ஐயோ தெய்வமே உனக்கா இப்படிப்பட்ட ஆடை! |
ஞானம் கைவரப்பெற்ற ஆன்றோர்கள் வகுத்துத் தந்த பூஜை முறைகளின் படி நாம் நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஐசுவர்யமான பசுவிடமிருந்து பெறப்பெற்ற பொருள்களால் இறைவனுக்கு அபிஷேகிக்கிறோம். பழங்கள்,மலர்கள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறோம். இவ்வாறு நன்றி தெரிவிக்கும் செயலாக நமது பூஜை அமைந்துள்ளது. இந்நிலை வந்துவிட்டால் உள்ளம் பெரும் கோவிலாக மாறுகிறது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கொண்டு அவனுக்குச் சேவை செய்து அவற்றை அர்ப்பணிப்பது என்ற உன்னத நிலையை அடைவது சாத்தியமாகிறது.
பல கோவில்களில் நாம் இன்று காண்பது என்ன ? அதிலும் குறிப்பாகக் கிராமக் கோயில்களில் காண்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மூலவருக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்கள் முறையாகத் தோய்க்கப்படாமல் எண்ணெய் பிசுக்கு எடுத்துத் துர்நாற்றம் வீசுகிறது. அபிஷேகம் ஆனவுடன் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே வஸ்த்திரம் மீண்டும் போர்த்தப்படுகிறது.
அகிலாண்ட நாயகியை இப்படியா அலங்கரிப்பது! |
ஒருக்கால் வேறு வஸ்திரமே இல்லாத கோயிலாக இருந்தால் சேவார்த்திகளாகிய நாம் முதல் வேலையாகப் புதிய வஸ்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டியதை நமது கடமையாகக் கருதவேண்டும். அப்படிச் செய்தால் அந்த சிவ தருமத்தின் பலனாகப் பல தலைமுறைகளுக்கு உணவுக்கும் உடைக்கும் பஞ்சம் இல்லாதபடி நம்மைத் தூக்கி விடும். இன்று முதலாவது செய்யத் துவங்கலாம் அல்லவா? நமக்கு வாங்கிக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளாதபோது நமது முன்னோர் செய்து வந்த இதுபோன்ற தருமங்களையாவது கை விட்டுவிடாமல் மறுபடியும் துவங்கலாமே! .
தறி வைத்திருப்பவர்களும் , ஜவுளிக் கடைக் காரர்களும் இந்த தருமத்தைச் செய்வது என்று ஆரம்பித்தால் ஒரு கோயிலிலாவது அழுக்கு வஸ்திரத்தோடு தெய்வ வடிவங்களைத் தரிசிக்கும் நிலை ஏற்படாது. பிறருக்கும் அச்செயல் ஈடுபாட்டை வரவழைக்கும். அதற்காகவாவது அன்பர்கள் தங்கள் சுற்று வட்டாரத்திலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று இதுபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நமது கோயில்கள் மீண்டும் பொலிவு பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மிக்க நன்றி!!!!
ReplyDelete