Tuesday, February 4, 2020

தமிழ் நீச பாஷை என்று யாரும் சொல்லவில்லைஉண்மையை மறைப்பதும், பொய்யைப் பரப்பி அதனை உண்மை என்று நம்ப வைப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், பொறாமை கொள்வதும் ஆணவமும் யாருக்கும் அடங்காத போக்கும் உடையவர்கள் இவ்வாறு மக்களைத் திசை திருப்புவதோடு மாறான வழிக்கும் , மரபு மீறிய செயல்களுக்கும் வித்திடுகிறார்கள். பொய் சொல்லாதவர்களே இல்லாத இந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணும்படி பொய் சொல்லாமல் வாழ்ந்த / வாழ்ந்துவரும் ஒருசில  உத்தமர்கள் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள். இப்பொய்களை உண்மை என்று நம்பி அவர்கள் பின் போகிறவர்கள் ஏராளம்.

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வழிவழியாக மகுடாகமப் படி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுவருவதை அறிந்தும் வீணாகச் சர்ச்சையைக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்நிலையில் மரபை மதிப்பவர்கள் பல்வேறு ஆதாரங்களைக் காட்டி வாதிடுவதையும் பார்க்கிறோம். இவ்வளவுக்கும் காரணம் மொழி மற்றும் ஒரு இனத்தின் மீது உள்ள துவேஷமே. இதனால் மக்களிடையே பிளவு ஏற்படுத்தி, சமயத்தை சீர்குலைய வைக்கும் வல்லூறுகள் வட்டமிடுவது தெரியவில்லையா ? இந்த ஒற்றுமையின்மைதானே அவர்களுக்குத் தேவைப்படுகிறது !

எவன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று  அளவுக்கு மீறிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா அல்லது தாமாகவே உண்டாக்கிக் கொள்ளப்பட்டதா என்று அறிஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்தத் துவேஷம் பரவப்படுகிறது. விஷத்தை விடக் கொடுமையான வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள். நாட்டின் சட்டங்களைத் தமக்குச்  சாதகமாக்கிக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

ஒரு அம்மையார் யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியைக் காண நேரிட்டது. அர்ச்சகர்களையும் தில்லைவாழ் அந்தணர்களையும் சரளமாகச் சாடியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் நீச பாஷை என்று காஞ்சி மகா பெரியவர் சொன்னதாகப் பொய்த் தகவலை அதில் வெளியிட்டுள்ளார்கள். அவரைப் போன்றவர்கள் அதை உண்மை என்றே நம்புவர். ஆனால் பெரியவருக்குத் திருமுறைகள் மீதும் தமிழ் மொழி மீதும் எவ்வளவு பற்று இருந்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அதற்கு விளக்கமாகவே விடை தர  வேண்டியிருக்கிறது.   
   
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனத்திற்குக் காஞ்சிப் பெரியவர் சென்ற போது அங்கிருந்த வேத,ஆகம பாடசாலைகளைப் பார்வையிட்டுவிட்டு, தேவாரப் பாடசாலைக்கும் விஜயம் செய்தார்கள். அந்நேரத்தில் பாடசாலை ஆசிரியர் திரு வேலாயுத ஓதுவாமூர்த்திகள் வெளியில் சென்றிருந்ததால் மாணாக்கர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அங்கிருந்த மாணவர்களிடம் அளவளாவிய பெரியவருக்கு , யாராவது ஒரு மாணவன் மூலம்  அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகம் பாடச் சொல்லிக் கேட்கும் விருப்பம் ஏற்பட்டது. ஒரு மாணவன் தான் கற்றிருந்த ஒரு திருத்தாண்டகத்தைப் பாடத் துவங்கினான்.

 அப்பாடல் திருப்புன்கூர் என்ற தலத்தின் மீது அமைந்தது. அவன் பாடிய  அடியாவது :

“ கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை ;  கடுநரகம் சாராமே காப்பான் தன்னை “

என்பனவாகும். அதற்கு அடுத்த வரி மறந்து விட்டபடியால் தயங்கி நின்றான். ஆனால் பெரியவரோ அந்த இரண்டு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டார். அதே நேரத்தில் பாடசாலை ஆசிரியர் திரும்பி வந்துவிட்டார். அவர் கண்ட காட்சி, மாணவன் பாடிக் கொண்டிருக்கும் இரண்டு வரிகளைக்  கேட்டவாறு பெரியவர் உருகியவராக நின்றிருந்தார் என்பது. அவரது  கண்கள் நீரைப் பெருக்கியவாறு இருந்தன. மற்ற வரிகளை ஆசிரியர் பாடிப் பூர்த்தி செய்தார் . அதன் பின்னர் தருமபுர ஆதீனம் கயிலைக் குருமணி அவர்களை சந்தித்து அளவளாவும்போது, பெரியவர், “ உங்கள் பாடசாலை மாணவன் பாடிய தாண்டக வரிகள் கண்ணீர் வரச் செய்து விட்டன “ என்றாராம். இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தவர் திருமுறைக் கலாநிதி தருமபுரம் சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள் அவர்கள்.

மற்றொரு சமயம் காஞ்சியில் பெரியவரைத் தரிசிக்கச் சென்றபோது அங்கிருந்தவர்களைப் பார்த்து, “ சந்தோக சாமம் ஓதும் வாயானை.. திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே “ என்ற வரியைச் சொல்லி அவ்வரிகள் எதில் வருகின்றன எனக் கேட்டுப் பிறகு தானே அதற்கு விளக்கமும் அளித்தார். ஒருமுறை காஞ்சிக்கு ஒரு ஓதுவாமூர்த்திகள் திருவீழிமிழலையிலிருந்து வந்திருந்தார். அவரைச் சுட்டிக் காட்டியவ பெரியவர், “ இவர் ஊர் பதிகத்தில் மட்டுமே பரமேசுவரன் இளநீர் அபிஷேகத்தை ஏற்பதாக வருகிறது “ என்று எடுத்துக் காட்டினார்கள். “ நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண் “ என்று அப்பாடலில் வருகிறது.  

