Wednesday, October 31, 2012

பெண்மையைப் போற்றுவோம்நண்பர் ஒருவர் தனக்கு வந்திருந்த வலைப்பதிவை அனுப்பியிருந்தார். சில பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் நெற்றிக்குப் பொட்டு வைக்காமலும் தலையை வாரிப் பின்னிக்கொண்டு பூச்சூடாமலும் வரவேண்டும் என்று நிர்வாகம் நிர்பந்திப்பதால் நமது பாரம்பர்யம் விலகிச் செல்வதைப் பற்றிய ஆதங்கம் அது. பள்ளிகள் அதுபற்றிக் கவலைப் படாத நிலையில், தங்கள் குழந்தைகள் எப்படியோ படித்தால் போதும் என்று பெற்றோர்கள் வேறு வழி இல்லாமல் இருந்துவிடும் நிலை. வீட்டிலாவது நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுப்போம் என்று சில பெற்றோர்கள் மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள். நண்பர் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதை எழுதியவர் ஒரு பெண்மணி. 

ஆண்கள் நெற்றிக்கு எதுவும் இட்டுக்கொள்ளாதபோது பெண்கள் மட்டும் ஏன் இட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பூக்கள் வைத்துக்கொள்வதும், வளை அணிவதும் அழகுபடுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்கிறார் அவர். ( பூங்குழல் நாயகி, கோல்வளை நாயகி போன்ற அம்பிகையின் பெயர்களை இப்போது நினைவுக்கு வரவழைத்துக் கொண்டு சங்கடப் படவேண்டாம்)  அவற்றை அணிவதால் ஏற்படும் பலனுக்கு உத்த்திரவாதம் எதுவும் இல்லையாம்.  "ஆண் ஆதிக்கம்" உள்ள சமுதாயத்தில்  ( ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், முதலிய பதவிகளில் பெண்கள் சாதித்து இருக்கிறார்களே என்று கேட்கக் கூடாது)  விதவைப் பெண்களும் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பாதுகாப்பு என்கிறார் இந்தப் பெண்.( பொட்டணிவதால் எந்தப் பலனும் இல்லை என்ற இவர் இப்படி மாற்றுக் கருத்து வழங்குவது ஏன் என்று புரியவில்லை.) 

ஒரு காலத்தில் திருமாங்கல்யமும் காலில் மெட்டியும் அணிந்து வந்த ஆண்கள் அவற்றைக் கைவிட்ட பிறகு பெண்கள் மட்டும் அவற்றைப் பின்பற்ற வேண்டுமா என்பது இவரது கேள்வி.ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிமுறைகளில் பேதம் ஏன் என்று கேட்கிறார் இவர். மேலும் ஆண்கள் தங்களது பாரம்பர்ய உடைகளை அணியாமல் பேண்டும் சட்டையும் அணியும் போது , பெண்களும் மாறினால் என்ன தவறு என்பது இவரது வாதம். ( உண்மை தான். அதற்காக ஆண்கள் செய்யும் தவறுகள் அத்தனையையும் பெண்களும் செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டுவது போல் இருக்கிறது.) ஆண்களுக்கு விதிமுறைகள் எதுவும் இல்லையா- அவை கடலில் எறியப்பட்டு விட்டனவா என்று கேட்கிறார் இப்பெண்மணி.  பெண்களை ஆண்கள் குறை கூறிக்கொண்டு இருப்பதுபோல் ஏன் பெண்களும் ஆண்களின் குறைகளை எடுத்துக் கூறக் கூடாது என்கிறார்.(தாராள மாகக் கூறலாமே! இப்போது அப்படி யாரும் கூறவில்லை என்றா சொல்கிறீர்கள்?)   கோயில்களில் உள்ள பெண் வடிவங்களின் ஆடை அலங்காரங்கள் போல பிற பெண்களும் அணியும்போது ஏன் இவ்வளவு கூச்சல் என்கிறார். (உயிருள்ள வடிவங்கள் இவ்வாறு அணிவதால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை இப்பெண்மணி மறந்து விட்டார் போலிருக்கிறது! வெளி நாட்டவர்களுக்கு மேலேழுந்தவாறு தோன்றுவதை எல்லாம் ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ உங்கள் கையில் அல்லவா இருக்கிறது!) 

