Friday, July 24, 2015

ஏகாம்பரநாதருக்குப் புதிய உற்சவரா?

எத்தனையோ ஆலயங்களில் பல்லாண்டுகளாக விக்கிரகங்கள் களவாடப்பட்டிருந்தும் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் நமது அரசாங்கம் அலட்சியம் காட்டி வருவதை 23.7.2015 தேதியிட்ட   அமெரிக்க நாளிதழான " நியூயார்க் டைம்ஸ் " சுட்டிக் காட்டியுள்ளது. இந்தக் கூட்டுச் சதிக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த இத்தனை காலதாமதம் ஆவதும் வியப்புக்குரியது என்று அதில் கருத்துத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என பெயரில் சுற்றிலும் உள்ள ஊர்களின் விக்கிரகங்களை ஒரு கோவிலில் வைத்துப் பூட்டியுள்ளதை இந்து  அறநிலையத்துறை செய்துவரும் நிலையில், சுத்தமல்லி கிராமத்தில் உள்ள மூர்த்திகளோடு , அருகிலுள்ள  கிராமக் கோயில்களின் விக்கிரகங்களும் அந்த ஊர்ப் பெருமாள் கோயிலில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தும், கொள்ளையர்கள் அவற்றைக் களவாடிச் சென்றதையும் இப்பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. நம்மவர்கள் எச்சரித்தால் அதை ஏற்றுக்கொள்வதில் கெளரவம் பார்க்கும் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. இதனைப் பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைத்தாலும் அக் கமிட்டியின் பரிந்துரைகள் தயார் ஆகப் பல மாதங்கள் ஆகும். அவை ஏற்றுக் கொள்ளப்படாமல் கிடங்கில் பல்லாண்டுகள் போட்டுக் கிடத்தப்படும் . அது வரையில் விக்கிரகங்கள் எவ்வாறு பாதுகாக்கப் படும் என்பதே கேள்வி.

பாதுகாப்பான ஆலயங்களிலும் விக்கிரகங்களின் பழமை காரணமாகத் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. அவ்வாறு முற்றிலும் தேய்ந்தபிறகே அதனைப் பழுதுபார்ப்பதா அல்லது அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய விக்கிரகத்தை வார்த்துக் கொள்வதா என்று யோசிக்கிறார்கள். அவ்வாறு விக்கிரகங்கள் தேய்வதன் முக்கிய காரணம் தினமும் அபிஷேகங்கள் செய்வதும், அவ்வாறு செய்தபின் அவற்றில் ஒட்டியுள்ள நீரை முற்றிலும் அகற்றாமல் விடுவதுமே ஆகும். ஒருவேளை மூர்த்தியை உலர்ந்த வஸ்திரத்தால் துடைத்தாலும், மூர்த்தியின் பீடத்திலும்,அதன் கீழும் உள்ள ஈரம் துடைக்கப்படாமல் அப்படியே விட்டு விடப் படுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் அரிப்பு ஏற்பட்டுப் பசுமை ஆகிவிடுவதைக் காண முடியும்.  நாளடைவில் அவ்விடங்கள் வேகமாகத் தேய ஆரம்பித்து விடுகின்றன. காற்றுப்பட்டே கறுத்துவிடும் விக்கிரகங்களும் உண்டு. ஒரு விக்கிரகம் தேய ஆரம்பித்த உடனே ,அதனை மேலும் தேயாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. விசேஷ தினங்களில் மட்டுமே உற்சவருக்கு அபிஷேகங்கள் நடத்துவது தேய்மானத்தைத் தாமதப் படுத்தும். தினந்தோறும் நீரால் புரோக்ஷணம் செய்யலாம். ஆகம வல்லுனர்கள் கவனத்திற்கு இதனை விட்டு விடலாம். வைணவக் கோயில்களில் இம்முறை பின்பற்றப்படுகிறது.  சிவாலயங்களிலும் நடராஜ மூர்த்திக்கு ஆண்டில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

