Tuesday, December 3, 2013

தில்லையில் ஏன் இந்தப் போராட்டம் ?

அகில உலகங்களுக்கும் பொதுவான இறைவனை நமக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லிக் கொள்கிறோம்.  அவனை வழிபடுவதிலும் எத்தனையோ வேறுபாடுகள்! அவரவரும் தன் வழியே உயர்ந்தது என்றும் நினைக்கிறார்கள்  ஆனால் அவனோ " எல்லா மொழியாலும்" வணங்கப்படுபவன் என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். அது மட்டுமா ? எல்லா உயிரினங்களாலும் வணங்கப்படுபவனும் அவனே. ஆனால்  கோயில் பூஜை முறை  என்பது தொன்றுதொட்டுப்  பின்பற்றப்படுவது. அதில் பலவித நியமங்களும் அடங்கும். அதில் முக்கியமானது காலம் தவறாத பூஜை . அதாவது உரிய நேரத்தில் பூஜை செய்யப்படுவதன் அவசியத்தை இது குறிக்கும். " முட்டாத முச்சந்தி மூவாயிரவருக்கும் மூர்த்தி" என்று சுந்தர மூர்த்தி நாயனார்,, சிதம்பரத்தில் கால லோபம் இல்லாமல் பூஜைகள் நடத்தப்படுவதை சிறப்பித்துள்ளார். தில்லை மூவாயிரவர்கள்  அக்காலத்தில் எவ்வாறு காலம் தவறாது பூஜைகள் செய்து வந்தார்களோ தற்காலத்தும் தில்லை பொது தீக்ஷிதர்கள் தொடர்ந்து அந்த நியமத்திலிருந்து சிறிதும் மாறாமல் அம்பலக்கூத்தனை ஆராதிப்பதை நேரில் சென்று  கண்டவர்கள் அறிவர்.

அடுத்தது நியமலோபமின்றி செய்யப்படும் பூஜை. இதிலும் பொது தீட்சிதர்கள் நிகரின்றி  விளங்குகிறார்கள். மந்திர லோபம்,தந்திர லோபம்,ச்ரத்தா லோபம் ஆகிய குறைபாடுகளும் இன்றி தினசரி  பூஜைகளும், விசேஷ நாள் பூஜைகளும்,உற்சவகால பூஜைகளும் நடத்தப்படுகின்றன.  ஒவ்வொரு நாள் பூஜையையும் ஒவ்வொருவர் செய்வதால், தங்கள் முறை வராதா என்று காத்திருந்து, அப்படி வந்தவுடன் முழு ஈடுபாட்டோடு அதனைச் செய்வதால், நியமப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன
.
கோயில் பூஜை என்னும்போது சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது இயற்கை. நியாயமும் கூட. வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளை காலத்திற்கேற்பவும், சொந்த விருப்பங்களுக்கேற்பவும் மாற்ற முயலக்கூடாது. வீட்டில் செய்யப்படும் ஆத்ம பூஜையிலும் இத்தகைய நியமங்கள் பின்பற்றப்படும் போது பரார்த்த பூஜையான ஆலய பூஜையை எப்படி மாற்ற முடியும்? விதிமுறைகளைக் கைவிடக்கூடாது என்போருக்கு எதிராகக் குரல்கள் எழும்புகின்றன.

மகாமண்டபத்திலிருந்து ஒதுவாமூர்த்திகள் அறநிலையத்துறை ஆலயங்களில் திருமுறை விண்ணப்பம் செய்யும்போது, சிதம்பரம் கோயிலில் மட்டும் எதற்காக நந்தியெம்பெருமான் வீற்றிருக்கும் அர்த்த மண்டபத்திலிருந்து பாட வேண்டும் என்று சிலர் போராடுகிறார்கள் என்பது புரியவில்லை. எல்லோரும் தரிசிக்க வசதியாக, நடராஜ மூர்த்தி யின் சிற்சபையாகிய கருவறையும், பஞ்சாட்சரப் படிகள் விளங்கும் அர்த்த மண்டபமும் உயரத்தில் அமைந்துள்ளன. மகாமண்டபம் என்பது சேவார்த்திகள் நின்று வழிபடும் இடம். பூஜா காலங்களில் அர்த்த மண்டபக் கதவுகள் திறக்கப்பட்டவுடன் தீபாராதனையை அடியார்கள் கண்டு களிப்பர். எல்லோருக்கும் முன்பாக நின்று கொண்டு கைகளைத் தலைமேல் கூப்பியபடி  ஓதுவா மூர்த்திகள் திருமுறை இசைப்பார். திருமுறை பாட யாருமே இல்லாத சமயத்தில், அவ்விண்ணப்பத்தைத் தவிர்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் மகாமண்டபத்திற்கு வந்து, தீக்ஷிதர்களில் பலர் பஞ்சபுராணம் பாடுவதை ஆன்மீக உலகம் அறியும்.அதன் பிறகு மீண்டும் தீபாராதனை நடந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும். இதில் என்ன குறை  கண்டார்களோ தெரியவில்லை. மகாமண்டபம் தாழ்வாக இருப்பதால் தானோ என்னவோ , தாங்களும் தாழ்ந்து விட்டதாகத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாய், அர்த்த மண்டபத்தில் திருமுறை ஓதினால் என்ன என்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர்கள் மற்றக் கோயில்களில் முதலில் கேட்கட்டும். சன்னதி அமைப்பைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும், காழ்ப்பு உணர்ச்சி கொண்டவர்களுக்கும் எப்படி விளக்கம் அளிக்க முடியும்? உண்மையைச்  சொல்லப்போனால் இறைவனை விட நாம் தாழ்ந்தவர்கள் தானே?  அப்படி இருக்கும்போது , சற்றுத் தாழ்வான இடத்தில் இருந்து கொண்டு, மரபு மாறாமல் பாடினால் குறைந்துவிடப்போகிறோமா என்ன? இறைவனைப் போற்றும்போது எதற்கு இந்த சர்ச்சைகள்?

கேரளத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் ஏராளமாக உண்டு. அங்கு மக்கள் சம்பிரதாயத்தை மதிக்கிறார்கள். மாற்றத் துடிக்கவில்லை. ஆண்கள் மேல்சட்டை இன்றியே எல்லாக் கோயில்களிலும் தரிசனத்திற்கு வருகிறார்கள்.  ஆனால் இங்கு அதை சொல்லப்போனால் எதிர்ப்புக்கள் ! அதை நியாயப்படுத்தவும் முனைவர். உள்ளம்  சுத்தமாக இருந்தால் போதாதா என்பர். உள்ளத்தைத் தூய்மை ஆக்குவதற்காகவும் அமைதிக்காகவும் தானே கோயிலுக்குச் செல்கிறோம். நுழையும்போதே ஆணவம் தலை தூக்கினால்,  எவ்வாறு தூய்மையும் அமைதியும் பெற முடியும்? எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று முற்பட்டால்  நெறியற்ற சமுதாயமே மிஞ்சும். உச்சிக் காலம் ஆனவுடன் கதவுகளைச் சாத்துவது மரபு. சிலர் பாடுவதற்காக மூலவர் சன்னதியைத் திறந்து வைக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. யோசித்துப் பார்த்தால் இதற்கு மூல காரணம் நெறிகளுக்கு அடங்காமை என்ற குணம் தான் என்பது புரியும். திருநள்ளாற்றில் அப்பர் அருளிய பாடல் ஒன்றில் " குணம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான்" என்பதற்கு,  அடியார்களுக்கு நல்ல குணங்களைக் கொடுத்து, நவகோள்களின் பாதிப்பிலிருந்து நீக்குபவன் என்று பொருள் சொல்வார்கள். அதே வரிக்கு, " குணம் கெடுத்துக் கோள் நீக்க வல்லான்" என்ற பாடமும் உண்டு. அதாவது, நம்மிடம் உள்ள தீய குணங்களைக் கெடுத்து(நீக்கி) கோள்களின் உபாதைகளிலிருந்து  காப்பவன் என்றும் பொருள் கொள்வர்.  இரண்டாவதாகச் சொன்ன பாடம் தற்காலத்திற்கு உகந்ததாகத் தோன்றுகிறது.   " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர்" என்ற தேவார வாக்கிற்கு ஏற்றபடி, நற்சிந்தனைகளும், நற்பண்புகளும் நம்மிடையே நிலவுமாறு நிலவுலாவிய நீர் மலி வேணியனாகிய அம்பலத்தாடுவானை இறைஞ்சுவோமாக.

Tuesday, November 19, 2013

காவிரித் தாயைப் போற்றுவோம்

நெடு நாட்களாகவே ஒரு ஆசை. ஹரித்வார்,காசி போன்ற ஊர்களில் கங்கை நதிக்குத் தினமும் மாலையில் ஆரத்தி எடுப்பதுபோல் நாமும் காவிரித் தாய்க்கு வழிபாடு செய்யலாமே என்பதுவே அது . கங்கைக் கரையில் பெருந்திரளான  மக்கள் இந்த ஆரத்தியைக் காண வருகிறார்கள். அடுக்குத் தீபங்கள் ஏற்றப்படுவதும் கங்கை ஆற்றில் தீபங்களை மிதக்க விடுவதும் கண் கொள்ளாக் காட்சி . கங்கா மாதா என்று அன்போடும் பக்தியோடும் அவர்கள் அந் நதியை அழைக்கிறார்கள்.  நம் ஊரில் ஏன் அதுபோல் இல்லை என்பது குறையாகவே இருக்கிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட த் தினமும்  ஆரத்தி எடுக்கப்படாவிடினும், காவிரியைப் பயபக்தியோடு வழிபாட்டு வந்தார்கள். காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது தம் ஊருக்கு வருவதைக் காண்பதில் அக்காலத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார்கள். சில சமயங்களில் இரவு நேரங்களிலும் அப்படி வரும். பக்கத்து ஊரில் காவிரி நீர் வந்து விட்டது என்ற தகவல் வந்தவுடன், காவிரிக் கரையில் நீர் வருவதைக் காணக் காத்திருப்பார்கள்.  பள்ளங்களை நிரப்பியவாறு மெதுவாகத் தவழ்ந்து வரும் அழகே அழகு ! அப்படி வரும்போது, காவிரி மணலில் நின்றவாறு, காவிரித் தாயை அம்மணலில் விழுந்து வணங்குவார்கள். சிறிது சிறிதாக நீர் மட்டம் உயர ஆரம்பித்தவுடன் கரைக்கு வந்து விடுவார்கள். நொங்கும் நுரையுமாகக் காவிரி ஆறு செல்ல ஆரம்பிப்பதைப் பார்த்துச் சிறுவர்கள் குதூகலிப்பார்கள். மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பெரியவர்கள் படிக்கரையில் தேங்காய் உடைத்து காவேரி அம்மனுக்குப் பூஜை செய்வார்கள். சில வாரங்களில் வரும் ஆடிப் பெருக்கன்று வீடுகளில் செய்யப்பட்ட சிறிய சப்பரங்களைச் சிறுவர்கள் காவேரிக் கரைக்குக் கொண்டு வருவார்கள். பூஜை முடிந்ததும் அவரவர்கள் தாங்கள் கொண்டு வந்த பலவகை உணவு வகைகளைக் காவேரிக்கு நைவேத்தியம் செய்து விட்டுக் கரையில் அமர்ந்தபடியே சாப்பிடுவார்கள்.

மாசி மாதம் முதலாகவே நீர் வரத்து குறைந்து விடுவதால், மக்கள் அதில் இறங்கி அக்கரைக்குப் போவார்கள். சித்திரை வந்து விட்டாலோ மணல் பரப்பே இருக்கும். அப்போது காவேரிப் படுகையைக் கடப்பவர்கள், வெயிலாக இருந்தாலும் அந்தச் சுடு மணலில் காலணிகளைக் கையில் ஏந்தியபடியே நடப்பார்கள். நமக்கு உணவுக்கு ஆதாரமான அந்தத் தெய்வ நதியை   செருப்புக் காலோடு கடப்பது பாவம் எனக் கருதி வந்தார்கள். நாளடைவில் இந்த நம்பிக்கைகள் குறைவதோடு, கழிவு நீர் ,குப்பை போன்ற அசுத்தங்களையும் கலக்கத் துணிந்து விட்டார்கள் ! போதாக் குறைக்குத் தொழிற்சாலைகளின் பங்கு வேறு ! ஐப்பசி மாதத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் கண்ட கண்களால் முழங்கால் அளவு நீரைக் காணும்போது வேதனைப் படத்தான் முடிகிறது. பாட்டில்களும் ப்ளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்து கிடக்கும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

காவிரி டெல்டாவில் ஏராளமான விளைச்சல் நிலங்கள் தரிசாகவோ , மனைப்பிரிவுகளாகவோ காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீரும் கீழ் நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. ஐப்பசி மாதத்தில் கிணற்றில் கையால் நீரை எடுத்த காலம் போய் ஆழ துளைக்  குழாய்களை நம்ப வேண்டியிருக்கிறது.  ஆறு வற்றிவிட்டாலோ மணல்  எடுப்பவர்களுக்குக் கொண்டாட்டம். நாடு நலம் பெற வேண்டும் என்ற எண்ணம் போய் சுயநலம் தலை விரித்து ஆடுகிறது.
இவ்வளவுக்கும் நடுவில் காவிரி ஆற்றைத் தெய்வ ஆற்றல் உடையதாகக் கருதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கும்பகோணம் போன்ற ஊர்களில் காவிரிக்கு வழிபாடுகள் நடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்தியத்  துறவிகள் அமைப்பின் சார்பில் தலைக்காவிரியில் துவங்கி , காவேரி அம்மனின் திருவுருவச் சிலையை பொன்னி நதி ஓடும் வழியிலுள்ள முக்கியத் தலங்களுக்கு எடுத்துச் சென்று நதிக் கரையில் அபிஷேக ஆராதனைகள் செய்து, அதன் புனிதத்தைக் காப்பாற்றும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். மயிலாடுதுறைக்குக் கடை முக உற்சவம் காணச் சென்றிருந்தபோது , நல்வினைப்பயனாக அன்றைய தினம் அக்குழுவினர் அம்மனின் திருவுருவச் சிலையோடு அங்கு எழுந்தருளியிருந்ததைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அதற்கு முன்னதாக அருகிலுள்ள வதான்யேச்வர சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டு வந்தார்கள்.

காவிரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பல துறவிகளும் பிரமுகர்களும் உரை ஆற்றினார்கள். தலைமை உரை ஆற்றிய திருவாவடுதுறை குரு மகா சந்நிதானம் அவர்கள் , காவிரியின் புனிதம் பற்றியும் அதன் தூய்மையைக் காக்கவேண்டியது பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். படித்துறையில் காவேரி அம்மன் விக்கிரகத்திற்கு அபிஷேகங்கள் செயவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் ஆரத்தி நடைபெற்றது. பெண்மணிகள், விளக்கேற்றி வழிபாட்டு, அவற்றை நதியில் மிதக்க விட்டார்கள். அவை மிதந்து செல்லும் காட்சி இருளை அகற்ற வல்ல தெய்வீக ஒளியாக அமைந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை வழிபடுவதோடு நிறுத்தி விடாமல் வட இந்தியாவில் நடப்பதுபோல் தினமும் வழிபாடு நடை பெற வேண்டும். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்பது அப்போது மெய்யாகும். இவ்வாறு ஆண்டுக்கொருமுறை நடப்பதைக் காண  ஊர் மக்கள் தவறாது வந்து கலந்து கொள்ளவேண்டும். கழிவுகள் கலக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த கூவம் நதி  தற்போது சாக்கடைக் கால்வாய் ஆகி விட்டது போல ஆகி விடும். இப்போதாவது மக்களும் அரசாங்கமும் விழித்துக் கொள்வார்களா?  

