Saturday, October 26, 2019

ஆசிச் செய்தியோடு நிறுத்திக் கொள்வதா ?

கிராமங்களின் இன்றைய நிலை
தீபாவளித் திருநாள் வந்துவிட்டால் வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மடாதிபதிகளின் ஆசிச் செய்திகளை ஒலி / ஒளி பரப்புவது என்பது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. சற்றுக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். ஆண்டுதோறும் இந்த ஆசிச் செய்திகளில் நரகாசுரன் கதை , எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை உடுத்தல், பட்டாசு வெடித்தல், இனிப்புப் பலகாரங்கள் உண்ணுதல் ஆகியவற்றோடு தீயன கழித்தல், நல்லன பெற வேண்டுதல் ஆகிய கருத்துக்கள் திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றன. இவை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இவை எல்லாம் மக்கள் செவியில் எவ்வளவு தூரம் ஏறிப் பயன் விளைவிக்கின்றன என்றுதான் தெரியவில்லை. காலையில் தீபாவளி ஆனவுடன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே வானொலியிலும் தொலைக் காட்சியிலும் இவற்றைக் கேட்கும்போது, அப்பலகாரங்கள் வயிற்றுக்குள் சென்று கரைவதற்குள் ஆசிச் செய்திகளும் கரைந்து போய் விடுகின்றனவோ என்று தோன்றுகிறது. நல்லுபதேசங்கள் வீணாகப் போக  விடலாமா ?

இன்றைய கால கட்டத்தில் மடாலயங்கள் ஆசிச் செய்தி வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்பது கேள்வி. களப்பணி ஆற்றுவதற்கு யார் தான் முன்னோடியாக நின்று மக்களுக்கு வழி காட்ட முடியும் ? பெரிய நகரங்களுக்கு விஜயம் செய்வதால் ஆதாயம் இருக்கக்கூடும். அதை இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அதே சமயத்தில் மக்களிடையே ஏற்படும் கலாசாரச் சீரழிவுக்கு யார் பொறுப்பேற்பது? கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டால் மட்டும் போதாது. மற்ற நாட்களில் மக்கள் திசை மாறிச் செல்வதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா ?

நாட்டின் நிர்வாகம் மக்கள் கையில் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு தேர்தலை நோக்கியே காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதற்காகக் கவலைப் படப் போவதில்லை. ஒருவேளை அவர்களில் ஒரு சாரார் கவலைப்பட்டால் எதிர் தரப்பினர் மக்களைத் தன் பக்கம் ஈர்த்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஆகவே அரசும் நீதி மன்றங்களும் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யத் தயாராக இல்லை. ஆகவே மக்களை நெறிப்படுத்தும் முக்கிய பொறுப்பை மடாதிபதிகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆனால் நடப்பது என்ன ? மடத்துப் பூஜை, நிர்வாகம், பெரிய மனிதர்களை சந்தித்தல், அவ்வப்போது நூல் வெளியீடு செய்தல், பிரபலங்களை மடத்து விழாக்களுக்கு அழைத்தல், கல்விக் கூடங்கள் அமைத்தல் , தங்களது நிர்வாகத்தில் உள்ள கோயில்களுக்கே சௌகரியப்பட்டபோது திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தல் – இதைத்தானே பார்க்கிறோம். நமது கிராமங்களுக்கு விஜயம் செய்து இரண்டு நாட்களாவது தங்கி அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்து அவர்களைத் திசை மாறாமல் இருக்கச் செய்யலாம் அல்லவா ? சின்னஞ்சிறு கிராமங்களின் இன்றைய நிலையைப் பார்த்தவர்களுக்கே தெரியும். பூட்டிக் கிடக்கும் கோயில்களும், தினசரி வழிபாட்டின் முக்கியத்துவம் தெரியாத மக்களும் , திசை மாறிய மக்களும், அவர்களின் அடையாளச் சின்னங்களுமே எஞ்சி நிற்கின்றன என்பதை .  இவற்றிற்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வெளியேறுபவர்களைப் பற்றிக் கவலைப் படுபவர்களே இல்லையே !