விக்கிரகங்கள் பலம் குறைவதற்கு மற்றொரு முக்கியமான  காரணம் அவற்றைக் கையாளும் முறை. ஆர்வம் காரணமாகப் பல ஊர்களில் சுவாமியைத் தோளில் வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்( குதிக்கிறார்கள் என்று  கூடச் சொல்லலாம்). வாகனத்தில் வைத்துக் கட்டப்பட்டிருக்கும் விக்கிரகத்தின் அடிப் பாகம் ஏற்கனவே பலவீனமாக இருந்தால், அதை இச்செயல் மேலும் வலி  இழக்கச் செய்யக் கூடும். சில ஊர்களில் நடனம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 90 டிகிரிக்கு சுவாமியைத் தோளில் வைத்தபடி சுழற்றுகிறார்கள் . அப்படிச் செய்யும்போது தோளில் இருந்து தவறிப் பல்லக்கோடு சுவாமி வீதியில் விழுந்ததையும்  பலர் அறிவர். தூக்குபவர்களின் நிலையோ சொல்லும் தரமன்று! இப்படி இருக்கும்போது இந்த ஆட்டம் எதற்காக? மெதுவாக அசைந்தாலே போதும் அல்லவா?

பின்னணி இவ்வாறு இருக்கும்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமியின் (உற்சவ மூர்த்தியின்) பீடம் பழுதடைந்ததாகவும் அதனால் வசந்த உற்சவம் நின்று விட்டதாகவும் , வேறொரு புதிய மூர்த்தியை காஞ்சி சங்கர மடம் செய்து  உற்சவத்திற்காகத் தருவதாகவும், அதன்படி செய்வதா அல்லது பழைய விக்கிரகத்தைப் பழுது பார்ப்பதா என்று யோசித்து வருவதாகவும்  பத்திரிக்கை செய்தி குறிப்பிடுகிறது.
இதனால் பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. பீடம் முற்றிலுமாகப் பழுது அடைவதை ஏன் முன்னரே கண் காணிக்கவில்லை?

2 கண்காணித்திருந்தால் தடுப்பு நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை?

3 பங்குனி உற்சவத்தில் வீதி உலா சென்ற மூர்த்தி ஒரு சில மாதங்களிலேயே முற்றும் பழுதாகி விட முடியுமா?

4 சுவாமியின் நெற்றியில் பல்லாண்டுகளாக சந்தானம் இடப்பட்டதால் அதிலுள்ள நீர் அப்பகுதியை ஆழமான வடுவாக்கி விட்டது தெரிந்தும், தினந்தோறும் அந்த வடுவை அடைப்பதுபோலப் பெரிய அளவில் சந்தனம் இடப்படுவதால் அப்பகுதி மேலும் பாதிக்கப் படாதா? நெற்றியில் அவ்வடுவை மறைக்கக் கல் இழைத்த நெற்றிப்பட்டை வைக்கலாமே! பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். சந்தனத்தை சிறிய பொட்டாக வைத்து நெற்றிப் பட்டையை வைப்பதால் மூர்த்திக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் செய்ய முடியும்.                   ( இதனை  " சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு " என்று சம்பந்தரும் பாடி இருக்கிறார்.)

5  எக்காரணம் கொண்டும் மூர்த்தியைக் கோயிலுக்கு வெளியில் அனுப்பிப் பழுது பார்க்கக் கூடாது. அவ்வாறு அனுப்பப்படும் மூர்த்திகள் களவாடப்பட்டுப் போலியான மற்றொரு விக்கிரகம் கோயிலுக்கு வந்து சேரும் அபாயம் இருக்கிறது. இதனை மேற்கூறிய அமெரிக்க நாளிதழ் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

6 கோயிலுக்குள் தக்க ஸ்தபதியாரைக்  கொண்டு பழுது பார்க்கும்போது ஆலய நிர்வாகிகளும், சிவாசார்யர்களும் உடன் இருத்தல் மிக மிக முக்கியமானது. அவ்வாறு துவங்கும் முன்பாக மூர்த்தியைக்  கலசத்தில் ஆவாகனம் செய்தும், வேலை முடியும் வரை ஸ்ரீ ருத்ரம்- திருமுறைப்  பாராயணங்கள் சன்னதியில் பாராயணம் செய்யப்படவேண்டும். இந்நிகழ்ச்சி பக்தி பூர்வமாகச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.. வேலை பூர்த்தியானதும் கலச நீரால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். ஆகம விற்பன்னர்கள் ஆகம வழி நின்று இதற்குத் துணை புரிய வேண்டும்.

