Wednesday, July 22, 2020

சுப்ரமண்யனும் முருகனும் ஒன்றே

இறைவன் அநாதி என்பது போல உயிர்களும் அநாதி என்பது சித்தாந்தக் கொள்கை.அதேபோல ஆன்மீகம் தோன்றிய காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்க வேண்டும். இறைவனது திருவுள்ளமும் ஒருவேளை அதுபோல இருக்கலாம்." நாத் தழும்பு ஏற நாத்திகம் பேசினர் " எனக் கூறும் மாணிக்கவாசகரே , உயிர்கள் பலவடிவெடுத்து உழன்ற பின்னர் வினை நீக்கம் வரும் காலத்தில் " தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி "  அவனருளால் தூய்மை செய்யப்படுவதை விளக்குகிறார். நமக்கு அதிகமாகத்  தெரிந்ததெல்லாம்  நாம் வாழும் காலத்தில் ஆன்மீகமும் நாத்திகமும் எப்படி உள்ளன என்று அறிய முடிந்ததே ஆகும்.

நாஸ்தி என்பதற்கு இல்லை என்று பொருள் சொல்வார்கள். இறைவன் இல்லவே இல்லை என்றும் அவன் கற்பிக்கப்பட்டவன் என்றும் வாதிடும் நாத்திகர்களை இன்றும் பார்க்கிறோம். சிலரோ நாத்திகத்தை வாய் விட்டுப் பேசாமல் ஆத்திகத்தையும் ஆதரிக்காமல் கடவுட் கொள்கையில் ஏதும் தெரியாமலும் காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களும் ஒருவகையில் நாத்திகர்களே.

நம் தேசத்து ஆன்மீகத்திற்கும் பிற நாடுகளின் ஆன்மீகத்திற்கும் வேறுபாடு உண்டு.நம் நாட்டிலுள்ளோர் பிறரது நம்பிக்கையைப் புண்படுத்தாமல், பிறரது கொள்கையைப் பழிக்காமலும் இருப்பவர்கள். ஆனால் அயலவர்களோ நமது கொள்கையை ஏற்காததோடு அவர்களது கொள்கையைப் பிறருக்கும் புகுத்தி அவர்கள் பால் ஈர்ப்பதில் வல்லவர்கள். எந்தக் கொள்கையையும் அறியாதவர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அம்மாயையில் வீழ்ந்து விடுகிறார்கள். சமீப காலமாக அவர்களால் தரப்படும் அனுகூலங்களுக்கு ஆசைப்பட்டு நம் சமயத்தை ஏசவும் துவங்கி விட்டனர்.

சமூக வலைத்  தளங்கள் மூலம் ஆன்மீகமும் நாத்திகமும் பரப்பப்படுவதைப் பலரும் அறிவர். யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் அவற்றின் மூலம் பேசத்  தொடங்கி விடுகின்றனர்.நமது புராணங்களும் தோத்திர நூலகளும் பழிக்கப்படுகின்றன. ஒற்றுமையாக இதனை எதிர்த்துக் குரல் கொடுப்போர் மிகக் குறைவாக இருப்பதால் நாத்திகர் கை  ஓங்குகிறது. அனுகூலங்களால் ஆன்மிகர்களும் கவரப்பட்டு நமது தெய்வங்களைப் பழித்தும் மாறுபடுத்திப் பேசியும் வருகின்றனர்.

சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பேசியிருக்கிறார். எப்படித்தான் அவரது சிந்தையில் இப்படிப்பட்ட கருத்துக்கள் உதயமாகின்றதோ நாம் அறியோம். ஏதும் அறியாத நடு நிலையாளர்களுக்கு இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகவே தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவர் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க முடியுமா ? இக்கண்டுபிடிப்பு நாத்திகர்களுக்கு அல்வா கொடுத்த மாதிரி..

முதலில் அவர் இதைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டார் என்று பார்ப்போம். முருகன் தமிழ்க்  கடவுள் என்பதால் சுப்ரமணியன் என்ற பெயர் இருக்க நியாயமில்லையாம். பண்டைத் தமிழ் நூல்களில் அப்பெயர் காணப்பட வில்லையாம். பிற்காலத்தில் இவ் வடமொழிப் பெயர் புகுத்தப்பட்டதாம் ! நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம் கடல் சீற்றத்தால் அழிந்தபோது ஏராளமான தமிழ் நூல்கள் அழிந்ததாகவும். கவிராயர் பலரது வீடுகளிலிருந்து பழைய ஓலைச் சுவடிகள் ஆற்றில் எறியப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. அப்படியாயின் அவற்றில் சுப்ரமணியன் என்ற பெயர் இடம்பெற்ற நூல் மறைந்திருக்கலாம் அல்லவா ?

