Thursday, February 9, 2017

சிவ சொத்து

சிவ சொத்தை அபகரித்தால் குலம் நாசமாகி விடும் என்பதால்,   " சிவ சொத்து குல நாசம் ' என்றார்கள் நமது முன்னோர். அவ்வாறு நாசமாவதைப் பல இடங்களில் கண்டும், சிவாலய சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், அபகரிக்கப்படுவதும் , ஆலயத்திற்குச் செலுத்தவேண்டிய தொகை ஏமாற்றப்படுவதும் தொடர்கின்றன. இவ்வாறு சிவாபராதம் செய்வோர்களை மன்னர்கள் ஆட்சியில் தண்டித்ததாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சியைப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பவர்கள் தவறு செய்வோரைத் தண்டிக்கத் தவறி விடுகின்றனர். அவர்கள் மூலம் அடையவேண்டிய ஆதாயத்தைக் கணக்கில் கொண்டு, காணாதது போலிருந்து விடுகின்றனர். அறநிலையத் துறை அதிகாரிகள் இப்படிப் பாராமுகமாய் இருந்தால் ஏமாற்றுபவர்களைத் தட்டிக் கேட்பதோ, தண்டிப்பதோ யாரால் முடியும்? 

ஓரிரு இடங்களில் கோயில் சொத்துக்கள் மீட்கப்படுவதாகச்  செய்திகள் வந்தும், வர வேண்டிய பாக்கியைப் பார்க்கும்போது மீட்கப்பட்டவை துரும்பு அளவே எனலாம். அதிக பட்சமாகச் சில இடங்களில் கோயில்களுக்குள் குத்தகை மற்றும் வாடகை தர  வேண்டியவர்களின் பெயர்களையும் அவர்கள் தர வேண்டிய தொகையையும் பற்றிய விவரங்களை எழுதி வைத்து விடுகின்றனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. தங்களது பெயர்கள் எல்லோரும் அறியும்படி வெளியானதைப்பற்றிக்  கொஞ்சமும் கவலைப் படாத ஜன்மங்கள் இருப்பதால் தானே கோயில் சொத்துக்கள் பறிபோகின்றன? மீட்கமுடியாத நிலையில் வங்கிகள் கடன் தொகையை வாராக் கடன் என்று சொல்வதைப்போல இதையும் தாரை வார்த்து விடுவார்களோ என்னவோ?

கோயில் சொத்துக்கள் ஒழுங்காகப்பராமரிக்கப்பட்டு வந்தால் உண்டியல்களுக்கோ, உபயதாரர்களுக்கோ, அவசியம் இல்லை. அந்தந்தக் கோயில்கள் தங்கள் வருமானத்திலிருந்தே தேவையான அத்தனை செலவுகளையும் சமாளிக்க முடியும். அந்த நிலைமை வந்தால் தங்களது வருமானம் பறிபோய் விடும் என்ற பயத்தினாலோ என்னவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். ஆலயங்களை ஆட்சி செய்வது மட்டுமே இவர்களுக்கு இலக்காக இருக்கக் கூடாது. அறங்களுக்குப் பாதுகாப்புத் தருவதே குறிக்கோளாக இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் கடமையைச்  செய்யத்தவறும் இலாக்கா எதற்காக அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் குத்தகைக் காரர்களிடம் இருந்தும் அதில் எத்தனை பேர் குத்தகைப் பாக்கியைத் தருகின்றனர்? அப்படி முறையாகச் செலுத்துவோரை அறநிலையத்துறை பாராட்டலாமே. அதனால் மேலும் சிலராவது திருந்த வாய்ப்பு உண்டு அல்லவா?  இந்த நிலை தொடர வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்குமோ என்ற பலமான சந்தேகமே மக்கள் மனதில் ஏற்படுகிறது. 

ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மொத்த குத்தகை பாக்கியையும் வசூலித்துத் தரும் அரசாங்கம் இருந்தால் மட்டுமே கோயில்கள் முன்போல் பொலிவு பெற முடியும். மாறாக, முறைகேடு செய்யும் மையங்களாக அவற்றை ஆக்கி ஆதாயம் தேடினால் ஆலயம் சீரழிவதோடு, திருமூலர் சொன்னதுபோல், மழை பெய்யத் தவறும்; ஆட்சிக்கு ஆபத்து வரும், திருட்டுக்கள் அதிகமாகும். இந்த எச்சரிக்கையை இது வரை நம்பாதவர்கள், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தாவது நம்புவார்களா? 

No comments:

Post a Comment