Tuesday, January 21, 2014

பால் அபிஷேகம்

நம்மில் பலர் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். கூடவே வித்யா கர்வமும் வந்து விடுகிறது. " ஈசான   ஸர்வவித்யானாம் ஈச்வர சர்வபூதானாம் " என்ற வாக்கியப்படி, ஈச்வரன்  எல்லா வித்தைகளையும் தோற்றுவித்து அருளுபவன்  என்ற  நினைப்புக்கூட இல்லாமல் போய் விடுகிறது. ஏழு வயது பச்சிளம் பாலகனாக இருந்தபோதே சண்டிகேச்வரருக்கு என்ன எண்ணம் ஓங்கியிருந்தது தெரியுமா? இத்தனை  கலைகளுக்கும் எல்லையாக இருப்பது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் இறைவனது கழல்களே என்று எண்ணினாராம்.

வயதில் மிகச் சிறியவராக இருந்தாலும் அறிவால் மிகப் பெரியவராக இருந்தபடியால், சேக்கிழார் அவரைச் " சிறிய பெருந்தகையார்" என்று சிறப்பிக்கிறார். அவர் பசுக்களை மேய்த்ததும், அவற்றின் பாலால் மண்ணி ஆற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்துப் பாலபிஷேகம் செய்ததும், அதைக் கண்டு அவரது தந்தை கோபத்துடன்  பூஜைக்காக வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தவுடன் சிவத்தியானம் கலைந்து கண் விழித்த பாலகன், உதைத்தது தந்தையே என்று தெரிந்ததும் சிவாபராதத்திற்குத் தண்டனையாகத் தனது கையிலிருந்த கோல் கொண்டு அவரது கால்களை ஒச்சவும் அதுவே மழுவாக ஆகிக் கால்களைத் துண்டப்படுத்தியது என்பதும் , அந்தக்கணமே, உமா மகேச்வரர்கள் தோன்றி அக் குழந்தையை அணை த்து அருளினர்  என்பதும், பெருமான் தனது கொன்றைமாலையை அச்சிறுவனுக்குச் சூட்டி, சண்டேச  பதம் தந்தார் என்பதும் பெரிய புராணத்தால் நாம் அறிகிறோம்.

புராணக்கதை ஒரு பக்கம் இருக்கட்டும் . அப்புராணம் நமக்குத் தெரிவிப்பது என்ன என்பது அதை விட முக்கியம். பசுக்களின் பெருமையை நாம் இதன் மூலம் முதலில் தெரிந்து கொள்கிறோம். அப்பாலகன் " ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார்" என்று வியந்து உரைக்கிறார் சேக்கிழார் பெருமான்.

உலகில் உள்ள எல்லா யோனிகளுக்கும் மேம்பட்டவைகளாகவும்  எல்லாப் புனிதத் தீர்த்தங்களுக்கும் உறைவிடமாகவும் தேவர்களும் முனிவர்களும் தேவ கணங்களும் பிரியாது உறையும் மேனியையும் கொண்டு விளங்குவன பசுக்கள் என்பதை அச்சிறுவன் உணர்ந்தான். எல்லாவற்றுக்கும் மேலாகப் பரமேச்வரனுக்கு அபிஷேகத்திற்காக பால் முதலான ஐந்து திரவியங்களையும், விபூதியையும் தருபவை அப்பசுக்களே என்பதால் அக்குழந்தைக்கு இயல்பாகவே பசுக்கூட்டங்களிடம் இணையற்ற அன்பு பெருகியதைக் காண முடிகிறது. அவற்றை மேய்த்துக் காப்பதே நடராஜப்பெருமானை வழிபடும் நெறி யாவதாகத் தெளிந்தான்  அக்குழந்தை.  அபிஷேகம் செய்வதிலும் , உள்ளத்தை ஒன்றி பூஜை செய்வதைக் காட்டினான்  அம்மறைச்சிறுவன் . " மற்றொன்று அறிந்திலர்"  என்பது சேக்கிழார் அதற்குத் தரும் சிறப்பு. இவ்வாறு  " பக்தி முதிர்ந்த பாலகனாகக்" காட்டும் தெய்வச் சேக்கிழார் ,  தந்தையை எறிந்த பாதகத்துக்குப் பரிசாக, சிவபெருமான் தன் தேவியோடு விடைமேல் காட்சி தந்து, அச்சிறுவனை உச்சி மோந்து , செயற்கு அரிய செயல் செய்த அச்சிறுவனை நோக்கி, " அடுத்த தாதை இனி உனக்கு நாம்" என்று அருளினார். இவ்வாறு பசுவின் பெருமையையும், ஒன்றுபட்ட மனத்தோடு செய்யும் பக்தியின் சிறப்பையும் ஒருங்கே நாம் புராண வாயிலாக அறிந்து கொள்கிறோம்.

