Sunday, October 11, 2020

       தருமபுரம் சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள்  

                                           சிவபாதசேகரன்


தருமபுரம் சுவாமிநாத ஒதுவாமூர்த்திகளைப் பற்றி அறியாத திருமுறை அன்பர்கள் இரார். சிவபெருமான் திருவடிக்கே பதிந்த அன்பு கொண்ட இவர், திருமுறைகள் பால் கொண்டிருந்த அளவிலாப் பேரன்பை நேரில் பார்த்தவர்களே அறிவார்கள்.

தருமபுர ஆதீனத்தின் 24 வது குருமகா சந்நிதானத்திடம் பணிவிடைக்காகச் சேர்ந்த இவரது குரல் வளத்தைக் கண்ட காசிமடத்து அதிபர் காசிவாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள், இவரைத்  தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலையில் பயிலுமாறு பணித்தார்கள். அப்பாடசாலையின் ஆசிரியரான வேலாயுத ஒதுவா மூர்த்திகள் பல மாணாக்கர்களுக்குப் பயிற்றுவித்தவர்கள். அவரிடம் மாணாக்கராகச் சேர்ந்த இவரிடம் 25 வது குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி அவர்கள் மிகுந்த பிரியம் காட்டியதோடு தனது சிவத்தல யாத்திரைகளுக்கு இவரை அழைத்துச் சென்று அங்குள்ள சிவ சன்னதிகளில் தேவாரம் பாடச் செய்து மகிழ்ந்தவர்கள். சென்னையில் ஆதீனப் பிரசார நிலையம் துவங்கியபோது இவரை அங்கே இருத்தி, திருமுறை ஆசிரியராக அமர்த்தினார்கள். அங்கு பணியாற்றிய பின்னர், இவர் தனியாக வசித்து வந்தார். ஆனால் தமிழகக் கோயில்களில் நடைபெறும் வைபவங்களில் திருமுறை விண்ணப்பம் செய்து வந்தார்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சென்னையில் மகாலிங்க புரத்தில் உள்ள சிவாலயத்தில் நடந்த மாதாந்திர வழிபாட்டின்போது முதலாவதாகச் சந்தித்தபோது அப்போது பாடிய தேவாரப் பாடல்கள் மனத்தை ஈர்க்கலாயின. அடுத்த மாத வழிபாடு  நடைபெறும் தேதி, இடம்,நேரம்  ஆகியவற்றை அந்நிகழ்ச்சியில் அறிவிப்பார். அதுமுதல் மாதம்தோறும் அவ்வழிபாட்டில் கலந்து கொண்டு திருமுறையைச் செவி மடுப்பது உறுதி ஆகிவிட்டது.

சென்னை தங்கசாலையில் இருந்த சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை முதல் மாலை வரை இவரைக் கொண்டு பன்னிரு திருமுறை முற்றோதுதல் நடத்தி வந்தார்கள். அதைத் தவறாது கேட்டதால் பண்களுக்கான ராகங்கள் அறிய வந்ததோடு திருமுறைகளின் மீது ஆர்வமும் பக்தியும் பெரிதும் ஏற்பட்டது. தேவாரப் பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என்னைப் போன்றவர்களுக்கு வரப் பிரசாதமாக இது அமைந்தது.

இந்நிகழ்ச்சிகளின் நடுவில் பலப் பல சொந்த அனுபவங்களையும் கூறி அன்பர்களுக்கு சமய நம்பிக்கை வளரச் செய்தார். பாடல்களைப் பொருள் அறியும் வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். சொற்றொடர்கள் பலவற்றைக் கூட்டிப் பொருள் உரைக்கும் திறமை படைத்தவர் இவர். அப்பொருள் நம் மனத்தை நீங்காமல்  செய்வதை ஒரு உதாரணம் மூலம் இங்கு பார்க்கலாம்.

அப்பரடிகளின் “ வாழ்த்த வாயும் “ என்ற பாடல் பிரபலமானது.

“ வாழ்த்தவாயும் நினைக்க மட நெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே.”

