Wednesday, November 25, 2015

ஆண்டவனுக்கு அழுக்கு ஆடையா ?

ஐயோ தெய்வமே உனக்கா இப்படிப்பட்ட ஆடை!
" கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு "  என்பார்கள். முதலில் உடையிலும் உடலிலும்  அழுக்கடையாமல் பார்த்துக்   கொண்டால் உள்ளத்தில் அழுக்கடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அடுத்ததாக ஏற்பட வேண்டும். அவ்வாறு அந்த எண்ணம் ஏற்பட்டவுடனேயே இறைவனது அருள் அதற்குத் துணை செய்கிறது. " அழுக்கடையாமல் ஆண்டு கொண்டு அருள்பவன் " என்று இறைவனைத் துதிக்கிறார்  மாணிக்க வாசகர். இது உள்ளத்து அழுக்கைக் குறிப்பது. அகத்தில் உள்ள அழுக்கு களையப்பட்ட பின்புதான் அகக் கண் திறக்கப்படுகிறது. நம் உடல்,பொருள்,உடைமை எல்லாம் அவன் தந்தது என்ற ஞானம் பிறக்கிறது.

ஞானம் கைவரப்பெற்ற ஆன்றோர்கள் வகுத்துத் தந்த பூஜை முறைகளின் படி  நாம் நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஐசுவர்யமான  பசுவிடமிருந்து பெறப்பெற்ற பொருள்களால் இறைவனுக்கு அபிஷேகிக்கிறோம். பழங்கள்,மலர்கள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறோம். இவ்வாறு நன்றி தெரிவிக்கும் செயலாக நமது பூஜை அமைந்துள்ளது. இந்நிலை வந்துவிட்டால் உள்ளம் பெரும் கோவிலாக மாறுகிறது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும்  கொண்டு  அவனுக்குச் சேவை செய்து  அவற்றை அர்ப்பணிப்பது என்ற  உன்னத நிலையை  அடைவது  சாத்தியமாகிறது.

பல கோவில்களில் நாம் இன்று காண்பது என்ன ?  அதிலும் குறிப்பாகக் கிராமக் கோயில்களில் காண்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மூலவருக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்கள் முறையாகத் தோய்க்கப்படாமல் எண்ணெய் பிசுக்கு எடுத்துத்  துர்நாற்றம் வீசுகிறது. அபிஷேகம் ஆனவுடன் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே வஸ்த்திரம் மீண்டும் போர்த்தப்படுகிறது.

அகிலாண்ட நாயகியை இப்படியா அலங்கரிப்பது!
சிவாசாரியப்பெரு மக்களைக்  கேட்கிறோம். இது போன்ற எண்ணெய் நாற்றத்துடனும் அழுக்குடனும் இருக்கும் வஸ்திரத்தை நாம் ஐந்து  நிமிடமாவது உடுத்திக்கொள்வோமா?  மாற்று வஸ்திரத்தைப் பயன்படுத்தி விட்டு அழுக்கு வஸ்திரத்தை அலசித் துவைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா? அதற்கு ஆளுக்கு எங்கே போவது என்ற கேள்வி உடனே எழும். நமக்கு அந்த நிலை   எற் பட்டால் நம் கை தானே நமக்குத் துணை செய்கிறது ? பிறரையா நாடுகிறோம்?  சுவாமியைக் கல்லாகப் பார்த்தால் அலட்சியமே மிஞ்சும்.

ஒருக்கால் வேறு வஸ்திரமே இல்லாத கோயிலாக இருந்தால் சேவார்த்திகளாகிய நாம் முதல் வேலையாகப் புதிய வஸ்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டியதை நமது கடமையாகக் கருதவேண்டும். அப்படிச் செய்தால் அந்த சிவ தருமத்தின் பலனாகப்   பல தலைமுறைகளுக்கு உணவுக்கும்  உடைக்கும்  பஞ்சம் இல்லாதபடி நம்மைத் தூக்கி விடும். இன்று முதலாவது செய்யத் துவங்கலாம் அல்லவா?  நமக்கு வாங்கிக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளாதபோது நமது முன்னோர் செய்து வந்த இதுபோன்ற தருமங்களையாவது  கை விட்டுவிடாமல் மறுபடியும் துவங்கலாமே! .