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்  நூல் ஒன்றில் சுப்ரமணியன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டினால்  இவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் சேந்தனார் என்பவர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது. திருவிடைக்கழி என்ற தலத்திலுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற பதிகம் அது. அதில்  வரும் ஒரு பாடலில் " சுப்பிரமணியன் " என்று முருகப் பெருமான் குறிப்பிடப்பெறுகிறார்.அதே பதிகத்தில்  வேறோர் பாடலில் " சுவாமி " என்ற வட மொழிப் பெயரும் காணப்படுகிறது. அமர சிம்மன் என்ற ஜைனன் வடமொழியிலியற்றிய அமர கோசம் என்ற அகராதியில் சுவாமி என்ற சொல்லுக்குப் பொருள் முருகக் கடவுளையே குறிப்பதாகக் காணப்படுகிறது. இதனால் சுவாமி என்றாலும் சுப்ரமணியன் என்றாலும் முருகனைக் குறிப்பதாகக் கூறும் இத் தமிழ் நூலைக் காட்டிலும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் ?

அதே பதிகத்தில் தூய தமிழ்ச் சொற்களாலும் கந்தப்பெருமான் காட்டப்படுகிறார். அவையாவன: " மலையான் மதலை " குமர வேள் ",  வள்ளி மணாளன் " " நங்கை யானைக்கும் குழகன் " , " வேலுலாம் தடக்கை வேந்தன்  " வேற்  செல்வன் ", " பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுது " , " கிரி தனைக் கீண்ட ஆண்டகை" , "தொகை மிகு நாமத்தவன் " " சூர் மார்பினைத் தடிந்தோன் " என்பவை அவற்றுள் சிலவாம்.

தமிழ் முருகன் என்று பிரித்தும் திரித்தும் கூறும் அச் சொற்பொழிவாளர் அம்முருகனது தாய் தந்தையர் யார் என விளக்குவாரா? சுப்ரமண்யனை வட நாட்டவராகக் கூறினால் அப்பெருமானின் பெற்றோர் சிவ பார்வதி ஆகி விடுவர். அப்படியானால் தமிழ் முருகனின் பெற்றோர் யார் ? அறிவீனத்தின் உச்சம் தொடப்படுகிறது. ஆனால் திருவிடைக்கழி முருகனது உறவினர் யார் என்று சேந்தனார் அடையாளம் காட்டும் அழகைப் பாருங்கள் : " புரம் பொடி படுத்த மலை வில்லி தன் புதல்வன் " ( திரிபுரம் எரி  செய்த அச்சிவனது குமாரன் ),     " மலை மகள் மதலை", " கங்கை தன்  சிறுவன் "  " மான் அமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை " ( கையில் மான் ஏந்திய சிவபிரானது பிள்ளை); " " இளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை" ( பிறைச்  சந்திரனை சிவந்த சடையில் ஏற்ற சிவபெருமானின் மகன்); " கணபதி பின் இளம் கிளை " ( கணபதிக்குப் பின் தோன்றியவன் ) ; என்ற சொற்களால் திருவிடைக்கழி முருகனும் திருக்கயிலாயத்து சுப்ரமண்யனும் ஒருவரே என்று சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி சேந்தனார் பாடி அருளியுள்ளார்.

இறைவன் எல்லா மொழியாலும் வணங்கப்படுபவன்.  " தாய் மொழியாகத் தூய் மொழி அமரர் கோ மகனை " என்ற சொற்றொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது. " தொகை மிகு நாமத்தவன் " என்பதால் அளப்பரிய ஆற்றல் உடைய ( " அசிந்த சக்தயே நம: என்றே  சுப்பிரமணிய ஸஹஸ்ரநாமம் துவங்குகிறது). பரம்பொருளை ஒரு குறுகிய வட்டத்தில் அடக்குவதா? இதுதான் சொற்பொழிவாளருக்கு அழகா ?