மடாதிபதிகள் கால் நடையாகத் தங்கள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அங்குள்ள கோயில்களையும் தரிசித்துத்  தேவையான பணிகளை மேற்கொள்ளச் செய்வது அப்போது எளிதில் சாத்தியமாகிறது. நித்திய பூஜைகளையும் அங்கிருந்தே செய்யலாம் . இவ்வாறு பல மடாதிபதிகள் முன்பெல்லாம் செய்ததாக நாம் அறிகிறோம்.  இப்போது அவ்வாறு பின்பற்றப்படாமைக்குக் காரணம் புலப்படவில்லை. தங்களது மாதாந்திர ஜன்ம நக்ஷத்திரத்தன்றாவது நேரிடையாக ஒரு ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வதோடு அவ்வூர் மக்களுக்கும் தினசரி வழிபாட்டின் முக்கியத்தை எடுத்துரைக்கலாம். மற்ற நாட்களில்  மடத்தில் உள்ள சிப்பந்திகளோ, தம்பிரான்களோ அருகாமையில் உள்ள கிராமக் கோயில்களுக்குச் சென்று ஊர் மக்களை ஈடுபடச் செய்யலாம். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளுக்கும் நடந்து சென்று மக்களைச் சந்தித்து நம் கலாசாரம் மேலும் சீரடையச் செய்யலாம். திருக்குளப்பராமரிப்பு , கால்நடைப் பராமரிப்பு ஆகியவை பற்றி எடுத்துச் சொன்னால் மக்கள் நிச்சயம் வரவேற்பர். மறுமுறை அங்கு சென்றால் மாற்றத்தைக் காண வேண்டும். அதற்கான இலக்கையும் நிர்ணயிக்கலாம்.

இப்படி எழுதுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறோமே, அவையெல்லாம் கண்ணில் படவில்லையா என்று கேட்பார்கள். என்ன செய்வது ? அவையெல்லாம் இன்று பாமர மக்களை விழிப்படையச் செய்யவில்லையே ! இந்த ஆதங்கமே இவ்வாறு எழுதத் தூண்டியதே தவிர நமக்கு எந்த ஒரு ஸ்தாபனத்தையும் குறை கூறும் நோக்கம் இல்லை. அவ்வாறு குறை கூறி ஆகப்போவதும் ஏதும் இல்லை. சுவாமி பார்த்துப்பார் என்று கைகளைக் கட்டிக் கொண்டிருக்கவும்  நம்மால் முடியவில்லை ! உண்மையாகவே சுவாமிதான் அருளவேண்டும்.

Saturday, October 19, 2019

நல்லனவும் தீயனவும்


உலகத்தில் எல்லோரும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்லவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ வாழ்கிறார்கள். இதில் வீட்டில் இளமைக்கால வளர்ப்பு மிகவும் முக்கியமானது என்றாலும் தீயவர் சேர்க்கை அந்த நற்பண்புகளை முழுவதும் அழித்து விடுகிறது. அவ்வாறு சேராதபடி இளமையில் பெற்றோர்களின் வளர்ப்பும் ஆசிரியர்களின் கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் மீறித் தீய நண்பர்களது பொல்லாத நட்பால் பாதிக்கப்படுபவர் பலர். எனவே “ நல்லார் இணக்கம் “ மிகவும் முக்கியம் என்றார்கள் பெரியோர்கள். நல்லவர்களோடு இணைந்தால் அவர்களது நற்பண்புகள் நமக்கும் வந்துவிடும். அதனால் தீய செயல்களைச் செய்ய மனம் வராது. தீயோரைக் கண்டால் தூர விலகும் பக்குவமும் ஏற்பட்டுவிடும்.