 தறி  வைத்திருப்பவர்களும் , ஜவுளிக் கடைக் காரர்களும் இந்த தருமத்தைச்  செய்வது என்று ஆரம்பித்தால் ஒரு கோயிலிலாவது அழுக்கு வஸ்திரத்தோடு தெய்வ வடிவங்களைத் தரிசிக்கும் நிலை ஏற்படாது. பிறருக்கும் அச்செயல் ஈடுபாட்டை வரவழைக்கும். அதற்காகவாவது அன்பர்கள் தங்கள் சுற்று வட்டாரத்திலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று இதுபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நமது கோயில்கள் மீண்டும் பொலிவு பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Monday, November 9, 2015

கொட்டும் மழையில் திருவாரூர் கும்பாபிஷேகம்

தமது வாழ்நாளில் ஒருமுறையாவது கும்பாபிஷேக தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் ஏங்கும்  கோயில்களில் திருவாரூரும் ஒன்று.  தியாகேசனின்  ஆழித்தேர்  பவனியைக் காண  ஆயிரமாயிரம் பேர் கூடும் போது கும்பாபிஷேகத்தைக் காண  வருவோரது எண்ணிக்கையை எப்படிக் கணக்கிட முடியும்? மூலாதாரத் தலமான திருவாரூரில் நடக்கும் இவ்வைபவத்தைக் காண வேண்டும் என்று தொலைவிலுள்ள ஊர்களிலிருந்து வருகை தருவோர் ஏராளம்.

பூங்கோயில் எனப்படும் தியாகப் பெருமானது திருக்கோயில் மிகப் பெரியது என்பதால் திருப்பணிகள் ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே துவக்கப்படுகின்றன. முதலில்  ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் கும்பாபிஷேகத் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேகமாக நடைபெறுவது எல்லா ஊர்களிலும்  நடைபெறுவது தான். ஆனால் இங்கோ ஆழித்தேர் திருப்பணியும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததும் வெள்ளோட்டம் விடப்பட்டது. ( ஆனால்  லட்சக் கணக்கில் செலவழித்துத் தயாரிக்கப்பட்ட தேர், வெளி வீதியில் மழையிலும் வெய்யிலிலும் வீணாவது ஏன் என்பது விளங்கவில்லை)

திருவாரூர் கோயிலில்  உபயதார்களது முயற்சியாலும்,ஆதரவாலும் எல்லா சன்னதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோபுரங்களும், விமானங்களும் செப்பனிடப்பெற்று வண்ணப்பூச்சு பூசப்பெற்றுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று யாக சாலை தயாரானது.

திருவாரூர் நகர மக்களும் வெளியூர் அன்பர்களும் கும்பாபிஷேக தினத்தை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்த வேளையில், 8.11.2015 ஞாயிற்றுக் கிழமை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. பொதுவாகக் கும்பாபிஷேகம்  உத்தராயணத்தில்( தை மாதம்  முதல்  ஆனி மாதம் வரை )  செய்வதை சிவாகமங்கள் உத்தமமாகப் பரிந்துரைக்கின்றன. அதிலும் சுக்ல பக்ஷத்தில் ( வளர் பிறையில்) செய்வது உத்தமம் என்கின்றன. ஆனால் இப்போது நடைபெற்றதோ  தட்சிணாயணத்தில் ,கிருஷ்ண பக்ஷத்தில் . இதற்கு ஆயிரம் சமாதானங்களும் விளக்கங்களும் இருக்கலாம்.

கொட்டும் மழையில் கும்பாபிஷேக தரிசனம் 
நடைமுறையில் இப்படித் தேதி நிர்ணயிப்பதால் ஏற்படும்   அசௌகர்யங்களைப் பற்றிச் சற்று சிந்திப்பது நல்லது. ஐப்பசியில் அடை மழை பெய்யும் என்பது எல்லோரும் அறிந்தது தான். அதிலும் இந்தத் தேதியை ஒட்டி தீபாவளிப் பண்டிகை வரும்போது, வெளியூர்மக்கள் எப்படி வர முடியும்? கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே தங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால் கிடைத்த பேருந்துகளில் வழி நெடுகிலும் மாறி மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் ஊர்களிலும் பேருந்து நிலையங்களிலும் நிரம்பி வழியும் போது மேலும் சங்கடம் நேர்வது தவிர்க்க முடியாததாகிறது. பேருந்து  நிலையத்தை ஒட்டியுள்ள உணவுக் கூடங்களிலும்  ஏராளமான மக்கள் கூட்டம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மழையினால் சேதமடைந்த சாலைகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் நடக்க வேண்டியுள்ளது. சாலை ஓர அசுத்தங்கள், கழிவுகள் இந்நீரில் கலந்து வருவதை நகராட்சி ஆண்டுதோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே சுகாதாரக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை ஓரங்கள் பொதுக் கழிப்பிடங்களாக மக்களால் சீரழிக்கப்படுகின்றன. எங்கும் நாற்றம், எதிலும் துர்நாற்றம் என்ற நிலை!! இப்படிப்பட்ட சுகாதாரமற்ற நிலையில் ,  கொட்டும் மழைக் காலத்தைத் தவிர்த்துத் தை மாத வளர்பிறையில் கும்பாபிஷேகத்தை வைத்துக்  கொண்டிருக்கலாம் அல்லவா? தை மாதத்திற்கு இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அப்படி என்ன  அவசரம்?