பல புருஷர்களைக் கொண்டவளைப் பதிவிரதை என்று புராணங்கள் சொல்லும்போது தற்காலத்தில் மட்டும் ஏன் அவ்வாறு செய்யத் தடை என வினவுகிறார்.( ஏக புருஷ விரதம் பூண்ட சீதா தேவி, அருந்ததி, அனுசுயா போன்ற பதிவிரதைகளையும், ஏக பத்தினி விரதம் பூண்ட ராமபிரானையும் பற்றிப் புராணங்களில் படித்திருப்பீர்களே!) எனவே, கடவுளர்களைவிடத் தற்கால இளைஞர்கள் பரிசுத்தமானவர்களாம்              ( எல்லோருமா அப்படி?) 

மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் அப்பெண்மணியின் சொந்தக் கருத்துக்களாக இருக்கலாம். காலம் எவ்வளவோ மாறிவரும் போதும் பெரும்பாலான பெண்மணிகள் நமது பாரம்பர்யத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ பழைய காலம் முதல் இந்து மதம் அவர்களுக்குச் சிறப்பான ஸ்தானம் வழங்கியிருக்கிறது. புதியதாக ஒரு வீடு கட்டி, கணவன் மனைவியர் குடிஏறுவதாக வைத்துக் கொள்வோம். பெண்ணின் நக்ஷத்திரத்தை வைத்தே கிரகப்பிரவேச நாள் நிச்சயிக்கப்படுகிறது. அவளே வீட்டின் எஜமானியும் ஆவாள். "க்ரஹிணி" என்று அவளை மட்டுமே சொல்லும் சாஸ்திரம், ஆணை எஜமானனாகச் சித்தரிப்பதில்லை. அவள் உயிரோடு இருக்கும் வரையில்தான் கணவன் அக்னிஹோத்திரம் செய்ய உரிமை உண்டு. பெண் குழந்தைகளை உரிய பருவத்தில் கல்யாணம் செய்து கொடுத்து அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பது முக்கியமாகக் கருதப்பட்டது. வேலைக்கும் சென்று விட்டு, வீட்டு வேலையையும் செய்ய வேண்டும் என்று இரட்டைப் பாரம் தூக்குவது இக்காலத்தில் சரியாகப் பலருக்குப் படலாம். ஆனால் அவள் எந்தவிதக் கஷ்டமும் படக் கூடாது என்று கருணையோடு அவளை க்ரஹிணியாக அமர்த்தி ஆராதிததது அன்றைய சமுதாயம். 

பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்பெற்ற அங்கீகாரம் ஆண்களுக்கு அளிக்கப்படவில்லை. கற்பு என்பது இருபாலார்க்கும் தான். ஒப்புக் கொள்கிறோம். ஆனால் பெண் மட்டுமே கற்புக்கரசி என்றும் மங்கையர்க்கு அரசி என்றும்,பதிவிரதை என்றும் புகழப் படுகிறாள். கற்புக்கரசன் என்றோ ஆடவர்க்கரசன் என்றோ பத்தினி விரதன் என்றோஆண்களை யாராவது புகழக் கேட்டிருக்கிறோமா? தயை என்பது தாய்க்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. தந்தைக்குத் தயை இல்லையா என்று கேட்க முடியுமா? இறைவனே தாயுமானவனாகத் தானே வந்தான்! 

நிறைவாக ஒரு முக்கியக் கருத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்மணி இவ்வளவு எழுச்சி பெற வேண்டிய அவசியம் இல்லையோ என்று தோன்றுகிறது. எத்தனையோ வீடுகளில் பாரம்பர்யங்கள் காற்றில் விடப் படுகின்றன. பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காத குழந்தைகள் தன்னிச்சையாக இருக்கும்போது இப்பெண்மணி கவலையே பட வேண்டாம். அவரவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் அப்படி இருந்தால் மட்டுமே வலிக்கக்கூடிய விஷயம் இது. வாசலில் கோலம் போடுவதால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி கேட்கும் காலத்திற்கு ஏற்றபடி பலமாடிக் குடியிருப்புகள் வந்து விட்டன. ஒருவேளை நிரந்தரமாகக்  கோல- ஸ்டிக்கர் ஒட்டி விடுவார்களோ என்னவோ!     

பள்ளிக்கூடம் போவதற்கு முன்னாலேயே தன் குழந்தை சகலகலா வல்லவனாக வர வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப் படுகிறார்கள். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கவும்  தயங்குவதில்லை . சிலர் தன்னுடைய  சக்திக்கு அப்பாற்பட்டும் செலவழிக்கிறார்கள். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, வேறு வழியில் செல்லும்போது அப்பெற்றோர் படும் வேதனை இருக்கிறதே, அதை மற்றவர்களால் எப்படி உணரவோ சொல்லவோ முடியும்? 

