Sunday, July 28, 2013

ஆலயப் புனிதம் காப்போம்

இறைவன் உறையும் இடம் என்ற எண்ணம் வந்தவுடன் நம்மை அறியாமலேயே கைகள் கூப்பி அஞ்சலி செலுத்தியவாறே ஆலயத்திற்குள் நுழைகிறோம். அதற்கு முன்பாக வெளியில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்கிறோம். சில கோவில்களில் கை-கால்களை நீரால் சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும் வசதியும் இருக்கிறது. பயபக்தி எப்பொழுது குறைகிறதோ அப்போது அலட்சியமும் அகம்பாவமும் தலை தூக்குகின்றன.

பல கோவில்களில் நிர்வாக அலுவலகம் உள்ளே இருக்கிறது. அதில் பணி செய்பவர்கள் அலுவலக வாயில் வரை காலணிகளை அணிந்து செல்கிறார்கள்!இரண்டு சக்கர வாகனங்களும் கூடவே உள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது.கோபுர வாயில் வழியே நுழைந்து, முடிந்த வரையில் உள்ளே செல்லுவதற்கு ஆட்டோக்களும் அனுமதிக்கப் படுகின்றன.சிதம்பரம் போன்ற பெரிய கோவில்களில் ஒரு வீதியிலிருந்து மறு வீதிக்குச் செல்லும் பிற மதத்தினர்கள் கூடத் தங்கள் காலணிகளைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வெளிப் பிராகாரத்தின் வழியாகச் செல்வதைக் காணும் போது, நம்மவர்கள் காலணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் கண்டால்  வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.அன்பர் சிவகுமார் அவர்கள்,  தான் கண்ட காட்சியைப் புகைப்படம் எடுத்து அனுப்பித் தன் ஆதங்கத்தைத்  தெ ரியப்படுத்தி  இருந்தார்கள்.  இதுபோலக் கவலைப் படுபவர்கள் மிகச் சிலரே!

சுத்தம்,சுகாதாரம் பற்றி அக்கறை உள்ளவர்கள் கோவில்களுக்கு உள்ளேயும் வெளியிலும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமே! வழிபாட்டுக்கு உரிய இடம் என்பது ஏனோ பலருக்கு மறந்து விடுகிறது போல் இருக்கிறது. அடிப்படையான பக்தி இல்லாவிட்டால் இப்படித்தான்! எதையும் செய்யத் துணியும் திமிர் வந்துவிடுமோ என்னவோ. கேட்பதற்கு யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் இப்படிப் பல அத்துமீறல்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வெளியிலாவது, மற்றவர்களும் அசுத்தப்படுத்துகிறார்கள் என்றால், உள்ளேசெல்லும் பக்தர்களுமா இப்படி?

ஆலயத்திற்குள் செய்யத்தகாதவை இவை என்று பட்டியலிட்டுப் பல கோவில்களில் பலகை அமைத்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வழிபாட்டை முறைப்படி செய்ய வேண்டியவற்றையே வலியுறுத்துவதாக இருக்கும். நினைக்க முடியாத செயல்களையும் மக்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காததால் பட்டியலில் அவற்றைக் காண முடியாது.

திருவிழாக் காலங்களில் வருபவர்கள் செய்யும் செயல்களை எழுதவே கை கூசுகிறது. உள்ப்ராகாரங்கள் தவறாகப் பயன் படுத்தப் படுகின்றன. அதனால் எழும் துர்நாற்றம் சகிக்க முடியாமல் வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. இதையெல்லாம் கூடவா கண்காணித்துத்  திருத்த வேண்டும்? பஸ் நிலையங்களில் தான் இந்த நிலை என்றால் கோயில்களிலும் கூடவா? மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்த லட்சணத்தில் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் வேறு! முதலில் கோவில்களின் புனிதத்தைக் காக்க முன் வரட்டும். சட்டையைக் கழற்றிவிட்டுப் பயபக்தியுடன் கோவிலுக்குச் செல்லும் மலையாளிகள் எங்கே; நாம் எங்கே! நமக்கு வேண்டியதெல்லாம் உரிமையும் மரியாதையும் மட்டுமே! இப்பொழுது மட்டும் என்னவாம்! நந்தியைக் கட்டிக் கொண்டு ரகசியம் பேசுகிறார்கள்.தாங்களே மாலை அணிவிக்கிறார்கள். தீபம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும்போது தட்டுக் காசு கண்ணை உறுத்துகிறதோ என்று தோன்றுகிறது. தட்டு வருமானம் இல்லாத கோயில்களுக்கு எத்தனை பேர்  போவார்களாம்? பலிபீடத்தில் அகந்தையைப் பலியாக்கிவிட்டு நுழையாதவரை இப்படிதான்.இத்தனைக்கும் மூல காரணம் , ஆலயத்தின் புனிதத்தை நாமும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தான்!  