Friday, November 1, 2013

வாழ்வு வளம்பெற வடவம்பலம் வாருங்கள்

தேசீய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் பயணிப்போர்களுக்கு சில சமயங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும். சாலை விபத்துக்கள், பயணிக்கும் வாகனம் நடுவழியில் நின்று விடுதல் போன்ற எவ்வளவோ சோதனைகள் , வேதனைகள்....  ஆனால் விக்ரவாண்டியிலிருந்து பண்ருட்டி,வடலூர் மார்க்கமாகக் கும்பகோணம் செல்லும் பாதைக்கு மட்டும் எப்போது விமோசனம் கிடைக்குமோ தெரியவில்லை! வழி நெடுகிலும் சுங்கச் சாவடிகள் நம்மைப் பிழிந்து எடுத்து விடுகின்றன. குறிப்பிட்ட காலம் ஆன பிறகும் சில இடங்களில் வசூல் செய்கிறார்கள். கேட்பதற்கு நாதி இல்லை! அதிலும் விக்கிரவாண்டி சாவடியில் கார்களுக்கு ஒரு வழிப் பயணத்திற்கு எழுபது ரூபாய் வசூலிக்கிறார்கள். இதை எல்லாம் பத்திரிகைகள்தான் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். விக்கிரவாண்டி சாவடியை சாமர்த்தியமாக,த் தஞ்சை செல்லும் பிரிவுப் பாதைக்கு முன்பாக அமைத்திருக்கிறார்கள். இத்தனை வரியையும் வழி நெடுகிலும் செலுத்தி விட்டு, தஞ்சைச் சாலையில் நுழைந்தால் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கும்! NH 45 C  என்று குறிக்கப்படும் இச் சாலை , வடலூர் வரை பல்லாங்குழியாகக் காட்சி அளிக்கிறது. பெரிய பள்ளங்களில் ஏறி இறங்கி வாகனங்கள் செல்வதைப் பார்க்கும்போது, இவ்வளவு அலட்சியமும் எங்கிருந்து அதிகாரிகளுக்கு வருகிறது என்று நினைக்கத் தோன்றும். எப்போதாவது பயணிப்பவர்களாவது சபித்துக் கொண்டே சென்று விடுகிறார்கள். ஒரு நாளில் பலமுறைகள் பயணிப்போர்களையும்  அரசுப் பேருந்துகளை ஓட்டுபவர்களையும்  நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.  கொஞ்சம் நகர்ந்தால் வயலிலோ ஆற்றிலோ தலை குப்புற விழ வேண்டியது தான். டயர்கள் பஞ்சர் ஆவதும் வெடித்து விடுவதும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த தேசீய சாலையில் பயணித்தால் ஒரு வழியாக கோலியனூர் கூட்டு ரோடை அடையலாம். இங்கு இடப்புறம் (கிழக்கே) திரும்பினால் பாண்டிச்சேரியும், வலப்புறம் (மேற்கே) திரும்பினால் விழுப்புரமும் நேராகத் (தெற்கில்) சென்றால் பண்ருட்டியும் வரும். இந்த இடத்திலிருந்து பண்ருட்டி சாலையில் சுமா நான்கு கி. மீ. சென்று, இடது புறம் திரும்பினால் வடவம்பலம் செல்லும் சாலையை அடையலாம். நெடுஞ்சாலையில் தகவல் பலகை அமைத்திருக்கிறார்கள். இந்த சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் சாலையை ஒட்டியபடி, ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதைக் காணலாம்.

இந்த இடத்தில் தான் ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடத்தின்  58 வது ஆச்சார்யாராக 52 ஆண்டுகள் இருந்த ஸ்ரீ  ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்திருக்கிறார். இந்த இடத்தைக் காஞ்சி மகா  பெரியவர்கள்  கண்டு பிடித்ததே அதிசயமான ஒரு நிகழ்ச்சி. அதுவரையில் அந்த இடம் யாருக்கும் தெரியாமல் வயல் வெளிகளுக்கு இடையில் இருந்தது. இப்போழுதும்கூட, வயலுக்கும் சாலைக்கும் இடையில்தான் இருக்கிறது. அங்கு சென்ற பெரியவர்கள் குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் என்பவரை அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்குமாறு சொன்னார்கள். அப்படித் தோண்டும்போது, சாஸ்திரிகள்  மயக்கம் அடைந்து விட்டார். பிறகு சுய நினைவு பெற்றவுடன் தான் கண்ட காட்சியை விவரித்தார். ஒரு சந்நியாசியின் வடிவையும், அவரைச் சுற்றிலும் பண்டிதர்கள் வேதம் சொல்லிக் கொண்டிருந்ததையும் தான் கண்டதாக அவர் கூறினார்.  அந்த இடம் தான் சுவாமிகள் ஸித்தி அடைந்த இடம் என்று தீர்மானிக்கப்பட்டு, அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்தது, 1927 ம் வருடம்,ஜனவரி 17 ம் தேதி. பின்னர், 1981 ம் வருடம்  ஜனவரி 17 ம் தேதி ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தேறியது.

விருத்தாசலத்தில் விச்வமுகி என்பவருக்குக் குமாரராக ஸ்ரீ  ஆத்ம போதேந்திரர் அவதரித்தார். அவரது இயற்பெயர்  விச்வேச்வரர் என்பது. இந்திய நாடு முழுவதும் யாத்திரையாகச் சென்றுள்ள இம்மகான் , ஸ்ரீ ருத்ர பாஷ்யம் இயற்றியுள்ளதோடு,  சதா சிவ ப்ரம்மேந்திரரை  குரு கிரந்த மாலை இயற்றும்படிப் பணித்து அருளினார். போதேந்திரருடன்  ராமேஸ்வர யாத்திரை செய்ததாகச்  சொல்லப்படுகிறது. காசியிலும் நெடுங்காலம் தங்கியிருந்தார்கள்.நிறைவாகத் தக்ஷிண பினாகினி என்று வடமொழியில் அழைக்கப்படும் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள வடவம்பலத்தை அடைந்து, சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டே  ஈச்வர வருஷம் (1638) துலா (ஐப்பசி) மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியன்று ஸித்தி அடைந்தார்கள்.

அமைதியாக வயல் அருகில் தோற்றமளிக்கும்  அதிஷ்டானம் மன  அமைதியை வாரி வழங்குவதாக அமைந்திருக்கிறது. ஸ்ரீ  ராஜ சேகர சர்மா என்பவர் ( 04146- 236410 ; 09442068232) இங்கு பூஜைகளைச் செய்து வருகிறார்.    பிருந்தாவனத்தருகில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சுவற்றில் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு எழுதப்பட்டுள்ளது. வடவம்பல வாசிகள்  கொடுத்து வைத்தவர்கள். இழந்த செல்வத்தை மீண்டும் திரும்பப் பெற்றது போலத்தானே இதுவும்! அதற்கு மூல காரணராக இருந்த காஞ்சிப் பெரியவர்களின் குரு பக்தியை என்னென்பது! இவ்விரு ஆச்சார்யர்களின் அருளால் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற நாமும் பிரார்த்திப்போம்.

Sunday, October 20, 2013

அபயம் தரும் அபயாம்பிகை

யானை, குரங்கு, நாரை போன்ற உயிரினங்கள் சிவபெருமானைப் பூஜித்ததாகப் புராணங்கள் மூலமாக அறிகிறோம். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்வர். வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள பட்டவர்த்திக்குப் பக்கத்தில் அப்பர் ஸ்வாமிகளின் தேவாரம் பெற்ற திருக்குரக்குக்கா(வல்) என்ற ஸ்தலத்தில் இன்றும் ஒரு அதிசயம் நடைபெறுகிறது.ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குரங்கு இக்கோயிலுக்குத் திடீரென வந்து, அங்குள்ள சிப்பந்திகள் வெளியேறும் வரையில் காத்திருந்து விட்டுப் பிறகு நேராக மூலவரி டத்தில் சென்று அமர்ந்து கொண்டு, தான் கொண்டு வந்த இலைகளையும்,பூக்களையும் போட்டுவிட்டுப் பிறகு அமைதியாக ஆலயத்தை விட்டு வெளியே செல்கிறது. ஒரு வருஷம் மகாசிவராத்திரியன்று வந்ததாகக் கூறினார்கள்.  சந்தேகக் கண்ணோடு நோக்குபவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ தெரியவில்லை!

கோயில்களில் பூனைகள் நடமாடுவது நாம் எல்லோரும் பார்த்ததுதான். அதிலும் சற்று வித்தியாசமான காட்சியை மயிலாடுதுறையிலுள்ள மாயூரநாதர் ஆலயத்தில் காண நேர்ந்தது. அந்த ஆலயத்திலுள்ள அம்பிகை மயிலுருவில் ஈசனை வழிபட்டுத் தன் பழைய உருவைப் பெற்றாள் என்கிறது தலபுராணம். பொன்னிற மேனியளாக ஆனதால் கௌரி எனப்படுகிறாள். சுவாமியும் கௌரி மாயூரநாதர்  எனப்படுகிறார். அம்பாளுக்கு அபயாம்பிகை என்றும்      அபயப் ப்ரதாம்பிகை என்றும் வடமொழியில் பெயர்கள் உண்டு. தமிழில் அஞ்சொல் நாயகி எனப்படுகிறாள். "அஞ்சொலாள் உமை" என்று இத்தலத்துத் தேவாரம்  குறிப்பிடுகிறது. இவ்வாறு எல்லாப் பெயர்களும்  அம்பிகைக்குப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கின்றன.

ஜகன்மாதாவான  அம்பிகை , நமக்கெல்லாம் அபயம் தந்து அஞ்சேல் என்று ரக்ஷிப்பதால் அவளை அபயாம்பிகை என்கிறோம். அதேபோல அஞ்சேல் என்று சொல்லும் அவளது குரல் இனிமையை எப்படி வருணிப்பது! அழகிய அந்தச்  சொல்லின் அழகும் , அந்தக் குரலின் அழகும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாக அல்லவா இருக்கின்றன!  அதனால் தான் அஞ்சொல் நாயகி என்ற பெயரும் அழகாகத்தான் இருக்கிறது. அஞ்சேல் என்று தஞ்சம் அளிப்பதை நேரில்      கண்டால்  அது எப்படிப்பட்ட இன்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பிற கோயில்களைப் போல இக்கோயிலிலும்  பூனைகள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்  கொண்டிருக்கும். சமீபத்தில் கண்ட காட்சி சிந்திக்கவும் வைத்துவிட்டது. அபயாம்பிகை சன்னதியில் ஆடிப்பூர  அம்மனுக்கென்று ஒரு தனி சன்னதி உள்ளது. வெளியில் பூட்டப்பட்டிருக்கும் கம்பிக்கதவின் வழியாக அம்பாளைத் தரிசிக்கலாம். அப்படித் தரிசிக்கும்போதுதான் இந்த அபூர்வக் காட்சி கிடைத்தது. ஆடிப்பூர அம்பாளின் பீடத்தில் ஒரு வெள்ளைப் பூனை உட்கார்ந்து கொண்டு இருந்தது. அதன் அருகில் ஒரு குட்டிப்பூனையும் இருந்தது. அது பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருக்கலாம். தாய்ப்பூனை தனது குட்டியை மிகவும் பாதுகாப்பான இடத்திலேயே விட்டு வைக்கும். அம்பாளுடைய பாதத்தைக் காட்டிலும் பாதுகாப்பான இடம் ஏது? சில நிமிடங்களில் குட்டிப்பூனை தனது தாயையும். உலக அன்னையையும் சேர்த்து ஒரு முறை சுற்றி வந்தது.தலையை நிமிர்ந்து அம்பாளின் திருமுகத்தை ஒரு கணம் நோக்கியது. பிறகு தாயிடம் சென்று ஒட்டிக்  கொண்டது. இக்காட்சியைக் கண்டவர்கள்  சிலிர்த்துப்போயினர். பூனைக்குட்டிக்கும் அபயம் அளிக்கும் அபயாம்பிகையின் கருணையைக் கண்டவுடன்  அந்தப் பெயர் எவ்வளவு அர்த்த புஷ்டியானது என்பதும் புரிந்தது. 

Friday, October 4, 2013

வேலியே பயிரை மேயலாமா?

பயிர்களைக் காப்பதற்கு வேலிஅமைப்பார்கள்.  பயிர்களைப் பிற மனிதர்களோ, விலங்கினங்களோ அண்டாமல் பாதுகாப்பது அந்த வேலி . இப்படி அரண் போல இருந்து காப்பதை வேலி என்பார்கள். எனவே, வேலி என்பது காவலாக அமைவது. தனது அடியானுக்காக நெல்லை வேலியிட்டுக் காத்து அருளியதால் நெல்லையப்பர் என்ற பெயர் ஈச்வரனுக்கு வந்தது. ஊரைச் சூழ்ந்து ஓடும் நதியும் இவ்வாறு வேலி ஆவதை, " ... சாம வேதம் பாடிய பாணியாலே ஆடினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே." என்கிறார் அப்பர் சுவாமிகள்.   கெடிலம் வேலி போலத் தோன்றினாலும், அனைத்து உலகங்களுக்கும் வேலி போல நின்று காப்பவன் பரமேச்வரன். நாம் அமைக்கும் வேலியும் நிரந்தரம் அல்ல. அவ்வப்போது அதனைச் சீர்திருத்த வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் , கிடைக்கும் இடைவெளி மூலமாகப் பிறர் புக ஏதுவாகிறது. அப்போது தேவையான அளவு நெருக்கமாக இல்லாததால் வேலி இருந்தும் பயிர் மேயப்படுகிறது. சாஸ்வதமான இருப்பவனே  அனைவரையும் காக்கும் ஒரே வேலி. மற்றதெல்லாம் வேலி போலத் தோன்றினாலும் உண்மையில் வேலி ஆகா.

வேலியைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு என்று தோன்றும். தர்மத்தை அரசர்கள் காத்து வந்தாலும், அவற்றை நேரிடையாகக் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்திருந்தார்கள். தங்களால் ஏற்படுத்தப்பட்ட நிபந்தங்கள் ஆலயங்களுக்கு உரிய முறையில் போய்ச் சேருகின்றனவா என்பதில் அவர்கள் காட்டிய அக்கறையே அலாதியானது. தென்காசி ஆலயத்தைக் கட்டிய மன்னன், " இதைத் திருப்பணிகள் செய்து  பராமரிப்போரது திருப்பாதங்கள் அடியேனது சிரத்தில் இருக்கக் கடவது" என்று கல்வெட்டில் எழுதினான்.   ஆனால் இன்று நடப்பது என்ன? அடியார்கள் இடும் காணிக்கைகளைக் களவாடுகிறார்கள் என்ற   அதிர்ச்சித் தகவல்களை செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம்.

உண்டியல்கள் உடைக்கப்பட்டுக் காணிக்கைகள் களவாடப்படுவது நடைபெற்றபோதிலும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் உண்டியல்கள்  பல இடங்களில் களவாளப்படுகின்றன. அறநிலையத்துறையின் கோயில்களில் உண்டியல் எண்ணப்படும்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? எல்லாக் கோயில்களிலும் கேமிராக்கள் பொருத்தப்  படாத நிலையில் முறைகேடு நடக்காது என்பது என்ன நிச்சயம்? நேரம் கிடைத்த போதும், அதிகாரிகள் அதை எண்ணுவதற்கு மனமுவந்து (!) வரும்போதுமே  பெரும்பாலும் உண்டியல்கள் திறக்கப்படுகின்றன. அதிக வருவாய் வந்து உண்டியல் நிரம்பி வழிந்தாலும் கண்டு கொள்ளாமல் செளகரியப்பட்டபோது திறந்தால் போதுமானது என்று இருந்தால் திருடன் விட்டு வைப்பானா?   இது போன்ற நிலையில் மாதம் ஒரு முறை எண்ணுவது என்றில்லாமல் அடிக்கடி எண்ணினால் திருடப்படும் பணமும் ஓரளவாவது காக்கப்படும்.

