Sunday, September 2, 2018

மடத்துக் கோயில்கள்

மடத்துக் கோயில்கள் என்றாலே ஒரு காலத்தில் நல்ல நிர்வாகம் செய்யப்பட்டும் , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வருவதாகவும் பரவலாக ஒரு அபிப்பிராயம் இருந்து வந்தது. இப்போது பெயரளவில்  மடத்துக்குச்  "   சொந்தமான "  என்று போட்டுக் கொள்வதோடு சரி என்று ஆகி விட்டது. குத்தகை பாக்கியும், போதிய வருவாய் இல்லாமையும் காரணங்களாகக் கூறப்பட்டன. இருந்தபோதிலும் மடங்களின் சில கோயில்கள் ஏராளமான வருவாய் தந்தும் திருப்பணி செய்யப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நன்கு படித்தவர் என்றும் அனுபவம் மிக்கவர் என்றும் போற்றப்படும் ஒரு மடாதிபதி சொன்னாராம், " பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எதில் கூறப்பட்டுள்ளது " என்று. ஆகமசீலர்கள்தான் அவரிடம் சென்று அந்த ஆகம வாக்கியத்தைக் காட்ட வேண்டும். மரபு வழியை ஆதரிப்பவரே இப்படிக் கூறுவது சரிதானா ? 

மூர்த்திகளைப் பீடத்துடன் இணைக்கும் அஷ்ட பந்தன மருந்து கரைந்து போய் விடக் கூடாது. அது பன்னிரண்டு ஆண்டுகள் வரை கரையாது என்றாலும், ஒருவேளை அதற்கு முன்னதாகவே கரைந்து விட்டால் சீக்கிரத்திலேயே கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முன்னோர் கருதினர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் மருந்து கரையாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அதற்காகவாவது கும்பாபிஷேகம் செய்யக் கூடாதா ? 

ஆகமப் பிரமாணம் காட்டுவது ஒரு புறம் இருந்தாலும், மடத்துக்குச் " சொந்தமான "  பெரிய வருவாய் ஈட்டும் கோயில்களில் மேற்கூரைகள் முட்டுக் கொடுக்கப்பட்டும், மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்தும்,விமானங்கள் மரம் முளைத்தும் காணப் படுவது ஏன் ?  இதற்குப் பெயர் தான் நல்ல நிர்வாகமா? அப்படியானால் பக்தர்கள்  காணிக்கை எந்தவிதத்தில் செலவழிக்கப்படுகிறது ?   ஐம்பது ஆண்டுகள் ஆகியும் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் காணாமல் இருக்கும் கோயில்களை இப்படித்தான் பராமரிப்பார்களா ? மழைக் காலங்களில் போய்ப் பார்த்தவர்களுக்குத் தெரியும். மேல் தளம் ஒழுகியும், கருவறையில் கணுக்கால் அளவுக்கு நீர் தேங்கிய நிலையில் அர்ச்சகர்கள் பூஜை செய்வதையும். 

வருவாய் குன்றிய நிலையில் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தும் சில நன்கொடையாளர்கள் தாங்களே திருப்பணிச்  செலவை ஏற்றுக் கொண்டு செய்து தருவதாகக் கூறினால், சில மடங்கள் மட்டுமே அனுமதி தருகின்றன. 

தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களை ஆண்டில் எத்தனை முறை சென்று அதிபர்கள் பார்க்கிறார்கள்?  ஒரு சில பெரிய தேவஸ்தானங்களுக்கு மட்டும் வருகை தருகிறார்கள். மற்றவை கும்பாபிஷேகத்தின் போது மட்டும் தானோ என்னவோ தெரியவில்லை. அதிபர்கள் செல்ல இயலாவிட்டால் கட்டளைத் தம்பிரான்களை மாதம் ஒரு முறையாவது அங்கு  அனுப்பலாமே ! 

சமூக நலப் பணி  செய்ய வேண்டியதுதான். மறுப்பதற்கில்லை. அதற்காகக்  கல்யாண மண்டபம் திறந்து வைப்பதும், ஹோட்டல்களைத் திறந்து வைப்பதும், வங்கிக் கிளையைத் திறந்து வைப்பதும் சமயத் தொடர்புடைய செயல்களா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.  

குரு பீடங்களைக் குறை கூறக் கூடாது தான். நல்வழி காட்ட வேண்டிய குரூ  பீடங்களே இவ்வாறு செயலாற்றும்போது மக்கள் எவ்விதம் இருப்பர் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் மடாதிபதிகள் விஜயம் செய்து கோயிலின் நான்கு வீதிகளை மட்டுமாவது கால்களால் நடந்து வந்து மக்களுக்கு ஆசி வழங்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. பல கிராமக் கோயில்கள்  வேற்று மதத்தினரால்  சூழப் பட்டு வருவது  தெரிந்தும்  மடத்துக்கு வெளியே செல்லாமல் இருக்கக்கூடாது அல்லவா ? 

சோழ மண்டலத்தில் மட்டும் 190 தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் நூற்றுக் கணக்கான பாடல்கள் கிடைக்கப்பெறாத பழங் கோயில்களும் உள்ளன. இவை பெரும்பாலும் அறநிலையத்துறையின் வசம் இருக்கின்றன. அத்துறை அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மடத்துக் கோயில்களாவது  மாதிரிக் கோயில்களாகத் திகழ்ந்து பொலிவுடன் விளங்க வேண்டும் என்று ஏங்குவதாலேயே  இவ்வாறு எழுதலாயிற்று. தனிப்பட்ட முறையில் எவரையும் குறை கூறும் நோக்கம் நமக்கு அறவே கிடையாது.