Wednesday, June 12, 2013

சுய நலம்

சுய நலம் என்பது தேவர்களையும் விட்டுவைக்காது போலிருக்கிறது. இமையோர்கள் சிவபெருமானை ஏன் பரவுகிறார்கள் என்பதற்குத் திருவாசகம் தரும் விளக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது. அப்படி வழிபட்டால் எல்லோரும் நம்மையும் வழிபடுவார்கள் என்பதற்காகத்தான் என்பதே அந்த விளக்கம். அவ்வாறு, தம்மை எல்லோரும் தொழ வேண்டும்  என்ற சுய நல நோக்கோடு இமையோர்கள் இறைவனைப் பரவுகிறார்களாம். ஆனால் நமது சுயநலமோ பெரும்பாலும் பொருளாசையை முன்னிட்டே வருவது. பிற தருணங்களில் அது, புகழ், பதவி ஆகியவற்றில் நாட்டம் கொண்டும் வரும். இப்படி இருக்கும்போது, பிறர் நலனைப் பற்றி யோசிப்பவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

"பேராசையாம் இந்தப் பிண்டம் " என்றார்  மாணிக்கவாசகர். ஒரு அறைக்கு ஒரு மின்விசிறி என்று ஆசைப்பட்டது போக, இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு தொலைக் காட்சிப் பெட்டியும், தொலைபேசியும், குளிரூட்டும் சாதனமும் தேவை என்கிற காலம் ஆகிவிட்டது. வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கை பேசி வேறு ! வீட்டில் ஒரு சைக்கிள் இருந்ததுபோய், மோட்டார் சைக்கிளோ, காரோ  வாங்குகிறார்கள். இரண்டு தெரு தள்ளியிருக்கும் பள்ளிக்கூடத்திற்குச்  செல்ல  குழந்தைகள் நடந்து செல்வதில்லை!

இந்தச் சூழ்நிலையில், நாமும் பிறர் போல் வசதியுடன்(செல்வச் செழிப்புடன்!) வாழ வேண்டும் என்ற எண்ணம் யாரையும் விட்டு வைக்க வில்லை. அதற்காகத் தங்கள் பாரம்பர்யத்தையும் துறக்கத் துணிந்து விட்டார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர்கள் இவ்வாறு தாவுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே கேள்வி.

சமுதாயத்தில் நமது அந்தஸ்து எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கஷ்டப்பட்டாமல் சம்பாதிப்பது எப்படி என்றும் யோசிக்கத் துவங்கிவிட்டார்கள். இன்னின்ன தொழில் செய்தாலே கெளரவம் என்ற எண்ணமும்  தலை தூக்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாரம்பர்யத் தொழில்கள்/கடமைகள் பாதிக்கப் படத் தான் செய்கின்றன. எல்லாம் எமக்கே பெற வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டுவிட்ட படியால்  பிறரது துயரங்களைத் துடைப்போரைத் தேட வேண்டியிருக்கிறது. சிலர் வாய்ப்பேச்சால் மட்டும் ஆறுதல் கூறுகின்றனர். மற்றும் சிலர் தங்களது எழுத்து ஆற்றலால் ! பாதிக்கப்பட்டவர்களிடம் உதவி போய்ச்  சேரும்வரையில் இப்பேச்சுக்களாலோ, எழுத்துக்களாலோ எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

வீட்டுக் கல்யாணங்களில் பல லக்ஷங்கள் புரள்கின்றன. எத்தனை எத்தனை விதமான ஆடம்பரச் செலவுகள்!! அதில் ஒரு சதவீதத்தையாவது வறுமைக்கோட்டுக்குக் கீழ் கிராமங்களில் பரிதாப வாழ்க்கை நடத்தும் ஆலய சிப்பந்திகளுக்கு அளிக்க முன்வருகிறோமா என்று கேட்டால்  இல்லை என்ற பதிலையே கேட்கமுடிகிறது. அவர்களது  ஏழ்மைநிலை தொடரும்போது உதவ முன்வராதவர்கள் ,வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் ஊரைவிட்டே வெளியேறும்போது குறை கூற மட்டும் தயங்குவதில்லை. என்றோ ஒருநாள் வரும் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதால் தரப்படும் சம்பாவனையை வைத்துக் கொண்டு எவ்வளவு நாள் தள்ள முடியும்? கிராம வாசிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காலம் தள்ளலாம் என்ற நிலையில், கிராமவாசிகள்  நமக்கென்ன என்று இருந்தால் என்ன செய்வது? நகரங்களுக்குக் குடியேறியவர்களும், சொந்த ஊரைப் பற்றிக் கவலைப்படாத போது, ஆலய சிப்பந்திகளுக்கு யார் தான் உதவுகிறார்கள்?

ஆலய சுற்றுலா பயணிகளும், இடையில் வரும் கிராமக் கோயில்களையும் தரிசிக்க வேண்டும். வசதிபடைத்த கோயில்களில் உண்டியல்கள் நிரம்பி வழியும் போது அற நிலையத்துறையே இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வரலாம் அல்லவா? அதுவும் நடக்காமல் இருப்பது ஆதங்கமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலாவது, சிவதர்மத்திற்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொண்டு அவ்வப்போது நம்மால் முடிந்ததை அதில் சேகரித்து வைத்து, அதனை, கிராமக் கோயில்களுக்கு அளிக்க முன்வரலாமே!கருணை உள்ளம்  இருந்தால் எத்தனையோ வழிகளில் இப்படி உதவ முடியும். நமது நெஞ்சமாகிய கல் கரைந்து உருக அப்பரமனே அருள வேண்டும். இப்படிச் சொல்வதால் எல்லோரும் கல் நெஞ்சக்காரர்கள் என்பது அர்த்தம் அல்ல. சொல்லித் திருத்துவது என்பது மிகவும் கடினமாகிவிட்ட இக்காலத்தில், நம்மால் சிலவற்றை நினைவு படுத்தத் தான் முடியும். "Willing to hit, unwilling to hurt" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனவே, யாரையும் குறைகூறுவதோ,மனத்தைப் புண் படுத்துவதோ நமது நோக்கம் அல்ல. மனத்தைப் பண் படுத்துவது ஒன்றே நமது குறிக்கோள்.

நாயன்மார்களில் பலர்  அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதை ஒரு நியமமாகவே கொண்டிருந்ததைப்  பெரியபுராணம் காட்டுகிறது. இந்த மண்ணில் நாம் பிறந்ததன் பலன் சிவனடியார்களுக்கு அன்னம்பாலிப்பதும், சிவாலயத் திருவிழாக்களைக் காண்பதும் தான் என்று சேக்கிழார் பெருமான் அருளுவதைக் காண்போம்:

"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்..."

என்பது அவரது வாக்கு. அது தெய்வ வாக்காதலால் அவரும் தெய்வச் சேக்கிழார் எனப்படுகிறார்.  அவரது குருபூஜைதிருநாளாகிய இன்று (வைகாசிப் பூசம்) நலிவுற்றோருக்கு உதவுவதை முடிந்த வரையிலாவது செய்வதே அவரை உண்மையாகப் போற்றும் செயல் ஆகும். இது வரையில் செய்யாவிட்டாலும் இனிமேலாவது செய்யலாம் அல்லவா? செய்துபார்த்தால் தெரியும், நமது சுயநலம் எவ்வளவு தூரம் நம்மைவிட்டு விலகுகிறது என்று.