இனி இக்காலத்திற்கு வருவோம். வீட்டிலேயும் சரி, கோயிலிலும் சரி, பால் அபிஷேகம் செய்யும்போது மற்றொன்று அறியா நிலை நமக்கு வருகிறதா? கலப்படம் அற்ற பசுவின் பாலால் அபிஷேகம் செய்கிறோமா? பசுவின் மடியிலிருந்து கறந்த பால் அதே வேளையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறதா? பாக்கெட் பாலில் பசுவின் பால் மட்டுமா இருக்கிறது? அது எத்தனை நாள் முன்பு பதப்படுத்தப்பட்டு,குளிரூட்டப்பட்டு, நம் கைக்கு வந்ததோ நாமறியோம். நாம் தெரிந்தே தவறுகள் செய்வதுபோல் இருக்கிறது. அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக் கொடுத்தால்  புண்ணியம் தான். சந்தேகம் இல்லை. அதற்காகப் பாக்கெட் பால் வாங்கிக்கொடுக்கவேண்டுமா?  புண்ணியத்தை சம்பாதிக்கப்போய் பாவத்தை சம்பாதிப்பது போல் அல்லவா இருக்கிறது ! இதை எல்லாம் மக்களுக்கு ஆலய அர்ச்சகர்களும் , குருமார்களும் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும். எத்தனை லிட்டர் பாலால் அபிஷேகம் செய்தோம் என்பதைவிட, சுத்தமான பசும்  பால்,பசும்  தயிர் ஆகியவற்றால் சிறிது அளவே செய்தாலும் உயர்ந்தது. ஒருவேளை பசும்  பால் கிடைக்காவிட்டால், இளநீர் வாங்கித் தரலாமே!

இன்று சண்டிகேச்வரரது  குருபூசைத் திருநாள். தை மாத உத்திர நக்ஷத்திரத்தில் இது வருகிறது. பூஜையே அறியாதவர்கள் குருபூஜையை எவ்வாறு அறியப்போகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறு அரன் மகன் ஆகும் பேறு பெற்ற சண்டேச நாயனார் பெற்ற பதம் மட்டுமல்ல. அவர் இல்லாத சிவாலயமே இருக்காது. பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும் திகழ்கிறார். உற்சவ காலங்களில் இவரும் ரிஷப வாகனத்தில் சுவாமியோடு பவனி வருகிறார். இதைக் காட்டிலும் பேறு மற்றொன்று உண்டோ?  ஆகவே அவர் காட்டிய பாதையில் நாமும் நின்று ,தூய பசும் பாலால் பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை  நாம் நினைவில் கொண்டு பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிறருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான் குருபூஜை அர்த்தமுள்ளதாக ஆகிறது. 

Wednesday, January 8, 2014

சிதம்பர நீதி

இந்திய உச்சநீதிமன்றம் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தைப் பொது தீக்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மதிப்பிற்குரிய நீதிபதிகள் வழங்கியுள்ள இத்தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு உரியனவாகும். பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அம்சங்களாவன வருமாறு:

* "சுற்றி வளைத்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
* அப்படியே நிர்வாகத்தவறுக்காகக் கோவில் நிர்வாகத்தை அரசு கையில் எடுத்துக்கொண்டாலும் அந்தத் தவறைத் திருத்திய உடனேயே மீண்டும் நிர்வாகத்தைத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும்.
* அதை மீறி அரசே தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பது அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது.
* நிர்வாகத் தவறுகளைச்  சரி செய்ய மட்டுமே அரசு எடுத்துக்கொள்ளலாம் .
* காலம் குறிப்பிடப்படாமல் நிர்வாகத்தை அரசு வைத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது.
* சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பொது தீட்சிதர்கள் கட்டியிருக்காவிட்டாலும் , அது அவர்களது சொந்த சொத்தாக இல்லாவிட்டாலும் , பல நூற்றாண்டுகளாக அதை அவர்கள் நிர்வகித்ததால் அவர்களை வெளியேற்றமுடியாது.   இதை மறுபரிசீலனை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை."

நீதி மன்றங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதோடு, அப்பிழைகள் மீண்டும் சமுதாயத்தில் வராமல் எச்சரிக்கும் தீர்ப்புக்களை வழங்குவதால், யாருக்கு வெற்றி என்பது முக்கியமில்லை. எதிர் தரப்பு வாதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்பதை நீதித்துறை  சுட்டிக்காட்டியுள்ளது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு தரப்பினர் வெற்றி என்று கொண்டாடினால் மறு தரப்பினருக்கு அவர்கள் மீது துவேஷமே ஏற்படும்.     அகில உலகங்களுக்கும் நீதிபதியான நடராஜப்பெருமான் வழங்கிய தீர்ப்பாகக் கொண்டு அனைவரும் அதை மதித்துப் போற்றி  , ஏற்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காழ்ப்பு உணர்ச்சி மேலிடக்கூடாது. பிறர் நம்மை  எள்ளி நகையாடும்படி நமக்குள் பிளவு ஏற்படக்கூடாது.

மனித உரிமைகள் என்ற பெயரில், சிதம்பரம் கோயில் கலாசாரப் பண்பாட்டுச் சின்னம் என்றும் அதை தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமை ஆக்கக் கூடாது என்ற  கண்டக்குரலும் எழுப்புகின்றனர்.  தமிழ் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கலாசாரச் சின்னங்கள் கேட்பாரின்றி இடிந்து கிடப்பது இவர்கள் கண்ணில் படவில்லையா? அப்படியானால் அதற்காகக் கவலைப்படுபவர்களாக அவர்களை எப்படிக் கருத முடியும்? சிதம்பரம் கோவில் மட்டுமே இவர்களின் கண்களை உறுத்துகிறது என்றால் அதன் உண்மையான காரணம் வேறு இருக்கலாம் அல்லவா? முதலில் நீதி மன்றங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீதிக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும். தீர்ப்பை விமர்சிப்பதோ குறை கூறுவதோ தவறு என்பதை உணர வேண்டும். சிதம்பர ரகசியம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சிதம்பர நீதியையும் இப்போது தெரிந்து கொள்கிறோம். தான் ஆனந்த நடனம் ஆடுவதோடு அனைவரையும் ஆட்டுவிப்பவனும் அச்சிதம்பர நாதன் அல்லவா? " ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே" என்கிறது அப்பர் தேவாரம்.

நீதிமன்றத்தீர்ப்புக்கள் நமது செயல்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. இத்தீர்ப்பால் அறநிலையத்துறையின் செயல்பாடுகளும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோயில்களை ஏற்றுக்கொண்டதால் நிர்வாகம் சீரடைந்துள்ளதா? இடிந்த கோயில்கள் இடிந்தபடியே பராமரிப்பின்றிக்  கிடக்கவில்லையா? கோயில்களின்  பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களும் சொத்துக்களும் மீட்கப்படாமலும்,குத்தகை பாக்கி வசூலிக்கப்படாமலும் , முறைகேடுகள் சரிசெய்யப்படாமலும் இருக்கும் நிலை இன்னமும் தொடர்கிறதே! இப்படி இருக்கும்போது, அரசே பிழைகளைத் திருத்தாமல் எத்தனை காலம் தான் கோயில்களை  நிர்வாகம் செய்யப்போகிறது? தவறுகள் திருத்தப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. உச்ச நீதி மன்றமும் இதனைத் தெளிவுபடுத்தி விட்டது. இனி, முடிவு , அரசின் கையில்தான்.