Saturday, July 13, 2013

மாறாத செல்வம்

என்றைக்குமே மங்காத செல்வமாக மங்கையர் செல்வத்தைக் கருதினார்கள். காரணம், வீட்டின் வளர்ச்சிக்கும்,நாட்டின் வளர்ச்சிக்கும்,சமய மறுமலர்ச்சிக்கும் பெண்கள் ஆற்றிய தொண்டு பற்றியே இக்கருத்து நிலவியது. ரிஷிகள் காலம் தொட்டே , ரிஷிபத்தினிகளுக்கும் இதில் முக்கிய பங்கு இருந்துவந்ததாக அறிகிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரும். பாண்டி மாதேவியும் ஆன மங்கையர்க்கரசி யின் பெருமுயற்சியால் சைவம் திருஞானசம்பந்தர் மூலமாக  மீண்டும் நிலைநிறுத்தப் பட்டது என்பதைப் பெரியபுராணம் மூலம் அறிந்து கொள்கிறோம். எனவே , மங்கையர்க்கரசியாரை, "எங்கள் குல தெய்வம்" என்று போற்றுகிறார் சேக்கிழார்.

இன்றைய நிலையைப் பார்க்கும்போது சற்றுக் கவலை ஏற்படுகிறது. இந்த எந்திர காலத்தில் பஞ்சேந்திரியங்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை! இளம் வயதினர் தான் அதன் வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்றால் வயதானவர்களும் இப்படியா! அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள்ளாக இப்படி ஒரு மாறுதலா!

முன்பெல்லாம் பிரதோஷத்தன்று காப்பரிசியும் கையுமாக நந்தியைச் சுற்றிலும் நின்ற பெண்மணி -களின் கூட்டம்   இப்போது எங்கே போயிற்று? தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் ஜப மாலையும் கையுமாக இருந்த பாட்டிகள் இப்போது எங்கே போனார்கள்? விபூதி ருத்ராக்ஷம் தரித்துக் கொண்டு பூஜை பெட்டியோடுபல ஊர்களுக்கும்  பிரம்மோற்சவ காலங்களில் சென்று, சுவாமி தீர்த்தம் கொடுக்கும் போது, தானும் ஸ்நானம் செய்து ஆனந்தப்பட்ட அன்பு உள்ளங்களைத் தேடினாலும் கிடைப்பது அரிதாக ஆகிவிட்டதே!

தேசாந்திரிகள் முன்பின் தெரியாதவர்கள் எத்தனை பேர் வந்தாலும் முகம் கோணாமல் வரவேற்று அன்னமிட்டு உபசரிக்கும் உயர்ந்த பண்பு ஏன் மறைந்து விட்டது? விலைவாசி ஏறிவிட்டது என்று காரணம் சொல்வார்களா? அக்காலத்தில் வசதி இல்லாதவர்களும் இந்த தர்மத்தைப் பண்ணி வந்தபோது நாம் மட்டும் ஏன் காரணம் கற்பிக்கிறோம்?

