Sunday, October 14, 2018

கேலிச்சித்திரங்களில் கடவுள்

பொதுவாகவே ஒரு தெய்வச்  சிலையைக்  காணும்போது நம்மை அறியாமலே ஒரு பய பக்தி ஏற்பட வேண்டும். சாலையில் நடந்து போகிற போக்கில் கோயில் கண்ணில் பட்டால் செருப்பைக் கூடக் கழற்றாமல், இரு கன்னங்களையும் விரல்களால் தொட்டு விட்டு மேற்கொண்டு நடக்கத் தொடங்கினால் அதை பயம் கலந்த பக்தி என்று எப்படிச் சொல்வது? அதே போலக்  கோயிலில் ஆகட்டும், வீடுகளில் ஆகட்டும், சுவாமி விக்கிரகங்களைத் தீண்டிப் பூஜை செய்யும்போது அவற்றை எதனால் செய்யப்பட்டது என்ற எண்ணமே மாய்ந்து, தெய்வமே நேரில் எழுந்தருளியதாகக் கொள்ளும் மனோபாவமும் பக்தியும்,அச்சமும் ஒருங்கே வர வேண்டும். இல்லாவிட்டால் கல்லாகவும் உலோகமாகவும் நினைத்துக் கொண்டே பூஜை செய்வதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியது தான் ! 

ஓவியர்களும் கேலிச்சித்திரம் வரைவதற்குத்  தெய்வத் திருவுருவங்களை இஷ்டம்போல் வரைவதை விட்டு விட்டு  வேறு உத்திகளைக் கையாளலாம்.  சில்பி அவர்களது கை வண்ணத்தில் வெளியான தெய்வப் படங்களைப் பார்க்கும்போது, அந்த ஓவியங்கள் வரையும்போது சில்பி அவர்கள் எவ்வளவு நுணுக்கமாகவும், தெள்ளத் தெளிவாகவும் அத்திருவுருவங்களைக் கண்டு ஓவியம் வரைந்தார் என்பதைப் பார்க்கும்போது  வியப்பாக இருக்கும். 

கல்லிலும் உலோகத்திலும் தெய்வ வடிவில் அமைப்பவர்களில் சிலர்  தியான சுலோகம் காட்டிய வழிப்படி நின்ற காலம் போய் காலண்டர்களில் காணப்படும் ஓவியங்களை நாடுகின்றனர்.   இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய தொன்றாகும். கடவுள் வடிவங்களில் கணபதியை வைத்தே பெரும்பாலும் இதுபோன்ற வித்தியாசங்கள் உண்டாக்கப்படுகின்றன. அவர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வரைவது, கோடானு கோடி மக்கள்  வழிபடும் தெய்வம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்ணாடி போடுவது, சாய்வு நாற்காலியில் உட்கார்வது  போன்ற கற்பனைகளைக் கடவுளிடம் காட்டுவது கேலி செய்வதைப் போல இருக்கிறது. 

கேலி சித்திரத்தை ஏன் பெரிதாகப் பொருட்படுத்துகிறீர்கள் என்று கேட்கலாம். எவ்விதக் கட்டுப்பாடோ வரம்புமுறையோ இல்லாமல் மட்டற்ற சுதந்திரம் கொடுத்து விட்டதால் ஓவியர்கள் மட்டுமல்லாமல் எவர் வேண்டுமானாலும் கடவுளர்களை சித்தரிப்பது என்று ஆகிவிட்டது. இந்த நவீன காலத்தில் தன்னிச்சையாகச் செயல் படுவதைத் தடுக்க எவராலும் இயலாது. என்றாலும் பய பக்தியுடன் தெய்வங்களை வழிபடுவோரது மனத்தைப் புண் படுத்துகிறார்கள் என்பதையாவது அவர்கள் அறியச் செய்ய வேண்டாமா? 

Thursday, October 11, 2018

கலாச்சாரம் இணைந்த நவராத்திரி

புரட்டாசி மாத பிரதமை முதல் தசமி வரையிலுள்ள பத்து நாட்களும் சாரதா நவராத்ரியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் லக்ஷ்மி- சரஸ்வதி உடனாய ராஜராஜேசுவரியாக  தேவியை வழிபடுவது நமது மரபு. பெண்களை சக்தியின் வடிவமாக வழிபடும் இந்நாட்டில், இந்த தினங்களில் அம்பிகையை வழிபடுவதோடு, கன்னிப் பெண்களையும் , சுமங்கலிப் பெண்களையும் அம்பிகையின் வடிவாகவே வழிபடுவது வழக்கம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரி விழா. முத்தேவிகளின் அருளும் ஒருங்கே பெற வேண்டுவதும் இவ்விழாவின் நோக்கம் என்பதை நினைவு கொள்ள  வேண்டும். 