என்று அதை முழுதும் பாடிவிட்டுப் பின்னர் பொருள் விளங்கக் கூட்டிப் பாடும்போது ,

“ சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே “ என்று வருவதை, நமக்கு அறிவுரையாக, “ சூழ்த்த மாமலர் தூவித் துதி” என்று பாடி ஒரு சில வினாடிகள் நிறுத்திவிட்டுப் பிறகு, “துதியாதே” என்று சேர்த்துப் பாடுவார்.

 மேலும், தலைவனை என்று வருவதைக் கூட்டிப் பாடும் திறனை,

“ வாழ்த்த வாயும் தந்த தலைவனை; நினைக்க நெஞ்சும் தந்த தலைவனை; தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை; சூழ்த்த மாமலர் தூவித் துதி” எனப் பாடுகையில் , கேட்பவர்கள் பரவசப் படுவர். மக்களிடையே பாடும்போது மட்டுமே இம்முறையைக் கையாளுவார்.  

திருமுறைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும் அதனை வாசிப்பதும்,பூசிப்பதும் நமது கடமை என்றும் அடிக்கடி வலியுறுத்துவார். வீதிகளில் திருமுறையை அலங்காரம் செய்த வண்டியின் பின்னர் திருமுறை பாடிக் கொண்டு செல்லும்போதும் நடுவில் மக்களுக்காக இக்கருத்தைப் பலவிடங்களில் கூறுவார்.

திருமுறைகளால் ஆகாதது எதுவும் இல்லை என்பார். தன்னையே அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுவார். அனுபவத்தைக் கூறுவதால் மக்களின் நம்பிக்கை உறுதிப் படும் என்பது இவரது கருத்து. நேரத்தைத் தவறாது கடைப் பிடிக்கும் வழக்கத்தைத் தருமபுர ஆதீன 24 வது குருமணிகளிடம் தான் நேரில் கண்டதாகக் கூறுவார். இசைக் கச்சேரி செய்யும்போதும் தனக்குக் கொடுக்கப் பட்ட நேரத்தை ஒருபோதும் தாண்டியதில்லை. தான் தருமையாதீன ஞானப் பண்ணையில் வளர்ந்ததை அடிக்கடி நினைவு கூர்ந்ததோடு பல மேடைகளில் சொக்கநாத வெண்பா, சிவபோக சாரப் பாடல்களைப் பாடி, குரு பக்தியை வெளிப் படுத்துவார்.

சென்னையில் வாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆசிரியப் பெருமானை வரவழைத்து மரியாதை  செய்து ஆசி பெறத் தவறியதில்லை. அந்நாளில் ஒரு ஆலய வழிபாட்டையும் நிகழ்ச்சியுடன் இணைத்திருப்பார். ஒரு சமயம், சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்த நிகழ்சசி ஏற்பாடாகியிருந்தது. அன்று காலை ஆசிரியருடன் ஆலய வழிபாடு நடை பெற்றது. வலம் வருகையில் சிவ சன்னதி வந்தபோது ஞானசம்பந்தர் அருளிய “ வீடலாலவாயிலாய்” என்ற பதிகம் முழுவதையும் கௌசிகப் பண்ணில் பாடியபோது அடியார்கள் மட்டுமல்லாமல், ஆசிரியப்பிரானும் முக மலர்ச்சியுடன் கேட்டு மகிழ்ந்தார். அன்று மாலை ஆசிரியருக்கு நடந்த பாராட்டில் இவரது திருமுறைக் கச்சேரி நடைபெற்றது. இடையில் திருச்சிராப்பள்ளி முத்துக் கந்தசுவாமி ஒதுவா மூர்த்திகள் வந்தபோது அவரையும் மேடையில் தன்னுடன் உட்காரவைத்து, ஆசிரியர் மகிழும்படி இருவருமாக, “ மாதர் மடப்பிடியும் “ பாடியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும்  பரவசம் அடைந்தனர்.  

தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலமான திருக்கச்சூரில் ஒருசமயம் மலை மேலுள்ள மருந்தீசர் ஆலயத்தில் குறுகிய காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டியிருந்தது. பொருள் பற்றாக்குறை இருந்தபடியால் தேவார பாராயணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அவ்வாறு விட்டுவிடலாகாது எனக் கருதி, இவரை நேரில் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு திருமுறை விண்ணப்பம் செய்ய வேண்டினோம். முன் பணம் கொடுக்கக் கூட வசதி இல்லை. ஆனால் இவரோ எவ்வளவு சம்பாவனை தருவீர்கள் என்று ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் , வருவதாகக் கூறினார்கள். அதன்படி முதல் நாள் இரவே திருக்கச்சூருக்கு வந்து கும்பாபிஷேகத்தில்  கலந்து கொண்டார். எங்களால் முடிந்த சொற்பத் தொகையை கொடுத்தபோதிலும் அதற்காக வருந்தாமல் சிவத் தொண்டு ஒன்றையே பெரிதாகக் கருதினார்கள்.

மலையம்பாக்கத்தில் தனது தமக்கையாருடன் வசித்து வந்த இவர் பின்னாளில், சேக்கிழாரது அவதார பூமியாகிய குன்றத்தூரில் வசிக்கலானார். அங்கிருந்த சேக்கிழார் கோயில் இவரது முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றுக் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது.

ஆண்டு இறுதியில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றம் நடத்தும் இசை விழாவில் இவரது திருமுறை இசை அரங்கு நடைபெறும். திருமுறை அன்பர்கள் ஏராளமானோர் வருகை தருவதால் அரங்கம் நிரம்பி வழியும். திருமுறை இசை அரங்குகளில் இவரது இசை நிகழ்ச்சிக்கே இவ்வாறு பெருந்திரளான மக்கள் வருவதைக் கண்டிருக்கிறோம். நிகழ்ச்சி நிறைவடைய சில மணித் துளிகளே இருக்கையில் “ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் “ என்று பாடி , வந்தவர்கள் அனைவரையும் அதனைத் திரும்பப் பாட வைப்பார். “ நூற்றுக்கணக்கானோர் இப்போது பஞ்சாக்ஷரம் சொல்கிறீர்கள் . இது கிடைத்தற்கு அரிய பாக்கியம் அல்லவா “ என்று சொல்வார்.

இவரது திருமுறைப் பாடல்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து வெளியிடப் பல நிறுவங்கள் முன்வந்தன. அகில இந்திய வானொலியும், சென்னைத் தொலைக் காட்சி நிலையமும் இவரது நிகழ்ச்சிகளை ஒலி / ஒளி பரப்பின. பல பட்டங்களும் இவரைத் தேடி வந்தன.

இவருக்குச் சென்னை அன்பர்கள் பொற்றாளம் அளிக்கும் விழா நடைபெற்றபோது பலர் புகழ் மாலைகள் சூட்டி மகிழ்ந்தனர். அரசும் இவருக்குக் “கலைமாமணி”  என்ற பட்டமளித்துக்  கௌரவித்தது.

“எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிவாலயத்திற்குச் சென்று நாள் தோறும் பத்துப் பதிகங்கள் பாடிவிடு” என்று காசிவாசி அருள்நந்தி சுவாமிகள் அருளியதை வாழ்நாள் இறுதி வரை கடைப்பிடித்து வந்தார். தனது வாழ் நாளின் இறுதி நாட்களைக் குன்றத்தூரிலே கழித்து வந்ததாக அறிகிறோம்.அவ்வமயம் உடல் நலிவுற்றபோது நேரில் சென்று பார்த்து வந்தது நினைவுக்கு வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 ம் தேதியன்று இவரது பதினோராவது நினைவு தினம். தேவார இசையில் நம்மையும் ஒரு பொருட்டாகச் செலுத்தி, சிவபக்தியைப் பெருகச் செய்த இப்பெருமகனாருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? அவர் காட்டிய நெறி நின்று, திருமுறை ஓதி இறைவனை வழிபடுதலே இந்த ஏகலைவனால்  செய்ய முடிந்த அஞ்சலி.

Wednesday, October 7, 2020

ஆர்வக் கோளாறா அல்லது ஆகம விதி மீறலா ?

   

                                                     சிவபாதசேகரன்


மக்களை ஒன்றிணைத்து உயர் கதி காட்டுவதே இந்து சமயக் கோட்பாடு ஆகும். கடவுள் ஒருவரே என்றும் அவரே பல்வேறு வடிவங்களில் தோன்றி அருளுவதும் தோன்றாமலே துணையாய் நின்று தனது அருவ நிலையை உணர்த்துவதும் இதன் அடிப்படைக் கொள்கைகள் ஆகும்.

வழிபடுவோரின் இஷ்ட தெய்வத்திற்கான உருவில் தோன்றி, அவர்களை  நெறிப்படுத்தும்  அப்பரப்பிரம்மம் , உருவம் கடந்து, பெயரும் கடந்து நின்று  பக்குவ நிலைக்கேற்றபடி அறிவுறுத்துவதை  உணராமலேயே பலரது வாழ்க்கை கழிந்து விடுகிறது.    

எடுத்த எடுப்பிலேயே அருவத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் விளங்காது என்பதால் தாயிற் சிறந்த கருணையோடு நம்மைப் படிப்படியாக மேலே உயர்த்திய பிறகே அத்தத்துவத்தை பரம்பொருள் நமக்கு உணர்த்துகிறது.

குழந்தைக்கு எது பிடிக்கிறதோ அதைப்  பெற்றோர் வாங்கித்தந்து மகிழ்வூட்டுகின்றனர். அது மரத்தாலான பொம்மையாக இருந்தாலும் குழந்தையைப் பொறுத்தவரையில் வடிவமே முக்கியம்.எத்தனை ஆண்டுகள் அப்பொருள் மீதே அக்குழந்தைக்கு ஆசை இருக்க முடியும் ? ஆகவே வேறொன்றை நாடுகிறது. அது வேறு வடிவத்தில் இருந்தாலும் மரத்தால் ஆன வேறொன்று என்று குழந்தை நினைப்பதில்லை. நம்மைத் திருப்திப் படுத்த இறைவன் பல வடிவங்களில் தோன்றினாலும் பரம்பொருள் ஒன்றே எனத் தோன்றுவது ஞானத்தின் மூலமடையப்பெறும்  தெளிவு. “ தேற்றனே, தேற்றத் தெளிவே “ என்கிறது திருவாசகம்.

இத்தனை தெய்வ வடிவங்கள் ஏன் என்று தத்துவமறியாதவர்கள் இன்றளவும் வினா எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் உருவ வழிபாட்டின் அவசியத்தையும் உணர வேண்டும். தங்கத்தை உருக்கிய பிறகே அதை எவ்வடிவத்தில் வார்க்கலாம் என்பது சாத்தியமாகிறது. மனத்தையும்  தங்கம் போலத்தான் உருக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் அது பாறை போலவே நின்று விடும். “ வன்பராய் ஒக்கும் என் சிந்தை “ என்கிறார் மணிவாசகர். ஆகவேதான் “ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக “ வேண்டுவார் அருணகிரிநாதர்.  

பல்வேறு வடிவங்களில் இறைவன் தோன்றினாலும் அந்தந்த உருவங்களுக்கான மூர்த்தி தியானப்படி அவ்வடிவை நமது முன்னோர் கல்லிலும்,மரத்திலும்,உலோகத்திலும் அமைத்துத் தந்தனர். கணபதி வடிவைக் குறிப்பிடுகையில் “ ஐந்து கரத்தனை  ஆனை முகத்தனை , இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை” என்றும் “ “ கைத்தல நிறைகனி” யைக் கொண்டவனாகவும் நமக்கு அடையாளம் காட்டினர்.      “ கணபதியேல்  வயிறு தாரி” என்று விவரிக்கிறது தேவாரம். “ மூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப ..” என்று வடமொழி ஸ்லோகமும் கணேச வடிவைக் காட்டுகிறது.