கும்பாபிஷேகத் தேதியை நிர்ணயிப்பது சிவாகமத்தை ஒட்டியே நடை பெற வேண்டும். ஆகம விற்பன்னர்கள் கூறும் பரிந்துரையை கும்பாபிஷேகக் குழுவினரும்,அரசாங்கமும் முழுவதுமாக ஏற்க வேண்டும். இதில் பிற தலையீடுகள் இருக்கலாகாது. திருப்பணிகளை உபயதாரர்களே செய்யும்போது அறநிலையத்துறையும் ஒத்துழைப்புத் தருவதே நல்லது. கும்பாபிஷேக தேதியை விருப்பம்போல மாற்றுவது ஆகம விரோதமானது மட்டுமல்ல. மக்களுக்கும் பல இன்னல்களை விளைவிப்பதாக முடிந்து விடுகிறது.

கோபுரங்களிலும் விமானங்களிலும்  யாக சாலையிலிருந்து தலையில் கடங்களைச் சுமந்தவாறு சாரத்தில் ஏறி உச்சிக்குச் செல்லும் சிவாச்சாரியப் பெருமக்களில் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள். கொட்டும் மழையில் சாரப் படிகளில் சறுக்கி விழாமல் மிகுந்த எச்சரிக்கையாக ஏற வேண்டும். அடை மழையால் சாரப் படிகளைக் கட்டியுள்ள கயிறுகள் தளர்ந்து விட்டாலும் ஆபத்துத் தான்.    அத்தனை உயரத்திலிருந்து ...... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

லட்சக் கணக்கானோர் கண்டு ஆனந்திக்க வேண்டிய வைபவம் கொட்டும் மழையாலும், தீபாவளி தொடர்வதாலும் சில ஆயிரம் அன்பர்கள் மட்டும் தரிசிப்பதாகி ஏனையோருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இனியேனும் சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா?
  

Thursday, November 5, 2015

இயலும் இசையும்

மயிலாடுதுறை கடைமுகத்தில் நாதஸ்வர வித்துவான்கள் 
புகழ் ஏணியின் உச்சியில் ஏறிவிட்டால் எதை வேண்டுமானாலும் மக்களிடம் பேசலாம் என்னும் காலம் இது. அப்படி இருக்கும்போது,தான் மேலே ஏறிவந்த படிகளை மிகச் சிலரே திரும்பிப் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட பணிவோடு பேசுபவர்கள் பெறும்  மதிப்பைக் காட்டிலும் வித்தியாசமான அணுகுமுறை என்று கூறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்களே பத்திரிகைகள் மூலமும் தொலைக் காட்சி மூலமும் அதிக வரவேற்பையும் மதிப்பையும்  பெறுகிறார்கள் !