நவராத்திரி விழாவை நமது கலாச்சாரத்தைப் பறை சாற்றும் விழாவாகக் கொள்ள வேண்டும். அதனால், அதில் காலத்திற்கேற்ற மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் தரலாகாது. தற்போது அதை வியாபாரத்திற்கும் , டாம்பீகத்திற்கும்  இடமளிக்கும் விழாவாக மாற்றிவிடுவது நல்லதல்ல. 


எத்தனை படிகளில் பொம்மை  வைக்கிறோம் என்பதைவிட, வாழ்க்கையில் எத்தனை படிகள் ஏறி முன்னேறியிருக்கிறோம் ;  நல்ல பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தம்மை ஆத்ம சோதனை செய்து கொள்ள  வேண்டிய தருணம் இது. 

இது முத்தேவியர்க்கே முக்கியத்துவம் தரும் விழாவாதலால் அவர்களை மண் பொம்மைகளாகக் கொலுவில் வைத்து வழிபடுகிறோம். ராஜராஜேசுவரியானவள்  கலைமகளும், அலைமகளும் சூழ சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை ஞானக் கண்ணால் காணும் முன்பாக ஊனக் கண்ணாலாவது பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் இவ்வாறு அமைத்துத் தந்தார்கள். அதன் பின்னர், பிற கடவுளர்களின் திருவுருவ பொம்மைகளையும் சேர்த்து வைக்க ஆரம்பித்தனர். 

நாளடைவில் நமது விருப்பத்திற்கேற்றபடி எந்த பொம்மைகளை வேண்டுமானுலும் சேர்த்துக் கொள்வது என்று ஆகி விட்டது. 
குருமார்கள் , அரசியல்  தலைவர்கள்  பொம்மைகளும்  படிகளில் இடம்பெறத் துவங்கிவிட்டன. வித்தியாசம் , அபிமானம் என்ற பெயர்களில் இவை நுழைந்து விட்டதால், முப்பெரும் தேவிகளின் பொம்மைகளைக்  கூட சில வீடுகளில் தேட வேண்டியிருக்கிறது. பிற சமயத்தைச் சேர்ந்தவர்களையும் கொலுவில் வைக்க வேண்டுமா என்று கேட்டால் உங்களுக்குப் பரந்த மனம் இல்லை என்பார்கள். அத்தனை படிகளிலும் ஒரு குருநாதரின் வெவ்வேறு நிலைகளில் உள்ள பொம்மைகளை வைத்து ஒரு கண்காட்சி போல நடத்துகிறார்கள்.


கோயில்களில் வைக்கப்படும் கொலுக்களிலும் அநேகமாக இதே நிலை தான். அதோடு உற்சவர் அம்பிகையை செயற்கைக்  கை-கால்களை வைத்துக் கட்டி அதனை அலங்காரம் என்ற பெயரில் நடத்துகிறார்கள். சிவாலயங்கள் பலவற்றில் சுவாமி- அம்பிகை பற்றிய புராணக் கதைகளை நினைவு படுத்தும் வகையில் அலங்காரங்கள் செய்யலாம். மாறுதலாகச் செய்வதைப் பற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றுதானே என்று வேதாந்தம் பேசுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இக்காலத்தில் யாரையும் எதுவும் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. கேட்டால் நமது மரியாதைதான் கெட்டுப் போகும். பழைய கலாச்சாரங்கள் குறைகிறதே என்று மனதுக்குள்ளே குமுறிக் கொண்டுதான் இருக்க முடிகிறது.


கொலு வைத்த வீடுகளில் காலை நேரத்தில் பெண்மணிகள் அம்பிகைக்கு விளக்கேற்றி , படத்திற்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை குங்குமத்தால் செய்ய வேண்டும் என்றும், பாராயணங்கள் செய்ய வேண்டும் என்றும் பெரியோர்கள் கூறுவர்.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ,  நவராத்திரி நாட்களில் நம்மை அரக்கோணத்திற்கு அருகிலுள்ள திருவாலங்காட்டில் தங்கித்  ,தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்யச் சொன்னார்கள் காஞ்சி மகாபெரியவர்கள் .
கூட்டு சஹஸ்ரநாம பாராயணம் 
நவராத்திரிக்கு வீடுகளுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம்,வளை  கொடுப்பதே முக்கியம். நாளடைவில் அதோடு , பாத்திரங்களையும்,பிளாஸ்டிக் பொருள்களையும் சேர்த்துக் கொடுப்பது என்று ஆகி விட்டது. ஆடம்பரத்தை விட வேண்டும் என்பதை விடப் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்பதையாவது பெண்மணிகள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும். கடைசியில் இதனால் பயன் பெறப் போவது வியாபாரிகள். பாதிக்கப் படப் போவது சுற்றுச் சூழல். நாமாகச் செய்யும் தவறுகளால் பழியானது பண்டிகையின் மீது விழ விடலாமா?