Tuesday, September 22, 2009

சிவ தருமம்

தர்மங்களில் உயர்ந்தது சிவ தர்மம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். செய்யும் செயல்கள் எல்லாம் ஒ சம்புவே , உனக்குச் செய்யும் ஆராதனை என்று கொள்வாய் என ஆதி சங்கரரும் பிரார்த்திக்கிறார். சங்கீதமும் ஈச்வர உபாசனை ஆகிறது என்று ஸ்ரீ தியாகராஜசுவாமிகளும் பாடுகிறார். ராஜாக்கள் சிவ தர்மம் தொடர்ந்து நடப்பதற்காக நிலங்களை அளித்தார்கள். ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்ட கோவிந்ததீக்ஷிதர் ,சிறுத்தொண்டர் ஆகியோரும் சிவ தர்மம் தழைக்கப் பணிசெய்தார்கள். பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த ஆலயத் திருப்பணிகளும் சிவ தருமங்களும் எல்லோருக்கும் தெரியும்.

நாளடைவில் இந்த தர்ம காரியங்கள் சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்தன. கோயில் நிலங்களில் இருந்து குத்தகை பாக்கி வசூல் ஆகாமல் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் ஆலயங்களில் பொறுப்பு ஏற்று நிலைமை இன்னும் மோசமானது. பொது மக்களோ அரசாங்கமோ தட்டிக் கேட்பதில்லை. அர்ச்சகர்கள் தங்கள் சொற்ப சம்பளத்தையும் பல மாதங்கள் கழித்தே பெறுகிறார்கள். பிரார்த்தனை ஸ்தலங்கள் உண்டி வருமானத்தில் இந்த நிலையில் இருந்து தப்பிக்கின்றன. கிராமக் கோயில்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. வெளியூருக்குப் பிழைக்கச் சென்றவர்கள் பலர் தங்கள் கிராமத்தை திரும்பிப்பார்பதில்லை.

நமக்கு சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி இருப்பவர் சிலர். பகவான் பார்த்துக்கொள்வார் என்று சிலர். இதில் குளிர் காய்பவர்கள் குத்தகைக் காரர்களும் வோட்டு வங்கிக்காக அலையும் அரசியல்வாதியும் தான். ஆன்மீக நாட்டம் உண்டு என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் தங்களுக்குப் பிரச்னை வந்தால்தான் சுவாமியைப் பற்றி நினைக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்கள் மிகவும் குறைந்து விடுவார்கள். கோயில்களும் சீரழிந்து போகும்.
இந்த நிலை மாற விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்தில் மாதம் தோறும் இயன்ற தொகையை சிவ தர்மமாக ஒதுக்க வேண்டும். பல வழிகளில் பணம் தண்ணீராகச் செலவழியும் இக்காலத்தில் இது ஒன்றும் சிரமான காரியமே இல்லை. மனதில் தர்ம சிந்தனை வந்தாலே போதும். ஆலய திருப்பணியோடு அர்ச்சகர்களின் நல்ல வாழ்க்கைக்கும் உபகாரம் செய்தால் அந்த தர்மம் குடும்பத்தையே காப்பாற்றும். கல்யாணங்களில் வீண் டாம்பீகமாக செலவாகும் தொகையில் சிறிய பங்கை சிவ தர்மம் செய்தால் தம்பதிகளின் வாழ்க்கை குறைவில்லாமல் இருக்கும். செய்து பார்த்தால்தான் இதன் அருமை புரியும்.

ஸ்தல யாத்திரை செய்பவர்கள் எத்தனை ஊர்கள் பார்த்தோம் என்று எண்ணி கொள்கிறார்களே தவிர அந்த ஊர் கோயில் களுக்கும் சிப்பந்திகளுக்கும் உதவி செய்தோமா என்று நினைப்பதில்லை. சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார்களே என்று கவலைப்படுவதில்லை. கோவில்கள் மரம் முளைத்து இடிந்திருந்தால் பாவம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள்.

நவீன வாழ்க்கை நடத்தும் நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பிறருக்காக உதவ முன்வர வேண்டும். ஏதாவது ஒரு வகையில் சிவ தர்மம் செய்வதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி நம்மை வாழ்வாங்கு வாழ்விக்கும். இது வரை செய்யாவிட்டால் இன்று முதல் செய்யத் தொடங்குவோம். அதுவே ஆலயங்களில் பூஜை செய்பவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையும்.