மதுரை மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை முடிந்து சில வாரங்கள் கழித்து அதிகாரிகள் உண்டியலை எண்ணியபிறகு, கணக்கை சரிபார்க்கும்போது சில லட்சங்கள் களவாடப்பட்டிருப்பது தெரியவே, உயர் அதிகாரி மூலம் வீடியோ பதிவைப் பார்க்கும்போது ஒரு அதிகாரியே, பணத்தைக்  கைக்குட்டையால் மூடி எடுத்து வைத்துக் கொள்வது தெரிய வந்ததாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இப்படி ஒரு அதிர்ச்சித் தகவலை தினசரிச்  செய்தித் தாள்கள் வெளியிட்டுள்ளன. பக்தர்கள் தங்களது காணிக்கை இறைபணிக்கே போய்ச்சேருகிறது என்ற நம்பிக்கையில்தானே அதை  உண்டியலில் செலுத்தியிருப்பார்கள் ? அந்த நம்பிக்கை வீண் போகலாமா? அறத்தைக் காக்கும் கடமை கொண்ட அறநிலையத் துறை அதிகாரியே இப்படி செய்திருப்பாரேயானால் பிறகு ஆலய சொத்துக்களை யார் பாதுகாப்பது? வேலியே பயிரை மேய்வதாக அல்லவா முடியும்?  சந்தன மகாலிங்கத்திற்கே வெளிச்சம்.
  

Wednesday, October 2, 2013

பத்திரிகை உலகம் சிந்திக்குமா?

ஹிந்து சமயத்தின் அடிப்படை நோக்கமே மீண்டும் பிறவாத பேரின்ப முக்தியை அடைவது என்பது. முக்தியை அடையப் பல மகான்கள் அவதரித்துப் பல்வேறு மொழிகளிலும் நூல்கள் அருளித் தங்களது உபதேசங்களால் முக்தி அடைய வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். "பிறவாமை வேண்டும்" என்று முக்தி தரவல்ல மூர்த்தியைக் காரைக்கால் அம்மையார் வேண்டியதாகப் பெரிய புராணம் கூறும். பல ஸ்தலங்களில் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்ற திருநாமம் இருப்பதையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டும். பல்வேறு நூல்கள் வெவ்வேறு தெய்வங்களிடம் நம்மை ஆற்றுப் படுத்தினாலும், அனைவருக்கும் பொதுவான இலக்கு என்பது மீண்டும் பிறவா முக்தி நிலை என்பதில் ஐயமில்லை.ஒவ்வொருவரும் அம்மகான்கள் காட்டிய பாதையை ஏற்று அவர்கள் அருளிய நூல்களை ஓதி முக்தி வரம் பெறலாம் என்பது கோட்பாடு. " விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்..." என்று திருநாவுக்கரசரும், அனைத்துத் தெய்வ வழிபாடுகளும் மாதொரு பாகனையே சென்று அடையும் என்று சைவ சித்தாந்த சாஸ்திரமும் குறிப்பிடுவதை எடுத்துக் காட்டலாம்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர்  பேசியதாக அக்டோபர்  2 ம்  தேதியிட்ட தினசரி பத்திரிகையில் வெளியான செய்தி வியப்புக்குரியதாக இருக்கிறது. பேச்சாளர்கள் பெரும்பாலும் நிகழ்ச்சி நாயகர்களையோ, நூல்களையோ முன்னிலைப்படுத்திப் பேசுவது வழக்கம். அது நியாயமும் கூட! ஆனால் பிறரையோ அல்லது பிறரது நம்பிக்கைகளையோ அது பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒருக்கால் யாராவது வருத்தம் தெரிவித்தால், பேச்சாளர் தான் அப்படிப் பேசவில்லை என்றும் பத்திரிகை அதைத் திரித்து எழுதிவிட்டது என்றும் மறுப்பு தெரிவிப்பதும் உண்டு. எனவே, நாம் பத்திரிகையில் வெளியான செய்தியைக் கொண்டே இங்கு சில வார்த்தைகள் எழுத வேண்டியிருக்கிறது.
முன்னாள் அமைச்சரின் பேச்சை வெளியிட்டு அந்நாளிதழ் , " தமிழ் மொழிக்கு வைணவமும் திருவருட்பாவும் இரண்டு கண்கள் " என்று தலைப்பு கொடுத்திருக்கிறது. இனி, அந்த அமைச்சர் கூறியதாக வெளியான செய்தியை  இங்கு தருகிறோம்:-  " .... வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை. தமிழ் மொழிக்கு வைணவமும் திருவருட்பாவும் இரண்டு கண்கள்." இவ்வாறு பேசியதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழுக்கு இரு கண்கள் இருக்கும் விளக்கத்தை இப்போது தான் புதிதாகக்  காண்கிறோம். தமிழில் உள்ள தெய்வ இலக்கியங்களுக்குச் சைவமும் வைணவமும் இரு கண்கள் என்று சொல்வதும் பொருத்தமே. சைவத்தை நீக்கி விட்டுத் திருவருட்பாவை ஒரு கண்ணாகக் கொண்டது நிகழ்ச்சி அமைப்பாலர்களைத் திருப்தி படுத்துவதற்காகத்தான் இருக்கக் கூடும் என்று நம்புகிறோம். சைவத்தையும் சைவ சமய குரவர்களையும் போற்றியுள்ள இராமலிங்க அடிகளுக்கே இதில் உடன் பாடு இராது என்றும் நம்புகிறோம்.

மேலும், வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை என்று எக்காரணம் பற்றி, எந்தப் பொருளில் அமைச்சர் பேசினார் என்று தெரியவில்லை. " ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்  புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே." என்ற திருஞானசம்பந்தரின் வாக்கில் திடமான நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்கள் முக்தி அடைவதில்லையா?  மூலன் உரைத்த மூவாயிரம் தமிழையும் காலை எழுந்து உள்ளன்போடு கருத்து அறிந்து  ஓதினால் ஞாலத்தலைவனான சிவபெருமானின் சேவடிகளை அடையலாம் என்று  திருமூலர் அருளுவதை நம்பி வாழ்பவர்கள் முக்தி அடைவதில்லையா? " முக்தியே சேர்வதற்கு அருள்வாயே "என்று அருணகிரிநாதர்  வேண்டியதை நமக்காக வேண்டியதாகக் கொண்டு திருப்புகழை அனுதினமும் பாராயணம் செய்பவர்கள் கந்தக் கடவுளின் கழலிணை களை அடைவதில்லையா?

ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு மார்கத்தில் பற்று இருக்கத்தான் வேண்டும். வள்ளலாரின் வாக்கைப் பின்பற்றினால் மோட்சம் கிடைக்கும் என்று சொல்லட்டும். ஆனால் "வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை" என்று சொன்னால், பிற நூல்கள் மூலம் இறையருளை அடைய முற்படுவோரது மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சிந்திக்க வேண்டும். அதேபோல் நாம் பின்பற்றும் சைவம் , தமிழுக்கு ஒரு கண் இல்லையா என்று நினைக்கவும் இப்பேச்சு வகை செய்கிறது.

ஒரு அரங்கத்தில் கூடியுள்ள மக்கள் முன் இது போன்ற பேச்சுக்கள் எத்தனை எத்தனையோ ! அவை மக்களை இணைப்பதாக இருந்தால் பத்திரிகையில் வெளியிடலாம். பிரிப்பதாகவோ, ஒரு சாராரை மனவருத்தத்திற்கு  உள்ளாக்குவதாகவோ இருந்தால் அது போன்ற செய்திகள் அரங்கத்தொடு இருந்து விட்டுப் போகட்டும். அனைத்து மக்களும் அறியும்படி செய்திதாளில் வெளியிட வேண்டுமா? பத்திரிகை உலகம் சிந்திக்குமா?  

Tuesday, September 24, 2013

"ஆன்மீக மலரில்" பிழை வரலாமா?

ஆன்மீகப் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிடுவதைப் பலமுறை குறிப்பிட்டிருந்தோம். வழக்கம்போலப் பத்திரிகை உலகம் அவற்றைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை. எப்படியோ பக்கம் நிரம்பி விடுகிறது. யார் இதை எல்லாம் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்ற நினைப்போ என்னவோ! " சீதைக்கு ராமன் சித்தப்பா " என்று கூட எழுதுவார்கள் போலிருக்கிறது! ஆன்மீக மலர் என்ற பகுதியை வெளியிடும் தினசரி செய்தித்தாள்  ஆன்மீகத்தில் பயிற்சியும்,அனுபவமும் பெற்றவர்களை நியமிக்கக் கூடாதா? இதன் மூலம் தவறான செய்திகளோ வரலாறுகளோ மக்களைச் சென்று அடையாதபடி பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
24.9.2013 தேதியிட்ட செய்தித்தாளுடன் வெளியான ஆன்மீக மலரில் (நம்பர்  1 ஆன்மீக இதழ் என்று  போட்டுக்கொள்கிறார்கள்) " யார் இந்த பைரவர்? " என்ற தலைப்பில் வெளியான செய்தி  ஆன்மீக மலரின்  தரத்தை எடைபோடுவதாக இருந்தது.

தக்ஷ யாகத்தில் பங்கேற்ற தேவர்களின் அகந்தையை அடக்க "சிவன் பைரவரை  உருவாக்கினார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு " கதை" தொடர்கிறது. தேய் பிறை அஷ்டமி பரிகார வழிபாடு வேறு இருக்கவே இருக்கிறது!

"யார் இந்த பைரவர்" என்பதை நாம் அவர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஐந்து முகம் கொண்ட பிரமன்  , சிவனுக்கும் அதேபோல் ஐந்து முகங்கள் இருப்பதை ஏளனம் செய்கையில் சிவபெருமானது கோபத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தமே பைரவ மூர்த்தம். அவ்வாறு கோபத்துடன் வெளிப்பட்ட பைரவர், பிரமனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி, அதைக் கபாலமாக ஏற்றார். தஞ்சைக்கு அருகிலுள்ள கண்டியூர் வீரட்டானத் தலபுராணமும், கந்த புராணமும் இதையே சொல்லும்.
இப்போது, தக்ஷ யாகத்திளிருந்து வெளிப்பட்டது யார் என்று தெரிய வேண்டாமா? அவரே வீர பத்திரர்   ஆவார். சிவனை இகழ்ந்த தக்ஷனது தலையைக் கொய்து, சூரியனது பற்களைத் தகர்த்து, சரஸ்வதியின் நாசியையும் அக்னி தேவனின் கரங்களையும் சேதித்து, சிவபெருமானுக்கு யாகத்தின் முதல் அவிசைத் தராததற்கான தண்டனையை வழங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு வீர பத்திரர் தோன்றி தக்ஷ யாகத்தை அழித்ததைத் திருவாசகமும்,

பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண் பட்ட பூதப்படை  வீரபத்திரரால்
புண் பட்டவா பாடிப் பூவல்லி கொய்யாமோ.

என்று கூறுவதைக் காணலாம்.

மயிலாடுதுறையிலிருந்து செம்பனார் கோயில் சென்று அதற்கு அருகிலுள்ள பரசலூர் என்று  வழங்கப்படும் பறியல் வீரட்டானத்தில் தக்ஷ சம்ஹார கோலத்தில் வீர பத்திர மூர்த்தியைத்  தரிசிக்கலாம்.. ஸ்காந்த மகா புராணத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

தவறான சேதிகளைத் தருவதும் ஆன்மீகமா ? அரைகுறையாக ஆன்மிகம் படித்திருந்தாலும் இதுபோல் நேரிடலாம். உண்மையான காரணம் அப்பத்திரிக்கைகளுக்கு மட்டுமே தெரியும்.   

Tuesday, September 10, 2013

நாமே வாய் இல்லா ஜீவன்கள்

ஸ்ரீ  பரமேசுவரனுக்கு  வழங்கப்படும் எத்தனையோ பெயர்களில் பசுபதி என்பது  முக்கியமானது ஆகும். உலகத்து உயிர்களாகிய பசுக்களுக்கெல்லாம் பதியாக அவன் இருப்பதால் அப்பெயர் ஏற்பட்டது. கரூர், ஆவூர், திருக்கொண்டீச்வரம் போன்ற தலங்களில் சுவாமிக்கு இப்பெயரே வழங்கப்படுகின்றது. நேபாளத்திலுள்ள  காத்மாண்டு மகாதேவர் கோவிலும் பசுபதிநாத்  மந்திர் என்றே அழைக்கப்படுகிறது. பசுக்கள் எல்லாம் தங்களைப் பிற விலங்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள  திருவாமாத்தூர் என்ற தலத்தில் இறைவனை வழிபட்டுக் கொம்புகளைப் பெற்றதாக அந்த ஊர்த்  தலபுராணம் கூறும். எனவே, அத்தலத்தை, கோ மாத்ருபுரம் என்பர். ஆனால் மனிதர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அக்காலத்தில் இல்லாத படியால் அதற்காகத் தவம்  செய்யவில்லை போலும் !

ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டித் தனது உடல் சதையை அரிந்து கருணை காட்டிய சிபிச் சக்கரவர்த்தியும் , தனது கன்று , அரசகுமாரனின் தேரில் சிக்கி உயிர் நீத்தபின், அரண்மனை வாயிலில் கதறிய தாய்ப்பசுவின் கதறலைக் கண்டு மனம் பதறி, அதற்கு இணையாகத் தனது மகனையே தேர்ச்சக்கரத்தில் ஏற்றிய மனுநீதிச் சோழனும் வாழ்ந்த நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ?

வெறிபிடித்த நாய்கள் எத்தனையோ வழிப்போக்கர்களையும் குழந்தைகளையும் கடித்தும் , அவற்றைக் கொல்லக்கூடாது என்று பிராணி நல அமைப்புக்கள் சொல்கிறார்கள். அதுவும் நியாயம் தான். எந்த வாயில்லா ஜீவனையும் கொல்லக்கூடாதுதான். அதே சமயம் கழுத்து ஓடியும்படி மாடுகள் வண்டிச்  சுமை ஏற்றிச் செல்லும்போது, வண்டியை இழுக்கமுடியாமல் வாயால் நுரை தள்ளுவதைக் கண்டும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அவற்றைப் பிரம்பால் விளாசுகிறார்களே, அக்காட்சியை இந்த அமைப்பினர் கண்டதே இல்லையா! அல்லது கண்டும் காணாததுபோல் பாசாங்கு செய்கிறார்களா?

ஈரோட்டில் இறைச்சிக்காகக் கொண்டுவரப்படும் மாடுகளை மூச்சு முட்டும்படியாக லாரியில் திணித்து ,அவற்றின் கால்கள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில், அவற்றைக் காலால் உதைத்துக் கீழே தள்ளும் காட்சியை இன்றைய {10.9.2013 தேதியிட்ட )  தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்தது. அத்துடன் வெளியான புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள் (நன்றி: தினமலர்) அச்செய்தியின் ஒரு பகுதி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது : " அப்போது தலை குப்புற விழுந்த மாடுகளின் கதறல் சத்தம் அவ்வழியாகச் சென்றவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. .. மாடுகள் சித்திரவதை செய்யப்படுவது வாடிக்கையாக நடக்கிறது."

ஒவ்வொரு சுங்கச்சாவடியைக் கடந்தும் இந்த லாரிகள் மாடுகளை ஏற்றிச் செல்லும்போது       போலீ சாரும், பிராணி நல அமைப்பினரும் மனம் வைத்தால் இதைத் தடுக்க முடியாதா? ஒவ்வொருவாரமும் சந்தைகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் கால்நடைகள் அனுப்பப் படுவதைத் தடை செய்ய முடியாதா?

மாடு வைத்திருப்பவர்களும் சுயநலமாக நடந்து கொள்வதும் ஒரு காரணமே! ஓர் மாடு காளைக் கன்று போட்டால் அது தேவையற்றது என்று கருதுகிறார்கள். அதேபோல் பசுவும் பால் கறப்பது குறைந்து விட்டாலோ,நின்றுவிட்டாலோ அதனை  விற்று விடுகின்றனர் (விரட்டி விடுகின்றனர் என்று சொல்வதே பொருத்தம் என்று தோன்றுகிறது!) அதுவரையில் கோமாதா என்றும் மாட்டுப் பொங்கல் என்றும் பேசியவர்கள் எப்படி மாறுகிறார்கள் பார்த்தீர்களா? கேட்டால் ,  அவற்றை எப்படிப் பராமரிப்பது என்று கேட்கிறார்கள்.