முன்னோர்கள் சொன்னதை மூடத்தனம் என்று சொல்பவர்கள் அவற்றை எளிதாகக் கைவிட்டு விட முடியும். அதற்கு அதிக நாள் தேவைப் படாது. நல்ல பாதை வகுத்துக் கொடுத்த அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, நமக்கென்று தனி வழி வகுக்கத் துடிக்கும் ஆண்களும் பெண்களும் அதன் விபரீத பலன்களைப் பற்றி சிந்திப்பதில்லை. பெண் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள், அவர்களுக்குத் துன்பம் வரும் போது விலகிப் போய் விடுவார்கள். அப்போதுகூட, எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அரவனணப்பவர்கள் பெற்றோர்கள் மட்டுமே என்பதைப் பிற்காலத்தில் உணருவார்கள். 

முன்பெல்லாம் ஆணுக்குப் பெண் நிகர் என்று சொல்லி வந்தார்கள். இது ஒன்றும் புதியதாகச் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. அர்த்தநாரீச்வரனாக இறைவன் காட்சி வழங்குவது "தொன்மைக் கோலம்" (எந்த யுகத்தில் நடந்தது என்று யாரால் சொல்ல முடியும்?) என்கிறார் மாணிக்க வாசகர். வேண்டுமானால் ஆணைக காட்டிலும் பெண் அதிகம் (உயர்ந்தவள்) என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு பட்டி மன்றத் தீர்ப்புக்கள் வழங்கக் கூடும். என்னதான் உண்மைகள் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தாழ்ந்துவிட்டோம் என்று சொல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறைவனுக்கு ஒரே ராத்திரி பூஜை(சிவ ராத்திரி) இருந்தும் இறைவிக்கு நவராத்திரி கொண்டாடுவதும் ஒரு தத்துவமே. அம்பிகையை "அபின்ன நாயகி ,பாகம் பிரியாள்,பிரியாவிடை என்றெல்லாம் பெயர்கள் இட்டு இறைவனோடு சேர்த்துத் தோடுடைய செவியனாகத் தானே பார்க்கிறோம். "எம் பிராட்டியும் எம் கோனும் எம் இல்லங்கள் தோறும் எழுந்தருள வேண்டும்" என்று திருவாசகம் வேண்டுகோள் விடுத்தபடி, வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, நம்மால் முடிந்த அளவாவது நமது நெறிமுறைகளைப் பின்பற்றினால் பயன் அடையப் போவது நாம் தானே. அந்த அம்மணி சொன்னது போல பலனே இல்லாமல் போனாலும் பின்பற்றுவதால் நஷ்டம் எதுவும் இல்லை என்பது மட்டும் நிச்சயம். 

Saturday, October 20, 2012

சுய நிதிக் கோயில்கள்


சில சமயங்களில் ஏற்கனவே பலமுறை சொன்னதையே  திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் தடவை சொன்னபோது இரண்டு பேர் காது கொடுத்துக் கேட்டார்கள் என்றால் , இன்னொரு முறை சொன்னால் வேறு இரண்டுபேர் கேட்க மாட்டார்களா என்ற எண்ணத்தால் இப்படித் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தக் காலப் பேச்சாக , "அரைத்த மாவையே அரைக்கிரார்கள்" என்று வேண்டுமானால் சொல்லி விட்டுப் போகட்டும். ஆனால், சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்ல வேண்டியவைகளை  சொல்லாமல் "நமக்கேன்" என்று மட்டும் இருந்துவிடக் கூடாது. கேட்டால், "சும்மா இருப்பதே சுகம்" என்று விவேகமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறோம்.
நல்லதைக் கேட்பவர்கள் இல்லையோ என்று நமக்குள் பலபேருக்கு சந்தேகம் வரலாம். சொல்கிறபடி சொன்னால் கேட்பவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள்.இதில் துளிக்கூட சந்தேகம் இல்லை. ஆனால் ஒன்று: சொல்பவன் சுயநலம் இல்லாமல் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அவனது வார்த்தைகளில் கேட்பவனுக்குமுதலில்  நம்பிக்கை ஏற்படவேண்டும் ஆகவே, அந்த அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட ஒருவனையே மக்கள் மதிப்பார்கள்.