7 புதிய விக்கிரகம் செய்து கொண்டு மாற்று வழி தேடுவது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய விக்கிரகமும் பூம்புகார் விக்கிரகமும் ஒன்றே என்று ஆகி விடும். பழைய மூர்த்திக்கு அதன் சாந்நித்தியம் பெருமை சேர்க்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. காஞ்சியிலும் பிற ஊர்களிலும் உள்ள சிவனடியார்கள் இக்கருத்தை ஏற்பர் என நம்புகிறோம்.

பலமுறை எழுதியும் பத்திரிகைகள் விக்கிரகத்தை தெய்வமாகக் கருதாமல் உலோகச் சிற்பமாகவே காண்பது வேதனைக்கு உரியது. அதன் மதிப்பு எவ்வளவு என்பதிலும் எந்த  உலோகத்தினால்  செய்யப்பட்டது என்பதிலுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆர்வத்தால் அடியார்களே வலைத்தளங்களில் கோயில்களில் உள்ள மூலவர்  மற்றும் உற்சவர் படங்களை அடிக்கடி வெளி யிடும்போது , பரபரப்பான செய்திக்காகக் காத்திருக்கும் செய்தித் தாள்களைப் பற்றிச் சொல்வானேன்? இத்தனைக்கும் காரணம் நம்மிடையே தெய்வத்திடம் பக்தியும் பயமும் இல்லாமல் போனதுதான்.    

Thursday, July 16, 2015

சிலைத் திருட்டைத் தடுக்காதது ஏன் ?

சுமார் அறுபதாண்டுகள் முன்னர்  தமிழகக் கோயில்கள் ஓரளவு நன்கு பாமரிக்கப்பட்டு வந்தன என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக, ஆதீனங்களால் பராமரிக்கப்பட்டவை நன்கு திருப்பணி செய்யப்பட்டும் ,நிர்வாகிக்கப்பட்டும் நித்திய பூஜைகள், விழாக்கள் முதலியன  நடத்தப்பட்டும் எல்லோரது பாராட்டையும் பெற்று விளங்கின. நாளடைவில், நில வருவாய் குன்றியதால் நிலை சீர்குலைய ஆரம்பித்தது. இருந்தாலும்,பரிகாரம் செய்து கொள்ளவும் , மணிவிழா போன்ற வைபவங்களை நடத்திக் கொள்ளவும் மக்கள் கூட்டம் பெருகி வருவதால் அத்  தலங்களுக்கு  கட்டண வசூலும் உண்டி வசூலும் பெருகி வருவதை மறுக்க இயலாது. இப்படி, வருமானம் உள்ள கோயில் அதே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மற்ற  கோயில்களுக்கு உதவ முடியும்.

துரதிருஷ்ட வசமாக நாம் காணுவது வேறாக இருக்கிறது. ஆதீனக் கட்டுப்பாட்டில் வரும் பல ஆலயங்கள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஐம்பதாண்டுகள் மேலாகப் பொலிவிழந்து இருக்கின்றன. சில இடங்களில் இடிபாடுகளோடு இருப்பதையும் பார்க்கிறோம். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கோயில்களைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது நிச்சயம் அவர்களால் முடியும். அதனைத் திருவாவடுதுறை ஆதீனம் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செய்து காட்டியுள்ளது. அவர்களது ஆலயங்கள் திருப்பணி செய்யப்பெற்றுக் குட முழுக்கு நடத்தப் பட்டுள்ளன. பிற மடங்களில் ஏன் இது சாத்தியமாகவில்லை என்பது தெரியவில்லை.

