Tuesday, February 12, 2013

நம்மைக் கவரும் முன்னோடிகள்


தேவாரம்,திருப்புகழ் பெற்ற தலங்களுள் சில தலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாத நிலையில் மிக்க முயற்சி எடுத்து அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததவர்கள் வரிசையில் வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களும் ஒருவர். நமது வலைப்பதிவுக்கு  இவர் புதியவர் இல்லை. திருப்புகழ் பெற்ற ஞானமலை எது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து ஆன்மீக உலகம் அறிய வைத்த இவரது அரும்பணி பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அருணகிரி நாத ஸ்வாமிகள் பாடிய த்ரியம்பகபுரம் எங்கு உள்ளது என்பது சரிவரத் தெரியாத நிலையில், ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் , அத்தலம் , சேங்காளிபுரத்திற்கும்,  கும்பகோணம் - திருவாரூர்  வழியிலுள்ள பெரும்பண்ணயூருக்கும் அண்மையில் உள்ளது என்று ஆதாரங்களுடன்  நிரூபித்திருக்கிறார் .  

"உரை ஒழிந்து " எனத் தொடங்கும் திருப்புகழில் " த்ரயம்பகபுர மருவிய கவுரி தந்த கந்த ; அறுமுக என இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல  பெருமாளே." என்று அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகனது திருவுருவம் தற்போது அங்கு காணப்படவில்லை. மயானக் கொல்லையில் உள்ள ஒரு பெயர்ப் பலகை "திரியம்பகபுரம்" என்ற ஊர்ப் பெயரை உறுதி செய்கிறது. எங்கு நோக்கினாலும் வயல்கள் உள்ள இந்த இடத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் கோயிலைத் தேடியிருக்கிறார். வயல்களுக்கு நடுவில் சிவலிங்கம் மாத்திரம் காணப்பட்டுள்ளது. இவரே த்ரியம்பகேச்வரராக இருக்கக் கூடும்.

 சிவலிங்கங்களோ அல்லது பிற  மூர்த்திகளோ இதன் அருகில் காணப்படவில்லை. சற்றுத் தொலைவில் சாஸ்தா கோவில் ஒன்று இருக்கக் காண்கிறோம்.  சேங்காளிபுரத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு இந்த சாஸ்தா குலதெய்வமாக விளங்குகிறார். இவர் மீது அமைந்துள்ள ஸ்லோகங்களை ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஊர்ப் பெயர் த்ரயம்பகபுரம் என்றே வருகிறது.

அருணகிரியார் பாடிய தலம் இது என்ற முடிவுக்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் அங்கு தனித்துக் காட்சி அளிக்கும் சிவலிங்கப்பெருமானுக்குக் கோவில் எழுப்பி அதில் முருகப்பெருமானைப் பரிவார மூர்த்தியாக எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு  அன்பர்கள் ஆதரவு  மிகவும் தேவைப்படுகிறது.  இவ்வளவு தூரம் முயன்று நமக்கு முருகன் அருளைப் பெற வகை செய்யும் இவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டாமா?

இவரைப்போலவே  மற்றொரு தொண்டரைப் பற்றியும் இங்கு சொல்லத் தோன்றுகிறது.இவர்  இளமையில் வறுமையில் வாடியவர். பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் சிவாலயங்களில் மடைப்பள்ளிகளில் பணியாற்றியவர். பின்னர், பி.காம். படித்துவிட்டு, வங்கிப் பணியில் சேர்ந்து,படிப் படியாக முன்னேறி உயர்ந்த பதவிகளை வகித்தவர். இத்தனையும் தான் பணி செய்த ஆலயத்தின் அம்பாளது அருள் என்று அடக்கமாகக் கூறிக் கொள்கிறார். அந்த ஆலயத்தின் திருப்பணிகளில் தீவிரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

முன்னோடிகள் (Role Models)என்று யார் யாரையோ ஏற்றுக் கொள்கிறோம்.மேற்கண்ட அடியார்களைப் போன்று  நமக்கு நல்ல வழியைக்  காட்டிப் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் இறைபணியிலேயே நிற்பவர்களை ஏற்கத் தயங்குகிறோம். இளமையிலிருந்தே இறைபணி செய்வது பலன் அளிக்க வல்லது என்பதை நாமும் உணர வேண்டும்.  இந்தக் காலத்தில் ,பணிஓய்வு  பெற்றவர்கள் எப்படிக் காலத்தைக் கழிப்பது என்று தெரியாமல் வீண் வம்பிலும் ,கேளிக்கை போன்றவற்றிலும் ஆயுட்காலத்தை வீணாக்குகிறார்களே என்பதைக் காணும்போது  வருத்தப் பட வேண்டியிருக்கிறது
.
இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். ஏதாவது நல்ல காரியத்தை ஆயுள் முடிவதற்குள் செய்ய வேண்டாமா? அப்படிப்பட்ட எண்ணம் எல்லோருக்கும் தோன்றும்படி ஸ்ரீ பரமேச்வரனைப்  பிரார்த்திக்கிறோம்.