Saturday, June 16, 2012

யாருக்கு வெற்றி ?


ஆனித் திருமஞ்சனம் பற்றிய ஒரு வலைப்பதிவைக் காண நேரிட்டது. அதைப் படித்த பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வலைப்பதிவாளர் பதில் தந்தாரா என்று தெரியவில்லை. அதாவது, கேள்வி இதுதான். இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய போது இடது திருவடியை  உயரத் தூக்கி ஆடினான். பெண்என்பதால் அவ்வாறு ஆடக் கூடாது என்று , காளிதேவி வாளா இருந்துவிட்டதை எப்படி அவள் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடியும் என்பதே அவரது வினா. சரிபாதி பெண்மைக்குத் தந்த ஒரே தெய்வம் சிவபெருமான் என்பதை இப் பெண்மணி மறந்துவிட்டார் போலும்! எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன  சொல்வார்கள் தெரியுமா? உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள்! இதில் தெய்வ தம்பதிகளிடையில் வெற்றி - தோல்வி என்பதேது?

நாம் தாழ்ந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. உண்மையில் அவர்களே உயர்ந்துவிட்டவர்கள் என்பதை இன்னமும் உணரவில்லை. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், க்ரஹிணி என்று பெண்ணே எஜமானியாகச்  சித்தரிக்கப்படுகிறாள். ஒரு வேதியருக்கு அக்னி ஹோத்திரம் செய்யும் உரிமை அவரது மனைவி கூட இருக்கும் வரையில்தான்.

காளி இறைவனுக்குப் போட்டியாக ஆடியது இருக்கட்டும். மனோன்மணியாகிய பராசக்தி, அப்பெருமானது பாகம் பிரியாத நாயகி தானே . அவள் ஆடியதாகச் சொல்லப்படுவதில்லை. "உமையவள் காண ஆடிய அழகா" என்றே திருமுறை பகர்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில், நடராஜப் பெருமான் ஆடும்போது,அம்பிகை தாளம் போட்டுக் கொண்டு, தன் நாயகனின் ஜதி பிழையாத ஆடலைக் கண்டு மகிழ்வதைத் தரிசிக்கலாம்.

கணவன் ஈட்டும் புண்ணியத்தில் ஒரு பாதி மனைவியைச் சேரும் ; ஆனால் அவனது பாவத்தில் எள்ளளவும் மனைவியைச் சேராது. அதே நேரத்தில், மனைவியின் புண்ணியத்தில் ஒரு சிறிதும் கணவனை அடைவதில்லை. அவளது பாவத்தில் ஒரு பங்கு மட்டும் கணவனை அடைவதாகப் பெரியோர்கள் கூறுவர். பூஜை, ஜபம் ஆகியவற்றை செய்யாமலே, கணவன் செய்யும் பூஜைக்கு உதவினாலே போதும். இவளுக்குப் பூஜை செய்த பலன் கிடைத்திவிடுகிறது. "உன்னடியார் தாள் பணிவோம்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்" என்ற திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கற்பாலான. இப்படிச் சொல்வதால் மனைவிக்குத் தெய்வ பக்தியே வேண்டாம் என்று பொருள் கொள்ளக் கூடாது. பதி- பக்தியின் மேன்மையைச் சொல்லி அப்படிப்பட்ட பெண் "பெய்" என்றால் மழை பெய்யும் என்றார் திருவள்ளுவரும். உனக்குப் பணி செய்யும் அடியவர்களே எங்கள் கணவராகும் வரத்தைக்கொடுப்பாயாக என்று பெண்கள் மார்கழி நோன்பு நோற்பதைத் திருவெம்பாவையில், " உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ;ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்" என்று மாணிக்க வாசகப் பெருமான் அருளியுள்ளதைக் காண்க. கல்யாண நலங்குகளில் தம்பதிகள் தேங்காயை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிடுங்குவது போல அமைத்திருந்தாலும் , அப்படிப் பிடுங்கி, வெற்றி-தோல்வி என்று ஆகி விடாமல் விட்டுக் கொடுக்கும் மனப்  பான்மையை உண்டாக்குவதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.(சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்பவர்கள், "விடாதே, கையிலிருந்து பிடுங்கி விடு" என்று சொல்லாமல் இருந்தால் தம்பதிகளே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தொடங்கி விடுவர்.)  

சக்தியின் அம்சமான காளி தேவி , பரமேச்வரனை வழிபட்ட தலங்களுள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காளி என்ற தலமும் ஒன்று. அவ்வாறு அவள் செய்த பூஜையின் பலனைப் பார்த்தீர்களா? ஊரின் பெயரே அவள் பெயரில் தான் இருக்கிறது. அதேபோல், பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள அம்பர்  மாகாளம் என்ற தலத்தில், அம்பராசுரனை வதம் செய்த காளி, சிவபூஜை  செய்ததால், ஊரின் பெயர் மாகாளம் ஆனதோடு, சுவாமியின் பெயரும் மாகாள நாதர் ஆயிற்று. இவ்வூரைப் பாடிய ஞானசம்பந்தக் குழந்தை, காளி வழிபட்டதைச் சொல்லும்போது, "நம் காளி " என்று மிக்க உரிமையோடு அம்பிகையைக் குறிக்கிறார்.