திருப்பணி நடைபெறாதது ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்குப் பாதுகாப்பாவது போதிய அளவு வழங்கக் கூடாதா?

விக்கிரகங்களும்,கலசங்களும்,ஆபரணங்களும்,உண்டியலும்  திருடப்படும் இக்காலத்தில் முன்னைவிட அதிக விழிப்பாக இருக்கக் காணோமே!! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தால் திருட்டுக்கள் குறைக்கப்படலாம் அல்லவா? மெய்க்காவல் புரியும் சிப்பந்திகள் பெரும்பாலும் முதுமை அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். தகுந்த நபர்களை நியமித்து, தக்க ஊதியம் அளித்து, உறுதியான  கதவுகளும் எச்சரிக்கை மணியும் அமைத்துத் தர வேண்டியது தானே?

சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதீனக் கோயிலில் கொள்ளையர்கள் புகுந்து முக்கியமான மூர்த்தியை எடுத்துச் சென்று விட்டதாகப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. ஆலயத்தின் பாதுகாப்பு குறித்துத் தணிக்கை நடைபெற்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்க முடியாது. வருமானம் அதிகம் இல்லாத தேவஸ்தானம் என்பதால் நிர்வாகமே இப்படி அலட்சியப் படுத்தலாமா? ஆதீன கர்த்தரும்,தம்பிரான்களும்,பிற மடத்து அதிகாரிகளும் ஆண்டுக்கு எத்தனை முறை வருகை தருகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அடியார்களாகிய நாம் செய்யக் கூடியவை என்ன என்பதை சிந்திக்கலாம். விக்கிரகங்களுக்குப் பாதுகாப்பு அறைகள் கட்டித்தர முன் வரலாம். அவற்றில் தொங்கு பூட்டைத் தவிர உள் பூட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். திருடர் அலாரம் அமைத்துத் தரலாம். இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம்.
இறைவன் தன்னை வைதாரையும் வாழ்விப்பவன், குற்றம் பொறுப்பவன்  என்றெல்லாம் புகழப் படுகிறான். அதனால்தான் உரிமையோடு இப் பாதகங்களைச் செய்கிறார்களோ தெரியவில்லை!  காமனைக் கண்ணால் விழித்தவன் இப்பாவியர்களைத் தண்டிக்காதது ஏன் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கேவலம் பணத்திற்காகக்  கோவிலைக் கொள்ளையடிக்கும் கும்பல் முற்றிலும் ஒழிக்கப் படும் வரை இக்குற்றங்கள் நீடிக்கும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அடியார்கள் செய்த பாவம் தான் என்ன?  கண்களும் காதுகளும் செய்த பாவம், இக் கொடுமைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேலும் எங்களுக்குத் தாங்கும் சக்தி இல்லை. நீயே கதி என்று இருக்கும் அடியார்கள் படுவது இதுவேயானால் உமக்கே பழி வந்து சேரும். அதற்காகவாவது,பிரிந்து சென்ற நீர் மீண்டும் திருக் கோயிலுக்கு எழுந்தருளி எங்களை வாழ்விக்க வேண்டும் என்று உனது பொன்னர் திருவடிகளுக்கு விண்ணப்பம் செய்வதைத் தவிர எங்களால் வேறென்ன செய்ய முடியும்? 

Monday, July 13, 2015

எதிலும் தமிழ் என்பது கோவிலுக்கு மட்டுமா?

"  எந்நாட்டவர்க்கும் இறைவா"  என்று திருவாசகம்  சிவபெருமானைத் துதிக்கும்போது, இறைவன்  எல்லா உயிர்களுக்கும் ,எல்லா மொழியினர்க்கும் பொதுவானவன் என்பது அறியப்படும். அதிலும் புண்ணிய பூமியாகிய பாரத நாட்டைப் பெரிதும் விரும்பி அருள் செய்பவன் அவன். அதைக்காட்டிலும் தென் தமிழகத்தை சிவலோகமாக்கியவன் என்றெல்லாம் அவனது பெருமைகள் பேசப்படுகின்றன.  இருப்பினும் எல்லா மொழியாலும் வணங் கப்படுபவன் என்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குள்தான் விருப்பு வெறுப்பு ஆகியவை இருக்கின்றன. ஆனால் பெருமானோ, " வேண்டுதல் வேண்டாமை இலான் "  என்று புகழப்படுகிறான்.
நாம் பிறரைப் போற்றத் தவறினாலும் ஒருநாளும் இகழ்ந்து ஒதுக்கத் தவறுவதில்லை. தமிழே தமது மூச்சும் பேச்சுமாக வாழ்ந்தவர்களை  மறந்து விட்டு, என்னால் தான் தமிழ் வாழ்கிறது என்று சொல்பவர்களைத் தான்  நாம் இன்று போற்றுகிறோம். இந்த ஒரு நூற்றாண்டு கால  மாறுதல்களுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், துவேஷமே முதலிடம் பெறுகிறது என்பதைக் காணும் போது அதிர்ச்சி அடைகிறோம்.

பிறமொழிகளின் ஆதிக்கத்தால் தமிழ் வழக்கொழிந்து விடும் என்று பேசுபவர்கள் நிறைய உளர்.  வீட்டிலேயே தமிழில் பேசுவது குறைந்து வருகிறது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. பிழைக்கும் வழி தேடிப் பிற நாட்டு மொழிகளைப் பள்ளிகளிலேயே கற்று விட முன் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நமது தமிழ் பாடத்திட்டம் எவ்வளவு கீழ்த் தரமாகப் போய் விட்டது என்று எவ்வளவு பேர் கவலைப் படுகிறோம்? பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எத்தனை பேர்  பிழை இல்லாமல் தமிழ் எழுதுகிறார்கள்?  தமிழ் உச்சரிப்பே சரிவராத நிலை அதைவிடக் கொடுமை! லகரம் ,ளகரம் ,ழகரம் , ணகரம் போன்றவை படும் பாட்டைத்தான் அன்றாடம் கேட்கிறோம்! முதலில் அதை யார் சரி செய்யப்போகிறார்கள்? வெறும் வீர வசனம் பேசி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவர்?  

அண்மையில் நடைபெற்ற " உலக யோகா தினம் "  அயல் நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் எந்த ஒரு நாடும் ' யோகா " என்ற சொல்லைத்  தங்கள் மொழியில் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. காரணம் இதுதான்.  இந்த ஒரு செயலால் தங்கள் மொழிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதாததுதான். இதைப் பார்க்கும்போது நமக்கு மட்டும்    ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை வருகிறது என்று புரியவில்லை. நவீன யுகத்தில் விஞ்ஞானச் சொற்கள் ஏராளமாக உண்டாக்கப்படும் நிலையில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் நமது மொழிக்குக் குந்தகம் ஏற்பட்டு விடாது.

தமிழகத்தில் ஒரு கண்டுபிடிப்பைச் செய்து அதை புதிய ஒரு சொல்லால் அழைத்தால் உலகம் ஏற்காமலா போய் விடும்?  பிற நாட்டுப் பொருள்களை வாங்கும் போது அவர்கள் பெயரிட்ட படியே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கஷ்டப்பட்டாவது அதை மொழி பெயர்த்து மக்களிடம் திணிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?  உலகத்திலேயே மிக அதிகமான  எழுத்துக்களை       ( 237)  வைத்துக் கொண்டும் பழக்கத்தில் இருக்கும் எழுத்துக்களை வைத்துக் கொண்டுதானே மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது? அப்படியானால் ஞ , ங, போன்ற எழுத்துக்களுக்கு விடிவு காலமே கிடையாதா?

