Tuesday, January 30, 2018

உழவாரப்பணி முறையை மேம்படுத்துவோம்

ஒரு காலத்தில் ஆலயத்தின் கருவறையில் இருந்த மூர்த்திகளைத்தான் மேற்கண்ட படத்தில் இந்த அவல நிலையில் காண்கிறீர்கள். விமானம்,கருவறை முதலியவற்றை ஆலமரங்கள் ஆக்கிரமித்து முற்றிலுமாக அழித்து விட்ட நிலையில் ஆல மர  வேர்களின் அரவணைப்பில் காட்சி அளிக்கிறார் ஈசன். இதுபோன்று எத்தனையோ ஆலயங்கள் அழியும் நிலையில் உள்ளன.  உள்ளூர் காரர்களின் அலட்சியத்தால் மட்டுமே இப்படிப்பட்ட நிலை ஏற்பட முடியும். ஆல் ,அரசு ஆகியவற்றின் செடிகள் விமானங்களிலும், சுவர்களிலும் தென்பட்டவுடனேயே அவற்றைக் களைந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா? நம் சொந்த வீடாக இருந்தால் பார்த்துக் கொண்டு இருப்போமா? இப்படிக் கைவிடுவார்கள் என்று கோயில்களைக் கட்டியவர்கள் ஒரு நாளும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 

மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது உள்ளூர்வாசிகள் தங்கள் ஊர்க் கோவிலில் பிராகாரங்களிலும், விமானங்களிலும், சுவர்களிலும் செடிகள் வேரூன்றி உள்ளனவா என்று பார்த்து, அவற்றை உடனே களைய வேண்டும். இதற்குக்கூடவா வெளியூரை நம்பி இருக்க வேண்டும்? அப்படியே வெளியூர்காரர்கள் வந்தாலும் வந்தவர்கள் ஏதாவது செய்து விட்டுப் போகட்டும் என்று இருக்கிறார்கள். உழவாரத் தொண்டு செய்பவர்களுக்கு மோர், சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் மனம் எத்தனை கிராமவாசிகளுக்கு உள்ளது ?  தாங்களும் வந்தவர்களோடு இணைந்து உழவாரப்பணி செய்யாவிட்டாலும், அவர்கள் களைந்து வைத்த குப்பைகளையும் செடிகளையும் கோவிலுக்கு வெளியில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்தகூட  மனம் வரவில்லையே ! 

சில உழவாரத் தொண்டாற்றும் குழுக்கள் மாதம் தோறும் ஆலயங்களில் பணி  செய்கிறார்கள். அக்குழுக்களில் பெண்களும் இடம் பெறுகிறார்கள். அவர்களது பங்காவது, அக்குழுவினருக்கு   உணவு ஏற்பாடு செய்தல், கோயில் விளக்குகள்,பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவிச்  சுத்தம் செய்தல் ஆகியன. இவர்கள் ஆண்டு முழுவதும் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றாலும், உழவாரப்பணி செய்த ஆலய எண்ணிக்கை கூடுகிறதே தவிர ஏற்கனவே பணி  செய்த ஆலயங்களில் மீண்டும் வெட்டிய இடத்திலேயே செடிகள் முளைத்து, நாளடைவில் பிரம்மாண்டமான மரங்களாகி வேரூன்றிப் போகின்றன. திருப்பணி செய்பவர்கள் பழைய அமைப்பை மாற்றாமல் கற்களை அடையாளப் படுத்திய பின்னர் ஒவ்வொரு கல்லாகப் பிரித்து, மரத்தின் வேர்களை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் அதே கற்களை அதே இடத்தில் அமைத்து மீண்டும் செடிகள் முளைக்காமல் இருக்க இணைப்பிடங்களை நிரப்பித் திருப்பணி செய்ய வேண்டியிருப்பதால் பெரும் செலவை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதெல்லாம் உள்ளூர் வாசிகளின் நெடுங்கால அலட்சியத்தால் விளைந்தது தானே ! 

