Monday, July 13, 2015

எதிலும் தமிழ் என்பது கோவிலுக்கு மட்டுமா?

"  எந்நாட்டவர்க்கும் இறைவா"  என்று திருவாசகம்  சிவபெருமானைத் துதிக்கும்போது, இறைவன்  எல்லா உயிர்களுக்கும் ,எல்லா மொழியினர்க்கும் பொதுவானவன் என்பது அறியப்படும். அதிலும் புண்ணிய பூமியாகிய பாரத நாட்டைப் பெரிதும் விரும்பி அருள் செய்பவன் அவன். அதைக்காட்டிலும் தென் தமிழகத்தை சிவலோகமாக்கியவன் என்றெல்லாம் அவனது பெருமைகள் பேசப்படுகின்றன.  இருப்பினும் எல்லா மொழியாலும் வணங் கப்படுபவன் என்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குள்தான் விருப்பு வெறுப்பு ஆகியவை இருக்கின்றன. ஆனால் பெருமானோ, " வேண்டுதல் வேண்டாமை இலான் "  என்று புகழப்படுகிறான்.
நாம் பிறரைப் போற்றத் தவறினாலும் ஒருநாளும் இகழ்ந்து ஒதுக்கத் தவறுவதில்லை. தமிழே தமது மூச்சும் பேச்சுமாக வாழ்ந்தவர்களை  மறந்து விட்டு, என்னால் தான் தமிழ் வாழ்கிறது என்று சொல்பவர்களைத் தான்  நாம் இன்று போற்றுகிறோம். இந்த ஒரு நூற்றாண்டு கால  மாறுதல்களுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், துவேஷமே முதலிடம் பெறுகிறது என்பதைக் காணும் போது அதிர்ச்சி அடைகிறோம்.

பிறமொழிகளின் ஆதிக்கத்தால் தமிழ் வழக்கொழிந்து விடும் என்று பேசுபவர்கள் நிறைய உளர்.  வீட்டிலேயே தமிழில் பேசுவது குறைந்து வருகிறது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. பிழைக்கும் வழி தேடிப் பிற நாட்டு மொழிகளைப் பள்ளிகளிலேயே கற்று விட முன் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நமது தமிழ் பாடத்திட்டம் எவ்வளவு கீழ்த் தரமாகப் போய் விட்டது என்று எவ்வளவு பேர் கவலைப் படுகிறோம்? பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எத்தனை பேர்  பிழை இல்லாமல் தமிழ் எழுதுகிறார்கள்?  தமிழ் உச்சரிப்பே சரிவராத நிலை அதைவிடக் கொடுமை! லகரம் ,ளகரம் ,ழகரம் , ணகரம் போன்றவை படும் பாட்டைத்தான் அன்றாடம் கேட்கிறோம்! முதலில் அதை யார் சரி செய்யப்போகிறார்கள்? வெறும் வீர வசனம் பேசி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவர்?  

அண்மையில் நடைபெற்ற " உலக யோகா தினம் "  அயல் நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் எந்த ஒரு நாடும் ' யோகா " என்ற சொல்லைத்  தங்கள் மொழியில் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. காரணம் இதுதான்.  இந்த ஒரு செயலால் தங்கள் மொழிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதாததுதான். இதைப் பார்க்கும்போது நமக்கு மட்டும்    ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை வருகிறது என்று புரியவில்லை. நவீன யுகத்தில் விஞ்ஞானச் சொற்கள் ஏராளமாக உண்டாக்கப்படும் நிலையில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் நமது மொழிக்குக் குந்தகம் ஏற்பட்டு விடாது.

தமிழகத்தில் ஒரு கண்டுபிடிப்பைச் செய்து அதை புதிய ஒரு சொல்லால் அழைத்தால் உலகம் ஏற்காமலா போய் விடும்?  பிற நாட்டுப் பொருள்களை வாங்கும் போது அவர்கள் பெயரிட்ட படியே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கஷ்டப்பட்டாவது அதை மொழி பெயர்த்து மக்களிடம் திணிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?  உலகத்திலேயே மிக அதிகமான  எழுத்துக்களை       ( 237)  வைத்துக் கொண்டும் பழக்கத்தில் இருக்கும் எழுத்துக்களை வைத்துக் கொண்டுதானே மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது? அப்படியானால் ஞ , ங, போன்ற எழுத்துக்களுக்கு விடிவு காலமே கிடையாதா?

