த பிறகு மூல மந்திர ஜபம் செய்வது வழக்கம். இதன் மூலம் மூல மந்திரத்திற்குரிய தேவதையின் அருள் சுலபமாகக் கிடைத்து விடுகிறது. ஆகவே நம்மைத் தெய்வத்திடம் எளிதில் கொண்டு செல்லும் ஏணியாக குரு விளங்குவதால் அவரை முதலில் வணங்க வேண்டும் என்ற கருத்தில் மாதா,பிதாவுக்கு அடுத்தபடியாகக் குருவைக் குறிப்பிட்டார்கள் நமது முன்னோர்கள்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். நம்மை இறைவனிடம் இணைக்கும் பாலமாகக் கருதி குருவை வணங்க வேண்டும் என்ற மையக் கருத்தை மறந்து விடக் கூடாது. அதனால்தான் தவ வலிமை மிக்க முனிவர்களும் பிற மகான்களும் சித்தர்களும் தங்களால் எதை வேண்டுமானாலும்  செய்ய முடிந்த போதிலும் தாங்களே கடவுள் என்றும் தங்களையே வழிபட வேண்டும் எனும் ஒருபோதும் கூறியதில்லை. அப்படிக் கூறியவர்கள் வீழ்ச்சி அடைந்தார்கள் என்று புராணங்கள் வாயிலாக அறிகிறோம். காஞ்சி மகானிடம் தங்களது குறைகளைக் கூறுபவர்களுக்குப் பெரியவர் தந்த ஆறுதல் , " இன்று பூஜையில் சந்திரமௌலீசுவரரிடம் சொல்லி விடுகிறேன், கவலைப் படாதே " என்பதுதான்.  முக்தி வரம் வேண்டி வந்த செட்டியார் தம்பதிகளைத் திருவாலங் காட்டிற்குச் சென்று அங்கு காரைக்கால் அம்மைக்கு முக்தி வழங்கிய இரத்தின சபாபதியிடம் அனுப்பி வைத்தவர் நம் பெரியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

தேவாரம் பாடிய ஞானசம்பந்தரும் தான் பாடியவை அனைத்தும் சிவ வாக்கே என்பதை " எனது உரை தனது உரையாக" எனப்பாடுகிறார். " எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே ' எனப்பாடியவர் அவர் . நாம் அவரை சமயாசாரியாராகக் கொண்டாடினாலும் அவர் நமக்கு சிவநெறியே பவத்தை நீக்கும் வழி எனக் காட்டினார்.

குருவினிடத்தில் உள்ள அதீதமான பக்தி சில சமயங்களில் பல வகையாக வெளிப்படுகிறது. சிலர் குருவுக்குத் தாங்கள் வசிக்கும் பகுதியில் மணி மண்டபம் கட்டுகிறார்கள். இன்னும் சிலர் அவரை தெய்வத்திற்கு சமமான நிலையில் வைத்து வழிபடுகிறார்கள். சமய நூல்களில் தெய்வத்தின் மீது பாடப் பெற்ற பகுதிகளைச் சற்று மாற்றி குருவின் மீது அமைத்து விடுகிறார்கள். "தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசக வரிகள், " தென்னாடுடைய பெரியவா போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி " என்று மாற்றப்படுகின்றன. பெரியவர் படுத்த நிலையில் உள்ள படத்தை சுருட்டுப் பள்ளி சுவாமியின் படத்தோடு வெளியிட்டு பெரியவரே சிவன் என்ற வாசகங்கள் எழுதப்படுகின்றன.

அண்மையியில் ஒரு நண்பர் அனுப்பிய படத்தில் காமாக்ஷியின் முன்புள்ள ஸ்ரீ  சக்கரத்தின் மீது பெரியவர்  அமர்ந்திருப்பதுபோல்  வரையப்பட்டிருந்தது. அனுப்பியவரோ நம்மைப் போலப் பெரியவரிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். அவரது ஒரே ஆதங்கம், இப்படி தெய்வத்தின் இடத்தில் குருவை வைத்து தெய்வ வழிபாட்டை மாற்றுவதோடு காஞ்சி மடத்தின் புகழை மங்கச் செய்கிறார்களே என்பதுதான் . சிலருக்கு இக்கருத்து ஏற்க முடியாமல் இருக்கலாம். இருந்தாலும் அவரது கேள்விக்குத் தக்க விடையைத் தேடும் முயற்சி செய்யாமல் குரு ஆராதனையையும் தெய்வ வழிபாட்டையும் இரு கண்களாகக் கொண்டு பக்தி செலுத்தலாம் அல்லவா?  இரு வழிபாடுகளும் முக்கியமானவை என்றாலும் நிறைவாக தெய்வத்திடமே நம்மைச்  செலுத்துபவை. ஆகவே ஒன்றின் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்ப வேண்டிய அவசியமே இல்லை

Monday, January 11, 2016

திருச்சோற்றுத்துறை வழிகாட்டுகிறது

திருச்சோற்றுத்துறை சிவாலயம் 
தற்காலத்தில்  பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாவதைப் பார்க்கிறோம். முதலில் நன்றாகப் படிக்க வேண்டுமே என்ற கவலை. அடுத்தபடியாக மேற் படிப்பு மற்றும் வேலை பற்றிய கவலை . இவை எல்லாவற்றையும் விட அவர்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டுமே என்ற பெருங் கவலை. பெற்றோர் பேச்சை  மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் படுவதோடு, எங்களது எதிர் காலத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்வோம் என்று முகத்தில் அடித்தால் போல் பிள்ளைகள் சொல்லும்போது என்ன  செய்ய முடியும்?  வளர்த்த விதம் சரியில்லை என்று பார்ப்பவர்கள்  முகம் சுளிக்கத்தான் செய்கிறார்கள்.