உழவாரப்பணி செய்யும் அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் வசிக்கும் பகுதியில் சரிவரப் பராமரிக்கப்படாத நான்கு  கோயில்களைத் தேர்ந்தெடுங்கள். ஐந்தாவது மாதம் புதியதாக ஒரு கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்வதை விட, முதலாவதாகப் பணி  செய்த கோயிலுக்கே திரும்பச் சென்று பணியாற்றுங்கள். அப்போதுதான்  இடைப்பட்ட காலத்தில் அங்கு மீண்டும் முளைத்த செடிகளை மேலும் வளர விடாமல் தடுக்க முடியும். ஆகவே ஒரு ஆண்டில் ஒரே ஆலயத்தில் மூன்று முறை உழவாரப்பணி செய்ய முடியும். எத்தனை கோயில்களில் உழவாரம் செய்தோம் என்பதைவிட, நான்கு கோயில்களில் செம்மையாகச் செய்யும் பணியே சிறந்தது அல்லவா? 

வேரூன்றிப் போன மரங்களை வெட்டுவதால் பயன் ஏதும் இல்லை. மீண்டும் அவை தழைக்க ஆரம்பித்து விடுகின்றன. கருங்கற்களுக்கு இடையில் உள்ள ராட்சச வேர்களை எப்படிக் களைவது?  பலவிதமாக முயன்று பார்த்தும் பலனளிக்காமல் போகவே இப்போது மருந்து வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் வேர்கள் வரை மருந்தின் தாக்கம் சென்று, சில நாட்களில் அச் செடியோ, மரமோ கருகி, அழிந்து விடுவதாகச் சொல்கின்றனர். இம்முறை பின்பற்றப்படுமேயானால் மேலும் சில கோயில்களில் பணியாற்ற முடியும். 

ஆலயத் திருக்குளத்தைத் தூய்மை செய்வதையும் அன்பர்கள் மேற்கொள்ளலாம். அதேபோல் நந்தவனப் பராமரிப்புக்கும் இயன்ற உதவி செய்யலாம். இவை யாவும் " கைத் தொண்டு " என்ற  வகையில் அடங்கும். கைத்தொண்டு செய்த திருநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசினைப் பரமன் அளித்ததை, " கைத்தொண்டாகும் அடிமையினால் வாசியில்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் " என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது.      

Thursday, January 11, 2018

வேலியே பயிரை மேயலாமா?


" வேலியே பயிரை மேயலாமா " என்பார்கள். இப்போது அதுவும் நடக்கிறது. அறத்தை நிலை நிறுத்த வேண்டியவர்கள், பாதுகாக்க வேண்டியவர்கள் அறமற்ற செயல்களை செய்யத்துணிந்து விட்டார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பணம் சம்பாதிக்க உலகத்தில் எத்தனையோ வழிகள் இருந்தும் ஆலயத்தையும் அதன் சொத்துக்களையும் கொள்ளையடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் வெளியார்களே இவ்விதக் கொள்ளைகளையும், ஏமாற்று வேலைகளையும் செய்து வந்தார்கள். ஆனால் இப்போதோ அறத்தை நிலைக்கச் செய்ய வேண்டிய உயர் அதிகாரிகளே தெய்வச் சிலைகளைக் கடத்தவும், பக்தர்கள் தரும் தங்கத்தைத் திருடவும் துணிந்து விட்டார்கள். பாதுகாப்புத் தருகிறோம் என்று சிலைகளை எடுத்துக் கொண்டு போய் கடத்தல் காரனிடம் விற்கும் இந்த அற்பர்களை தெய்வம் மன்னித்தாலும் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. 

விக்கிரகங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு அவற்றை வேறு ஒரு கோயிலில் வைத்துப் பூட்டி வைப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள். ஆக, காணாமல் போவதும், இவர்கள் கையில் கொடுப்பதும் ஒன்றோ என்னும்படி ஆகிறது. மொத்தத்தில் அவை உரிய கோயில்களில் இல்லாமல் போய் விடுகின்றன.. 

