Saturday, October 26, 2019

ஆசிச் செய்தியோடு நிறுத்திக் கொள்வதா ?

கிராமங்களின் இன்றைய நிலை
தீபாவளித் திருநாள் வந்துவிட்டால் வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மடாதிபதிகளின் ஆசிச் செய்திகளை ஒலி / ஒளி பரப்புவது என்பது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. சற்றுக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். ஆண்டுதோறும் இந்த ஆசிச் செய்திகளில் நரகாசுரன் கதை , எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை உடுத்தல், பட்டாசு வெடித்தல், இனிப்புப் பலகாரங்கள் உண்ணுதல் ஆகியவற்றோடு தீயன கழித்தல், நல்லன பெற வேண்டுதல் ஆகிய கருத்துக்கள் திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றன. இவை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இவை எல்லாம் மக்கள் செவியில் எவ்வளவு தூரம் ஏறிப் பயன் விளைவிக்கின்றன என்றுதான் தெரியவில்லை. காலையில் தீபாவளி ஆனவுடன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே வானொலியிலும் தொலைக் காட்சியிலும் இவற்றைக் கேட்கும்போது, அப்பலகாரங்கள் வயிற்றுக்குள் சென்று கரைவதற்குள் ஆசிச் செய்திகளும் கரைந்து போய் விடுகின்றனவோ என்று தோன்றுகிறது. நல்லுபதேசங்கள் வீணாகப் போக  விடலாமா ?

இன்றைய கால கட்டத்தில் மடாலயங்கள் ஆசிச் செய்தி வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்பது கேள்வி. களப்பணி ஆற்றுவதற்கு யார் தான் முன்னோடியாக நின்று மக்களுக்கு வழி காட்ட முடியும் ? பெரிய நகரங்களுக்கு விஜயம் செய்வதால் ஆதாயம் இருக்கக்கூடும். அதை இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அதே சமயத்தில் மக்களிடையே ஏற்படும் கலாசாரச் சீரழிவுக்கு யார் பொறுப்பேற்பது? கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டால் மட்டும் போதாது. மற்ற நாட்களில் மக்கள் திசை மாறிச் செல்வதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா ?

நாட்டின் நிர்வாகம் மக்கள் கையில் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு தேர்தலை நோக்கியே காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதற்காகக் கவலைப் படப் போவதில்லை. ஒருவேளை அவர்களில் ஒரு சாரார் கவலைப்பட்டால் எதிர் தரப்பினர் மக்களைத் தன் பக்கம் ஈர்த்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஆகவே அரசும் நீதி மன்றங்களும் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யத் தயாராக இல்லை. ஆகவே மக்களை நெறிப்படுத்தும் முக்கிய பொறுப்பை மடாதிபதிகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆனால் நடப்பது என்ன ? மடத்துப் பூஜை, நிர்வாகம், பெரிய மனிதர்களை சந்தித்தல், அவ்வப்போது நூல் வெளியீடு செய்தல், பிரபலங்களை மடத்து விழாக்களுக்கு அழைத்தல், கல்விக் கூடங்கள் அமைத்தல் , தங்களது நிர்வாகத்தில் உள்ள கோயில்களுக்கே சௌகரியப்பட்டபோது திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தல் – இதைத்தானே பார்க்கிறோம். நமது கிராமங்களுக்கு விஜயம் செய்து இரண்டு நாட்களாவது தங்கி அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்து அவர்களைத் திசை மாறாமல் இருக்கச் செய்யலாம் அல்லவா ? சின்னஞ்சிறு கிராமங்களின் இன்றைய நிலையைப் பார்த்தவர்களுக்கே தெரியும். பூட்டிக் கிடக்கும் கோயில்களும், தினசரி வழிபாட்டின் முக்கியத்துவம் தெரியாத மக்களும் , திசை மாறிய மக்களும், அவர்களின் அடையாளச் சின்னங்களுமே எஞ்சி நிற்கின்றன என்பதை .  இவற்றிற்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வெளியேறுபவர்களைப் பற்றிக் கவலைப் படுபவர்களே இல்லையே !

மடாதிபதிகள் கால் நடையாகத் தங்கள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அங்குள்ள கோயில்களையும் தரிசித்துத்  தேவையான பணிகளை மேற்கொள்ளச் செய்வது அப்போது எளிதில் சாத்தியமாகிறது. நித்திய பூஜைகளையும் அங்கிருந்தே செய்யலாம் . இவ்வாறு பல மடாதிபதிகள் முன்பெல்லாம் செய்ததாக நாம் அறிகிறோம்.  இப்போது அவ்வாறு பின்பற்றப்படாமைக்குக் காரணம் புலப்படவில்லை. தங்களது மாதாந்திர ஜன்ம நக்ஷத்திரத்தன்றாவது நேரிடையாக ஒரு ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வதோடு அவ்வூர் மக்களுக்கும் தினசரி வழிபாட்டின் முக்கியத்தை எடுத்துரைக்கலாம். மற்ற நாட்களில்  மடத்தில் உள்ள சிப்பந்திகளோ, தம்பிரான்களோ அருகாமையில் உள்ள கிராமக் கோயில்களுக்குச் சென்று ஊர் மக்களை ஈடுபடச் செய்யலாம். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளுக்கும் நடந்து சென்று மக்களைச் சந்தித்து நம் கலாசாரம் மேலும் சீரடையச் செய்யலாம். திருக்குளப்பராமரிப்பு , கால்நடைப் பராமரிப்பு ஆகியவை பற்றி எடுத்துச் சொன்னால் மக்கள் நிச்சயம் வரவேற்பர். மறுமுறை அங்கு சென்றால் மாற்றத்தைக் காண வேண்டும். அதற்கான இலக்கையும் நிர்ணயிக்கலாம்.

இப்படி எழுதுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறோமே, அவையெல்லாம் கண்ணில் படவில்லையா என்று கேட்பார்கள். என்ன செய்வது ? அவையெல்லாம் இன்று பாமர மக்களை விழிப்படையச் செய்யவில்லையே ! இந்த ஆதங்கமே இவ்வாறு எழுதத் தூண்டியதே தவிர நமக்கு எந்த ஒரு ஸ்தாபனத்தையும் குறை கூறும் நோக்கம் இல்லை. அவ்வாறு குறை கூறி ஆகப்போவதும் ஏதும் இல்லை. சுவாமி பார்த்துப்பார் என்று கைகளைக் கட்டிக் கொண்டிருக்கவும்  நம்மால் முடியவில்லை ! உண்மையாகவே சுவாமிதான் அருளவேண்டும்.

2 comments: