Tuesday, March 20, 2012

ஆலயத்திற்கு வந்துள்ள ஆபத்து

              விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய் விரி
              பண்ணமர்ந்து  ஒலி சேர் புறவார் பனங்காட்டூர்ப்
              பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடைக்
              கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.
                                                                                --திருஞானசம்பந்தர் தேவாரம்

              தன்னிடம் அடைக்கலமாக வந்த புறாவுக்காகத் தன் சதையையே அறுத்துத் தராசில் இட்ட சிபிச் சக்கரவர்த்தியின் கதை எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு போட்டாலும் தராசு நேராக நிற்காததால் தனது கண்ணையே பறித்து இட முற்படும்போது, பரமேச்வரன் பிரத்யக்ஷமாகி அவனுக்கு அருளிய ஊருக்குப்  புறவார் பனங்காட்டூர் என்று பெயர் வந்தது. அதனால் சுவாமிக்கும் நேத்திரோத் தாரகேச்வரர் என்று பெயர். சூரியன் இங்கு பூஜித்ததால் அவனது கதிர்கள், சித்தரை முதல் நாள் துவங்கி ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சுவாமியின் மீதும் பிறகு சத்தியாம்பிகையின் மீதும் விழுகின்றன. ஊரே பனங்காடாக இருந்ததால் பனங்காட்டூர் எனப்பட்டது. கோயிலுக்குள் ஸ்தல விருக்ஷமாக இரண்டு பனைமரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். தற்போது இவ்வூர்,பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இது, நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் இதற்கு உண்டு. ஒவ்வொரு பாடலும், "அருளாயே" என்று முடியும்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசீய நெடுஞ்சாலையிலிருந்து  முண்டியம்பாக்கம் அருகில், பண்ருட்டி செல்லும் சாலை பிரிகிறது. திருச்சி செல்லும் சாலையைப்போலவே இதையும் நால்  வழிச் சாலையாக மாற்றுவதற்கு தேசீய நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இந்தச் சாலைக்கு ஒரு வழியாக விமோசனம் வந்தது என்று ஆறுதல் அடையும்போது, கூடவே ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. இந்தச் சாலை, பனையபுரம் வழியாகச் செல்வதால், அங்குள்ள பாடல் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதுமான பனங் காட்டீசனின்  கோயிலை இடிக்க முன்வந்துள்ளது தேசீய நெடுஞ்சாலைத் துறை. இத்தகவல், செய்தித்தாள்களில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இத்தகவல், மார்ச் முப்பதாம் தேதியிட்ட குமுதம் ஜோதிடம் இதழில் வெளிவந்துள்ளதை அன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டவுடன், துக்கமும் அதிர்ச்சியும் மேலிட்டது. நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டாகி விட்டது. அதற்கு மேல் என்ன செய்யலாம்? சுவாமி பார்த்துக்கொள்வார் என்று, சிவனே என்று இருந்து விடலாமா? பூஜை முடிவில் அந்த ஊர்ப் பதிகத்தையும் பாராயணம் செய்தாகிவிட்டது. மனதில் சலனம் இன்னமும் நிற்கவில்லை.   நேரில் சென்று ஸ்வாமியிடமே ப்ரார்த்தித்துக்கொண்டு வரலாமா?

இணைய தளத்தின் மூலம் நேஷனல் ஹைவேய்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா வில் எதிர்ப்பைப் பதிவு செய்து, இம்முடிவை உடனடியாகத் தள்ளுபடி செய்து, வேறு வழியாக, கோவிலைப் பாதிக்காத படி, மாற்றுப்பாதை அமைக்க விண்ணப்பித்துள்ளேன். இதேபோன்று அந்த இணைய தளத்தில் ஏராளமானோர் எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசின் இந்து அற  நிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள கோயில் இது. எனவே, அறநிலையத்துறை கமிஷனருக்கும் தந்தி கொடுக்கும்படி, திரு ஏ எம் ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருக்கிறார்கள். அந்த கிராமத்து மக்களும் ஒன்று திரண்டு இவ்வாறு இடிப்பதை எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.

சமய உலகம் ஒன்று படவேண்டிய தருணம் இது. ஏதோ ஒரு கிராமத்துக் கோயில் தானே என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டியபோது , திருவெண்பாக்கம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்தை இடித்தார்கள். லோயர் அணைக்கட்டு கட்டக் கருங்கல் தேவைப் பட்டபோது, கங்கைகொண்ட சோழபுரக் கோயிலின் கோபுரத்தை இடித்து அக்கற்களைப் பயன் படுத்தினர் என்பர். நாம் மௌனிகளாக இருக்கும் வரையில் இப்படித்தான் ஒவ்வொரு கோயிலாக இழக்க நேரிடும். இதே, வேற்று மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தால் இடிக்கும் துணிவு அரசாங்கத்திற்கு உண்டா?