எனவே, ஆலங்காட்டில் காளியை வென்ற வெற்றிக்களிப்பில் இறைவன் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால் , காளி தோற்றதாகக் கொள்ளலாம். காளிக்கு அருள் அல்லவா செய்தான்! இப்படிச் சொல்கிறது திருவாசகம்:

" .. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய
திருமுகத்து , அழகு உறு சிறுநகை இறைவன் ..."

இப்படியாகக் காளியும் , கயிலைமலை வல்லியும் மனமகிழத் தாண்டவம் நடைபெறும்போது, யார் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும்? தேவி மனமகிழ ஆடல் காட்டியதை அவனது திருவிளையாட்டாகக் கொண்டால் யாருக்கு வெற்றி என்ற வினாவே எழாது.  

Thursday, June 7, 2012

உதவிகள் பலவிதம்


உதவிகள் பலவகைப்படும். அவற்றுள் அறம் சார்ந்த உதவிகள் உயர்ந்தவை. ஒரு மரம் கூட நமக்கு நிழல் தந்து உதவும்போது, நாமும் அவ்வகையில் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்தக் காலத்தில் பிச்சைக் காரனுக்கு காசு போடுவதும் உதவி எனப்படுகிறது. எத்தனையோ பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒரு வேளை இதை எதிர்பார்த்துத்தான் ,"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்றார்களோ?

இதில் அரசாங்கமும் ஒன்றும் சளைத்ததாகத் தெரியவில்லை. ஊக்குவித்தல் என்ற பெயரில் லக்ஷக் கணக்கிலும், ஏன், கோடிக் கணக்கிலும் வரிப்பணத்தை செலவழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெயர் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அத்திரையைச் சேர்ந்த எத்தனை பேர் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்தி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு!! விளம்பரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்?

அண்மையில் ஒரு விளையாட்டு வீரர் உலக அளவில் வெற்றி பெற்றபோது, பாராட்டுவதோடு நிற்காமல் , இதற்கு முன் நான் அவருக்கு இவ்வளவு லட்சங்கள் கொடுத்தேன் என்றார் ஒருவர் . இதைக் கேட்ட இன்னொருவர் நான் அதற்கும் மேலே தருகிறேன் என்று அவருக்கு சில கோடிகள் கொடுத்தார். இப்படிப் பரிசுமழை பெற்றவர் ஒன்றும் வசதி இல்லாதவர்  இல்லை. வரிப்பணம் வீணாகப் போகிறதே என்று ஒரு வாசகர் தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்காக இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளித் தர வேண்டுமென்பதில்லை.

ஆலய சிப்பந்திகளின் அவல நிலையைப் பற்றிப் பலமுறை குரல் கொடுத்து வருகிறோம். அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. வசதி உள்ள இடங்களுக்கே உதவியும் ஊக்கமும் போய்ச்  சேருகின்றன. சமூக சேவை என்பது கல்விக்கும் உடல் நலத்துக்கும் மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையில் தத்தளிக்கும் மற்றவர்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்களோ தெரியவில்லை. சேவை வரி, கல்வி வரி ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள். ஆனால், உண்டியல்கள் , பிற வருமானங்கள் மூலம் கோயில்களுக்கு வரும் நிதியைக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கணிசமாகக் கொடுக்கப்படுவதுபோல் ஆலய சிப்பந்திகளுக்கும் ஏன் கொடுக்க முன் வருவதில்லை? அவர்களை வருமான அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்களாக அறிவிக்கலாமே.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். ஒரு நடனக் கலைஞர் பிரபலம் அடைந்துவிட்டால், தான் இன்று ஆடுவது, எல்லா உலகங்களையும் ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானின் அருள் என்பதை உணர்ந்து, அவனது நிருத்த சபைகளைத் திருப்பணி செய்ய முன் வர வேண்டும். ஒரு சதுரங்கவீரர்  தான் பெறும் பல கோடிகளின் சிறு பகுதியையாவது, மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான பூவனூர் சதுரங்க வல்லபேச் வரர்   கோயிலுக்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும்.

பழந்துணிகளைக் காப்பகத்திற்குத் தந்து விட்டு, பிரமாதமாக சமூக சேவை செய்து விட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் ஆணிவேருக்குச் செய்யப்படும் உதவி பிற்காலத்தில் மரமாக வளர்ந்து பலன் அளிக்கும். சிவதர்மம் செய்யும் போது, சிவ பெருமான் மட்டுமல்லாமல் உதவியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவர். செய்து பார்த்தால் தானே அதன் பலனும் பெருமையும் தெரிய வரும்! பிறருக்கு நிழல் தந்து உதவும் ஆல மரத்தையே தேர்ந்தெடுத்து அதன்கீழ் வேதப் பொருள்களை உரைத்த தக்ஷிணா மூர்த்தி, தர்மத்தின் உறைவிடம் அல்லவா; நம்மையும் அறம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா?

" .... அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்." -- சம்பந்தர் தேவாரம்.