Tuesday, December 25, 2018

மூர்த்திகள் வெறும் சிலைகள் அல்ல

கண்ணுக்கும் உணர்வுக்கும் எட்டாத பரம்பொருளை நமது ஊனக் கண்களுக்கு முன்னே காட்டி ,அதில் லயிக்க வைத்து, பக்தியை ஊட்டி அதன் பின்பு ஞானத்தையும் வைராக்கியத்தையும் `உணர்த்திப் பக்குவப்படுத்தி, முத்தி நிலைக்கு ஆளாக்கி அருளுவதற்கு உருவ வழிபாடு முதல் படியாக அமைகிறது. அப்படியைத்  தாண்டி ஆத்மானுபவம் பெற்றதும்  நாம் அடுத்த நிலைக்குத் தயாராக வேண்டும். கோயில் கோபுர வாயிலில் உள்ள படியைத் தாண்டி  அடி எடுத்து வைக்கும்போதாவது நமக்கு இந்த எண்ணம் ஏற்படவேண்டும். 

" மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை " என்று திருமூலர் அருளுவது போல்  விக்கிரகத்துள் இருந்து அருள் பாலிக்கும் திருவருளையே சிந்திக்க வேண்டுமே தவிர, அம்மூர்த்தி எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம்  ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் அடுத்த நிலையை எப்படி அடைவது?  கலை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கு அகக் கண்கள் திறப்பதில்லை. பக்தி இல்லாமல் மூர்த்திகளைக் கலைப் பொருளாகவே பார்க்கிறார்கள். அவற்றின் கால ஆராய்ச்சியும், விலை மதிப்புமே அவர்களது கண்களுக்குத் தெரிகின்றன. 

மூர்த்திகளின் அழகைக் கண்டு வியப்பதில் தவறில்லை. கோயில் திருவிழாக்களில் அலங்காரம் செய்து பார்க்கட்டும். தவறில்லை. ஆனால்  அம்மூர்த்திகளைக் கண்டு பக்தி பரவசம் ஏற்பட்டுக் கண்கள் நீர் மல்க, கைகள் உச்சி மேல் கூப்பி நெஞ்சம் உருகாதவரையில் என்ன பயன் விளையும் ? அதேபோல , மூர்த்தியின் கருணையில் நனைந்து, வேதப் பொருளாக விளங்கும் விமலனைக் கண் எதிரில் கண்டு அவன் புகழைப் பாடாமல், வெறும் வாயளவில் வேதத்தையோ, திருமுறை முதலான பாடல்களையோ ஓதுபவர்களும் முதல் நிலையிலேயே நின்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில் சான்னித்தியம் குறையவும் வாய்ப்பு உண்டு. பதிவு செய்யப்பட ஒலி  நாடாக்கள் எழுப்பும் ஒலிக்கும், பெருமானது சன்னதியில் நாம் கரைந்து கரைந்து ஓதுவதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா?

முக்கியமான விஷயத்திற்கு இப்போது வருவோம். மார்கழித் திருவாதிரை யன்று எல்லா உயிர்களும் மழையிலும் பனியிலும் நனைகின்றன. மழையைத் தரும் மேகமாகவும்,துளியில் நின்ற நீராகவும் கருணை பாலிக்கும் கடவுளை த்  தில்லையில் கண்டு ஆனந்த பரவசம் அடையும் வேளையில், கை கூப்பவேண்டிய கரங்கள், கைப்பேசியையும், காமிராவையும் இயக்குகின்றன. அதோடு நில்லாமல் அப்படங்களை வலைத் தளங்களில் பரவச் செய்யத் துடிக்கின்றன. அது மட்டுமா?  " மரகதக் கல் நடராஜர் "  என்று தலைப்பு வேறு கொடுக்கிறார்கள். இதில் பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சிக் காரர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். அது இத்தனை மதிப்புடையது என்று உலகச் சந்தைக்குப் பறை அறிவிக்கிறார்கள். மூர்த்தியின் கால நிர்ணயம் பற்றிக் கலந்துரையாடல்கள் வேறு!  பொறுப்பற்ற ஊடகங்களின் இச் செயல்களால் மூர்த்திகளின்  பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதை ஏன் இவர்கள் உணருவதில்லை? ஒருவேளை உணர்ந்தும், பரபரப்பான செய்திகளை வெளியிட்டால் மக்களின் கவனம் ஈர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள் போல் இருக்கிறது. இதன் மூலம் இவர்களே சந்தைத் தரகர்களாக மாறி விடும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. 

சில ஊர்களில் மூர்த்திகளின் அபிஷேகக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. வரமுடியாதவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பார்க்கலாமே என்ற விளக்கம் வேறு !  பின்னால் அமர்ந்து தரிசிக்க வந்தவர்கள் பார்க்க முடியாத வகையில் வீடியோ காமிராவை  ஸ்டாண்டில் பொருத்துகிறார்கள். வீதி உலா செல்லும் மூர்த்தியின் வெகு அருகில் சென்று முகத்தில் மின்னல் போன்ற ஒளிமிக்க ப்ளாஷ் உபயோகித்துப் படம் பிடிக்கிறார்கள். இதனால் விளையக்கூடும் தீங்குகளைப் பற்றி  எல்லாம் கோயில் நிர்வாகிகளோ, மற்றவர்களோ எண்ணிப்பார்ப்பதில்லை. வெறும் பெயரளவிற்குத்தான் செல் போன்,காமிரா  கோயிலுக்குள் பயன் படுத்தக் கூடாது என்று அறிவிப்புப் பலகையில் எழுதி  வைத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கலைச் செல்வங்களை இழந்தும் நமக்கு இன்னும் புத்தி வரவில்லை. பக்தி ஏற்படாமல், கலைப் பொருளாகக் காண்பதால் ஏற்படும் விபரீதம் இதுவே ஆகும். 

கேரளத்தில் உள்ள குருவாயூரில், கோயிலுக்குள் செல்பவர்களின் உடைமைகள் சோதிக்கப்படுகின்றன. போன், காமிரா போன்றவற்றை வெளியில் உள்ள காப்பகத்தில் வைத்து விட்டுத்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். இம்முறையைத் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களிலாவது பின்பற்றலாமே 

 இங்குதான் பக்தியும், பயமும் போய் மூர்த்திகள் விலை பேசப் படுகின்றனவே !  பக்தியையும் ஒழுக்கத்தையும்  உண்டாக்கத்தான்  ஞான நூல்களும்,நீதி நூல்களும் இயற்றினார்கள். அவற்றைப் படிக்கத் தவறிய மக்களை நல்வழிப்படுத்துவோர் ஒரு சிலரே. ஊர் ஊராக- கிராமம்-கிராமமாகக் கால் நடையாகச் சென்று மக்களுக்குப்  பக்தியை உண்டாக்குபவர்கள் வராதவரையில், கோயில்கள் காட்சிக் கூடங்களாகவும், மூர்த்திகள் வெறும் கல்லாலும் உலோகத்தாலும் செய்த சிலைகளாகவுமே பாமர மக்களுக்குத் தோற்றம்  அளிக்கும்.