மதத்தின் காவலர்களாகக் கருதப்படும் மடாதிபதிகள் இச்செயலைக் கண்டிப்பதோடு, இதற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆன்மீகப் பற்றுள்ள வழக்கறிஞர்கள் இதற்கு ஆவன செய்ய முன்வரவேண்டும். இவ்வளவு ஏன்? அரசியலிலேயே ஆன்மீக நெஞ்சங்கள் ஏராளமாக உண்டே? தமிழக முதல்வர்மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். பத்திரிகை, மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள் இதனை முன்னின்று நடத்தித் தரவேண்டும். நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்று மகா பிரதோஷ தினம். " அருளாயே" என்று இத்தலப் பதிகத்தில் பாடல் தோறும் சம்பந்தர் வேண்டியது போல நாமும்,  நஞ்சை உண்டு எல்லா உலகங்களையும் காத்த நீலகண்டப் பெருமானிடம் வேண்டுவோம். இப்படிச் செய்யப்படும் பிரார்த்தனை கண்டிப்பாக வீண் போகாது.
                        "பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே" - சம்பந்தர்.  
http://www.nhai.asia/register/rgr/traffic.asp  என்ற முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.

Sunday, March 11, 2012

பத்திரிகைகளின் பிடியில் ஆன்மிகம்


           இந்து மதத்தைக் கேவலமாக சித்தரிப்பது ஒரு சில அரசியல் வாதிகளுக்கு வாடிக்கையாக இருக்கலாம். அவர்களும் தேர்தல் காலங்களில் அடக்கி வாசித்துத் தன் இரட்டை வேடத்தை நிரூபிப்பார்கள். பத்திரிகை உலகமும் இதே பாணியில் செயல் படுவது வேதனையிலும் வேதனை. ஒரு சில எதிர்ப்புக் குரல்களே ஒலிப்பதால் தங்கள் சமூகக் கடமையை(!) தொடர்ந்து செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நம்மை யாரும் திட்டாதவரையில் நாம் எதற்குக் கவலைப் படப்  போகிறோம்? ஊருக்கு ஊர் சத்  சங்கங்களும் ,அடியார் கூட்டங்களும் இருந்து என்ன பயன்? இத்தனை கேலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கே உரியது அல்லவா?

               சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கவர வேண்டி ஒவ்வொரு நாளும் ஒரு இணைப்பு மலரை வெளியிடும் தமிழ் நாளிதழ்கள் , ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. காரணம், ஆன்மிகம், வார பலன்,மாத பலன் என்றெல்லாம் வெளியிட்டால் மக்கள் விரும்பிப் படிப்பதே. இது போதாது என்று வார மலர் என்ற மசாலா வேறு. அடுத்தவர் மனதைப் புண் -படுத்தாதவரை எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். ஆனால் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நையாண்டி செய்வதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

                 உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தமிழ் நாளிதழ் ஒரு உண்மை நிகழ்ச்சியை(?) வெளியிட்டுள்ளது. அது உண்மையாக நடந்ததா  இல்லையா என்பதை அக்கட்டுரையை  எழுதியவரிடமே விட்டுவிடுவோம். சென்னை புரசவாக்கம் கங்காதரேச்வரர் கோவிலில் சாயரட்சை  பூஜையைக் காணத் தன் மனைவியுடனும், நான்கு வயது மகனுடனும் வந்திருந்தாராம் இப்"பாக்கிய"சாலியான கட்டுரை ஆசிரியர். பூஜை முடிவில் ஓதுவார் ஒரு பாடல் பாடி முடித்ததும் நிசப்தம் நிலவிய சில வினாடிகளில் இவரது நான்கு வயது பிள்ளை பாடின பாடல் என்ன தெரியுமா? " வா வாத்யாரே வூட்டாண்டே..." என்ற சினிமாப் பாடல். இதைக் கேட்ட பக்தர்களுக்கு சிரிப்பு வந்து விட்டதாம். ஆளுக்கொரு பாட்டு பாட வேண்டும் என்று குழந்தை நினைத்து இப்படிப் பாடி விட்டான் என்ற வியாக்கியானம் வேறே! அதை விடக் கொடுமை என்ன தெரியுமா? " கங்காதரேச்வரர் காதில் கட்டாயமாக ஒரு நேயர் விருப்பப் பாட்டு விழுந்து விட்டது." என்று எழுதியிருப்பது. அது மட்டுமல்ல. " குழந்தை பாடியதால் அதை அவர்  பக்திப் பாட்டாக எடுத்துக் கொண்டிருப்பார்" என்று அருகிலிருந்த பெரியவர் சொன்னாராம் ! திருஞானசம்பந்தர்,மார்கண்டேயர்,சண்டிகேஸ்வரர்,துருவன்,பிரகலாதன் போற தெய்வீகக் குழந்தைகள் தோன்றிய புனித மண்ணிலா இப்படி?