அருமை நண்பர் டன்லப் கிருஷ்ணையர்  அவர்கள் பெரியவரிடம் மிகுந்த பக்தி உடையவர். அதே அளவு பக்தி அவருக்குத் திருமுறைகளிடமும் இருந்தது. தனது இல்லத்தில் பூஜை அறையில் ஓவியரைக் கொண்டு நால்வர் படங்களைச் சுவற்றில் வரைந்திருந்தார். இவ்வளவு ஈடுபாடு வரக் காரணமாக இருந்தவர்களே பெரியவர் தான். ஒருமுறை ஆந்திராவிலுள்ள கார்வேட்நகரில் பெரியவர் தங்கியிருந்தபோது,  கிருஷ்ணையர் தரிசனத்திற்காகச் சென்றிருந்தார். விடை பெற வேண்டி நின்றபோது அவரிடம், “ இன்னும் சில நாட்கள் நீ இங்கேயே தங்கி இருந்து என் பக்கத்தில் அமர்ந்து தேவாரத்தை வாசி . நான் கேட்கிறேன் “ என்றாராம். அப்படியே கிருஷ்ணையர்,தான் கொண்டு சென்ற தேவாரப்புத்தகத்தை வாசித்துக் கொண்டு வரும்போது அருமையான விளக்கங்கள் பெரியவரிடமிருந்து வருமாம்.

ஒரு நவராத்திரியின் போது பெரியவர்கள் உத்திரவுப்படி பத்து நாட்களும் திருவாலங்காட்டில் தங்கியிருந்து தேவாரம்,திருவாசகம் முழுவதையும் பாராயணம் செய்தோம். அத்தலத்தில் தலையால் நடந்து வந்து காரைக்கால் அம்மையார் தரிசித்தபடியால், பெரியவர்கள் அங்கு கால்கள் நிலத்தில் படக் கூடாது என்று தனது கால்களைத் துணியால் கட்டியபடி நடந்து வந்ததாகக்   கிருஷ்ணையர் கூறினார். காரைக்கால் அம்மையாரது சரித்திரத்தை வந்திருந்தவர்களும் தானும் கேட்குமாறு தரிசிக்க வந்த ஒருவரை விட்டுச் சொல்லச் சொன்னதைக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஒருவர் அப்படிச் சொல்ல ஆரம்பித்தபோது பெரியவர் குறுக்கிட்டு, அம்மையாரது தகப்பனார் பெயரையும் சொல்லும்படி சொன்னது, பெரியபுராணத்தை எவ்வளவு உயர்வாகப் பெரியவர் போற்றியுள்ளார் என்பது தெரிந்தது.

பெரியவரின் ஏற்பாட்டின்படி, சீர்காழியில் திருஞானசம்பந்தர் அவதரித்த இல்லம் மடத்திற்கு வாங்கப்பட்டு அங்கு பூஜைகளும் ஆகமம் மற்றும் தேவார பாடசாலை நடைபெற்று வருகிறது. காஞ்சி மடம் எத்தனையோ ஒதுவாமூர்த்திகளை கௌரவித்திருக்கிறது. சீனப் படை எடுப்பின்போது நாட்டுக்கு வந்த ஆபத்து நீங்கும்படி அனைவரையும் ஞான சம்பந்தர் அருளிய “ வேயுறு தோளி பங்கன் “ எனத் தொடங்கும்  தேவாரப்பதிகத்தைப் பாராயணம் செய்யச் சொன்னதும் திருப்பாவை- திருவெம்பாவை மாநாடுகள் நடத்தியதும் நாடறிந்ததே .
அதேபோல் பெரியவர்கள் தமிழறிஞர்களோடு அளவளாவுவதும் அவர்களைக் கௌரவிப்பதும்  அடிக்கடி நிகழ்ந்து வந்தன. தமிழ்த்தாத்தா உ.வே.சா , கி.வா.ஜ. வாரியார் ஆகிய தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நீதிபதி இஸ்மாயில் அவர்களிடம் கம்பராமாயணம் பற்றிப் பெரியவர்கள் நீண்ட நேரம் உரையாடியதும் உண்டு.

தமிழ் மீதும் திருமுறைகள் மீதும் பெரியவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில எடுத்துக்காட்டுக்களே இங்கு தரப்பட்டுள்ளன.தெய்வத்தமிழை யாராவது நீச பாஷை என்று சொல்ல முடியுமா? வீணான கட்டுக் கதைகளைக் கிளப்பிவிட்டுக் குளிர்காய்பவர்களை இனியேனும் தமிழுலகம் அடையாளம் காண வேண்டும்.     
     
“ உரையினால் வந்த பாவம் “ என்பார் சம்பந்தர். தேவாரம் படித்த அந்த அம்மையார் இதைப் படித்திருக்கக் கூடும். பொய்யை அள்ளி வீசிப் பாவத்தைச் சுமப்பானேன்!  “ பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய் அன்றே “ என்பது அப்பர் பெருமான் வாக்கு. எல்லாப் பிழையையும் பொறுக்கும் பெருமான் இந்தப்பிழையையும் பொறுத்தருளி நல்வழி காட்ட வேண்டும்.