காலை- மாலைகளில்  வீட்டு வாசலில் லக்ஷ்மிகளை சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது போய் இப்போது எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது தேவைப் படுவதெல்லாம் சொகுசான வாழ்க்கை மட்டுமே. இதற்கு வயோதிகர்களும் ஏன் பலி ஆக வேண்டும் என்று புரியவில்லை! அறுபது வயதைத் தாண்டிய பிறகாவது கொஞ்சம் விவேகம் ஏற்பட்டால் நல்லது. அந்த வயதிலும் இளம் வயதினருக்கு சமமாகத் தானும் தொலைக் காட்சிக்கு அடிமையாவதைப் பல வீடுகளில் காண்கிறோம்.
மாலை நேரங்களில் நெற்றியில் விபூதி - குங்குமம் தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்தும், சிவாலய தரிசனம் செய்து கொண்டும் வாழ்ந்தது போய், சீரியல்களைத் தினமும் தவறாமல் பார்ப்பவர்களை   என்ன சொல்வது! அந்த வேளையில் சீரியலில் காட்டப் படும் அமங்கலமான நிகழ்ச்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! கோவிலின் சன்னதித் தெரு மற்றும் நான்கு வெளி வீதிகளில் இருப்பவர்களாவது சுவாமி தரிசனத்திற்குச்  செல்லக் கூடாதா?  கோவில்கள் இப்படியா வெறிச்சோடிக் கிடக்க வேண்டும் ?

ஆண் வர்க்கம் பாரம்பர்ய உடைகளைக் கைவிட்டபோதும் பெண் மணிகளில் பலர் அப்படிச் செய்யாமல் இருந்து வந்தனர். தற்போது அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இதையெல்லாம் யார் கேட்க முடியும்? எங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று பதில் வரும். அவரவர்களாகவே சிந்திக்கத் தொடங்கினால் மட்டுமே நல்லது. ஆண் வர்க்கத்தைக் குறிப்பிடும் போது ஆண்கள் என்று மட்டும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெண்களைக் குறிக்கும்போது,      பெண்மணிகள் என்றே சொன்னார்கள். ஆண்மணிகள் என்று யாரும் சொல்வதில்லை. ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பாரத தேசத்தில் ஒரு மணி யாகத் திகழ வேண்டும்.

ஸ்திரீ தர்மம் நிலைக்கும் வரை சனாதன தர்மத்திற்கு ஒரு ஆபத்தும் வந்து விடாது. சக்தியின் அம்சமான அவர்களை நாடு போற்ற வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். சிவனடியார்களே எங்கள் கணவராக வரவேண்டும் என்று பாவை நோன்பு நோற்றார்கள். இந்த வரத்தை எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் கிழக்கே உதித்தால் என்ன அல்லது மேற்கே உதித்தால் என்ன என்கிறார்கள் திருவாசகம் காட்டிய பெண்மணிகள். அதே பாரம்பர்யம் இனியும் தொடர வேண்டும். எக்காலத்தும் இதிலிருந்து மாறாத பெண்மணிகளாகத்  தாய்க்குலம் திகழ்ந்து உலகைக் காக்கவேண்டும் என்று அன்பில் பிரியாத பிராட்டியை ஒரு பாகம் வைத்த அகிலாண்ட நாயகனைப் பிரார்த்திப்போமாக.
   

Tuesday, July 2, 2013

ஏன் இந்தக் காழ்ப்பு உணர்ச்சி ?

இறைவனை "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்று குறிப்பிட்டார்  திருவள்ளுவர். ஒருவகையில் பார்த்தால் இவ்விரண்டுமே பற்று அல்லவா? எனவேதான் "பற்று அற்றான்" என்றும் சுட்டிக்காட்டினார்  வள்ளுவர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நமக்கே அது தெளிவாகத் தெரிகிறது. விருப்பும் வெறுப்பும் கடந்த நிலை நமக்கு வரவில்லை என்பது நன்றாகவே புரிகிறது. கண்டதெல்லாம் நமக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பு எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். விரக்தியோடு பேசுவதெல்லாம் வாயோடு சரி. உள்மனம் அதற்கு நேர் மாறாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

விருப்பே இப்படி இருக்கிறது என்றால் வெறுப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நம் எண்ணமே சரி என்றும் அடுத்தவர்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றும் நினைக்கிறோம். அதற்காக  வெறுப்பை அவர்கள் மீது உமிழவும் தயங்குவதில்லை. "அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல்"  என்று எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர்  சுட்டிக்காட்டியுள்ளார்   பார்த்தீர்களா!