ஆகம மரபு மாறாமல் நிர்வகிப்பதாக , அற  நிலையத்துறை சொல்வதாக இருந்தால் அவர்களை ஒன்று கேட்கிறோம். உற்சவர் வீதி உலா சென்றால், கோயில்களை மூடி விடுவார்கள். காரணம், மூலவரே, வீதியில் உள்ளவர்களுக்கு அருள் புரிய வேண்டி உற்சவர் வடிவில் செல்வதால் கருவறையில் ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. உற்சவர் மீண்டும் ஆலயத்திற்கு வந்த பின்னரே மூலவருக்குப்  பூஜைகள் துவங்கப்படும். இதுவே ஆகமம் நமக்குக் காட்டும் நெறி. ஆனால் நடப்பது என்ன? உற்சவர்கள் வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் மூலவருக்கு பூஜைகள் நடத்தப் படுகின்றன. இது ஆகம விரோதம் இல்லையா? இதற்காகவா மன்னர்கள் எல்லாக் கோயில்களுக்கும் உற்சவ மூர்த்திகளை வார்த்துக் கொடுத்தார்கள்? 

சமீபத்தில் பந்தநல்லூர் ஆலயத்தில் நடை பெற்ற அதிகார துஷ்ப்ரயோகமும் அதனைத் தொடர்ந்து, அதிகாரியின் துணையோடு, உற்சவர்கள் களவாடப்பட்டதும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. இப்படியும் ஒரு பிழைப்பா இந்த அதிகாரிகளுக்கு!! வெட்கக் கேடு!! கேட்பவர்கள் காறித் துப்புவார்கள். நம்பிக்கைத் துரோகம்  அல்லவா இது!!  இதுபோல எத்தனை மூர்த்திகள் எத்தனை கோயில்களில் களவாடப் பட்டுள்ளனவோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் நல்லவர்களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது. 
உற்சவங்கள், கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெறும் ஆலயங்கள் மட்டும் அந்த நிகழ்ச்சிகளுக்காக உற்சவர்களைத் தங்கள் கோயிலுக்குக் கொண்டு வந்து விட்டு, மறுநாளே பாதுகாப்பு வழங்கும் கோயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதற்குக் குருக்களிடம் உத்தரவாதம் வேறு பெறப்படுகிறது! நிர்வாக அதிகாரியும்  பொறுப்பேற்றுக்  கூட இருந்து நடத்தலாமே ! 

ஆலயத் திருட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில், காமிராக்கள் பொருத்தும் வேலை துரிதமாக  நடைபெற்று வருகிறது. இதனால் என்ன பயன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. திருடர்கள் வருகையைப் பதிவு செய்வதோடு சரி. அடையாளம் காண இயலாதபடித் திருடர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டினால் அப்பதிவினால் எப்படித் துப்புத் துலக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால் அலாரம் பொருத்தினால், மணி ஓசை கேட்டவுடன், திருடுவதைக் கைவிட்டபடியே, வந்தவர்கள் தப்பித்து ஓடத்  துவங்குவர். .

ஒவ்வொரு கோயிலுக்கும் காமிரா பொருத்துவதற்கு குறைந்தது இருபதாயிரம் செலவாகிறது. டெண்டர் விடுவதில் மோசடி நடந்தால் இத்தொகை அதிகமாகும். இந்நாளில் அதுவும் சாத்தியமே.!  உயர் மட்டத்திலிருந்து கீழ் வரை லஞ்சம் புரையோடிக் கிடக்கிறது. இதற்கு அறநிலையத் துறை விதி விலக்காக இருக்க வாய்ப்பு உண்டா?  

அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். சிவசொத்தைக் கொள்ளை அடிப்பதைக்  கயவர்கள் மட்டும் செய்து வந்தது போக , அறம் காக்க வந்தவர்களும் உடந்தை ஆகிறார்கள் என்ற பழி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அற  வழி நின்றால், அதுவே உங்களது பல தலைமுறைகளைக் காக்கும். இல்லையேல், உங்கள் கண்முன்பே குடும்பம் சீரழிவதைக் காண்பீர்கள். இக்கலியுகத்தில் கண்கூடாகக் காணும் பல உண்மைகளுள் இதுவும் ஒன்று. மறந்தும் இத்தவறை மீண்டும் செய்ய வேண்டாம் ஐயா. 

கோயில்களில் அராஜகம் நடக்க விடலாமா?