அண்மையில் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்ட செய்தி. காஞ்சிப் பெரியவர்கள் ஒரு காட்டுப் பகுதியின் வழியாக யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், அவர் இருக்கும் இடத்தை நோக்கி ஒரு மான் ஓடி வந்தது. அதைப் பல நாய்கள் துரத்திக்கொண்டு வந்தன. மானைக் காப்பாற்றுவதற்காக நாய்களின் மீது மடத்து சிப்பந்திகள் கற்களை வீச முற்படும்போது அதைத் தடுத்த பெரியவர்கள், " நாயும் வாய் இல்லா ஜீவன்தானே, அதைக் கல்லால் அடித்து விரட்டுவதற்குப் பதிலாக, அவற்றின் கவனத்தைத் திருப்புவதாக, சில பிஸ்கட் பாக்கெட்டுக்களை அவற்றிடம் போட்டால் அவை மானை விரட்டுவதை விட்டுவிட்டு,    பிஸ்கெ ட்டை நோக்கித் திரும்பிவிடும். இதனால் மானும்  காப்பாற்றப்படும் அல்லவா "  என்றார்களாம். இந்த உத்தியைக் கையாண்டதும், மானும்  காப்பாற்றப்பட்டது. இப்படி எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் மகான்கள் அளவுக்கு நமக்குக் கருணையும் ஞானமும் இல்லாவிட்டாலும் வயிற்றை நிரப்புவதற்காக நமக்குத் தாயாகப் பால் அளிக்கும் ஜீவன்களைக் கொல்லலாமா?

கோசாலைகள் பல இருந்தாலும் காளை மாடுகள் வேண்டாதனவாக ஆகிவிட்டன ! அவற்றையும் பராமரித்தால் இயற்கை உரம், எரி வாயு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.உழவுக்கும் வண்டிகளுக்கும் பயன் பட்டு வந்த அந்த காளை இனமே இல்லாமல் போய் விடும் அபாயம் வந்திருக்கிறது. பசுவினத்தைத் தெய்வமாகப் பாவிக்கிறோம். காமதேனு, பட்டி ஆகியவை பூஜித்த தலங்கள் என்று தலங்களின் புராணங்களில் காண்கிறோம். அப்படி இருந்தும் சண்டேச நாயனார் போல் அவை எல்லாம் நம் நந்திதேவரது குலம் என்று எண்ணுவதில்லை. இதைக் கேட்க வாய் இல்லாதவர்களாகிய நாமே உண்மையில் வாய் இல்லா ஜீவன்கள். செயலற்றவர்களாக இன்னும் எத்தனை நாள் இக்கொடுமையைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமோ தெரியவில்லை. ஆனேறு ஏறும் ஆனிலையப்பரே அருள வேண்டும்.

Thursday, September 5, 2013

இறைவா ஏன் இந்த சோதனை ?

சிவ பூஜை என்று சொன்னாலே அபிஷேகம் தான் முதல் இடம் வகிக்கிறது. அதற்குப் பிறகு பெருமானுக்கு மலர்களாலும் வில்வம் போன்ற இலைகளாலும்   செய்யப்படும்  அர்ச்சனை. இதனைத் திருமூலரும்,                       " புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீர் உண்டு " என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். இவ்வளவும் அன்பு கலந்து செய்யப்படுவது. " இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்..." என்கிறது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பூக்களையும் அபிஷேக நீரையும் சுமந்து செல்பவர்களின் பின்னால் ஆலயத்தை அடைவேன் என்றார் அப்பரும். "பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய்..." என்று சம்பந்தரும் அடியார்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கிறார்.

பூஜை என்பது நியமத்தோடு செய்யப்படுவது.  அதற்குத் தேவையான பசும்பால், மலர்கள் போன்றவற்றின் விலை  இப்போது எட்டாத அளவுக்கு உயர்ந்திருகிறது.  நகரங்களில் பசுக்களைப்  பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், பாக்கெட் பாலே பல இடங்களில் அபிஷேகத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது. ஆகவே, பசும்  பால், பசுந்   தயிர் ஆகியவை சுத்தமாக இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பூ  வாங்கினாலும்  இதே நிலை. பழைய  பூக்களைக் கூடத் தொடுத்து , முழம்  ரூபாய் இருபது, இருபத்தைந்து என்று விற்கிறார்கள். லாபம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை. அதற்காக இப்படியா? பூக்கள் வரத்து குறைந்து விட்டது என்றும், லாரி வாடகை அதிகரித்து விட்டது என்றும் , பண்டிகை  நாள் என்றும் முகூர்த்த நாள் என்றும் பல  காரணங்கள் சொல்லி  விலையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.  பண்டிகை நாட்களின் போது மல்லிகைப் பூவை சேர் ஆயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். வேறு வழி இல்லாமல்  நான்கு முழம் வாங்கப் போய் , விலையைப் பார்த்து  அதிர்ச்சி அடையும் மக்கள் ஒரு முழம் மட்டும் வாங்கி வருகிறார்கள். எப்படிப் போனால் என்ன. வியாபாரிகளுக்கு அவர்கள் நிர்ணயித்த விலையில் பூக்கள் அத்தனையும் வியாபாரம் ஆகி விடுகிறது. கேட்பார் அற்றுக்கிடக்கும் எருக்கம்பூக்களை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே பறித்து வந்துவிட்டுக் காசாக்குகிறார்கள். எந்த மூல தனமும் இல்லாமல் கிடைத்த பொருள் தானே? அதைக் கூடவா மலிவாக விற்க மனம் வரவில்லை? பழத்தையோ கிலோ கணக்கில் விற்கிறார்கள்! நிலைமை இப்படிமோசமாக  இருக்கும்போது, தினமும் வீட்டில் பூஜை செய்பவர் என்ன செய்வார்!

அபிஷேகத்திற்குத் தூய நீராவது கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை தான்! கிணறுகள் வற்றிப்போன நிலையில் குழாய்த் தண்ணீரே  கிடைக்கிறது. அப்பழந் தண்ணீரில் எத்தனை எத்தனையோ அசுத்தங்கள்! ஆழ்குழாய் நீரைப் பயன் படுத்தலாம் என்றால் உப்பு கலந்ததாக இருக்கிறது. ஒரு சில ஊர்களில் அருகாமையில் காவிரி போன்ற புனித நதிகள் ஓடக் கூடும். ஐம்பது ஆண்டுகள் முன்வரை அவற்றின் புனிதமும் தூய்மையும் காப்பாற்றப்பட்டு வந்தது. இப்போது அவற்றில் கலக்கப்படாத அசுத்தமே இல்லை எனலாம்!

இப்படியாகப் பூஜை செய்யக் குந்தகம் ஏற்பட்டுள்ள வேளையில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற சிந்திக்க வேண்டியிருக்கிறது. விநாயக சதுர்த்தி என்று எடுத்துக் கொண்டால், நாமே சிறிய அளவில் களிமண்ணால் பிள்ளையார் செய்து பூஜை செய்யாலாம். விலை கொடுத்து வாங்கினால் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக விற்பதில்லை. காகிதத்தால் ஆன குடையையும் நாமே செய்ய முடியும். இதுவும் வாங்கினால் குறைந்தது பத்து ரூபாய் ஆகிறது. முதல் நாளே அக்கம் பக்கம் சென்றால் நிறைய எருக்கம் பூக்களைப் பறித்து வந்து மாலையாகத் தொடுத்துச் சார்த்தலாம். அருகம் புல்லும் இப்படியே.

வீட்டில்  மல்லிகை,முல்லை,நந்தியாவட்டை,அரளி, பாரிஜாதம் போன்ற பூச்செடிகளை வளர்த்தால் பூஜைக்கும் குறைவு வராது. அதேசமயம்  தூயனவும், அன்றைய தினம் மலர்ந்தனவும் ஆகிய பூக்களைக் கொண்டு பூஜை செய்யலாம். வில்வம்,கிளுவை,நொச்சி போன்ற இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இப்படிச் செய்துவந்தால் பூஜைக்கான பூக்களை விலை கொடுத்து வாங்குவதில்லை என்ற நிலை ஏற்படும்.

விலை அதிகம் ஆகிவிட்டது என்பதால் 108 அல்லது 1008 நாமாக்களால் செய்யப்படும் அர்ச்சனையைக் கையில் இருந்த மலர்கள் குறைவாக இருப்பதால் எப்படிச் செய்ய முடியும்? நியமத்துடன் 1008 தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் சக்கரம் பெற வேண்டித் திருமால் சிவபூஜை செய்தபோது, ஒரு மலர் குறையவே, தாமரைக்குச் சமமான தனது கண்ணையே ஈசன் திருவடிக்குச் சாத்தினார்  என்று புராணம் சொல்கிறது அல்லவா? ஆகவே, புஷ்பத்தாலோ , வில்வ இலைகளாலோ அர்ச்சனை செய்தால் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
இதற்கும் சௌகரியப்படாதவர்கள் உண்டு. வீட்டில் இடமே இல்லாதபோது பூச்செடிகளை எங்கே வளர்ப்பது என்கிறார்கள். அடுக்குமாடிகளில் குடியிருப்போர் நிலை பரிதாபத்திற்குரியது. அங்கு வளர்க்கப்படும் செடிகள் பெரும்பாலும் காட்சிப் பொருள்கள் தான்! நித்திய பூஜை செய்யாதவர்கள்,  அருகில் யாராவது செய்தால் அதைப் பார்ப்பதோடு இயன்ற உதவியும் செய்யலாம். கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொடுத்து ஆலய மூர்த்திகளுக்குச் சார்த்தச் சொல்லலாம்.

ஆனால் வீட்டில் நித்திய பூஜை செய்பவர் நல்ல பசும்பாலோ , மலர்களோ, இலைகளோ கிடைக்காமல் படும் சிரமம் சொல்லுக்கு அடங்காது.  
 " ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் உன்னைப் பூஜிக்க ஆசைப் படுகிறேன், அதைத் தேவரீர் அருள மாட்டீரா, ஏன் இந்த சோதனை " என்று கண்ணீர் பெருக்குவதைத் தவிர என்ன செய்ய முடியும்?  ஒருவாறு மனத்தைத்  தேற்றிக்கொண்டு, " அர்ச்சனை பாட்டே ஆகும் " என்று சொல்லியிருப்பதால் தேவார திருவாசகங்களைப் பாடலாம். ஆனால் அத்தோத்திரங்களிலேயே, இறைவனைத் தூய காவிரியின் நன்னீர் ஆட்டி, சந்தனக் குழம்பும் இண்டை மாலையும்  சார்த்தி, தொடுத்த பூவொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வழிபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறபடியால்  அப்படிப்பட்ட பூஜை செய்யும் பாக்கியத்தை அப்பெருமான் அல்லவா அருள வேண்டும்!  

Saturday, August 24, 2013

தமிழ் எழுத்துக்களின் நிலை

தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிப் பேசும்போதுமட்டும் எல்லோருக்கும் தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள் பற்றிய ஞாபகம் வந்துவிடும். தமிழ்  வளர்ச்சிக்குப்   பக்தி இலக்கியங்கள் ஆற்றிய தொண்டைப் பற்றி மட்டும் ஏனோ நினைப்பதில்லை. ஏராளமான  நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் அவற்றைப் போற்றுவார் சிலரே. நல்ல வேளையாகச் சில உயர்ந்த உள்ளங்களின் பெருமுயற்சியால் பல நூல்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுக் காப்பாற்றப் படுகின்றன.

வரலாற்று ஆய்வாளர்களும் யார் காலத்துக் கல்வெட்டு என்பதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர, அம்மன்னர்கள் காட்டிய இறை வழிபாடு, கோயில் பாதுகாப்பு,கோயில் திருப்பணி ஆகியவற்றில் மக்களின் கவனத்தை ஈர்க்க முற்படுவதில்லை. வரலாறு பற்றி இவர்கள் எழுதிய புத்தகங்கள் வரலாற்றைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக அமைகின்றன.

வட்டெழுத்துக் காலம் மாறிய பின்னர்  மக்களின் பயன்பாட்டுக்கான எழுத்துக்கள் ஓரளவு சீரடைந்த காலத்தில் ஆட்சியாளர்களின் விருப்பத்தின் பேரில் எழுத்துக்கள் பல நீக்கப்பட்டும் புது வடிவம் பெற்றும் மாற்றப்பெற்றன.
விஞ்ஞானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி (??) ஆங்கிலச் சொற்கள் பல மொழியாக்கம்  செய்யப்பட்டன.  இருப்பினும் ,பல ஆங்கிலச் சொற்கள் தொடர்ந்து மக்களால் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக," பஸ் " எப்போது வரும் என்று பாமரன் கூடக் கேட்கும் போது, "பேருந்து" எப்போது வரும் என்று கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், " பஸ்" என்று சொல்லிவிட்டதால் தமிழின் மீது ஆர்வம்  இல்லாதவன் என்ற முடிவுக்கும் வந்து விடக் கூடாது.

பிற மொழிகளில் இருந்து சொற்களைத் தமிழாக்கம் செய்ய முனைகிறார்கள். சமீபத்தில் 35 வார்த்தைகள் அவ்வாறு  மொழிபெயர்க்கப்பட்டதாகப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது. அயல் நாட்டவர்கள் புகுத்தும் சொற்கள் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே. அவற்றை அப்படியே வழங்குவதே குழப்பத்தைத் தவிர்க்கும். "பேஸ்புக் " என்பதை "முக நூல்" என்று கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். இன்னும் பார்த்தால்,அதில் வரும் "பே" என்ற எழுத்துக்கு முன்  ஆயுத எழுத்து பயன் படுத்த வேண்டும். ஆனால் இப்பொழுது ஆயுத எழுத்து போன இடம் தெரியவில்லை. பயன் படுத்துவாரும் இல்லை.
ஆயுத எழுத்தின் உபயோகத்தைத் தமிழ் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சிலவற்றையாவது காண்போம்:( துரதிருஷ்ட வசமாக கூகுளிலும், ஆயுத எழுத்தைக் காணோம். எனவே ஆயுத எழுத்து வருமிடத்தில் இடைவெளி விட்டிருப்பதைக் காண்க)

 ௧)திருக்குறளில் அறத்துப்பாலில் திருவள்ளுவர், "வெ    காமை" என்ற ஒரு அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களிலும் ஆயுத எழுத்தைக் கையாண்டிருக்கிறார்.
௨) " அ    தாஅன்று..."   _ நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
௩) "  கண்ணில் நல்ல    துறும் கழுமல வள நகர்.."  - தேவாரம்
௪) " யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு  அ     திலான்" --- திருவாசகம்
௫)  திரு வெ      கா -   காஞ்சியில் உள்ள ஒரு வைணவத்தலத்தின் பெயர்.

"ஔவையார்"  என்பதை அவ்வையார் என்று எழுதுகிறார்கள். "ஔ" என்ற எழுத்தும் "அவ்"  என்ற  எழுத்தும்  உச்சரிப்பில் ஒன்று இல்லாத போது எதற்காக " ஔ " நீக்கப்படுகிறது என்று புரியவில்லை.

எழுத்துக்களைக் குறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பல எழுத்துக்களைக் கால் வாங்கி நம் உயிரையும் சேர்த்து வாங்குகிறார்கள். திருவண்ணாமலை என்பதில் ணகரமும் லகரமும் மாற்றம் பெற்றதால் கை ஓடிவதுதான் மிச்சம்! தமிழில் தேர்வு எழுதும் குழந்தைகள் இப்படிக் கால் வாங்குவதால் , எழுதும் நேரம்  வீணடிக்கப்படுகிறது. யாராவது  சிந்திக்கப்போகிறார்களா  தெரியவில்லை.  வேறு வழி இல்லாமல் நாமும் அதையே பின்பற்ற வேண்டியிருக்கிறது.