               நம் வீட்டிலும் தான் குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர்கள் அங்கே சினிமாப் பாடல்களையா பாடுகிறார்கள்? இதற்குத் தான் வளர்க்கும் விதம் முக்கியம் என்றார்கள் பெரியோர்கள். ஆனால் சினிமாப்பாடல்களைக் குழந்தைகள் பாடச் சொல்லிக் கேட்டுப் புளகாங்கிதம் அடையும் சீதாப் பாட்டிகளும் அப்புசாமிகளும் அதை வீட்டோடு நிறுத்திக் கொள்ளலாமே. தெய்வீகப் பாடல்களைக் குழந்தைகளுக்குப் பெரியோர்கள் சொல்லிக் கொடுத்த காலம் போய் இவ்வாறு சினிமாப் பாடல்களைப் பாடும் நிலை வந்துவிட்டது! இவை  உண்மையோ கற்பனையோ நாம் அறியோம். பிரபல எழுத்தாளர் எழுதிவிட்டார் என்பதற்காக இதை வெளியிட்டுள்ள நாளிதழை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படி முன்வருவோர்  யாரும் இல்லாதவரை இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும்  நிலை நீடிக்கும்.

Saturday, March 10, 2012

மடங்கள் நிர்வாகத்தில் ஆலயங்கள்


இந்து அறநிலையத்துறை துவக்கப்பட்டபோது, வருவாய் இல்லாத கிராமக் கோவில்களும் உபரி வருமானத்தைக் கொண்டு பராமரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உண்டியல் வருமானம் அதிகமாக உள்ள கோயில்களே கவனிக்கப்பட்டு, மற்றவை புறக்கணிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. உண்டியல் வருமானம் சொற்பமாக இருந்தாலும் ஆலயத்திற்குச்  சொந்தமான நிலங்களிலிருந்து வருமானம் வந்தாலே போதும், அவற்றை நன்றாக நிர்வகிக்க முடியும். யாரிடமும் கை எந்த வேண்டிய நிலை ஒருபோதும் இருக்காது. ஆலய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல் படாமல் இருந்தாலே போதும், எல்லா ஆலயங்களும் தங்கள் வருமானத்திலேயே திருப்பணியும் கும்பாபிஷேகமும் செய்துகொள்ள முடியும். இதில் முதலாவதாக, சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் முனைந்து செயல் பட வேண்டும்.

கோயில்களின் விவசாய நிலங்களின் வருமானம் பறிபோன நிலையில் பரிதவிக்கும் போது, கோயில்களுக்கு உள்ளேயே ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. சுற்றுச் சுவர் இடிந்து பல ஆண்டுகள் திரும்பக்கட்டப் படாத நிலையில் உள்ள கிராமக்கோவில்களின் உள்ளே வீடுகளைக் கட்டிக்கொண்டு அக்கிரமம் செய்கிறார்கள். கேட்பார் இல்லை! நிர்வாக அதிகாரிகள் பலர் இதுபோன்ற கோயில்களின் பக்கமே  தலை காட்டுவதில்லை. வந்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா என்ன? கோயில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளிலிருந்து சரிவர வாடகை வசூலிக்கப் படுவதில்லை. அப்படி ஒருக்கால் வசூலித்தாலும் அது பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வாடகையாகத் தான் இருக்கும்.
பல ஊர்களில் உற்சவ மூர்த்திகள் களவு போவதைக் காரணம் காட்டி , பாதுகாப்பு போதுமான அளவு உள்ள கோயில்களும் நமக்கு ஏன் வம்பு என்று அம்மூர்த்திகளை அருகிலுள்ள பெரிய ஊர்க் கோயில்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்துப் பூட்டி விடுகின்றன. இதற்காகவா அவற்றை  அரும் பாடுபட்டுச் செய்து வைத்தார்கள்?  பாதுகாப்பு அறைகளையும் காவலர்களையும் அந்த அந்த ஊர்களிலேயே ஏன்  அமைத்துத் தருவதில்லை? பூஜையும் அபிஷேகமும் இல்லாமல் பாசிபிடித்து ,காற்றுப் புகாத அறைகளில் அடைக்கலம் அடைந்த அவற்றைக் காண்போர் மனம் நிச்சயம் உருகும்.

