Wednesday, February 3, 2016

தெய்வத் தமிழிசை பரவச் செய்வோம்

பாடல்கள் இசைக்கப்படும்போது அவை இசை ஆகின்றன. அவ்வாறு இசைத்தல் எல்லோருக்கும் எளிமையாக இருப்பதில்லையே!  அப்படிப்பார்த்தால் உலகில் எதுவும் ஆர்வத்துடனும் முறையான பயிற்சியுடனும் கற்றால் தான் சாத்தியம் ஆகிறது. இசையும் அப்படித்தான். குரல் வளையைப் பக்குவப்படுத்தும் பயிற்சியே அது. சிலர் பாடினால் அது தேனாக நம் செவியில் பாய்கிறது. இன்னும் சிலர்  பாடினால் நாராசமாக  இருக்கக் காண்கிறோம் நல்ல குரல் வளம் உள்ளவர்களைப் பார்த்தவுடன் இவர்கள் முற்பிறவியில் இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்திருப்பார்கள் என்கிறோம். எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த குரலிலாவது இறைவன் மீது மகான்கள் அருளிய பாடல்களைப் பாட வேண்டும் . அப்படிப் பாடுபவர்களின் குடி முழுவதையும்  இறைவன் கைதூக்கி விடுவான்  என்கிறார் ஞானசம்பந்தர்.     " கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி " என்பது அவரது வாக்கு.

திருமுறைப் பாடல்களில் பண்ணோடு கூடியவற்றைப் பாரம்பர்யத்துடன் பாடுவதற்குப் பயிற்சி தரவல்ல பாட சாலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்படுவது வேதனைக்கு உரியது. அவற்றில் பயின்ற மாணாக்கர்களும் தற்காலத் தேவைக்கான வருமானம் ஈட்ட முடியாமல் போவதால்  மாணவர் சேர்க்கை குறைந்து பாடசாலையையே மூடிவிடும்படி வந்து விட்டது. இப்படி வேத பாடசாலைகளும் தேவார பாடசாலைகளும் கற்பார் குறைந்து மூடப்படுவதால் எதிர்காலத்தில் அவற்றைக் கற்பார்  இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.இதற்காக நாம் ஏன்  கவலைப் பட வேண்டும் என்று நினைக்காமல்  கடுகளவாவது  முயன்று ,அவற்றை மறையாமல் காப்பாற்றி எதிர் காலத் தலைமுறைக்கு வழங்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

கற்பிக்கும்போது கற்பவர்கள் எளிமையாகக் கற்க வல்ல பாடல்களையே முதலில் கற்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சீக்கிரமே அவற்றில் ஆர்வம் குறைந்து கற்பதை நிறுத்தி விடுவர். ஒதுவா மூர்த்திகளும் ஆலய சன்னதிகளில் பாடும்போது மக்களுக்கு எளிமையில் புரிய வல்ல பாடல்களைப் பாடி அவர்களது கவனம் வேறு எங்கும் போகாமல் பார்த்துக் கொண்டால் அப்பாடல்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு வர வாய்ப்பு உண்டு. ஓரளவாவது குரல்வளம் உள்ளவர்களே ஒதுவார்களாக இருந்தால் மக்களுக்கு ஆர்வம் ஏற்படுவது இன்னும்  அதிகரிக்கும்.

வகுப்பின் ஒரு பகுதி 
இன்றைய சூழ்நிலையில் பாடசாலைகளையோ ஒதுவார்களையோ தேடிச் சென்று கற்றுக் கொள்ளும் நபர்கள் மிகவும் குறைந்து வருகிறார்கள். ஆகவே நாம் வசிக்கும் பகுதியில் பத்து பேராவது சேர்ந்து ஒருவர் மூலம் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? இதைத்தான் நமது அமைப்பு கும்பகோணத்தில் அண்மையில் துவக்கியுள்ளது. எதிர்பார்த்தற்கு மேலாக அன்பர்கள் கற்பதில் ஆர்வம் காட்டினர். பிரதிபலனையோ,புகழையோ விரும்பாமல் சிவார்ப்பணமாக செய்யப்படும் சிறிய சேவை இது. இதுபோலப் பல ஊர்களிலும் அன்பர்கள் முன்வரலாம்.

வகுப்பின் மற்றொரு பகுதி 
தொழில் நுட்பம் கூடி வரும் இக்காலத்தில் அதை நல்ல வழிகளில் பயன்படுத்துபவர்களையும் காண்கிறோம். தேவார இசை கற்பிக்கப்படும்போது அதைத் தங்களது கைபேசியில்  அன்பர்கள்  பதிவு செய்யும்போது   அவர்களது ஆர்வத்தைக் கண்டு நெகிழ்கிறோம். கற்கும் ஒரு மணி நேரத்தில் ஆர்வம் குறைந்ததாக ஒரு நொடி கூட இல்லை என்பது அவர்களது ஈடுபாட்டைக் காட்டுகிறது.

அண்மையில் ஒரு சமூக வலைப்பதிவுப் படத்தில்  வெளி நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழக ஒதுவார்கள் பாடும்போது அவர்கள் பாடும் அப்பாடல் பெரிய எழுத்துக்களில் அங்கு கூடியிருந்தவர்கள் பின்பற்ற வசதியாகத் திரையில் காட்டப்பட்டிருந்தது. இதுவும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. மனத்தில் அப்பாடலைப் பதியவைக்கும் உத்தியாகக் கூடக் கொள்ளலாம்.

பெரியவர்கள் பலர் கற்க முன்வரும்போது தங்கள் இல்லத்திலுள்ள குழந்தைகளையும் கூட அழைத்து வர வேண்டும். அப்பிஞ்சு நெஞ்சங்களில் மிகச்சுலபமாகப் பாடல்கள் பதிந்து விடும். உடலுக்கு உறுதி அளிக்கும் வகுப்புக்களுக்கு அவர்களை அனுப்புவதோடு உயிருக்கு உறுதி தரும் இசை வகுப்புக்களுக்கும் அனுப்ப வேண்டியது நமது கடமை அல்லவா? அதனால் இசையும் பரவும் . தமிழும் பரவும்.  அதன் பயனாக தெய்வ பக்தியும் பரவும். அதனால்தான் திருஞான சம்பந்தரை சிறப்பிக்கும்போது சுந்தரர் , " நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் " என்றார். நாமும் அவர்கள் காட்டிய நல்வழியில் நின்று தெய்வத்தமிழ் மூலம் இறைவனைக் காண்போம்.