தமிழில் வழக்கத்தில் இல்லாத சொற்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் காணோம்! " மச்சி" போன்ற சொற்கள் தான் புகுத்தப்படுகின்றன. வெட்கப்பட வேண்டிய விஷயம் இது.

வழக்கத்தில் இருந்த "ஷ" "ஸ" "ஹ" "க்ஷ" "ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை நீக்கினார்கள். கவனம் என்ற சொல்லில் இருக்கும் "க" வும் கல்வி என்ற சொல்லில் உள்ள "க"வும் ஒரே மாதிரியா உச்சரிக்கப்படுகின்றன?

"அழித்துப் பிறக்க வொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழை இன்றிக் கற்கிலீர்.. "
என்று இதனால் தான்  அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடினாரோ?

 பிற திராவிட மொழிகளில் இப்படி இல்லையே! தமிழ் அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். எழுத்தைக் குறைப்பதில் உள்ள ஆர்வம் , இருக்கும் சொற்களை ஆழப் படுத்துவதில் இல்லையே!  அப்போது தான் நமக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து கற்கும் பழக்கம் வரும்.  அது வரையில் "தமிழ் வாழ்க" என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சாகவே  முடியும். 

Friday, August 16, 2013

இணைய தளம் நட்புப்பூங்காவாகட்டும்

இணைய தளம் என்பது தகவல்களைப் பரிமாறும் இடமாக மட்டும் இல்லாமல் மக்களை ஒன்றாக இணைக்கும் தளமாக இருக்க வேண்டும். விவாத மேடையாகவோ , காழ்ப்பு உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவோ அது அமைந்து விடக்கூடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது ,விவேகத்தையும் நட்பையும் ஊக்குவிக்கும் பாலமாக இருக்கவேண்டும். பல தகவல்கள் இணையதளத்தில் பகிரப்படும்போது வரம்புகள் மீறப்படுவதைக் காணும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒருவரது கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் தெரிவிக்கட்டும். மாறாக, தனக்குத் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தெரியும்படி அதைப் பகிர்ந்து கொள்வது அவசியம் தானா? சிந்திக்க வேண்டும்.

நமக்குப் பிடித்ததெல்லாம், நமக்குச் சரி என்று தோன்றுவதெல்லாம் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று இக்காலத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறர் குறைகளை சுட்டிக் காட்டத் தயாராக இருக்கும் நாம் , நமது குறைகளைப் பிறர் சுட்டிக் காட்டும் போது  பொங்கி எழுவது ஏன் என்று புரியவில்லை. குறைகள் இல்லாதவர் நம்மில் யார் உளர்? ஆனால் இறைவனோ நமது குறைகளையும் குற்றங்களையும் பாராது குணம் ஒன்றையே கொள்பவன். இதனை,"குறை உடையார் குற்றம் ஒராய் ; கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்றார் ஞானசம்பந்தர் .

ஒரு பயனுள்ள தகவலை ஒரு அன்பர் பகிர்ந்துகொள்ளும் போது அதைப் படிப்பதோ அல்லது பிறரிடம் பகிர்ந்து கொள்வதோ தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அதற்குப் புதுச் சாயம் பூசி  உள்நோக்கம் கற்பிப்பவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அண்மையில் ஓர் அன்பர் , சைவப்பெரியார் திரு CKS அவர்கள் எழுதிய பெரியபுராண உரையைக் கணினிமூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முகவரியைத் தெரிவித்திருந்தார். அதனை விலை கொடுத்து வாங்குவதானால் சுமார் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகலாம். இந்நிலையில் இந்தச் சேவை இறைவன் தந்த வரப்பிரசாதமே. இச்செய்தியை ஒரு குழுவுக்கே அந்த அன்பர் தெரிவித்திருந்தார். இதைக் கண்ட மற்றொரு அன்பர் வடமொழியில் இருக்கும் பக்த விஜயத்தைச்  சிலர் உரையாற்றி வருவதால், பிற்காலத்தில்சேக்கிழார் அருளிய   பெரியபுராணம்  அந்த வடமொழி நூலின் மொழியாக்கமே என்று கூறி விடுவர் என்றும் கூறியதோடு, கடும் சொற்களால் தாக்கி இருந்தார்.
உண்மையில் பார்த்தால் தகவலைப் பரிமாறியவரும், அதற்கு விடை கூறியவரும் நிரம்பப் படித்தவர்கள். நிறைய ஆலயங்களைத் தரிசித்தவர்கள். நியமத்தோடு இருப்பவர்கள். சமயத்தின் லக்ஷக்கணக்கானத் தூண்களில் இவர்களும் அடங்குவர். இறைவனையோ சமயத்தையோ யாராவது பழித்தால் உள்ளம்  வெதும்புபவர்கள்.இப்படி இருக்கும்போது உட்பூசல்கள் தேவை தானா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் இவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது இப்படிச் சர்ச்சைகளில் ஈடுபடலாமா?

கடவுளே இல்லை என்று நாத்தழும்பேற நாத்திகம் பேசுபவர்களைக் கூட மறந்துவிட்டு, நம்மவர்களையே நாம் ஏசிக்கொள்வது எந்த வகையில் நியாயம்? இந்த ஏக்கமும் தாக்கமும் , கோயில் நிலங்களின் குத்தகைப் பாக்கி வைத்துள்ளவர்கள் மீதோ, இடிந்த கோயில்களைப் பாராது இருக்கும் அற நிலையத்துறை மீதோ காட்டப்படுவதில்லையே! ஒரு கால பூஜைக்கே தவிக்கும் ஏராளமான கோயில்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பலாம் அல்லவா?

ஒவ்வொருவரும் தங்கள் பணியில் நின்று இறைவனுக்குத் தொண்டாற்றுவர். பணி செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். பணிகள் பலவிதம். திருப்பள்ளி எழுச்சியும் அதைத்தானே உணர்த்துகிறது. வீணை வாசிப்பது, வேதமும் தோத்திரமும் இயம்புவது, தொடுத்த மலரோடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வணங்குவது, உழவாரப்பணி செய்வது, அடியார்களைப் போற்றுவது போன்ற எத்தனையோ பணிகள் இதில் அடங்கும். இவற்றில் எந்தப் பணியும் ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்தது அல்ல . பெரிய புராணத்தை ஆழ்ந்து வாசித்தவர்களுக்கு அது நன்றாகப் புரியும். " எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசனைக் குறுகிய வட்டத்துக்குள் அடக்கிக் கொள்ள முயற்சிப்பது வீணான செயல். மொழிகள் இறைவனது வடிவம் என்பர்  பெரியோர். இதில் எந்த மொழி இறைவனின் சொந்த மொழி என்றும் , எது முதலில் தோன்றியது என்றும், எந்த நூல் முந்தியது என்றும் வாதிட்டுக் காலத்தை வீணாக்காமல் ஈசன் திறமே பேணிப் பணியும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியப்பரைக் காணலாம் அன்றோ?  

இணையதளத்தில் வாதிடும் சகோதரர்களே ! உங்களிடம் சமய உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. உங்கள் அருந்தொண்டு திசை மாறலாகாது. உங்களது சமய நம்பிக்கை இணையற்றது. அதனை ஆக்கபூர்வமாக அடியார்களுக்கு அளித்து உதவுங்கள். சமயம் பற்றி அறிய வேண்டுமானால் மக்கள் பத்திரிகைகளையே நாட வேண்டிய  இத்  தருணத்தில் தாங்கள் முன்வந்தால் எத்தனையோ மக்களுக்கு வழிகாட்ட முடியும் என்பது நிச்சயம். அதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் . திருவருள் துணை நிற்பதாக.
  

Sunday, August 11, 2013

பிரதோஷ வேளையில் அன்ன தானமா?

ஆன்மீக வளர்ச்சியில் ஆன்மீகப் பத்திரிகைகளுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதான். பல கோயில்களின் இருப்பிடமே தெரியாதவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இவை அமைகின்றன. மேலும் பல ஆலயங்களின் திருப்பணிகள் துவங்கவும் எழுச்சியை ஏற்படுத்த முனைகின்றன. திரும்பிப் பார்க்கவே ஆள் இல்லாத நிலை மாறி, மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. பரபரப்பாகவும்,வித்தியாசமாகவும் எழுத வேண்டும் என்ற வகையில் ," ஊருக்கே படி அளக்கும் ஈசன் ஓலைக் குடிசையில் இருக்கலாமா ? "  " சிலிர்ப்பூட்டும் சிங்காரவேலர் " போன்ற தலைப்புக்களைக் கொடுக்கிறார்கள். பிரபலங்களின் பூஜை அறையையும் விட்டு வைப்பதில்லை. ( இதற்கும் பிரபலம் ஆக வேண்டியது முக்கியம் போல் இருக்கிறது! ) பல சமயங்களில் கற்பனா சக்தி என்னும் குதிரையையும் தட்டி விடுகிறார்கள். ஒரு பிரபலத்தை விட்டுக் கேள்வி பதில் பகுதியில் புரட்சிகரமான விளக்கம் வேறு! சிறிது நாட்கள் கழித்து அது புத்தகமாக ஆக்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் ஜோதிடப் பகுதி இல்லாவிட்டால் எப்படி ? அதுவும் கூடவே தரப்படுகிறது.

 என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் பக்கத்தை நிரப்புவது என்ற நிலை மாத்திரம் வந்து விடக்கூடாது. ஒரு சிலர் மட்டுமே எழுத வேண்டும் என்பது வேண்டுமானால் அவர்களது பத்திரிகை தர்மமாக இருக்கலாம். அதே நேரத்தில், தவறான செய்திகள் மக்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்ற உண்மையான பத்திரிகை  தர்மமும் கூடவே இருக்க வேண்டும் அல்லவா?  ஒருவேளை, தவறான செய்தி வெளியிடப்பட்டு, அதை வாசகர் யாராவது சுட்டிக்காட்டினால் அந்தத் திருத்தத்தை அடுத்த இதழிலேயே வெளியிடவேண்டும் என்ற பெருந்தன்மை எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கின்றன?

தக்ஷிணாமூர்த்திக்கும் நவக்ரஹத்தில் ஒருவரான குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மஞ்சள் வஸ்திரமும் கொண்டைக் கடலை மாலையும் தக்ஷிணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளின் பரிந்துரை வேறே!

நவக்கிரகங்கள் வழிபட்ட நலம் தரும் கோயில்களைக் குறிப்பிடும்போது சனீஸ்வரன் கோயில், குரு ஸ்தலம் என்றெல்லாம் தலைப்புக் களைத் தந்து மக்களைக் குழப்புகிறது பத்திரிகை உலகம். சனைச்சரன் (மெல்ல  சஞ்சரிப்பவன்) என்ற பெயரை சனீஸ்வரன் ஆக்கி, ஈஸ்வர பட்டம் பெற்றதாகக் கதையும் எழுதி விடுகிறார்கள்.

பழைய விக்கிரகங்களில் புள்ளிகள் காணப்படுவது இயற்கையே. ஒரு ஊர்க் கோவிலில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய விக்கிரகத்தில் இவ்வாறு இருந்ததை, அவர் அங்கு வந்தபோது அம்மை நோய் தாக்கியதால் ஏற்பட்ட வடுக்கள் என்று குருக்கள் சொன்னதாகத் திருத் தலங்களை யாத்திரை செய்த ஒருவர், வார பத்திரிகை ஒன்றில்  எழுதினர். அது தவறு என்று சுட்டிக்காட்டியும் திருத்திக் கொள்ள முன் வரவில்லை. மக்களுக்குத் தவறான தகவல் போனது போனதுதான்!

இதேபோல் மற்றொரு பத்திரிகையில் சிறுத்தொண்ட நாயனார்,  தான் செய்த செயற்கரிய செயலைப் பிறர் செய்ய முடியாது என்று அகம்பாவம் கொண்டதாகத் தான் கேள்விப்பட்ட தகவலை அப்படியே வெளியிட்டிருந்தார் பத்திரிகை ஆசிரியர். பெரிய புராண ஆதாரம் காட்டி அதை மறுத்து எழுதியும் பலன் இல்லை.

பிரதோஷ மகிமையைப் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டு எத்தனையோ பேர் அன்றைய தினம் சிவாலயங்களுக்குச் செல்கிறார்கள். ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி எல்லா உலகங்களையும் காப்பாற்றிய நாள் ஆதலால் , அன்று உபவாசம் இருந்து, சிவ பூஜை செய்வதும்  சிவாலய வழிபாடு செய்வதும்  முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொருநாள் மாலை நேரமும் வரும் நித்திய பிரதோஷ வேளைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது வழக்கம். இப்படி இருக்கும்போது, அந்த வேளையில் பல கோவில்களில் அன்ன தானம் செய்யப்பட்டு வருகிறது! பத்திரிகைகளும் இதற்குத் தூபம் போடுவதைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. கையில் பிரசாதம் கொடுப்பது , தொன்னையில் தருவது , அன்னதானம் செய்வது போன்றவற்றை உபவாச தினங்களில் செய்வதைத் தவிர்க்கலாமே!  அன்ன தானத்திற்கு ஈடு இணை இல்லைதான். அதையும் முறையாகச் செய்தால் உரிய பலன் கிடைக்கும் அல்லவா? " பிரதோஷ வைபவத்தின் போது அன்னதானமாக வழங்க வழங்க நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும்." என்று அர்த்தமற்ற முறையில் தவறாக விளக்கம் தரப்பட்டுள்ளது ஒரு ஆன்மீகப் பத்திரிகையில்! பத்திரிகை ஆசிரியர்  ஆன்மீகத்தில் தோய்ந்தவராக இருந்தால் இத்தகைய தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. எழுதத் தெரிந்து விட்டால் மட்டும் போதும் என்பது கதைகள் எழுதுபவருக்கு மட்டும்தான்.  காரணம் என்ன என்றால் , அதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் ஆன்மீகக் கட்டுரை எழுதும்போது, தவறில்லாமல் தகவல் தரப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்வதே  சிறந்த பத்திரிகைக்கான  அடையாளம்.

Friday, August 2, 2013

தெய்வத் திருவுருவம்

தெய்வத்திருமேனிகளைத் தரிசிக்கும்போது  அவற்றை ஒரு கணம் அசையாதவண்ணம் இருந்தபடியே உற்று நோக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திருவுருவம் நமது உள்ளத்தில் பதிந்து நீங்காது நிற்கும். மேலெழுந்தவாரியாக நோக்கினால் பல செய்திகள்  புலப்படாமல் போய்விடும். தூண்களில் காணப்படும் சிற்பங்களிலும் பல புராணச் செய்திகளும் நாம் இதுவரை  கேள்விப்படாத வரலாறுகளும் தெரிய வாய்ப்பு உண்டு.

உண்மையில் நாம் அவ்வாறு தரிசனம் செய்கிறோமா என்று பார்த்தால் நேரம் இல்லாதததைக் காரணம் காட்டி இல்லை என்றே பதில்சொல்கிறோம். நேரம் இருக்கும் போதாவது அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். மூர்த்தியின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில்  இன்ன மூர்த்தி என்று எல்லா மூர்த்திகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. யானை முகமாக இருந்தால் விநாயகர் என்றும் ஆறு முகத்தோடு இருந்தால் சண்முகர் என்றும் நான்கு முகத்தோடு இருந்தால் பிரமன் என்றும் எளிதாகக் கூற முடியும். ஆனால் ஒரு முகமும் நான்கு திருக் கரங்களும் கொண்ட மூர்த்தியைப் பார்த்தால் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதற்கு ஒரே வழி, அம்மூர்த்தியின் பின் இரண்டு கரங்களிலும் என்ன இருக்கிறது என்று உற்று நோக்க வேண்டும். சூலமும் வஜ்ரமும் இருந்தால் முருகன் என்றும், சங்கும் சக்கரமும் இருந்தால் திருமால் என்றும் மானும்  மழுவும் இருந்தால் சிவன் என்றும் சொல்கிறோம்.