அண்மையில் நடந்த இயற்கைச் சீற்றத்தால் கேதார் நாத்  கோயில்  எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்பதையும் எத்தனையோ யாத்திரீகர்கள் உயிர் இழந்ததையும் இந்நேரத்தில் சிந்திக்க வேண்டுமே தவிர, இன்னாரது கருத்தே சரி என்றும் பிறர் கருத்து தவறு என்றும் வெளிப்படையாகக் கருத்துக் கூறுவது வேதனைக்கு உரியது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வகையில் சமயத்திற்குக் கெட்ட பெயர் வராதபடி கருத்து தெரிவிப்பதில் தவறு இல்லை. பிற சமயத்தவர்கள் ஏளனம் செய்யும் வகையில் தங்களுக்குள் மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது வரையறை மீறக் கூடாது. இப்படிச் செய்தால் என்ன கெட்டுவிடும் என்று பேசும்போது எங்கோ ஒரு ஓரத்தில் நாத்திகம் தொனிக்கத்தானே செய்யும்? இந்தப் பிளவைப் பயன்படுத்திக் கொண்டு, கடவுள் ஏன் காப்பாற்றவில்லை என்று பிறர் ஏளனம் செய்யத் துடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது தானே?

இவ்வளவுக்கும் மீறி கேதார நாதனின் ஆலயம் அதிக பாதிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ஓரளவாவது மனம்  ஆறுதல் அடைய வேண்டிய நிலையில், ஒரு பெண்கள் பத்திரிகையில் வெளி வந்த கேள்வி பதிலில் வித்தியாசமாக பதில் தருவதாக நினைத்துக் கொண்டு, " இயற்கை தெய்வத்தை மட்டும் விட்டு வைத்ததோ" என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இயற்கையை ஆள்பவனே இறைவன் என்று ஏன் இவருக்குப் புரியவில்லை?

நிலைமை இப்படி இருக்கும்போது, வீர சைவம் என்றும் ஸ்மார்த்த வகுப்பினர் என்றும் பாகுபடுத்திக் கொண்டு நடந்த அழிவை ஒதுக்கி வைத்து விட்டு வாதம் செய்வதைக் கண்டால் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் தமிழகத்திலேயே இடிபாடுகளில் சிக்கிச் சீரழியும் புராதன ஆலயங்களைத் திருப்பணி செய்ய முன்வராமல் வறட்டு கொள்கைகள் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த ஒற்றுமை இன்மை தான் பிறர் கையை ஓங்கச்  செய்கிறது. அச்சிறுபாக்கம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடம் போன்ற ஊர் மலைக் கோயில்களின் பக்கத்திலேயே, பிற சமயத்தவர்கள் ஆக்கிரமித்து மலைகளைத் தங்களதாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று ஜூலை 2 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளில் வெளி வந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு காணப்  போகிறார்கள்?

இனிமேலாவது, பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் பூஜை முறைகளை மதித்து , நமது வழிபாடுகளை நியமத்தோடு செய்து வந்தால் அவற்றை இறைவன் ஏற்று அருளுவான் என்பது  நிச்சயம். தேவர்களும் முனிவர்களும் வேதியரும் வணங்கும் உனக்குக் குற்றேவல் செய்ய முனைகின்றேன். பிழை உண்டேல் பொறுத்து அருளுவாயாக என்று பணிவோடு வழிபட்டோமானால், விருப்பும் வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகலுவதைக் கண்டிப்பாகக் காண்போம். வினயத்தையும் நியமத்தையும் நமக்கு அருளுமாறு  முழு முதற் கடவுளான   ஸ்ரீ பரமேச்வரன் அருள் செய்வானாக.