கிராமங்களில் யாத்திரை செய்யும்போது, அங்கு மக்களை நல்ல பாதையில் சுய நலமில்லாமல் வழி நடத்துபவர்கள் மிகவும் குறைந்து விட்டதால், மக்கள் தன்னிச்சையாகச் செயல் படுவதைக் காண்கிறோம்.தீய வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களைப் பார்த்துத் தாமும் குறுக்குவழியில் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முனைகின்றனர். மற்றவர்களோ,அவர்களைப் பார்த்துக் குமுறத்தான் செய்ய முடிகிறது. மற்றவர்களை ஏமாற்றிப் பொருள் சம்பாதிக்கவும் துணிந்து விட்டனர். கோயில்களின் நிலையோ பரிதாபத்துக்கு உரியது. கோயில் இடத்தில் வீடுகளில் பரம்பரையாக வசிப்பவர்கள் , முப்பாட்டன் காலத்தில் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அற்ப வாடகையைக் கூடக் கோயிலுக்குச் செலுத்துவதில்லை. சென்னையிலும் பிற ஊர்களிலும் இவ்வாறு வாடகை பாக்கி , பல கோடிகள் என்று பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. அவ்வாறு  வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை  அந்தக் கோவில்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இதைப் பார்த்தாவது, வாடகையைக் கொடுக்க முன் வருவார்களா பார்ப்போம்.

கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து தரவேண்டிய குத்தகைப் பாக்கியை வசூலிக்க என்ன செய்யப்போகிறார்கள்? பெயரை எழுதி வைத்தால் அவர்கள் கவலைப் படப் போவதாகத் தெரியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் முடிவு தெரிய பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில் அனுபவிப்போமே என்று இருக்கிறார்கள் குத்தகைக் காரர்கள். அவர்களைத் தெய்வம் மட்டுமே திருத்த முடியும். மழையே பெய்யாமல் இருந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? வறண்டுபோன நிலத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். இந்த ஆண்டு அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. காவிரியும் பொய்த்து விட்டது. இப்பொழுதாவது தவற்றை உணர்ந்து திருந்துவார்களா? மழை பெய்தால் ஆறு வேலி நிலமும் , வெள்ளம்  நின்றால் ஆறு வேலி நிலமும் தருவதாக வேண்டிக் கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருப்புன்கூர் இறைவன் அவ்வண்ணமே அருளியபடியால், தன் பிரார்த்தனையை நிறைவேற்றினார். இக்கால விவசாயிகள் அதுபோல் நிலம் தரும் தாராள மனத்தவர்களாக இல்லாவிட்டாலும் , குறுவைப் பயிர்  நன்றாக விளைந்தால் , கோவிலுக்கு உரிய நெல்லை முழுவதுமாகத் தருவார்களா?

குளங்களும் பிற நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப் படுகின்றன. பல கிராமக் கோவில்களுக்கு உள்ளேயே வீடுகள் கட்டி இருக்கிறார்கள். தவறைச் சுட்டிக் காட்டுவோர் யாரும் இல்லாததால் , இறைவனே ஏதாவது வழியில் உணர்த்தியாக வேண்டும்
.
ஒவ்வொரு கோவிலும்  ஒரு நிர்வாக அதிகாரியின் பொறுப்பில் உள்ளது. கோவிலுக்கு வருமானம் இல்லாவிட்டால் அந்தக் கோவிலின் பக்கமே அவர் திரும்பிப் பார்ப்பது கிடையாது. தப்பித் தவறி அக்கோவிலைத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்பவர்கள் யாராவது முன்வந்தால் , கும்பாபிஷேகப் பத்திரிகையில் எல்லா அதிகாரிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கோவில் சார்பில் மரியாதை வேறு செய்ய வேண்டுமாம்! அற்ப சம்பளம் வாங்கும் சிப்பந்திகளுக்கு மாதக் கணக்கில் பாக்கி வைத்திருக்கும் இவர்களுக்குக் கண்டிப்பாக மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்.

இந்த நிலைக்கு யார் காரணம்? மக்கள் தான் என்று நிச்சயமாகக் கூறலாம். நாம் அக்கறை இல்லாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்துவிட்டால் , விளைவுகள் இப்படித்தான் இருக்கும். விமானத்தின் மீது செடிகள் முளைக்கும் போதே பிடுங்கி எறியாமல் இருந்துவிட்டு, அதுவே பெரிய மரமாக வேரூன்றியபின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது போலத்தான் இதுவும்.இவ்வளவையும் பார்க்கும் பொது, அறநிலையத்துறை அவசியமா என்று யார் கேட்கப் போகிறார்கள்?  குறைந்த பட்சமாக, அத்துறையை அரசின் தலையீடு இல்லாமலாவது செய்யலாம் அல்லவா? சுயநிதிக் கல்லூரிகள் இருக்கும்போது, சுயநிதிக் கோவில்களை உருவாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?