சில சமயங்களில் பின் இரு கரங்களில் உள்ளவற்றைக்  கொண்டு ஊகித்தாலும், பிற அம்சங்களை நோக்கும் போது எந்த அவசரத்தில் இத திருக்கோலம் ஏற்பட்டது என்று புராண ரீதியில் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு நிலை சென்னைக்கு அருகிலுள்ள திருசூலத்தில் உள்ள திருசூல நாதர் ஆலயத்தில் தரிசிக்கும்போது  நேர்ந்தது. சோழர் காலக் கல்வெட்டுக்களைக் கொண்ட இந்த ஆலயத்தின் முக மண்டபத் தூண் ஒன்றில் உள்ள சிற்பம் தான் இவ்வாறு நம்மைக் கவர்ந்தது.

பின்னிரு கரங்களில்  மான் மழு ஏந்தி நிற்கின்றார் பெருமான். அவரது முன் இரு கரங்களில் நரசிம்மர்  துவண்டு கிடக்கிறார். அதைப்  பார்த்த மாத்திரத்தில் அம்மூர்த்தி சரபர் என்று சொல்லிவிடுவார்கள். ( ஆலய அர்ச்சகரும் அப்படித்தான் சொல்கிறார்.) இப்பொழுது சந்தேகத்துக்கு வருவோம். சரபருக்குப் பொதுவாக இறக்கைகளும் சிங்க முகமும் உண்டு அல்லவா? ஆனால் இச் சிற்பத்திலோ இறக்கைகளும் இல்லை. சிங்க முகமும் இல்லை. இரண்டு முகங்கள் இருக்கின்றன. இரு முகம் கொண்ட சரப நிலை தியானத்துடன் இருக்கிறதா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் விளக்கினால் பலரும் பயன் பெறுவர்).

தூண் தானே என்று பாராமல் சென்றுவிட்டால் இது போன்ற புராண வரலாறுகள் தெரியாமல் போய் விடும். பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆலயத்தை வலம் வரும் போது இது போன்ற செய்திகள் திருவருளால் நமக்குப் புலப்படும். நந்தியாகட்டும்,துவார பாலகர்கள் ஆகட்டும், பூத கண வரிசை ஆகட்டும் , மகர தோரணங்கள் ஆகட்டும் -- இவை எல்லாம் எத்தனையோ தகவல்களை நமக்குச் சொல்லக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைத் தரிசிக்கும் பாக்கியம் இருக்க வேண்டும்.

Sunday, July 28, 2013

ஆலயப் புனிதம் காப்போம்

இறைவன் உறையும் இடம் என்ற எண்ணம் வந்தவுடன் நம்மை அறியாமலேயே கைகள் கூப்பி அஞ்சலி செலுத்தியவாறே ஆலயத்திற்குள் நுழைகிறோம். அதற்கு முன்பாக வெளியில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்கிறோம். சில கோவில்களில் கை-கால்களை நீரால் சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும் வசதியும் இருக்கிறது. பயபக்தி எப்பொழுது குறைகிறதோ அப்போது அலட்சியமும் அகம்பாவமும் தலை தூக்குகின்றன.

பல கோவில்களில் நிர்வாக அலுவலகம் உள்ளே இருக்கிறது. அதில் பணி செய்பவர்கள் அலுவலக வாயில் வரை காலணிகளை அணிந்து செல்கிறார்கள்!இரண்டு சக்கர வாகனங்களும் கூடவே உள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது.கோபுர வாயில் வழியே நுழைந்து, முடிந்த வரையில் உள்ளே செல்லுவதற்கு ஆட்டோக்களும் அனுமதிக்கப் படுகின்றன.சிதம்பரம் போன்ற பெரிய கோவில்களில் ஒரு வீதியிலிருந்து மறு வீதிக்குச் செல்லும் பிற மதத்தினர்கள் கூடத் தங்கள் காலணிகளைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வெளிப் பிராகாரத்தின் வழியாகச் செல்வதைக் காணும் போது, நம்மவர்கள் காலணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் கண்டால்  வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.அன்பர் சிவகுமார் அவர்கள்,  தான் கண்ட காட்சியைப் புகைப்படம் எடுத்து அனுப்பித் தன் ஆதங்கத்தைத்  தெ ரியப்படுத்தி  இருந்தார்கள்.  இதுபோலக் கவலைப் படுபவர்கள் மிகச் சிலரே!

சுத்தம்,சுகாதாரம் பற்றி அக்கறை உள்ளவர்கள் கோவில்களுக்கு உள்ளேயும் வெளியிலும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமே! வழிபாட்டுக்கு உரிய இடம் என்பது ஏனோ பலருக்கு மறந்து விடுகிறது போல் இருக்கிறது. அடிப்படையான பக்தி இல்லாவிட்டால் இப்படித்தான்! எதையும் செய்யத் துணியும் திமிர் வந்துவிடுமோ என்னவோ. கேட்பதற்கு யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் இப்படிப் பல அத்துமீறல்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வெளியிலாவது, மற்றவர்களும் அசுத்தப்படுத்துகிறார்கள் என்றால், உள்ளேசெல்லும் பக்தர்களுமா இப்படி?

ஆலயத்திற்குள் செய்யத்தகாதவை இவை என்று பட்டியலிட்டுப் பல கோவில்களில் பலகை அமைத்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வழிபாட்டை முறைப்படி செய்ய வேண்டியவற்றையே வலியுறுத்துவதாக இருக்கும். நினைக்க முடியாத செயல்களையும் மக்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காததால் பட்டியலில் அவற்றைக் காண முடியாது.

திருவிழாக் காலங்களில் வருபவர்கள் செய்யும் செயல்களை எழுதவே கை கூசுகிறது. உள்ப்ராகாரங்கள் தவறாகப் பயன் படுத்தப் படுகின்றன. அதனால் எழும் துர்நாற்றம் சகிக்க முடியாமல் வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. இதையெல்லாம் கூடவா கண்காணித்துத்  திருத்த வேண்டும்? பஸ் நிலையங்களில் தான் இந்த நிலை என்றால் கோயில்களிலும் கூடவா? மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்த லட்சணத்தில் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் வேறு! முதலில் கோவில்களின் புனிதத்தைக் காக்க முன் வரட்டும். சட்டையைக் கழற்றிவிட்டுப் பயபக்தியுடன் கோவிலுக்குச் செல்லும் மலையாளிகள் எங்கே; நாம் எங்கே! நமக்கு வேண்டியதெல்லாம் உரிமையும் மரியாதையும் மட்டுமே! இப்பொழுது மட்டும் என்னவாம்! நந்தியைக் கட்டிக் கொண்டு ரகசியம் பேசுகிறார்கள்.தாங்களே மாலை அணிவிக்கிறார்கள். தீபம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும்போது தட்டுக் காசு கண்ணை உறுத்துகிறதோ என்று தோன்றுகிறது. தட்டு வருமானம் இல்லாத கோயில்களுக்கு எத்தனை பேர்  போவார்களாம்? பலிபீடத்தில் அகந்தையைப் பலியாக்கிவிட்டு நுழையாதவரை இப்படிதான்.இத்தனைக்கும் மூல காரணம் , ஆலயத்தின் புனிதத்தை நாமும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தான்!  

Saturday, July 13, 2013

மாறாத செல்வம்

என்றைக்குமே மங்காத செல்வமாக மங்கையர் செல்வத்தைக் கருதினார்கள். காரணம், வீட்டின் வளர்ச்சிக்கும்,நாட்டின் வளர்ச்சிக்கும்,சமய மறுமலர்ச்சிக்கும் பெண்கள் ஆற்றிய தொண்டு பற்றியே இக்கருத்து நிலவியது. ரிஷிகள் காலம் தொட்டே , ரிஷிபத்தினிகளுக்கும் இதில் முக்கிய பங்கு இருந்துவந்ததாக அறிகிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரும். பாண்டி மாதேவியும் ஆன மங்கையர்க்கரசி யின் பெருமுயற்சியால் சைவம் திருஞானசம்பந்தர் மூலமாக  மீண்டும் நிலைநிறுத்தப் பட்டது என்பதைப் பெரியபுராணம் மூலம் அறிந்து கொள்கிறோம். எனவே , மங்கையர்க்கரசியாரை, "எங்கள் குல தெய்வம்" என்று போற்றுகிறார் சேக்கிழார்.

இன்றைய நிலையைப் பார்க்கும்போது சற்றுக் கவலை ஏற்படுகிறது. இந்த எந்திர காலத்தில் பஞ்சேந்திரியங்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை! இளம் வயதினர் தான் அதன் வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்றால் வயதானவர்களும் இப்படியா! அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள்ளாக இப்படி ஒரு மாறுதலா!

முன்பெல்லாம் பிரதோஷத்தன்று காப்பரிசியும் கையுமாக நந்தியைச் சுற்றிலும் நின்ற பெண்மணி -களின் கூட்டம்   இப்போது எங்கே போயிற்று? தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் ஜப மாலையும் கையுமாக இருந்த பாட்டிகள் இப்போது எங்கே போனார்கள்? விபூதி ருத்ராக்ஷம் தரித்துக் கொண்டு பூஜை பெட்டியோடுபல ஊர்களுக்கும்  பிரம்மோற்சவ காலங்களில் சென்று, சுவாமி தீர்த்தம் கொடுக்கும் போது, தானும் ஸ்நானம் செய்து ஆனந்தப்பட்ட அன்பு உள்ளங்களைத் தேடினாலும் கிடைப்பது அரிதாக ஆகிவிட்டதே!

தேசாந்திரிகள் முன்பின் தெரியாதவர்கள் எத்தனை பேர் வந்தாலும் முகம் கோணாமல் வரவேற்று அன்னமிட்டு உபசரிக்கும் உயர்ந்த பண்பு ஏன் மறைந்து விட்டது? விலைவாசி ஏறிவிட்டது என்று காரணம் சொல்வார்களா? அக்காலத்தில் வசதி இல்லாதவர்களும் இந்த தர்மத்தைப் பண்ணி வந்தபோது நாம் மட்டும் ஏன் காரணம் கற்பிக்கிறோம்?

காலை- மாலைகளில்  வீட்டு வாசலில் லக்ஷ்மிகளை சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது போய் இப்போது எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது தேவைப் படுவதெல்லாம் சொகுசான வாழ்க்கை மட்டுமே. இதற்கு வயோதிகர்களும் ஏன் பலி ஆக வேண்டும் என்று புரியவில்லை! அறுபது வயதைத் தாண்டிய பிறகாவது கொஞ்சம் விவேகம் ஏற்பட்டால் நல்லது. அந்த வயதிலும் இளம் வயதினருக்கு சமமாகத் தானும் தொலைக் காட்சிக்கு அடிமையாவதைப் பல வீடுகளில் காண்கிறோம்.
மாலை நேரங்களில் நெற்றியில் விபூதி - குங்குமம் தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்தும், சிவாலய தரிசனம் செய்து கொண்டும் வாழ்ந்தது போய், சீரியல்களைத் தினமும் தவறாமல் பார்ப்பவர்களை   என்ன சொல்வது! அந்த வேளையில் சீரியலில் காட்டப் படும் அமங்கலமான நிகழ்ச்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! கோவிலின் சன்னதித் தெரு மற்றும் நான்கு வெளி வீதிகளில் இருப்பவர்களாவது சுவாமி தரிசனத்திற்குச்  செல்லக் கூடாதா?  கோவில்கள் இப்படியா வெறிச்சோடிக் கிடக்க வேண்டும் ?

ஆண் வர்க்கம் பாரம்பர்ய உடைகளைக் கைவிட்டபோதும் பெண் மணிகளில் பலர் அப்படிச் செய்யாமல் இருந்து வந்தனர். தற்போது அதற்கும் ஆபத்து வந்து விட்டது. இதையெல்லாம் யார் கேட்க முடியும்? எங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று பதில் வரும். அவரவர்களாகவே சிந்திக்கத் தொடங்கினால் மட்டுமே நல்லது. ஆண் வர்க்கத்தைக் குறிப்பிடும் போது ஆண்கள் என்று மட்டும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெண்களைக் குறிக்கும்போது,      பெண்மணிகள் என்றே சொன்னார்கள். ஆண்மணிகள் என்று யாரும் சொல்வதில்லை. ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பாரத தேசத்தில் ஒரு மணி யாகத் திகழ வேண்டும்.

ஸ்திரீ தர்மம் நிலைக்கும் வரை சனாதன தர்மத்திற்கு ஒரு ஆபத்தும் வந்து விடாது. சக்தியின் அம்சமான அவர்களை நாடு போற்ற வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். சிவனடியார்களே எங்கள் கணவராக வரவேண்டும் என்று பாவை நோன்பு நோற்றார்கள். இந்த வரத்தை எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் கிழக்கே உதித்தால் என்ன அல்லது மேற்கே உதித்தால் என்ன என்கிறார்கள் திருவாசகம் காட்டிய பெண்மணிகள். அதே பாரம்பர்யம் இனியும் தொடர வேண்டும். எக்காலத்தும் இதிலிருந்து மாறாத பெண்மணிகளாகத்  தாய்க்குலம் திகழ்ந்து உலகைக் காக்கவேண்டும் என்று அன்பில் பிரியாத பிராட்டியை ஒரு பாகம் வைத்த அகிலாண்ட நாயகனைப் பிரார்த்திப்போமாக.
   

Tuesday, July 2, 2013

ஏன் இந்தக் காழ்ப்பு உணர்ச்சி ?

இறைவனை "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்று குறிப்பிட்டார்  திருவள்ளுவர். ஒருவகையில் பார்த்தால் இவ்விரண்டுமே பற்று அல்லவா? எனவேதான் "பற்று அற்றான்" என்றும் சுட்டிக்காட்டினார்  வள்ளுவர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நமக்கே அது தெளிவாகத் தெரிகிறது. விருப்பும் வெறுப்பும் கடந்த நிலை நமக்கு வரவில்லை என்பது நன்றாகவே புரிகிறது. கண்டதெல்லாம் நமக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பு எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். விரக்தியோடு பேசுவதெல்லாம் வாயோடு சரி. உள்மனம் அதற்கு நேர் மாறாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

விருப்பே இப்படி இருக்கிறது என்றால் வெறுப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நம் எண்ணமே சரி என்றும் அடுத்தவர்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றும் நினைக்கிறோம். அதற்காக  வெறுப்பை அவர்கள் மீது உமிழவும் தயங்குவதில்லை. "அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல்"  என்று எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர்  சுட்டிக்காட்டியுள்ளார்   பார்த்தீர்களா!

அண்மையில் நடந்த இயற்கைச் சீற்றத்தால் கேதார் நாத்  கோயில்  எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்பதையும் எத்தனையோ யாத்திரீகர்கள் உயிர் இழந்ததையும் இந்நேரத்தில் சிந்திக்க வேண்டுமே தவிர, இன்னாரது கருத்தே சரி என்றும் பிறர் கருத்து தவறு என்றும் வெளிப்படையாகக் கருத்துக் கூறுவது வேதனைக்கு உரியது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வகையில் சமயத்திற்குக் கெட்ட பெயர் வராதபடி கருத்து தெரிவிப்பதில் தவறு இல்லை. பிற சமயத்தவர்கள் ஏளனம் செய்யும் வகையில் தங்களுக்குள் மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது வரையறை மீறக் கூடாது. இப்படிச் செய்தால் என்ன கெட்டுவிடும் என்று பேசும்போது எங்கோ ஒரு ஓரத்தில் நாத்திகம் தொனிக்கத்தானே செய்யும்? இந்தப் பிளவைப் பயன்படுத்திக் கொண்டு, கடவுள் ஏன் காப்பாற்றவில்லை என்று பிறர் ஏளனம் செய்யத் துடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது தானே?