தமிழ் நாட்டில் இருப்பதுபோல வடநாட்டில் முருகன் வள்ளி தேவசேனை சமேதராக இல்லையாம் . அதனால் என்ன ? வடநாட்டில் பிள்ளையார் சித்தி புத்தி சமேதராக இருப்பதுபோல் தமிழகத்தில் இல்லையே ! அதனால்  தமிழ்ப் பிள்ளையார் வேறு வட நாட்டுப் பிள்ளையார் வேறு என்பாரா ? அங்கு முருகன் பிரம்மச்சரியக் கோலத்தில் வழிபடப் படுவதால் தேவிகளின் திருவுருவங்கள் அமைக்கப்படவில்லை.ஆறுமுகமும் மயிலும் கூடவே இருக்கும் மூர்த்தங்கள் பல அங்கும் உண்டு. . வடமொழி  அஷ்டோத்திரத்தில் தேவிமார் பெயர்கள் இல்லையே என்கிறார் . எதையும் யோசித்து விட்டுப் பேச வேண்டும். தமிழகக் கோயில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள் வட மொழியில் உள்ள புராணங்கள் வாயிலாக அமைந்தவை ஆதலால் அவ்வாறு உள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை. அதனால் தெய்வம் வேறாகி விடாது.

இவரது நோக்கம் தான் என்ன? சமயத்தைக் கிண்டலாகப் பேசுவதா? அல்லது வடக்கு தெற்கு என்று பிரிவினையை உண்டு பண்ணுவதா ? ஒரே பாலமாகத் திகழும் வட மொழியைக்  கோயில்களிலிருந்து விரட்டுவதா அல்லது கிரியைகளுக்கு மட்டுமே வட மொழியைப் பயன் படுத்திக்கொண்டு வாழ் நாள் முழுதும் தமிழைத் தவிரப் பிற மொழிகளை அறியாத ஏழை அந்தணர்களைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா ?  அவர்கள் செய்த பாவம் தான் என்ன ? நெஞ்சைத்  தொட்டுச் சொல்லட்டும்.

இவரை விடுங்கள். ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் மௌனிகளாக இருப்பது ஏன்?

" பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் " என்பது திருமுறை வாக்கு. எல்லோரையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.ஞாபகம் இருக்கட்டும். 





Sunday, July 12, 2020

பச்சைத் துரோகம்



ஆண்டுக்கணக்கில் மாத சம்பளம் ஆலய சிப்பந்திகளுக்கு வழங்கப்படாமல் உள்ள கிராமக்கோயில்கள் ஏராளம். மக்கள் வருகையாலும், உபயதார்களது உதவியாலும் மட்டுமே அர்ச்சகர்களின் வாழ்க்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கிடையில் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலச்  சித்தரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள்.

உபயதாரர்கள் அளிக்கும் நன்கொடை மூலமே நடைபெறும் அன்னதானமும் , ஒரு கால பூஜை திட்டமும், ஏதோ அறநிலையத்துறையே செய்வது போன்ற தோற்றத்தை உண்டாக்கி விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு கால பூஜை துவங்க கிராமத்தினர் ஒரு லட்சம் வழங்கினால் அற  நிலையத்துறை தனது பங்கை அளிக்க முன் வரும். அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து சுமார் ரூ 750 அர்ச்சகருக்கு மாத சம்பளமும் , பூஜை சாமான்களும் கொடுக்க வேண்டும் என்பதே திட்டம். தற்போது அந்த சொற்பத்தொகையும் பல மாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர்களை நம்பி ஒரு லட்சம் வசூல் செய்து கொடுத்த கிராமத்தினருக்குச் செய்யும் துரோகம் இது.

இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகியும் மாத சம்பளம் தராமல் காலம் தாழ்த்தும் இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாக்கி வைத்துள்ளதா ? வருமானம் வந்தால் தானே சம்பளம் வழங்க முடியும் என்றால், அவ்வாறு வருமானம் இல்லாத ( ? ) கோயில்களின் நிர்வாக (? ) அதிகாரிக்கு மட்டும் மாதம் தோறும் எதற்காக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதே கேள்வி. ஒருவேளை, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டால் தான் பதில் சொல்வார்களோ என்னவோ !

கோயிலுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது யாருடைய கவனக்குறைவு? எதுவும் செய்ய முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு? உண்டியல் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கா ? அறமற்ற செயல்களை செய்வதற்கா ? அந்த நிலங்களின் அருகே கூடச் செல்லாமல் கணக்கு எழுதும் கூட்டம் எதற்கு என்று பலரும் கேட்கிறார்கள். எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

நிலங்களிலிருந்து விளைந்து வராவிட்டால் வருமானம் இல்லை என்று  மூக்கால் அழுதார்கள். விளைந்து வந்த பிறகும் சம்பளம் கொடுக்காத அவலத்தை என்னவென்று சொல்வது? கடந்த தை மாதத்தில் அறுவடை ஆகி சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு வந்து சேர்ந்த நெல் நிர்வாக அதிகாரியின் அலட்சியத்தால் விற்கப்படாமல் மூட்டைகளாகக் கிடைக்கும் கோயில்கள் ஏராளம். விற்கப்போனால் கோயில் பெயரில் ஆதார் கார்டு கேட்கிறார்களாம். ஆதார் கார்டு தனி நபர் பெயரிலேயே கொடுக்கப்படும் போது, எவ்வாறு சுவாமி பெயரில் கொடுக்க முடியும் ? கொஞ்சமாவது யோசித்தார்களா ? புகார் அளித்தால் மதிப்பதே இல்லை. அலட்சியமும் ஆணவமும் மேலோங்குகிறது.