பிறர் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரது பங்களிப்பு தேவைப்படுகிறது. அதுவே நாளடைவில் ஆறறிவற்ற விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும் அன்பு செலுத்த ஏதுவாகிறது. அப்படிப்பட்டவர்கள் தாவரங்களுக்கோ அல்லது விலங்கு, மற்றும் பறவை இனங்களுக்கோ ஒரு தீங்கு நேர்ந்தால் பதைத்து விடுவார்கள். எஜமான விசுவாசம் என்பதன் இலக்கணத்தையே நாய் மூலம் நன்கு கற்றுக் கொள்ள முடியும். தன் உயிரையே பணயம் வைத்துத் தன் எஜமானரது குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் இனத்தைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.

அண்மையில் வட இந்தியாவில் ஒரித்தில்  இரண்டு பசுக்கள் சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவன் ( அவன் மேய்ப்பவனோ அல்லது உரிமையாளனோ என்பதை நாம் அறியோம்) அவற்றின் உடல்கள் மீது விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுததைச்  சமூக வலைத்தளத்தில் பார்த்தபோது நெஞ்சைப் பிழிந்தது. சொந்த பந்தங்களை இழந்தவனைப் போல அப்பசுக்களது இறந்து கிடந்த உடல்களைப் பார்த்து அவன் கதறியது, கல்நெஞ்சத்தையும் கலங்கச் செய்யும்.

சமீபத்திய மற்றோர் நிகழ்ச்சி:  மும்பை புறநகர்ப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக அங்கிருந்த மரங்களை அதிகாரிகள் வெட்ட முற்பட்டபோது மக்கள் எதிர்ப்புக் குரல் தந்தனர். அதிலும் சில தாவர  ஆர்வலர்களோ , அவை வெட்டப்பட்டுக் கிடந்த போது அந்த வெட்டுண்ட மரங்களின் மீது கதறி அழுததைப் புகைப்படங்களில் கண்டபோது மனித நேயம் என்பது மனிதர்களுக்குள் மட்டும் அல்ல. அதற்கு அப்பாலும் இருக்கும் என்பதை உணர முடிகிறது.  

நல்ல பண்போடு வாழ எது தேவைப்படுகிறது என்பதை விளக்க வந்த திருவள்ளுவர்,

“ அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு “   என்று அருளினார்.

பிறரிடத்து அன்பு செலுத்துவதும், நல்லகுடியில் பிறத்தலும் ஒருவனை நல்வழிப்படுத்தும் சாதனங்களாக்கிவிடுகின்றன என்பது தெய்வப்புலவரின் கருத்தாவதைக் காண்க.

அஷ்டாவக்கிர முனிவர் தன்  தாயின் வயிற்றில் இருந்தபோதே, தந்தையானவர் மாணாக்கர்களுக்கு வேதம் கற்றுக் கொடுப்பதைக் கேட்டே முழுதும் கற்றுணர்ந்தார் என்று அறிகிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளைப் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறு தோத்திரங்களைக் கற்றுக் கொடுப்பது, ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் செல்வது போன்றவற்றை குழந்தையின் இரண்டு அல்லது மூன்று வயதிலிருந்தே மேற்கொள்ளலாம்.

 மூன்றே வயது பாலகனான ஞானசம்பந்தக்குழந்தை தந்தையாருடன் சீர்காழிக் கோயிலுக்குச் சென்றபோது ஞானம் பெற்றதைப் பெரிய புராணம் அறிவிக்கிறது. அத்தெய்வக் குழந்தையைத் தோளில் வைத்தபடி தந்தையார் சிவத்தல யாத்திரை சென்றார் என்றும் சேக்கிழார் காட்டுகிறார். 

குழந்தைக்கு ஐந்தாண்டு முடிவதற்குள் அதற்கு நல்வழிகாட்டுவதைப் பெற்றோர்கள்  இன்றியமையாததாகக் கருத வேண்டும். காலம் கடந்தால் அதற்குப் பிறகு செய்யப்படும் முயற்சிகள் அத்தனையும் வீணாகி விடும்.