இவ்வளவுக்கும் மீறி கேதார நாதனின் ஆலயம் அதிக பாதிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ஓரளவாவது மனம்  ஆறுதல் அடைய வேண்டிய நிலையில், ஒரு பெண்கள் பத்திரிகையில் வெளி வந்த கேள்வி பதிலில் வித்தியாசமாக பதில் தருவதாக நினைத்துக் கொண்டு, " இயற்கை தெய்வத்தை மட்டும் விட்டு வைத்ததோ" என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இயற்கையை ஆள்பவனே இறைவன் என்று ஏன் இவருக்குப் புரியவில்லை?

நிலைமை இப்படி இருக்கும்போது, வீர சைவம் என்றும் ஸ்மார்த்த வகுப்பினர் என்றும் பாகுபடுத்திக் கொண்டு நடந்த அழிவை ஒதுக்கி வைத்து விட்டு வாதம் செய்வதைக் கண்டால் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் தமிழகத்திலேயே இடிபாடுகளில் சிக்கிச் சீரழியும் புராதன ஆலயங்களைத் திருப்பணி செய்ய முன்வராமல் வறட்டு கொள்கைகள் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த ஒற்றுமை இன்மை தான் பிறர் கையை ஓங்கச்  செய்கிறது. அச்சிறுபாக்கம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடம் போன்ற ஊர் மலைக் கோயில்களின் பக்கத்திலேயே, பிற சமயத்தவர்கள் ஆக்கிரமித்து மலைகளைத் தங்களதாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று ஜூலை 2 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளில் வெளி வந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு காணப்  போகிறார்கள்?

இனிமேலாவது, பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் பூஜை முறைகளை மதித்து , நமது வழிபாடுகளை நியமத்தோடு செய்து வந்தால் அவற்றை இறைவன் ஏற்று அருளுவான் என்பது  நிச்சயம். தேவர்களும் முனிவர்களும் வேதியரும் வணங்கும் உனக்குக் குற்றேவல் செய்ய முனைகின்றேன். பிழை உண்டேல் பொறுத்து அருளுவாயாக என்று பணிவோடு வழிபட்டோமானால், விருப்பும் வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகலுவதைக் கண்டிப்பாகக் காண்போம். வினயத்தையும் நியமத்தையும் நமக்கு அருளுமாறு  முழு முதற் கடவுளான   ஸ்ரீ பரமேச்வரன் அருள் செய்வானாக. 

Wednesday, June 12, 2013

சுய நலம்

சுய நலம் என்பது தேவர்களையும் விட்டுவைக்காது போலிருக்கிறது. இமையோர்கள் சிவபெருமானை ஏன் பரவுகிறார்கள் என்பதற்குத் திருவாசகம் தரும் விளக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது. அப்படி வழிபட்டால் எல்லோரும் நம்மையும் வழிபடுவார்கள் என்பதற்காகத்தான் என்பதே அந்த விளக்கம். அவ்வாறு, தம்மை எல்லோரும் தொழ வேண்டும்  என்ற சுய நல நோக்கோடு இமையோர்கள் இறைவனைப் பரவுகிறார்களாம். ஆனால் நமது சுயநலமோ பெரும்பாலும் பொருளாசையை முன்னிட்டே வருவது. பிற தருணங்களில் அது, புகழ், பதவி ஆகியவற்றில் நாட்டம் கொண்டும் வரும். இப்படி இருக்கும்போது, பிறர் நலனைப் பற்றி யோசிப்பவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

"பேராசையாம் இந்தப் பிண்டம் " என்றார்  மாணிக்கவாசகர். ஒரு அறைக்கு ஒரு மின்விசிறி என்று ஆசைப்பட்டது போக, இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு தொலைக் காட்சிப் பெட்டியும், தொலைபேசியும், குளிரூட்டும் சாதனமும் தேவை என்கிற காலம் ஆகிவிட்டது. வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கை பேசி வேறு ! வீட்டில் ஒரு சைக்கிள் இருந்ததுபோய், மோட்டார் சைக்கிளோ, காரோ  வாங்குகிறார்கள். இரண்டு தெரு தள்ளியிருக்கும் பள்ளிக்கூடத்திற்குச்  செல்ல  குழந்தைகள் நடந்து செல்வதில்லை!

இந்தச் சூழ்நிலையில், நாமும் பிறர் போல் வசதியுடன்(செல்வச் செழிப்புடன்!) வாழ வேண்டும் என்ற எண்ணம் யாரையும் விட்டு வைக்க வில்லை. அதற்காகத் தங்கள் பாரம்பர்யத்தையும் துறக்கத் துணிந்து விட்டார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர்கள் இவ்வாறு தாவுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே கேள்வி.

சமுதாயத்தில் நமது அந்தஸ்து எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கஷ்டப்பட்டாமல் சம்பாதிப்பது எப்படி என்றும் யோசிக்கத் துவங்கிவிட்டார்கள். இன்னின்ன தொழில் செய்தாலே கெளரவம் என்ற எண்ணமும்  தலை தூக்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாரம்பர்யத் தொழில்கள்/கடமைகள் பாதிக்கப் படத் தான் செய்கின்றன. எல்லாம் எமக்கே பெற வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டுவிட்ட படியால்  பிறரது துயரங்களைத் துடைப்போரைத் தேட வேண்டியிருக்கிறது. சிலர் வாய்ப்பேச்சால் மட்டும் ஆறுதல் கூறுகின்றனர். மற்றும் சிலர் தங்களது எழுத்து ஆற்றலால் ! பாதிக்கப்பட்டவர்களிடம் உதவி போய்ச்  சேரும்வரையில் இப்பேச்சுக்களாலோ, எழுத்துக்களாலோ எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

வீட்டுக் கல்யாணங்களில் பல லக்ஷங்கள் புரள்கின்றன. எத்தனை எத்தனை விதமான ஆடம்பரச் செலவுகள்!! அதில் ஒரு சதவீதத்தையாவது வறுமைக்கோட்டுக்குக் கீழ் கிராமங்களில் பரிதாப வாழ்க்கை நடத்தும் ஆலய சிப்பந்திகளுக்கு அளிக்க முன்வருகிறோமா என்று கேட்டால்  இல்லை என்ற பதிலையே கேட்கமுடிகிறது. அவர்களது  ஏழ்மைநிலை தொடரும்போது உதவ முன்வராதவர்கள் ,வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் ஊரைவிட்டே வெளியேறும்போது குறை கூற மட்டும் தயங்குவதில்லை. என்றோ ஒருநாள் வரும் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதால் தரப்படும் சம்பாவனையை வைத்துக் கொண்டு எவ்வளவு நாள் தள்ள முடியும்? கிராம வாசிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காலம் தள்ளலாம் என்ற நிலையில், கிராமவாசிகள்  நமக்கென்ன என்று இருந்தால் என்ன செய்வது? நகரங்களுக்குக் குடியேறியவர்களும், சொந்த ஊரைப் பற்றிக் கவலைப்படாத போது, ஆலய சிப்பந்திகளுக்கு யார் தான் உதவுகிறார்கள்?

ஆலய சுற்றுலா பயணிகளும், இடையில் வரும் கிராமக் கோயில்களையும் தரிசிக்க வேண்டும். வசதிபடைத்த கோயில்களில் உண்டியல்கள் நிரம்பி வழியும் போது அற நிலையத்துறையே இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வரலாம் அல்லவா? அதுவும் நடக்காமல் இருப்பது ஆதங்கமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலாவது, சிவதர்மத்திற்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொண்டு அவ்வப்போது நம்மால் முடிந்ததை அதில் சேகரித்து வைத்து, அதனை, கிராமக் கோயில்களுக்கு அளிக்க முன்வரலாமே!கருணை உள்ளம்  இருந்தால் எத்தனையோ வழிகளில் இப்படி உதவ முடியும். நமது நெஞ்சமாகிய கல் கரைந்து உருக அப்பரமனே அருள வேண்டும். இப்படிச் சொல்வதால் எல்லோரும் கல் நெஞ்சக்காரர்கள் என்பது அர்த்தம் அல்ல. சொல்லித் திருத்துவது என்பது மிகவும் கடினமாகிவிட்ட இக்காலத்தில், நம்மால் சிலவற்றை நினைவு படுத்தத் தான் முடியும். "Willing to hit, unwilling to hurt" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனவே, யாரையும் குறைகூறுவதோ,மனத்தைப் புண் படுத்துவதோ நமது நோக்கம் அல்ல. மனத்தைப் பண் படுத்துவது ஒன்றே நமது குறிக்கோள்.

நாயன்மார்களில் பலர்  அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதை ஒரு நியமமாகவே கொண்டிருந்ததைப்  பெரியபுராணம் காட்டுகிறது. இந்த மண்ணில் நாம் பிறந்ததன் பலன் சிவனடியார்களுக்கு அன்னம்பாலிப்பதும், சிவாலயத் திருவிழாக்களைக் காண்பதும் தான் என்று சேக்கிழார் பெருமான் அருளுவதைக் காண்போம்:

"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்..."

என்பது அவரது வாக்கு. அது தெய்வ வாக்காதலால் அவரும் தெய்வச் சேக்கிழார் எனப்படுகிறார்.  அவரது குருபூஜைதிருநாளாகிய இன்று (வைகாசிப் பூசம்) நலிவுற்றோருக்கு உதவுவதை முடிந்த வரையிலாவது செய்வதே அவரை உண்மையாகப் போற்றும் செயல் ஆகும். இது வரையில் செய்யாவிட்டாலும் இனிமேலாவது செய்யலாம் அல்லவா? செய்துபார்த்தால் தெரியும், நமது சுயநலம் எவ்வளவு தூரம் நம்மைவிட்டு விலகுகிறது என்று. 

Monday, May 27, 2013

தமிழ் ஞானசம்பந்தர்

முன்பெல்லாம் "தமிழ் " என்ற சொல்லில் வரும் ழகரத்தை  ளகரமாக உச்சரிப்பதைப் பார்த்திருக்கிறோம். வாழைப்பழத்தை வாளைப்பழம் என்றே சொல்வார்கள். இம்மொழியிலோ , ழகர, ளகர,ணகர ப்  பயன்பாடுகள் அதிகம். மாறாக உச்சரித்தால் காதுகளை மூடிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. சிறு வயது முதலே ஆசிரியர்களோ,பெற்றோர்களோ இக்குறையை சரி செய்ய முன்வருவதில்லை. ஒருவேளை,இப்படிப் பேசுவதை எல்லோரும்  வித்தியாசமாகக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறார்களோ என்னவோ!

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால் கெளரவம் என்று கூடச் சிலர் பேசியதைக் கண்டிருக்கிறோம். "பட்" ஆனால் என்று ஆரம்பிப்பர். இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே! பிறகு வந்தது யதார்த்தம் என்ற சொல்லைத் தேவை இல்லாத இடங்களில் எல்லாம்  உப யோகிப்பது. தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போதே, "அண்ட்" என்று இடையில் பேசுவது

தூர் தர்ஷன் தொலைக்காட்சியிலும், அகில இந்திய வானொலியிலும் செய்திகளை வாசிப்போரது உச்சரிப்பைக் கேட்டுப் பலரும் பாராட்டியதுண்டு. இப்பொழுது செய்தி வாசிப்போர்களது உச்சரிப்பைக் கேட்டால் ஏன்தான் தமிழ் இவர்களிடம் இந்தப் பாடு படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

 " அவரவர்கலது பல்லிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கலிடம் சென்று மதிப்பென் க லைப் பெற்றுக் கொல்லுமாறு கேட்டுக்  கொல்லப் படுகிறார்கல். "  என்று செய்தி வாசிக்கப்படுகிறது. இவ்வாறு நம்மைக் கொல்கிறார்கள்.

பக்திப் பாடல்களைப் பாட எது மிகவும் முக்கியம் என்று கேட்டால் . நல்ல குரல் வளம் என்று சொல்வதை விடப் , பிழை இல்லாத உச்சரிப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. "வேயுறு தோளி பங்கன் " என்பதை, "வேயுறு தோலி" என்று உச்சரித்தால் என்ன செய்வது!

ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால், "இப்ப பாத்தீங்கன்னா.." என்று சொல்வது "லேடஸ்ட் பாஷன்" என்கிறார்கள்!  " பார்த்துக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தை கொச்சையாக, "பார்த்துக்கங்க" என்று இருந்தது போக, "பார்த்துகோங்க" என்று பேசப் படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனையோ மாற்றங்கள்/அபத்தங்கள்.

செம்மொழி என்று கௌரவமாகச் சொல்லிக் கொள்வது இருக்கட்டும். எத்தனை பேர் அதை "செம்மொளி" என்று உச்சரிக்கிறார்கள் என்பதைக் காணும்போது வேதனையே மிஞ்சும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் எத்தனை பேர் தவறில்லாமல் எழுதுகிறார்கள்?

 பக்தி இலக்கியங்களைப் பள்ளிப் பாடங்களிலிருந்து ஓரம்  கட்டி, நேற்று எழுதப்பட்ட கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது போக, தமிழ் படிப்பதே தவிர்க்கப்படுமோ என்று அஞ்ச  வேண்டியிருக்கிறது. இவ்வளவும் தெய்வத் தமிழைப் புறக்கணித்ததால் வந்த வினை. இரண்டாயிரம் ஆண்டுகளாக பக்தி மற்றும் நீதி இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ், பள்ளிகளிலாவது கட்டாயப் பாடமாகப் படிக்கப்படக் கூடாதா? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தனது ஆயுளில் ஒரு முறையாவது திருக்குறளையும் , தேவார திருவாசகங்களையும், நீதி நூல்களையும் இனி எப்படிப் படிக்கப் போகிறான் என்பதே கேள்விக் குறி ஆகி விடும் போல் இருக்கிறது.

கேட்டால் , நாங்கள் தான் தமிழின் காவலர்கள் என்று பலரும் சொல்லிக் சொல்கிறார்கள். உண்மை நிலை மாறாக இருக்கும்போது, தமிழ் செய்தித் தாள்களும், திரைப் படங்களும் மட்டுமே மிஞ்சுமோ எனத் தோன்றுகிறது. இதைத் தான் "தமிழ் இனி மெல்லச் ....." என்று      குறிப்பிட்டார்களோ?

பலருக்குத் தனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது என்று பெருமிதம் வேறு! (உதாரணம்: தமிழ்ச் செல்வி,தமிழரசன் ....) அதனால் மட்டுமே  அந்த நபரால் தமிழ் நாடு பயன் அடைந்து விடுமா? தனது பெயரோடு தமிழையும் சேர்த்துக் கொண்டு, "தமிழ் ஞானசம்பந்தன்" என்று பாடினார், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய" திருஞானசம்பந்தப் பெருமான்.   சமண-பௌத்த மதங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சம்பந்தப் பெருமான் அவதரித்து, சைவத்தை நிலை நாட்டியதோடல்லாமல் அவரது திருவாக்கால் தமிழையும்  ஏற்றம் பெறச் செய்தார்.அவரது குருபூசைத் திருநாளாகிய இன்று (வைகாசி மூலம்) அவரது மலர்ச் சேவடிகளை வணங்கி, "இருந்தமிழ் நாடு உற்ற இடர் நீங்க " அருள வேண்டும் என்று பிரார்த்திப்போமாக. 

Monday, May 20, 2013

ஒரு கால பூஜை !