இசைக்கு ஆதாரமாக விளங்குவது இயல். அதுவும் பக்தி பாவத்தோடு இசைக்கப்படும் போது மேலும் மெருகூட்டப்படுகிறது.   ஒரு முன்னணி     கர்நாடக சங்கீதக்காரர்  ஒரு தினசரிக்கு சமீபத்தில் தந்துள்ள  பேட்டியில் இசைதான் பிரதானம் என்றும் பக்தி , சாகித்தியம் ஆகியவை அடுத்தபடிதான் என்றும் சொல்லியிருக்கிறார். இவர் பாடும் பாடல்கள் பக்தியோடு பாடப்பெற்றவை . பணத்திற்காகப் பாடப் பெறாதவை. அழியா வரம் பெற்றவை. ஒரே பாடலைத் திரும்பத்திரும்ப எத்தனை பேர் எத்தனை முறை பாடினாலும் அலுப்பைத் தராதவை. வாய்ப்  பாட்டின் மூலம்   பக்தியைக்  கேட்பவருக்கு ஊட்டக் கூடியவை. அவற்றோடு இசையும் சேரும்போது  கேட்போரைப் பரவசப் படுத்துபவை. இவர் சொல்லும் இக்காலப் பாடல்களுக்கு  இந்தப் பெருமைகள் உண்டா? அவை தற்காலிகமாகக் கேட்போரை  லயிக்க வைப்பது உண்மைதான். ஒரு  கால கட்டத்திற்குமேல் அவை தாமாகவே மக்களிடமிருந்து விலகிக் கொள்ளக் கூடியவை என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு கருத்துக் கூற மாட்டார்கள்.

எல்லா இசையும் இசை ஆகி விட முடியாது. தற்காலிகமாக மக்களைத் தன்  பக்கம் ஈர்க்கும் இசையையும், காலம் காலமாக நிலைத்து நின்று மக்களை இறை உணர்வு ஊட்டி நல்வழிப் படுத்தும் இசையையும் ஒன்றாகவே கருதுவதால் ஏற்பட்ட குழப்பம் இது. " நல்லிசையாளன்  புல்லிசை கேளா நற்றமிழ் ஞான சம்பந்தன் " என்று  தேவாரம் கூறுகிறது. நல்லிசையும் புல்லிசையும் வேறு வேறு என்று இப்பொழுதாவது உணருவார்களாக.
படித்ததெல்லாம் / கற்றுக்கொண்டதெல்லாம்  பக்திப் பனுவல்கள். ஆனால் வெளியிலோ  இறை நம்பிக்கை தனக்கு  இல்லை என்று கூறிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அப்படியானால் பணம் சம்பாதிப்பதற்காகப் போடும் வேஷம் என்று கருதலாமா? என்னவோ இவர்கள் இல்லாவிட்டால் கர்நாடக இசை குடிமுழுகிப் போய் விடுவதுபோல அறிக்கை விடுவதும் , மக்களும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கொடுமையிலும் கொடுமை. சபாக்காரர்களும் ரசிகர்களும் தன்  காலில் வந்து விழவேண்டும் என்ற இறுமாப்பில் பேசுவதாகத்தானே அர்த்தம்? கொஞ்சம் நாள் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைத்தால்   தானாகவே  திருந்தி விடுவர். ஆனால் அது நடக்கக் கூடியதா? இவர்களைத்தான்  அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள் உட்பட எல்லோரும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்களே!

தன்னால் ஞானசம்பந்தர் பாடிய ஒரு பதிகத்தை யாழில் இசைக்க முடியவில்லை என்றவுடன் அந்த யாழையே முறிக்கச் சென்றார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவ்வாறு இசைக்குள் அடங்காதது தெய்வப் பனுவலாகிய இயல் என்பதைக் காட்டி அருளியவர் ஞானசம்பந்தர்.  இசை ஒன்றே போதும் என்பவர்கள் வெறும் ஆலாபனை செய்து கொண்டு இருக்க வேண்டியது தானே! இயல்,இசை இரண்டும் இறைவனின் கொடைகள். இரண்டும் இணைந்து பக்தி உணர்வோடு இசைப்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி. கொட்டும் மழையிலும் பக்தியோடு சுவாமி புறப்பாட்டில் மல்லாரி வாசிக்கும் நாதஸ்வர வித்துவான்கள் எங்கே, இவர்கள் எங்கே!  உள்ளம் உருகி ,சொற்ப வருமானம் இருந்தபோதும் இறைவனது சன்னதியில் பக்திப் பாடல்களைப் பாடும் ஒதுவா மூர்த்திகள் எங்கே,இவர்கள் எங்கே!

எனது வழி  தனி வழி என்று பேசுபவர்களை ஒருக் காலும் திருத்த முடியாது. கருத்து சுதந்திரம் அவர்களுக்குத் துணை நிற்கும். அக்கருத்துக்களைத் தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் பிறருக்கும் திணித்து அவர்களைத்  திசை மாறச் செய்வதைச் சுட்டிக் காட்டாமல் இருக்கலாமா?