Monday, July 18, 2011

திருமேனி தீண்டுவோரைப் போற்றுவோம்
பெரிய புராணத்தில் பார்த்தால் பல இனத்தவர்கள் நாயன்மார்களாக இருக்கக் காண்கிறோம். அவரவர்கள் தங்கள் குலத் தொழிலைச் செய்துகொண்டு சிவ
பக்திச் சீலர்களாக விளங்கினார்கள். உருத்திர பசுபதி நாயனார் ருத்ர ஜபம் செய்தும், ஆனாய நாயனார் மாடுகளை மேய்த்துக் கொண்டே, குழலோசையில் பஞ்சாக்ஷரத்தை வாசித்தும், திருக்குறிப்புத் தொண்டர் அடியார்களுக்குத் துணிகளைத் தோய்த்துக் கொடுத்தும் , சொன்ன சொல் தவறாத திருநீலகண்டர் அடியார்களுக்கு மண் ஓடு செய்து கொடுத்தும் சிவனருள் பெற்றதைச் சில உதாரணங்களாகக் காட்டலாம். எத்தொழிலைச் செய்தாலும் சங்கரன் தாள் மறவாத சிந்தையோடு வாழ்ந்து காட்டினார்கள். "தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன்" கழலை வணங்குவதே தலையாய செல்வம் என்று உறுதி பூண்ட உத்தமர்கள் அவர்கள்.பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்தால் தான் சமூகம் மதிக்கும் என்ற எண்ணத்தில் எந்த வகையில் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க மக்கள்
இக்காலத்தில் துணிந்துவிட்டார்கள். எந்தத் தொழிலுக்கும் உத்தரவாதம் இல்லாததால் நிலைமைக்கு ஏற்றபடி ஒரு தொழிலில் இருந்து மற்றொரு
தொழிலுக்கு மாறுகிறார்கள். குடும்பத் தொழில்களும் ,முக்கியமாக நமது பண்பாட்டு மையமாகத் திகழும் கலைகளும் நசித்துப் போகும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.விவசாயம் செய்வதிலேயே ஆர்வம குறைந்து அந்த நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்படுவதையும் பார்க்கிறோம்.கிராமங்களை விட்டு மக்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்றுவிட்டு நகரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். இந்தப் பரிதாப நிலையில் கிராமக் கோயில்களில் பணி செய்பவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது. கோயில் நிலங்களை யார் யாரோ அனுபவிக்கிறார்கள்.பிற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. கோயில் குளத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. கிராமக் கோயில்களில் பணியாற்றுபவர்களுக்கோ அரசாங்கம் மிக மிகக் குறைவான சம்பளத்தை அளித்து வருகிறது.மற்றவர்களைப் போலத் தாங்களும் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களின் சந்ததிக்கு ஏற்படுவது இயற்கை.வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஏக்கம் தலை தூக்குகிறது. விலைவாசி ஏற்றம் அவர்களையும் பாதிக்கிறது அல்லவா? நம் குழந்தைகளாவது சிரமப்படாமல் இருக்கட்டும் என்று அவர்களைக் கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் , கிராமக் கோயில்கள் பிற்காலத்தில் பூட்டிக் கிடக்கும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது. சிறிய அளவிலாவது இக்குடும்பங்களுக்கு உதவ வேண்டும். சொந்த கிராமத்தை விட்டுவிட்டு நகரத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவரும் நபர்களுக்கு இரக்க சிந்தனையை இறைவன் தந்தருள வேண்டும்.
இந்த நோக்கத்துடன் , திருவாதிரையான் திருவருட் சபை , அன்பர்கள் ஆதரவுடன் வயதுமுதிர்ந்த சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புத்தாடைகளும் தலா இரண்டாயிரம் பண முடிப்பும் அளித்து கௌரவிக்கிறது. இவ்வகையில் சென்ற ஆண்டு ஒன்பது சிவாச்சாரிய தம்பதிகள் கௌரவிக்கப் பட்டனர்.இந்த ஆண்டு முதல் கட்டமாக , ஐந்து கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் சென்ற ஜூலை நாலாம் தேதி கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திரு நறையூர் சித்தீச்வரம் ஸ்ரீ சித்த நாத சுவாமி ஆலயத்தில் தம்பதிகளாக கௌரவிக்கப்பட்டனர்.இந்தக் கைங்கர்யத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ பஞ்சாபகேசன் தம்பதிகள், ஸ்ரீ கணேஷ், சென்னை ஸ்ரீ வெங்கடேசன் ,கார்த்திகேயன்,திவ்யா ஸ்ரீநிவாசன் , கும்பகோணம் ஸ்ரீ சுவாமிநாதன் மற்றும் பலர் பெரும் கேற்றனர்.அவர்களுக்கு ஸ்ரீ சித்தநாதேஸ்வரரின் அருள் என்றும் துணை நிற்பதாக.வழக்கம்போல்
சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், ருத்ர த்ரிசதி அர்ச்சனை ஆகியவைக்குப் பின்னர் தம்பதி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று மாகேச்வர பூஜையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Friday, July 1, 2011

செல்லாத காசு

நம்மிடம் இருக்கவேண்டிய குணங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டுவந்த நாணயமே (Honesty) நாளடைவில் குறைந்து வரும்போது, உலோகங்களால் செய்யப்பட்டு அரசாங்கம் வெளியிடும் நாணயங்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருவதில் அதிசயம் இல்லைதான். ஜூன் முப்பதுக்கு மேல் இருபத்தைந்து பைசா காசுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டபின், ஒரு ஆங்கில நாளிதழ் , அந்த ஒரு நாணயத்தின் மதிப்பு எப்படியெல்லாம் இருந்தது என்று பட்டியலிட்டுக் கூறியிருக்கிறது. எண்பதுஆண்டுகளுக்கு முன்பு அதைக் கொண்டு ஒரு மூட்டை கோதுமையும், எழுபது ஆண்டுகள் முன்பு ஒன்றரை கிராம் வெள்ளியும் வாங்க முடிந்தது என்கிறார்கள். அதே சமயம், மாத வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இருந்தாலும், இந்த உயர்வு,விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி இல்லை என்பதே வாதம்.எனவே, கையில் எஞ்சியிருந்த பதினொரு ரூபாய் மதிப்புள்ள இருபத்தைந்து பைசா காசுகளை அருகிலிருந்த பொதுத்துறை வங்கியில் மாற்றச்சென்றேன். அதை காஷியர் வாங்க மறுத்ததோடு, ரிசர்வ் வங்கிக்குச் சென்று மாற்றிக்கொள்ளச் சொன்னார். மற்றொருவரோ, அக்காசுகளைக் கோயில் உண்டியலில் போட்டுவிடும்படி பரிந்துரை செய்தார். நானோ, விடாப்பிடியாக அக்காசுகளைச் செல்லும் காசுகளாக மாற்றிக் கோயில் உண்டியலில் போடுவதாகக் கூறினேன். இதைக் கேட்டு மகிழ்ந்த வங்கி ஊழியர் ஒருவர்,தானே அக்காசுகளைப் பெற்றுக்கொண்டு காஷியரிடம் சென்று , மாற்றிக்கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். பதினொரு ரூபாய்க்கு இத்தனைப் போராட்டமா என்று கேட்கலாம். மக்கள் வளைந்து கொடுக்க கொடுக்க, அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய மறுப்பதோடு அலைக்கழிக்கவும் செய்கிறார்கள்.நம்வீடுகளில் இருக்கும் பழைய சுவாமி படங்களை எங்கே கொண்டு வைப்பது என்ற நிலை வரும்போதும், பூஜை செய்யப்பட்ட மண் பிள்ளையார்களை எங்கே விடுவது என்னும்போதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஆலயமே!! அதேபோல செல்லாத காசுகளை யாரும் வாங்க மாட்டார்கள் என்ற நிலையில் கோயில் உண்டியலில் போட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆலய அதிகாரிகள் பாவம். அதை எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கிக்கு அலைய வேண்டியதுதான்.இனிமேல் விஷயத்திற்கு வருவோம். பத்து நாட்களுக்கு முன்பு, பஸ்ஸில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது பக்கத்தில் ஒரு சிவாசாரியார் வந்து அமர்ந்தார். வறுமையில் வாடும் அவரை சமூகம் எப்படி இழிவுபடுத்துகிறது என்பதை அறிய , அவர் சொன்ன தகவலைத் தருகிறேன்:


" நான் பூஜை செய்யும் கோவிலில் எப்போதாவது அர்ச்சனைக்கு கொடுப்பார்கள். தட்சிணையாக இரண்டு ரூபா கொடுப்பது வழக்கம். இருபத்தைந்து காசு செல்லாது என்றவுடன் அர்ச்சனை செய்ய வந்த ஒருவர் அந்த இரண்டு ரூபாய்க்கும் இருபத்தைந்து காசுகளாகவே தட்டில் போட்டார். யாரும் வாங்க மாட்டார்கள் என்றால் கோவில் குருக்களிடம் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எங்கள் நிலை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா?"உண்மைதான். செல்லாக் காசின் புகலிடம் ரிசர்வ் பாங்கா அல்லது கோயில் உண்டியலா என்று நிஜமாகவே புரியவில்லை. வாசி தீரக் காசு வழங்கிய பரமனுக்கே புரியும்.