ஒரு காலத்தில் சுத்தமாகவும் பொலிவாகவும் விளங்கிய ஆலயங்களைக் கண்டால் , இன்ன மடத்தால் நிர்வகிக்கப்படும் ஆலயமாக இருக்கலாம் என்று மக்கள்  நினைத்தனர். ஆனால் அவற்றின் இன்றைய நிலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதில் சுவர்கள் இடிந்தும் ,ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் செய்யப்படாமலும், மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் சன்னதியில் ஒழுகியும் , விமானங்களிலும் கோபுரங்களிலும் மரங்கள் முளைத்தும் பேரழிவுக்கு ஆயத்தமாகிவிட்டன  மடத்துக்குச் "சொந்தமான" ஆலயங்கள். அங்கு பணிபுரியும் சிப்பந்திகளின் சம்பளமோ மிகக் குறைவு. அதை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பத்தை நடத்துவார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?

மடங்களின் கோயில்களிலும் நிலவருவாய் குறைந்து விட்டது உண்மைதான். அதேசமயம் அதே மடங்களால் நிர்வகிக்கப் படும் சில கோயில்கள் பரிகாரத்தலங்களாக விளங்குவதால் உண்டியல் மூலமும் , பிற கட்டணங்களின் மூலமும் நல்ல வருவாய் ஈட்டுகின்றன.  அதைக் கொண்டு மற்ற தேவஸ்தானக் கோயில்களைச் செப்பனிடவும் குடமுழுக்கு செய்யவும் முடியாதா? யாரோ செய்கிறார்கள் என்பதற்காக இவர்களும் கல்லூரிகள் கட்டி அவற்றை நிர்வகிக்க வேண்டுமா? இப்படிச் செய்வதால் குருபீடத்தின் பிரதான  நோக்கம் கை விடப்படுகிறது. நித்தியபூஜை,ஆலய பராமரிப்பு, தல  யாத்திரை, சிஷ்யர்களுக்கு நன்னெறி காட்டுதல், வடமொழி-தென்மொழி நூல்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்காகவே ஸ்தாபிக்கப்பட்ட அம்மடங்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிப் போக வேண்டுமா? இப்படிச் சொல்வதால் குருபீடங்களைக் குறை கூறுவதாகக் கருதக் கூடாது. அற  நிலையத்துறை செய்யத் தவறியவற்றை மடாலயங்கள் செய்து , முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற ஆவலால் இப்படி எழுத நேர்ந்தது.

மடாலயங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது இது தான். மடத்துத் தம்பிரான் ஸ்வாமிகள்  அல்லது தகுந்த அலுவலர்களைக் கொண்டு ஒவ்வொரு தேவஸ்தானத்தின் நிதி நிலையையும் பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்பு தேவையான அளவு உள்ளதா, ஆலயக் கட்டமைப்பு நன்கு உள்ளதா,திருவிழாக்களும் விசேஷ தினங்களும் நடைபெறுகின்றனவா, குத்தகைக்காரர்களிடம்  பேசி வருவாயைப் பெருக்க முடியுமா, கட்டளைக் காரர்கள் மூலம் , நின்றுபோன விழாக்களைத்  துவங்க முடியுமா, சேவார்த்திகளின் குறைகள் நிவர்த்தி செய்யப் படுகின்றனவா போன்ற வினாக்களுக்குத் தணிக்கை மூலம் விடை கண்டு உடனே ஆவன செய்ய வேண்டும்.அதேசமயம் சில மடத்துக் கோயில்கள் அவ்வப்போது திருப்பணி செய்யப்பட்டும்,விழாக்கள் நடத்தப்பட்டும்,பணியாற்றிவருவதை மறுக்கமுடியாது.

மேலே சொன்னது எல்லாம்  "எல்லாம் சிவன் செயல்" "சும்மா இரு சொல் அற" என்ற வாக்கியங்களை சாதகமாக எடுத்துக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பவர்களைப் பற்றியே.இதனால்  பாதிக்கப்படப்போவது நிலத்தை மட்டுமே நம்பி இருக்கும் கிராமத்து தேவஸ்தானங்களும் ,அவற்றின் சிப்பந்திகளுமே. விரைந்து செயல் பட்டால் மடத்தின் நற்பெயரும் காப்பாற்றப் பட்டுவிடும். இல்லையேல், மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்க நேரிடும்.