Friday, June 19, 2015

நகரத்தார் சிவத்தொண்டு தொடரட்டும்

திருக்காறாயில் சிவாலயம் 
சிவாலயத் திருப்பணி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர்கள் சோழ மன்னர்கள். அதற்கு அடுத்தபடியாக நாம் மறவாது நினைவு கூற வேண்டியது, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த மாபெரும் சிவாலயத் திருப்பணிகள். அதிலும்,கருங்கல்லே கிடைக்காத சோழ நாட்டில் உள்ள ஆலயங்களைத் திருப்பணி செய்யக் கருங்கற்களை நெடுந்தூரத்திலிருந்து மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து, ஸ்தபதிகளைக் கொண்டு திருப்பணி செய்வித்தனர். இதற்கு மூலகாரணம் ,சிவபெருமானிடமும் சைவத்  திருமுறைகளிடத்தும்  அவர்களுக்கு இருந்த பக்தியே ஆகும். பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செய்யும்போது, அவற்றில் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்த கோயில்களைத் தாங்களே முன் வந்து கருங்கல் திருப்பணியாகவே செய்து தந்தனர்.

திருக்களர் பிராகாரக் கருங்கல் மதில் 
அப்படித் திருப்பணி செய்யப்பட்டவைகளில் உள்ளடங்கியுள்ள ஊர்களும் அடங்கும். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்  சைவத் திரு ராய.சொ.  அவர்கள் வெளியிட்ட தேவாரத் தலயாத்திரை பற்றிய நூலில் நகரத்தார்கள் செய்த கோயில்களின் விவரம் தரப்பட்டுள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பல லக்ஷம் ரூபாய் செலவில் பல கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன.

திருக்காறாயில் திருக்குளம் 
திருக்கோயிலை  மட்டுமல்லாமல் திருக்குளங்களுக்கும் கருங்கல் படித்துறை அமைத்துத் தந்தனர்.உதாரணமாகத் திருக்காரவாயில், திருக்களர் போன்ற ஊர்த் திருக்குளங்களைக் கூறலாம்.  அது மட்டுமல்ல. வேதபாடசாலைகள், தேவார-ஆகம பாடசாலைகள்,பசுமடங்கள்,நந்தவனங்கள்   ஆகியவற்றையும் அமைத்தனர். சிவாகம நூல்கள் பலவற்றை அச்சில் ஏற்றித்தந்த பெருமையும் இவர்களைச் சாரும். இப்பணிகள் எல்லாம் சுமார் எழுபது ஆண்டுகள் முன் வரை தொடரப்பட்டது என்று  சொல்லலாம்.  அவர்களது பரம்பரையினர் இன்றும் தம்மால் முடிந்த அளவில் அக்கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டைப் பார்க்கும்போது, புராதனக் கோயில்களைப் புதுப்பிப்பதில் நகரத்தாரின் பங்கு பற்றி அறிய ஆர்வம் ஏற்படுகிறது. நாம் அறிந்தவரையில் ,பல கோயில்களின் திருப்பணிக்கு இன்றும் உதவுகிறார்கள். ஆனால் அவர்களது முன்னோர்களைப் போன்று, மிகவும் பழுது அடைந்த சிவாலயங்களில் கருங்கல் திருப்பணி மேற்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. பண்டைக் காலம் போல் இன்றும் திரைகடல் தாண்டித்  திரவியம் ஈட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அப்படியும், புதியதாக எந்த சிவாலயத்திலும்  முழுமையாகக் கருங்கல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழ்க்கை நடத்துபவர்கள் முன்வந்தால், முன்னைக் காட்டிலும் அதிக அளவில்  சிவத் தொண்டாற்ற முடியும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சங்கங்கள் அமைத்துத் தங்கள் சமூகத்திற்கு உதவி புரிந்து வருவதை மறுக்க முடியாது. அதில் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலய வைபவங்களிலும் பங்கேற்கிறார்கள். அதோடு, சுற்றுலா போன்றவைகளும் இடம் பெறுகின்றன. முன்னோர்கள் காட்டிச் சென்ற சிவாலயப் புனரமைப்பு , முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இடம் பெறாதது பெரிதும் ஏமாற்றத்தை  அளிக்கிறது.

தமிழகக் கோயில்கள் பலவற்றின் தற்போதய நிலை என்ன என்பதைத் தலயாத்திரை செய்பவர்கள் நன்கு அறிவார்கள். அரசாலும்,ஊர் மக்களாலும் கைவிடப்பட்டு, மரம் முளைத்துப் போன ஆலயங்கள் ஏராளம். ஆண்டுக்கு நூறு கோயில்களைப் புனரமைத்தாலும்,எல்லாக் கோயில்களையும் சீர் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. சுற்றுச் சுவர்கூட இல்லாததால் மூர்த்திகள் களவாடப்படும் அவலம் வேறு ! இதை எல்லாம் யாரிடம் சொல்வது? பரம்பரையாக சிவபக்தி உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சொல்ல முடியும்.

நிலங்களிலிருந்து வருமானம் இல்லாததால் நான்கு காலம் பூஜைகள் நடந்த கோயில்கள் ஒரு கால பூஜை செய்யப்படுவதையும், விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாத நிலையையும் கண்டு எத்தனை பேர்  மனம் உருகுகிறார்கள்? அற்ப சம்பளத்தை மாதக் கணக்கில் தராமல் இழுக்கடிக்கப்பட்டும் பூஜையை விடாமல் செய்யும் அர்ச்சகர்களை எவ்வளவு பேர் ஆதரிக்கிறோம்? இந்நிலை நீடித்தால் ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வரக்கூடிய நிலை தூரத்தில் இல்லை.