வளர்க்கும் விதம் என்றால் எதைச் சுட்டிக் காட்டுவது? கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதையா? ஊர் சுற்றினாலும் பார்க்காதது போல் இருந்து விடுவதையா? எப்படி உடை உடுத்தினாலும் வாயைத் திறக்காமல் மௌனம் சாதிப்பதையா? தொலைக் காட்சியே கதி என்று கிடப்பதையா? அதட்டிக் கேட்டால் நிலைமை விபரீதம் ஆகி விடும் என்று பயந்து ஒதுங்குவதையா?  அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்துக் குட்டிச்சுவர் ஆக்குவதையா?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அது தான் இளமையில் குழந்தைகளை நல்வழிப் படுத்தத் தவறுவது. அப்படிச் செய்திருந்தால் தீய வழிக்குச் செல்லுவதற்கு சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம். அதனால் தான் நமது முன்னோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் ஒழுக்கத்தைப் போதித்தார்கள். பள்ளிகளிலும் நீதிக் கதைகளைச் சொல்லி வந்தார்கள்.  நீதி நூல்கள் பல பாட திட்டத்தில் இருந்தன. இதிகாசக் கதைகளைச்  சொல்லுவதால் " கெடுவான் கேடு நினைப்பான்" என்பது மனதில் ஆழமாகப் பதிந்தது.  ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. நினைக்கவே கொடூரமான குற்றங்களைக் குழந்தைகள் செய்வதாகப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

இறை நம்பிக்கையும் பக்தியும் குழந்தைகளது சிறு வயதில் விதைக்கப்படும்போது அதுவே பிற்காலத்தில் நல்  ஒழுக்கமாகிய பயிர் வளர ஏதுவாகிறது. வாழ்க்கையில் முன்னேறப் படிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயத்தில் அது ஒழுக்கத்தைத் தராவிட்டால் அக்கல்வியால் என்ன  பயன்? இறைவனது தாள்  தொழாமல் கல்வி கற்று என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

பூமாலை புனைந்து புகழ்ந்துபாடும் சிறுமியர் 
விதிவிலக்காக இன்றைய சூழ் நிலையிலும் குழந்தைகள் நல்ல நெறியில் வளர்க்கப் படுவதைக்  காணும் போது நமது பாரம்பர்யம் முற்றிலும்  அழிந்துவிடாமல்  சில இடங்களில் பாதுகாக்கப் படுவது பாராட்டுக்குரிய விஷயம். திருவையாற்றுக்கு அருகில் உள்ள திருச் சோற்றுத்துறை என்ற சிறிய கிராமத்துக் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அங்கு உள்ள   ஓதன வநேசுவர சுவாமி ஆலயம் பிரசித்தி பெற்றது. தேவாரப் பதிகங்கள் பெற்றது. திருவையாற்றின் சப்த ஸ்தானங்களில் ஒன்றானதால் ஆண்டுக்கொருமுறை திருவையாற்றிலிருந்து ஐயாரப்பறது பல்லக்கு இங்கு எழுந்தருளுவது வழக்கம். இக்கோயிலில் சிறுவர்களும் சிறுமியர்களும் வழிபாட்டு முறைகளைத் தெளிவாகக் கற்கிறார்கள். நீறு அணிந்த நெற்றி, ருத்திராக்ஷம் அணிந்த கழுத்துடன்  வருகை தருகிறார்கள். திருமுறைப் பாடல்களைக் கற்கிறார்கள்.

மார்கழியில் விடியற்காலை ஐந்து மணிக்குத் திருவெம்பாவை-திருப்பள்ளிஎழுச்சிப் பாடல்களைப் பாடியவாறே திரு வீதிகளை வலமாக வந்து ஆலயத்தை அடைந்து வழிபாடு செய்கிறார்கள். அது மட்டுமல்ல. நந்தவனப் பூக்களைக் கொய்து மாலைகளாகக் கட்டிக் கோயிலுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.   பின்னர் இல்லம் திரும்பித் தங்கள்  பாடங்களைப் படித்து விட்டுப் பள்ளிக் கூடம் சென்று வருகிறார்கள். மற்ற ஊர்களுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறார்கள். இவர்களைப் பார்த்தாவது நாகரீக வாழ்க்கை வாழும் மற்றவர்கள் திருந்த வேண்டும். பள்ளிக்குப் புறப்படப் பத்து நிமிஷங்களே இருக்கும் வரையிலும் தூங்கும் குழந்தைகளைப் பார்த்தும் " இன்னும் கொஞ்சம் தூங்கட்டுமே" என்று செல்லம் கொடுப்பவர்கள்  இக்குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் தங்கள் செயலுக்கு வெட்கப்பட வேண்டும். நம் கோயில், நம் கிராமம் என்று வளர்ந்தால், அதுவே பிற்காலத்தில் நமது கலாசாரத்தைத் தாங்கும் தூணாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். `நாட்டு முன்னேற்றமும் அதில் அடங்கி விடும்.