நிலைமை இப்படி இருக்கும்போது, அடுத்த மொழியின் மீது நாம் காட்டும் துவேஷத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை! அதிலும் ஆன்மீகத்தில் இந்த துவேஷம் அதிகமாகவே காட்டப்படுகிறது. உலகிற்கே நாயகனாகிய கடவுளை எவ்வாறு தமிழ்க் கடவுள் என்ற குறுகிய வலைக்குள் கட்டுப் படுத்த முடியும்?  வடமொழியை விரட்டுவது என்ற எண்ணம் வந்து விட்ட பிறகு , தமிழ் வேள்வி, தமிழில் அர்ச்சனை , தமிழில் வழிபாடு என்று ஒவ்வொன்றாக வந்து மக்களைப் பிளவு படுத்துகின்றன. எத்தனையோ தலைமுறையாக வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்களும் அங்கு எழுந்தருளியுள்ள தெய்வங்களின் பெயர்களும் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். சென்னை- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள பழைய சிவத்தலம் திண்டிவனம் என்பது. புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்ததால் திந்திரிணி வனம் எனப்பட்டது. ஆகவே சுவாமிக்குத் திந்திரிணீசுவரர்  என்று பெயர் வந்தது.  அதை ஒரு சாரார்  புளியங்காட்டு ஈசர்  என்று தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள். கோவிலில் மட்டுமே தமிழ் இருந்தால் போதாது. இதெல்லாம் தாழ்வு மனப்பான்மையால் வந்த விளைவு.

 ஏதேதோ நவீனப் பெயர்களை ஏற்கிறோம்,நவீனப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்கிறோம், குழந்தைகள் மம்மி,டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கொள்கிறோம் என்ற நிலையில் தமிழைப் பற்றிக் கவலைப் படாதவர்கள்,  கோவிலைக் குறி வைப்பதன் நோக்கம் தான் என்ன ?  பிரதோஷம் என்று சொன்னால் இப்போது பட்டி தொட்டிகளில்  எல்லாம் புரிந்து கொள்கிறார்கள். இடபதேவர் திருநாள் என்று மாற்றுவதால் குழப்பமே ஏற்படுகிறது. அபிஷேகம் என்று தான் மக்கள் சொல்வார்களே தவிர நீராட்டல் என்று யார் சொல்வார்கள்? இப்படி ஏட்டிக்குப் போட்டியாகச்  செய்வதால் பிற சமயத்தவர்களுக்குச்  சாதகமாகப் போய் விடுகிறது. தமிழ் மறை என்பது போன்ற சொற்களை நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் நூல்களுக்கு வேதாகமம் என்று பெயர் இடுகிறார்கள்.

இப்படி எழுதுவதால் நாம் எவருக்கும் தமிழார்வத்தில் குறைந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் மொழியை பலப் படுத்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மில்லியன் கணக்கில் வெளிநாட்டிலுள்ள  சர்வகலாசாலையில் தமிழ்ப் பிரிவை ஏற்படுத்தி விட்டால் மட்டும் போதாது. மக்களுக்குப் புரியும் எளிய சொற்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்  இல்லாவிட்டால் , வட்டாச்சியாளர், கோட்டாட்சியாளர், இயக்குனர் ,பேருந்து,உந்து வண்டி  போன்ற  சொற்கள் பலகையில் மட்டுமே இருக்குமே தவிர மக்கள் வாயில் இருக்காது. நமது வீடுகளில் நவராத்திரியின்போது கலைவாணியின் திருவுருவத்திற்கு முன்பாக நாம் படிக்கும் வடமொழி மற்றும் தமிழ் நூல்களோடு நம் குழந்தைகள் படிக்கும் ஆங்கில நூல்களையும் வைத்து, அனைவரும் கல்வி அறிவு  பெற வேண்டும் எனத் துதிக்கிறோம். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்த அவளுக்கு எல்லா மொழிகளும் ஏற்புடையதுதானே? ஆகவே,தமிழ்த் தாய் நமக்கு முத்தான சொற்களையும், நற்பண்புகளையும் வழங்கி அருளுவாளாக.

No comments:

Post a Comment