எஞ்சியது சிவனார் மட்டுமே 
எல்லா சமூகத்திலும் வசதி உள்ளவர்களும் பக்தி உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நகரத்தார் போல முழுக் கோயிலையும் கருங்கற்களால் திருப்பணி செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. இந்த நற்பெயர் நீடித்து நிலைக்க வேண்டும். தற்கால சந்ததியினரும் தங்கள் முன்னோர் போல அத்  தொண்டைச் செய்து வரவேண்டும் என்பதே நமது கோரிக்கையும் விருப்பமும் ஆகும். பல துறைகளிலும் இன்று பிரபலமாக விளங்கும்  நகரத்தார் சமூகம் இவ்வேண்டுகோளை ஏற்கும் என நம்புகிறோம்.

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர்  கூடலையாற்றூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்குத் திருப்பணி செய்வதற்காக செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு செட்டியார் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தாராம். கருங்கற்கள் ஏற்றப்பட்ட வண்டிகள் தொடர்ந்து வந்தனவாம். இருட்டில் வழி மாறி, விடியற்காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, வேறு ஒரு சிவத்தலத்தில் (கடம்பூர் என்று நினைவு) வண்டி வந்து சேர்ந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் சிவாலயமும் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்ததைக் கண்டு இரங்கிய செட்டியார், அக்கற்களை அங்கேயே இறக்கச் சொல்லி, அக்கோயிலைத் திருப்பணி செய்து தந்தாராம். பின்னர் கூடலையாற்றூர்  ஆலயமும் திருப்பணி செய்யப்பட்டது. அப்பொற்காலம் மீண்டும் வருமா?  

4 comments:

  1. A Facebook Nagarathar
    Friend gave me a reply:

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா உங்கள் செய்தியை இங்கு பகிர்கிறோம் . இன்று கோவில் திருப்பணிகளை செய்து வந்த நகரத்தார் சமூகத்தில் பலர் முன்பு போல் இல்லை வறுமையில் இன்னல் படுகின்றன. இவற்றின் முக்கிய காரணம் தமிழர்களை வணிகத்தில் இருந்து ஓரங்கட்டியது கல்பினரால் தொழில் நொடிப்பு இப்படி நகரத்தார்கள் தொழில்கள் முடக்கப்பட்டு செதில் செதிலாக சிதைத்து தமிழர் சமூகங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது தற்போது நகரத்தார் சமூக இளம்தலைமுறை துளிர்க்கதுவங்கிஉள்ளது எனினும் அது கார்பிரேட் அரக்கன் கையில் இருந்து துளிர்கிறது அவர்கள் தரும் சொற்ப்ப ரூபாய் இன்று பெரிய பணமாக நினைத்து அவர்களின் அடிவருடிகள் போல் வாழ்வு தான் கார்பிரெட் பணியில் உள்ளோர் நிலை . வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டமுடியும் என்பதை தற்போதை தலைமுறை மறந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை . அப்பன் சுப்பையன் அருளலால் மீட்டும் நகரத்தார்கள் ஏறுமுகம் அடைவர் முன்னோர் செய்த திருப்பணியை தொடருவார்கள் என்று நம்பிக்கையில் கண்ணகிஆத்தாளும் பட்டினத்து செட்டிமகமும் துணை புரிவர் என்று நம்புகிறோம்

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா உங்கள் செய்தியை இங்கு பகிர்கிறோம் . இன்று கோவில் திருப்பணிகளை செய்து வந்த நகரத்தார் சமூகத்தில் பலர் முன்பு போல் இல்லை வறுமையில் இன்னல் படுகின்றன. இவற்றின் முக்கிய காரணம் தமிழர்களை வணிகத்தில் இருந்து ஓரங்கட்டியது கல்பினரால் தொழில் நொடிப்பு இப்படி நகரத்தார்கள் தொழில்கள் முடக்கப்பட்டு செதில் செதிலாக சிதைத்து தமிழர் சமூகங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது தற்போது நகரத்தார் சமூக இளம்தலைமுறை துளிர்க்கதுவங்கிஉள்ளது எனினும் அது கார்பிரேட் அரக்கன் கையில் இருந்து துளிர்கிறது அவர்கள் தரும் சொற்ப்ப ரூபாய் இன்று பெரிய பணமாக நினைத்து அவர்களின் அடிவருடிகள் போல் வாழ்வு தான் கார்பிரெட் பணியில் உள்ளோர் நிலை . வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டமுடியும் என்பதை தற்போதை தலைமுறை மறந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை . அப்பன் சுப்பையன் அருளலால் மீட்டும் நகரத்தார்கள் ஏறுமுகம் அடைவர் முன்னோர் செய்த திருப்பணியை தொடருவார்கள் என்று நம்பிக்கையில் கண்ணகிஆத்தாளும் பட்டினத்து செட்டிமகமும் துணை புரிவர் என்று நம்புகிறோம்

    ReplyDelete
  4. A Facebook Nagarathar
    Friend gave me a reply:

    ReplyDelete