குறிச்சி சிவாலயம் 
நல்லதொரு குடும்பப்பின்னணி இருந்தால் , ஒழுக்கம்,அடக்கம், கடவுளிடத்து பக்தி ஆகியவை இயல்பாகவே அமைந்து விடும். பிற்காலத்தில் கெட்ட சகவாசத்தால் பிள்ளைகள் தவறான வழிக்குப் போவதுமுண்டு. அப்போது அவர்களைப் பெற்றோர்கள் திருத்த முடியாமல் போய் விடுகிறது. தவறுகளைத் தெரிந்தே, தைரியமாகச் செய்யும் திமிர் பிடித்தவர்களாக மாறி விடுகிறார்கள். பார்ப்பவர்களுக்கும் அவர்களிடம் நெருங்கவே பயம் ஏற்படுகிறது. சமூக விரோதிகள் வேறு எங்கேயாவது தொலைந்து சீரழிந்து போகட்டும். ஆலயத்திற்குள் பிரவேசித்து அக்கிரமங்கள் செய்யலாமா? 

அண்மையில் திருப்பனந்தாளிலிருந்து பந்தநல்லூர் செல்லும் வழியிலுள்ள குறிச்சி என்ற கிராமத்திலுள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். சிறிய கோயில் தான். ஒரே பிராகாரம். செடிகளும் ,புதர்களும் மண்டிக் கிடந்தன. விமானங்களின் மீது பெரிய அரச மரங்கள் முளைத்து, வேரூன்றியிருந்தன. அதனால் ஆலயச் சுவற்றின் பல பகுதிகள் பிளவு பட்டிருந்தன. 

அராஜகம் 
ஜாக்கிரதையாகப்  பிராகாரத்தை வலம் வரும் போது கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காலி செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் அங்கு கிடந்ததைக் கண்டு பதறினோம். பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறாத அந்த ஆலயத்தை இப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் சமூக விரோதிகள். ( துரோகிகள் என்று கூடச் சொல்லலாம். ) 

அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரைக் கேட்ட போது, ஆலயத்திற்குச் சுற்றுச் சுவர்  பல இடங்களில் இல்லாமல் இருப்பதால், இவ்வாறு குடிக்கவும், மலஜலம் கழிக்கவும் கயவர்கள் உள்ளே நுழைந்து பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  சுற்றுச் சுவர் கட்டாத வரையில் இந்த அராஜகங்கள் தொர்ந்து நடக்கும் என்றும்  கவலை தெரிவித்தார். ஆலயத்திற்குச் செல்லும் வழியில் பால் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தார் மனம் வைத்தால் ஆலயத்தைத் தூய்மைப் படுத்தி , சுற்றுச் சுவர் அமைக்கலாம். எப்போது மனம் வைப்பார்களோ தெரியவில்லை. தினசரி பூஜைகளுக்கு வழி இல்லாததால் ஒரு அன்பர் தினமும் சன்னதியில் விளக்கு ஏற்றிச் செல்கிறார். ஆனால், புத்தி கெட்டுப்போய் ஆலயத்தைச்  சீரழிக்கும் ஈனப் பிறவிகளைத் திருத்துபவர் யார் ? 

இவ்வாறு கைவிடப்பட்ட ஆலயங்களை வெளியூர் நபர்கள்  தூய்மைப்படுத்தித்  திருப்பணி செய்து கொடுத்தாலும்   , உள்ளூர் வாசிகளிடம் அக்கறை இல்லா விட்டால் அத்தனையும் வீணாகிப் போகிறது. தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள் இல்லாத வரையில் கோயில்கள் வௌவால்களுக்கும் பாம்புகளுக்கும் புகலிடமாக மாறி விடுகின்றன. 

இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவது. (பராமரிப்பின் கீழ் வருவது என்று இங்கு குறிப்பிட மனம் வரவில்லை.) பராமரிப்பே இல்லாமல் அழிவை நோக்கிச் செல்லும் ஆலயத்தைக்  காப்பாற்றிப்   பராமரிக்கத்தவறி  விட்டது அறநிலையத்துறை. நிர்வாக அதிகாரி எப்போதாவது இந்தப் பக்கம் வந்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி என்றால் எதற்காக அவர்களிடம் இக்கோயிலை வைத்துக் கொண்டு இப்படி அழியச் செய்கிறார்கள்? ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பதில் சொல்லட்டுமே பார்ப்போம்.