எப்பொழுதும் குழந்தை வடிவில் காட்சி தரும் கணபதியின் வடிவழகில் மயங்காதார் யார் ? அதிலும் சதுர்த்தி விரதம் இருந்து , தான் மனத்தகத்தில் கண்ட அப்பெருமானைக் கோயிலில் காணச் செல்லும் பக்தனுக்கு அவ்வடிவை வேறு கடவுளாக மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்று உணரும் பக்குவம் ஏற்படாத வரை தனித் தனி உருவங்களாகவே தோற்றமளிக்கவேண்டியது எதிர்பார்ப்பாக ஆகி விடுகிறது.

உள்ளதை உள்ளபடியே தோன்றச் செய்வதோடு அதனைப் பரிமளிக்கச் செய்வதே அலங்காரம் ஆகும். மூலவரையோ  உற்சவரையோ நமது விருப்பத்திற்கேற்ப மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. ஒரு பிள்ளையார் கோவிலில் விநாயக சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து அவர் மடியில் நெட்டியால் ஆன முருகனை ஒரு ஆண்டும், பால கிருஷ்ணனை மற்றொரு ஆண்டும், அத்யந்த பிரபு என்று பாதி ஹனுமாராகச் சித்தரித்து வேறோர் ஆண்டும் அலங்காரம் செய்திருந்தார்கள். அலங்கார விதி என்ற நூலில் இவ்வாறெல்லாம் மூலவரையோ உற்சவரையோ  மாற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறப் பட்டிருந்தும் இது போன்ற விதி மீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பக்தர்களும் வேறு வழியின்றிக் கடந்து செல்கிறார்கள். சிவலிங்கத் திருமேனி உருவாரூபம் ஆனது என்பது தெரிந்தும், பாணத்தில் முகம் வரைகிறார்கள். அதில் பாதி அம்பிகை உருவத்தையும் சேர்த்து வரைந்து அர்த்த நாரீச்வரர் என்று சொல்லுகிறார்கள். நவராத்திரி அலங்காரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அண்மையில் நடந்த சங்கட ஹர சதுர்த்தி நாளன்று சேலம் இரத்தின விநாயகருக்கு வெங்கடேச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு முக நூலில் படமும் வெளியாகி இருந்தது. நெற்றி முழுதும் நாமம் இட்டதோடு பாசாங்குசம் ஏந்திய பின் கரங்களில் சங்கு சக்கரங்களை அமைத்து அலங்காரம் செய்துள்ளனர். கேட்டால் சங்கு பாணிப் பிள்ளையார் என்றும் விகட சக்கர விநாயகர் என்றும் காஞ்சியில் பிள்ளையார் இருப்பதை அறியவில்லையா என்று திருப்பிக் கேட்பார்கள்.

 ஒரு சிவாலயத்தில் மூலஸ்தான அம்பிகைக்கு வெங்கடாசலபதி அலங்காரம் செய்துவிட்டு , துர்வாசருக்கு அவ்வாறு காட்சி அளித்ததாக ஒரு கதையையும் சேர்த்து விடுகிறார்கள். நம்மூரில் எத்தனையோ பாலாஜி மந்திர்கள் உள்ளன. ஒரு வெங்கடேச பக்தன் ஆண்டு முழுதும் அங்கு சென்று பெருமாளை மனம் குளிர வழிபடலாம். மற்ற கோயில்களில் உள்ள மூர்த்தங்களை பெருமாளாக மாற்ற வேண்டிய தேவையே இராது. அப்படிச் செய்தால் அது வருவாய் நோக்கத்தோடுதான் இருக்க முடியும். படிப்படியாக உருவம் கடந்த அருவம் நோக்கிப் பயணப்படும்போது ஒரு உருவத்தை மற்றோர் உருவமாக மாற்றி இன்னும் எத்தனை யுகங்கள் தான் அதே நிலையில் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.