நிலைமை இப்படி இருக்கும்போது, அடுத்த மொழியின் மீது நாம் காட்டும் துவேஷத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை! அதிலும் ஆன்மீகத்தில் இந்த துவேஷம் அதிகமாகவே காட்டப்படுகிறது. உலகிற்கே நாயகனாகிய கடவுளை எவ்வாறு தமிழ்க் கடவுள் என்ற குறுகிய வலைக்குள் கட்டுப் படுத்த முடியும்?  வடமொழியை விரட்டுவது என்ற எண்ணம் வந்து விட்ட பிறகு , தமிழ் வேள்வி, தமிழில் அர்ச்சனை , தமிழில் வழிபாடு என்று ஒவ்வொன்றாக வந்து மக்களைப் பிளவு படுத்துகின்றன. எத்தனையோ தலைமுறையாக வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்களும் அங்கு எழுந்தருளியுள்ள தெய்வங்களின் பெயர்களும் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். சென்னை- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள பழைய சிவத்தலம் திண்டிவனம் என்பது. புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்ததால் திந்திரிணி வனம் எனப்பட்டது. ஆகவே சுவாமிக்குத் திந்திரிணீசுவரர்  என்று பெயர் வந்தது.  அதை ஒரு சாரார்  புளியங்காட்டு ஈசர்  என்று தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள். கோவிலில் மட்டுமே தமிழ் இருந்தால் போதாது. இதெல்லாம் தாழ்வு மனப்பான்மையால் வந்த விளைவு.

 ஏதேதோ நவீனப் பெயர்களை ஏற்கிறோம்,நவீனப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்கிறோம், குழந்தைகள் மம்மி,டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கொள்கிறோம் என்ற நிலையில் தமிழைப் பற்றிக் கவலைப் படாதவர்கள்,  கோவிலைக் குறி வைப்பதன் நோக்கம் தான் என்ன ?  பிரதோஷம் என்று சொன்னால் இப்போது பட்டி தொட்டிகளில்  எல்லாம் புரிந்து கொள்கிறார்கள். இடபதேவர் திருநாள் என்று மாற்றுவதால் குழப்பமே ஏற்படுகிறது. அபிஷேகம் என்று தான் மக்கள் சொல்வார்களே தவிர நீராட்டல் என்று யார் சொல்வார்கள்? இப்படி ஏட்டிக்குப் போட்டியாகச்  செய்வதால் பிற சமயத்தவர்களுக்குச்  சாதகமாகப் போய் விடுகிறது. தமிழ் மறை என்பது போன்ற சொற்களை நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் நூல்களுக்கு வேதாகமம் என்று பெயர் இடுகிறார்கள்.

இப்படி எழுதுவதால் நாம் எவருக்கும் தமிழார்வத்தில் குறைந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் மொழியை பலப் படுத்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மில்லியன் கணக்கில் வெளிநாட்டிலுள்ள  சர்வகலாசாலையில் தமிழ்ப் பிரிவை ஏற்படுத்தி விட்டால் மட்டும் போதாது. மக்களுக்குப் புரியும் எளிய சொற்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்  இல்லாவிட்டால் , வட்டாச்சியாளர், கோட்டாட்சியாளர், இயக்குனர் ,பேருந்து,உந்து வண்டி  போன்ற  சொற்கள் பலகையில் மட்டுமே இருக்குமே தவிர மக்கள் வாயில் இருக்காது. நமது வீடுகளில் நவராத்திரியின்போது கலைவாணியின் திருவுருவத்திற்கு முன்பாக நாம் படிக்கும் வடமொழி மற்றும் தமிழ் நூல்களோடு நம் குழந்தைகள் படிக்கும் ஆங்கில நூல்களையும் வைத்து, அனைவரும் கல்வி அறிவு  பெற வேண்டும் எனத் துதிக்கிறோம். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்த அவளுக்கு எல்லா மொழிகளும் ஏற்புடையதுதானே? ஆகவே,தமிழ்த் தாய் நமக்கு முத்தான சொற்களையும், நற்பண்புகளையும் வழங்கி அருளுவாளாக.