இந்து அறநிலையத் துறை என்பது ஆட்சித் துறை அன்று. நிர்வாகத் துறை என்பதை உணராமல் அதிகாரம் செலுத்துகிறார்கள். நிர்வாக அதிகாரி என்றால் அதிகாரம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்பதவியின்  பெயரை நிர்வாகி என்று மாற்றி அமைக்க வேண்டும். அதிகாரம் செய்ய இவர்கள் யார்? நிர்வாகம் செய்யவே திறமை அற்றவர்களை எவ்வாறு அதிகாரிகளென்பது ?

வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டியதே இவர்களது வேலையே தவிர அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வது அல்ல. நிர்வாகம் சரிவர நடைமுறையில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க அவருக்கு மேல் உள்ளவர் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சிப்பந்திகளை மிரட்டவோ, சம்பளம் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதோ இவர்களாகவே எடுத்துக் கொண்டுள்ள அதிகாரங்கள் .

நிர்வாகி என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை  அவர்கள் தவறுகள் செய்தாலும் ,  சுட்டிக் காட்டுவதிலும் ஒரு நாகரீகத்தைக் கையாள வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தவறு செய்தவரும் தனது தவறுக்கு வருந்தி மீண்டும் அத்தவறை ஒரு நாளும் செய்ய முன்வர மாட்டார்.

சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன். சுமார் 45 ஆண்டுகள் முன் ஒரு கம்பெனியில் பரிசோதனைச் சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை 5 மணி இருக்கும். மத்தியான ஷிப்டில் இருந்தபோது ஒருகண்ணாடி  சிலிண்டரைத் தண்ணீரால் கழுவியபின்னர் அதிலிருந்த ஈரத்தை அகற்ற வேண்டி, அசிட்டோன் என்ற திரவத்தால் சற்றுக் கழுவி, உலர வைக்க வேண்டும். நானோ அசிடோனால் அந்த சிலிண்டருக்குத் தாராளமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் எங்கள் துறையின் தலைவர் (HOD ) நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. இன்னொருவராக இருந்தால் என்னைக்  கடுமையாகத் திட்டியிருப்பார். சந்தேகமே இல்லை. ஆனால் அவரோ , ஆங்கிலத்தில், This is Acetone my dear friend ( இது அசிடோன் நண்பரே ) என்றார். அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்துவிட்டு என் பிழைக்கு வருந்தித் தலை குனிந்தேன். அன்றிலிருந்து கனவிலும் அத்தவறை மீண்டும் செய்ததே இல்லை. இதன் காரணம் அவர் தன்னை ஒருபோதும் அதிகாரி என்று நினைத்ததில்லை. அதிகாரம் செலுத்தியதும் இல்லை. இது போன்ற நற்பண்புகள் நமக்கு இல்லையே என்று இன்றும் நினைப்பது உண்டு.

கொரானாவால் உலகமே திண்டாடிக்கொண்டு இருக்கும்போது ஆலய சிப்பந்திகள் தங்கள் கடமை தவறாமல் பணி  ஆற்றுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முன்வராததோடு, பழி சுமத்தி அவர்களைப் பணி   நீக்கம் செய்வதையும், மிரட்டுவதையுமே  செய்துவருகிறார்கள் அதிகாரிகள். அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோஉள்ளூரில்  எவருமே இல்லாததால்  நிர்வாக அதிகாரி செய்வதே சட்டம் ஆகி விடுகிறது. ஓரிருவரைத் தவிர எவரும் நீதி மன்றத்தை நாடுவதில்லை. நாடாவிட்டாலும், குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக ஓரிரு வார்த்தைகளாவது சொல்ல முன் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெட்கக்  கேடு.

ஊர் நலனுக்காக ஆலய பூஜை செய்பவர்களுக்குத் துணையாக இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களை  நன்றி கெட்டவர்கள் என்றோ பச்சைத் துரோகம் செய்பவர்கள் என்று தானே கூற முடியும் ?