சமீபத்தில் ஓரிடத்திற்குப் பயணம் செய்யும்போது அருகிலிருந்த நான்கு வயதுக் குழந்தை அழகாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஆம்புலன்ஸ் அலறும் ஓசை கேட்டது. பயணிகள் அனைவரும் சலனம் இல்லாமல் இருந்தபோது, சற்றும் எதிர்பாராதபடி அந்தக் குழந்தை, “ அம்மாச்சி, காப்பாத்து “ என்றது. அப்போதுதான் தோன்றியது, அந்தக் குழந்தைக்கு இருக்கும் இரக்க சுபாவம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று. அதே சமயத்தில் அந்தக் குணத்தை அக்குழந்தைக்குப் பதிய வைத்த அதன் பெற்றோரை மனதாரப் பாராட்டினோம். உயிருக்கு ஊசலாடும் நிலையில் யாராவது இருந்தாலும் இரக்கப்படாத காலம் இது. அதற்கு முக்கியமான காரணம் தவறான வளர்ப்பும் வழிகாட்டுதலுமே.

ஒருவரை ஒருவர் இகழ்வதையும், பொறாமைப்படுவதையும், பஞ்சமா பாதகங்களையும் செய்யத் தயங்காத மிருகங்கள் ஆகப் பலர் மாறி  விடுவதையும் அறியும்போது நமது நற் பண்புகள் எல்லாவற்றையும்  கடந்த ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது. கள்ளம் கபடம் அதிகம் இல்லாமல் இருந்த நாடு குட்டிச்சுவராகப் போய் விட்டதே ! பணம் ஈட்டுவது என்பது போய் பணம் சுருட்டுவது என்று ஆகி விட்ட பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?  ஏதும் அறியாப்பருவத்தில்- கள்ளம் ,கபடம் என்றால் என்னவென்றே அறியாத இருந்த பிஞ்சு நெஞ்சங்கள் நாளடைவில் நஞ்சு வார்க்கப்பட்டு நாசமாவதைக் காணும்போது இந்த மனித உடலின் வளர்ச்சி இதற்காகவா என்று தோன்றுகிறது. இதைக் கண்டு சகிக்காத கவிஞர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பாடினார்,

“ பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா .” என்று. அது நூற்றுக்கு நூறு சரி தானே !  

Sunday, October 6, 2019

அலங்காரச் சர்ச்சை


மரபு  வழி அலங்காரம் 
நம் வீடுகள் ஆகட்டும், கோயில்கள் ஆகட்டும், விழாக் காலம் என்று வந்துவிட்டால் தோன்றியபடிஎல்லாம் அலங்காரம்,பூஜை செய்வது என்று ஆகி விட்டபடியால் எதையும் பற்றி நாம் இங்கு கருத்துக் கூறத் தயாராக இல்லை. மரபு ,விதிமுறைகள் என்று சிலர் எடுத்துக் காட்டினாலும் வேறு பிரமாணங்கள் இருப்பதாகக் கூறித் தாம் செய்வதை நியாயப்படுத்துவோரும் இருப்பதால், நாம் இதில் தலையிட்டால் ஆகப்போவது எதுவும் இல்லை. நம்முடைய ஆதங்கம் நம்மோடு இருந்து விட்டுப் போகட்டும். யாரையும் குற்றம் கூறித் திருத்துவது நம்முடைய வேலையும் அல்ல. அதற்கு நாம் யார் ? 

சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற வாதப் பிரதிவாதங்களைக் காண நேரிடுகிறது. அதில் நமக்குத் தோன்றிய கருத்தைப் பதிவு செய்தால் தேவையற்ற பதிவு என்று பதில் வருகிறது. சொந்த விஷயங்களைப் பகிர்வது என்பது எவ்வளவு தூரம் முறையானது என்று தெரியவில்லை. தங்கள் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், தாங்கள் வாங்கிய வாகனத்தோடு நிற்கும் புகைப்படங்கள், திரை அரங்கு வாயிலில் நிற்கும் செல்பிக்கள் போன்றவற்றைத் தங்களது உற்றார் உறவினரோடு மட்டும் பகிரலாமே ! ஊரறியப் பகிரவேண்டுமா? அப்படிச் செய்யும்போது கருத்துக்கள் பரிமாறப்படுவது தவிர்க்க முடியாதது.

கோயில்களிலும் அநேகமாக இதே நிலைதான். விழாக் காலங்களில் உற்சவர்களுக்குக் கை,கால் வைத்துக் கட்டி அலங்காரம் செய்தது போக மூலவரையே வேறு தெய்வ வடிவமாக மாற்றுகிறார்கள். இதற்குப் பெயர் ஆர்வக் கோளாறு என்று சிலரும், அதிகப்பிரசிங்கித்தனம் என்று சிலரும், தனது அலங்காரம் செய்யும் திறனை வெளிப்படுத்திக் கொள்ளும் செயல் என்று சிலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரே பிரம்மத்தின் பல்வேறு வடிவங்கள் தானே என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு.


அம்பிகைக்கு மரபு மாறாத அலங்காரம் 
 மாற்றப்பட்ட அலங்காரத்துடன்  

நவராத்திரி பத்து தினங்களும் உற்சவருக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்கிறார்கள். பெண் தெய்வத்தை ஆண் தெய்வமாகவும் அலங்கரிக்கிறார்கள். மூலவரையே இவ்வாறு மாற்றத் துணிந்தபின் உற்சவர் பற்றிக் கேட்பானேன் ! கேட்டால் எல்லாம் ஒன்று தானே என்று விளக்கம் வரும்.

எது சரி என்று நாம் சர்ச்சை செய்ய விரும்பவில்லை. அதற்காக இப்படியே தொடர்ந்தால் நமக்குள்ளேயே கருத்து பேதங்கள் வளர வாய்ப்பு உண்டு. கருத்து ஒற்றுமை ஏற்படவேண்டிய காலம் இது. நமது வேற்றுமையைப் பிறர் எள்ளி நகையாடுவதோடு தமக்குச் சாதகமாக்கிக் கொள்வர். எனவே இதற்கு ஒரு தீர்வை ஆகம வல்லுனர்கள் ஆராய்ந்து விரைவாக முடிவெடுக்கவேண்டும். சில கும்பாபிஷேக யாகசாலைகளில் சுமார் ஐந்து அல்லது ஆறடி உயரத்திற்குச் அலங்காரம் செய்யப்பட நெட்டி  பொம்மைகள் வைத்திருப்பார்கள். கும்பாபிஷேகத்திற்கு வருவோர் அத்தெய்வ வடிவங்கள்  பல்வேறு அலங்காரங்களோடு காட்சியளிப்பது மக்களைப் பரவசப்படுத்தும். அதேபோல பொம்மைகள் தயாரித்து கோயில் கொலுக்களில் வைத்தால் உற்சவ மற்றும் மூலஸ்தான அம்பிகையின்  இயற்கையான வடிவை மாற்ற வேண்டிய அவசியம் இராது. எல்லோரையும் ஓரளவு திருப்திப் படுத்தும் வழியாக இது அமையக் கூடும். ஆகம சீலர்களே இதுபற்றி முடிவெடுத்தல்  நல்லது . எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்குப் பரிபூரண சுதந்திரம் உண்டு என்று சொல்லப்படுவதால் இங்கு எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று நன்கு தெரிந்தும் எழுத வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு சிலராவது சிந்திக்கத் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்படி எழுதத் தூண்டுகிறது. அதேநேரத்தில் இதை மேற்கொண்டு சர்ச்சைக்குரியதாகவும் ஆக்க விரும்பவில்லை.