வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் ஏதோ கதை படிப்பவர்களைப்போல அவற்றைப் படிக்கிறார்களோ என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. மிகச் சிலரே தங்களது ஈடுபாட்டைக் காட்டுகின்றனர். பெரும்பாலானோர் படிப்பதே இல்லை என்று கூடத் தோன்றுகிறது. "இவருக்குத் தான் வேலை இல்லை, ஏதாவது எழுதிவிட்டுப் போகட்டும், நமக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது " என்று இருந்து விடுகிறார்கள். படித்தீர்களா என்று நாம் கேட்டால், " ஹி ஹி , படிக்கணும் தான். ஆனால் படிக்கத்தான் நேரமில்லை. நேரம் கிடைத்தால் படிக்கலாம் என்று போல்டரில் போட்டு வைத்திருக்கிறேன் என்கிறார்கள். ஆகையால், இவ்வாறு எழுதுவதால் எந்தப்பலனும் இல்லை என்று ஆகி விட்டது. நிறுத்திவிடலாம் என்றால், ஆர்வத்துடன் படிக்கும் சிலர் அப்படிச் செய்யக் கூடாது என்று அன்போடு தடுத்துவிடுகின்றனர்.
நமது சமயத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் சிலர் செய்யும் கோமாளித்தனமான செய்கைகளைக் கண்டித்து எழுதினால், கூட இருந்து குரல் கொடுப்பவர்களைக் காணோம்! நமக்கு ஏன் வம்பு என்று இருப்பதால் , கேட்ப்பாரில்லாத நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் விஷமிகள் பெருகி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலை எல்லாவற்றிலும் இல்லை. முகநூல் மற்றும் பல சமூகத் தளங்களுக்குச் செல்பவர்களுக்குத் தெரியும். அரசியலும், சினிமாவும் அதில் எவ்வளவு தூரம் ஆக்கிரமிக்கின்றன என்று. சமயம் பற்றிய பதிவுகளைப் படிக்க நேரம் இல்லை என்று சொல்பவர்கள், சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் விவாதிக்கத் தயங்குவதில்லை. யார் எப்படிப் போனால் என்ன என்று அங்கு மட்டும் என் சொல்வதில்லை?
அயல் நாட்டு நிறுவனங்கள் நமது கடவுளர்களின் படங்களைத் தாறுமாறாகப் பயன்படுத்தி அவமதிக்கும்போது கூட மிகச் சிலரே பொங்கி எழுகின்றனர். ஆனால் சினிமாவில் வாய்க்கு வந்தபடி கடவுளைக் கிண்டல் செய்பவர்களைக் கொண்டாடி மகிழ்வதைக் காண்கிறோம். அதேபோல அரசியல் வாதியும் என்ன வேண்டுமானாலும் நம் சமயக் கடவுளை ஏசலாம். அப்படிப்பட்டவர்களைத் தான் நாம் மீண்டும் தேர்ந்து எடுப்போம்.
https://www.youtube.com/watch?v=kd9ia2Bj2nc&authuser=0
https://www.youtube.com/watch?v=kd9ia2Bj2nc
அண்மையில் ஒரு அன்பர் ஒரு திரைப்படப்பாடலில் " ஹர ஹர மகாதேவா " என்ற ஒப்பற்ற நாமம் எப்படிக் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று அந்த வீடியோவை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். மேற்கண்ட லிங்க் மூலம் அதைக் காணலாம்.
தனிப்பட்ட மனிதரை அவமதித்தால் நீதி மன்றம் செல்லத் தயாராக இருப்பவர்கள் இதற்கு மட்டும் செல்லத் தயங்குவதேன்? இப்படி மௌனிகளாக இருப்பதால் இதுபோன்ற கீழ்த்தரமான பாடல்கள் வெளிவர மக்கள் அங்கீகாரம் கொடுப்பது போல இல்லையா?
கடவுளுக்குப் பால் அபிஷேகம் செய்வதற்குப் பதிலாக ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என்றான் ஒரு நடிகன். அவனுக்குக் கண்டனம் தெரிவித்தோர் சிலர் இருந்தாலும் அவனுக்கு மேலும் மேலும் வெற்றிகளை மக்கள் தானே கொடுத்து வருகின்றனர்! அவனது படங்களைப் பார்க்கமாட்டோம் என்று சொல்லத் திராணி இல்லாத ஜன்மங்கள் ஆகி விட்டோம் நாம். கோடி கோடியாகப் பணம் சம்பாதித்தும் ஏழைகளுக்குக் கொடுக்காதவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை இப்படிக் காட்டிக் கொண்டு பிரபலம் அடையப் பார்க்கிறார்கள்.
இந்த நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலம் காலமாகத் தொடரும் சாபக் கேடு இது. மதம் , சமயம்,மொழி என்பவற்றில் பற்றில்லாதவர்களாக இருந்து வருவதால் நம்மைப் பிறர் எளிதாக நகையாடுகிறார்கள். சூடு சொரணை அற்ற நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். இறைவன் ஒருவனே, ஊன் புகுந்து கருத்திருத்திக் கருணையினால் ஆட்கொள்ளவேண்டும். பிறந்த நாள் முதலாகவே, அரன் கழல் நினையாத உணர்சியற்றவர்களாகிய வாழும் நம்மைக் கருகாவூர் எம்பிரான் காத்தருளுவானாக.