ஒரு கால பூஜையை மேலும் விஸ்தரிப்பதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு காலம் கூட ப்  பூஜை நடைபெறாமல் இருக்கும் கோயில்களுக்கான ஏற்பாடு இது. இதன்படி, ரூ பத்தாயிரத்தை  ஊரார்கள் செலுத்தினால், அரசாங்கம் தன் பங்காக, ரூ தொண்ணூறாயிரம் செலுத்தி, மொத்தம் ஒரு லக்ஷ ரூபாயை அக்  கோவிலின் வங்கிக்கணக்கில்  வைப்பு நிதியை ஏற்படுத்தும். இதனால் வரும் வட்டித்தொகை, ஒருகால பூஜைக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டின்படி,மாதம் தோறும் ரூ ஆயிரத்திற்கும் குறைவாகவே  வட்டி வரும். இதை வைத்துக்கொண்டு, நைவேத்திய சாமான்கள் வாங்கவும், அர்ச்சகரது  மாதாந்திர சம்பளத்திற்கும் ஒருபோதும் இவ்வட்டித்தொகை போதுமானதாக இருக்காது. அதிலும் ஒரு கால பூஜையை பல கிராமக் கோ யில்களில் அருகிலுள்ள ஊர்களிளில் இருந்து சைக்கிளிலும்,நடந்து வந்தும் செய்து விட்டுப் போகிறார்கள். இதற்குக் கொடுக்கப்படும் மாதாந்திர சம்பளமோ சில நூறுகளே! பல ஊர்களில் தங்கள் சொந்த செலவில் அர்ச்சகர்களே பழுதான மின்சார பல்புகளை மாற்றிக்கொள்ள  வேண்டியிருக்கிறது.

கோவில் நிலங்களிளிருந்தும், கட்டட வாடகை போன்ற வற்றிலிருந்தும் வருவாய் ஒழுங்காக வந்துகொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அரசாங்கமும் மக்களும் யோசிக்க வேண்டும். சுயாட்சி நிறுவனமாக விளங்கவேண்டிய கோயில்கள், பிறரிடம் கைஎந்தவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் யார்? அற நிலையத் துறை சட்டம் இதற்கு வகை செய்யாவிட்டால் தகுந்த சட்ட -மாற்றங்கள் ஏன் கொண்டு வரப் படுவதில்லை? சட்ட சபை நடக்கும் போது, இந்த அவலநிலையை ஏன் விவாதிக்க முன் வருவதில்லை? சலுகைகள் பலருக்கும் வாரி வழங்கப்படும்போது ஆலய சிப்பந்திகள் மட்டும் விதி விலக்காவது ஏன்? ஆலய நிர்வாகத்திற்கென்றே ஒரு அமைச்சகம் இருந்தும், பல்லாண்டுக் கணக்கில் இன்னும் தீர்வு ஏற்படாதது ஏன்?

அரசாங்கத்தைக் குறை கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் அவரவர் பங்கைச் செய்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கிராமங்களில்  இன்னமும் வாழ்பவர்களானாலும் , வெளியூருக்கு இடம் பெயர்ந்து வாழ்பவர்களானாலும் கோயில் பக்கம் வந்து பார்த்தால் பிரச்சினைக்கு ஒரு முடிவு பிறக்கும். குத்தகைக்காரர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் மனசாட்சி உண்டு அல்லவா? கோவிலை ஏமாற்றினால் கேட்பார் இல்லை என்ற எண்ணம் வரலாமா? சிவ சொத்து குல நாசம் என்பதை அவர்கள் கேட்டிருப்பார்களே! அவ்வாறு ஏமாற்றியவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதையும் பார்த்துமா இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள்?அதனால் தான் காவிரி பொய்த்து விட்டதோ? தெய்வக்குற்றத்திற்கு ஆளாகாமல் ,செய்த பிழைக்கு வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால், அவர்களது குற்றங்களை எல்லாம் அவன் பொறுத்து, நலம் மிகக் கொடுப்பான் என்பது உறுதி.

அரசாங்கமோ , குத்தகைக் காரர்களோ மனம் வைக்கும் வரையில் கோவில்களை அப்படியே விட்டுவிட முடியாது. அவரவர்கள் வசிக்கும் கிராமங்களிலாவது, பூஜை நடைபெறச் செய்ய வேண்டும். அர்ச்சகர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும். இவ்வளவு தெய்வ குற்றங்கள் நடை பெறும் போதும் கருணைக் கடலான கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை. இயற்கை சீற்றங்கள் வந்தபோதிலும் அதிக பாதிப்பு ஏற்படாத வண்ணம் நாம் காக்கப்படுகிறோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அண்மையில் தோன்றிய "மாகேசன்" புயலும் மகேசன் அருளால் திசை மாறிச் சென்றது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களிலும் பூஜை நடத்துவது சிரமாக இருக்கிறது. திருப்பணிக்கு வசூல் செய்பவர்கள், நித்திய பூஜைக்கு வழி செய்யாததே இதற்குக் காரணம். இவ்வளவு சிரமமான கால கட்டத்திலும், அன்புள்ளம் கொண்டவர்கள் மூலமாகப் பூஜைகளை ஏற்றுக்கொள்கிறான் இறைவன். மாதாந்திர பூஜை செலவுகளை ஏற்க முன் வருகிறார்கள். நமது சபை அன்பர்களும் அப்பணியில் முன்னிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, திருவருளால் அன்பு உள்ளங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை உணருகிறோம்.இதற்கு மேலும் இறைவனிடம் கேட்க என்ன வரம் இருக்கிறது? "உனக்குப் பணி செய்ய உந்தன்னை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா.." என்ற வாக்கை நினைத்து மனம் நெகிழ்வோமாக.

Thursday, May 9, 2013

டெண்டரோ டெண்டர்


இந்து சமய அறநிலையத் துறை, ஆலய வருவாயைப் பெருக்க எத்தனையோ வழிகளைக் கையாளுகிறது. இதனால்,சம்பந்தப்பட்ட  ஆலயம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது வேறு விஷயம். பலதரப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப் படுவதையும், அவற்றை உயர்த்தியுள்ளதையும் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம். ஒரு கோவில் பிரபலமாகிவிட்டால் போதும்! கட்டணப் பட்டியல் பின்னாலேயே தொடர்ந்து வரும்!

சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் உள்ள சிவாலயம்,திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமலும்,பனை மரங்கள் சூழப்பெற்றும் அமைதியாக விளங்கியது. சிறு சந்துகள் மூலம் விசாரித்துக் கொண்டேதான் கோவிலை அடைவது வழக்கம். (இப்போதும் குறுகிய சாலை மூலம் தான் கோயிலை அடைகிறோம்!) அந்நாட்களில் திருவலிதாயம் என்று அழைக்கப்பட்ட பாடியை, பாடல் பெற்ற தல யாத்திரையாக வருபவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருவர்.
நாளடைவில் காலனிகள் பெருகவே, மக்கள் அதிகமாக வரலாயினர். குரு ப்ரீதி தலம் என்று சொன்னவுடன், பரிகாரம் செய்துகொள்பவர்களும் வரத் தொடங்கி விட்டனர். இப்போது பார்த்தால், கோ சாலை ஒரு பக்கம்; பிராகாரத்தில் புறாக்களுக்குத் தீவனம் இடுவோர்  ஒரு பக்கம்; புதியதாகக் கட்டப்பட்டுள்ள குருவின் சன்னதியில் நிற்பவர்கள் ; இப்படிப் பலதரப்பட்ட வகையில் மக்கள் கூடுகின்றனர். வருமானமும் நாளடைவில் பெருகும் வாய்ப்பும் இருக்கிறது.

இதற்கிடையில், டெண்டர் அறிவிப்பு வேறு; கோயில் சன்னதி தெரு விசாலமானது. எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இரு புறமும் வாகனங்களை நிறுத்த முடியும். அப்படி இருந்தும், இதற்குக் குறைந்தது ரூ 246000 க்கான டெண்டர் வரவேற்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு முன்பே, ஒருவர்,ரசீது புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். ரூ 10,20,25 என்று ஒவ்வொரு காருக்கும் வசூலிப்பார். கேட்டால்,டெண்டர் எடுத்திருக்கிறேன் என்பார். இது,மக்கள் அதிகமாக வருகை தரும் எல்லாக் கோயில்களிலும் அன்றாடம் காணும் காட்சி தான்!

மயிலை கபாலீஸ்வரர் ஆலய வடக்கு மாட வீதியில் சென்னை கார்பரேஷன் ,வாகன நிறுத்தத்திற்காக வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ 5 மட்டுமே. அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வசூலிக்கப்படுவது ரூ 25 ! டெண்டர் தொகையை லட்சக் கணக்கில் வாங்குவதால், கட்டணங்கள் இவ்வாறு கண்மூடித்தனமாக வசூலிக்கப் படுகின்றன. அர்ச்சனை பொருள் விற்க டெண்டர் தொகையாக, ரூ 267000 அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அர்ச்சனை செய்பவர்களுக்கு, இரண்டு காய்ந்த வெற்றிலையும், இரண்டு உபயோகமற்ற பாக்குகளும் ,மெலிந்த இரு வாழைப் பழங்களும், குரும்பை போன்ற தேங்காயும், ப்ளாஸ்டிக் பேப்பரில் சுருட்டப்பட்ட கற்பூரமும் ரூ 25 க்குத் தலையில் கட்டப்படுகிறது. பாவம் பக்தர்கள் மட்டுமல்ல. அந்த இறைவனும் கூடத்தான்!

இவைதவிர, சமயப்புத்தக விற்பனைக்  கடைக்கு ரூ 135000, பிரசாத(??) க் கடைக்கு ரூ 75000, நெய் தீபத்திற்கு ரூ 168000 என்று, டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.நல்ல வேளை ! புறாத் தீவனக் கடைக்கு உரிமை வழங்கி,டெண்டர் கோரப் படவில்லை.(அதிலும் வியாபாரம் அமோகமாக இருக்கக் கூடும்) இவை எல்லாம் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மட்டுமே சாத்தியம்.  பாடியிலேயே நிலவரம் இப்படி என்றால், பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற தலங்களில் நிலை எப்படி இருக்கும்? இப்படி வசூலாகும் பல்வகைக்கட்டணங்களும்,உண்டியல் வருமானங்களும் பல கோடிகள் சம்பாதித்துத் தரும்போது அது எவ்வாறு முறைப்படி செலவழிக்கப்படுகிறது என்று சொல்பவரைக் காணோம். ஆண்டுத் தணிக்கை நடப்பது                  என்னவோ உண்மைதான். அதன் விவரம் அந்த அந்தக் கோவிலின்  அறிவிப்புப் பலகையில் பக்தர்கள் பார்வையில் படும்படி செய்யலாமே!

டெண்டரில் இத்தனை தீவிரம் காட்டும் அறநிலையத்துறை, கோவில் குத்தகை வசூலிலும், நிலங்களை மீட்பதிலும், கோவில் வீடுகளிலிருந்து முறையான வாடகை வசூலிப்பதிலும், கோவில் சொத்துக்களைத் தன் பெயரில் பொய் பட்டா மூலம் மாற்றுபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பதிலும் தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை. சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்குச் சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைப் போலி ஆவணங்கள் மூலம் விற்றதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பத்திரிகை செய்தி கூறுகிறது. சர்ச்சைக்குரிய நிலங்களுக்கும் கட்டிடங்களுக்கும் மின்சாரம்,தண்ணீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படவேண்டும் என்று பத்திரிகைகள் எழுதியும் பலன் இல்லை. இவற்றை மீட்டால்,டெண்டர்  விட்டு மக்களை  அச்சுமையைத் தாங்கச் செய்ய வேண்டிய நிலை இருக்காது

யார் காதில் விழப்போகிறதோ தெரியவில்லை.

Thursday, May 2, 2013

கேலிகள் தேவையா?


நமது பாரம்பர்யம் பல வகைகளிலும் கைவிடப்படுவதைக் கண்டு வருந்தும் இவ்வேளையில் அதனைச் சிலர் வேரோடு வீழ்த்திவிடுவார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு அது நகைப்புக்கு உரியதாக ஆகி வருகிறது. இத்தகைய கேலிகள் ஒன்றும் புதியதில்லை என்றாலும் இதனால் சிலர் பிரபலம் அடைய முயல்வதும், சம்பாதிக்க முயல்வதும் தான் வேதனையாக இருக்கிறது. கேட்க யாரும் இல்லாததால், கிண்டல்கள் தொடர் கதை ஆகி வருகின்றது.

சமயச் சின்னங்களையும், பாரம்பர்யச் சின்னங்களையும் பழிப்பவர்களும் இழிப்பவர்களும் இருப்பது ஒரு பக்கம். சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்ததுபோல் பேசுபவர்களுமா  இப்படி மக்கள் மத்தியில் பேசவேண்டும்?
சிகையின் முக்கியத்துவத்தைக் கூற வந்த காஞ்சி பெரியவர்கள், 1932 ம் ஆண்டு சொன்னதை முதலில் படித்துவிட்டு, அப்புறம் விஷயத்திற்கு வருவோம்.

" சிகை வைக்கும் கர்மாவும் பகவானுக்கு அர்ப்பணமாகிறது. சத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ண வேண்டும். மந்த்ரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையை முன்பு பரமேச்வரனுக்குப் பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்துவிடுவது தப்பு. பரமேச்வரப் ப்ரீதியாக சங்கல்பம் பண்ணிக்கொண்டு சம்ஸ்காரம் பண்ணி கிள்ளுக்கீரையாக எண்ணி ,வைத்துக்கொண்ட சிகையை மனம் போனபடி எடுக்கக் கூடாது. இப்படிப் பண்ணுபவர்கள் முதலில் அதைப் பண்ணாமல் இருக்க வேண்டும்."

திருப்பூரில் அண்மையில் நடந்த ராமாயண உபன்யாசம் செய்த அனந்த பத்மனாபாசார்யார் சொன்னதாக வெளிவந்த பத்திரிகை செய்தி, " குடுமி வச்சா அவ்ளோதான்" என்ற தலைப்பில் வந்துள்ளது. இச்செய்தியின் நம்பகத்தன்மை அதை வெளியிட்ட நாளிதழுக்கே உரியது. இருப்பினும் , மக்கள் பார்வைக்குத் தெரியும்படி அச்சேறியுள்ளதால், நமது பாரம்பர்யத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளவர்களது மனத்தைப் புண் படுத்தும் வகையில் இக்கேலிப்பேச்சு அமைந்துள்ளது. உபன்யாசகரை மெச்சிக் கொள்வதா அல்லது இதையும் ஒரு செய்தியாகக் கருதி வெளியிட்ட நாளிதழின் "பத்திரிகை தர்மத்தை" மெச்சிக் கொள்வதா தெரியவில்லை.

அனந்த பத்மநாபாசார்யார் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி: " ஒரு உபன்யாசத்துக்கு சென்ற போது,ஒருவர், "சுவாமி, உங்க குடுமியிலே பூ வைக்கலாமே" என்று கூறி, பூ கொடுத்தார். "இப்போதைக்கு "ஹேர் பின் தான் வைக்க முடியும். பூ வேண்டாம்னு சொல்லிட்டேன் " என்றார். இதைகேட்ட முன்வரிசையில் அமர்ந்திருந்த அன்பர் ஒருவர், "அந்தக் காலத்துலே ஆத்துக்காரிஎல்லாம் குடுமியைப் பிடித்து அடிக்க மாட்டா ; இப்பெல்லாம் குடுமி வைச்சா அவ்ளோதான். பின்னிப் பெடலெடுத்துடுவா. அதனால் தான் எல்லோரும் "ஹேர் கட் " பண்ணிடறா." எனத் தன் அனுபவத்தை எடுத்துக் கூற மற்றவர்கள் சிரித்தனர்."  சிரிக்கும் படியான விஷயமா இது? வெட்கப்படவேண்டிய விஷயம் அல்லவா? ராமன் குடுமி வைத்திருந்தான் எனக் கூறி எங்கெங்கோ போனதால் வந்த விளைவு தானே இது? பின்னிப் பெடலெடுக்கும் ஆத்துக் காரிகள் என்று பொதுப் படையாகச் சொல்வது தவறு. ஆண்களை விட, நமது சம்பிரதாயத்தில் மிக்க ஈடுபாடும் பக்தியும் கொண்ட எத்தனையோ பெண்மணிகளைக் காண்கிறோம். தாழ்வு மனப்பான்மை காரணமாக சிகையை  எடுத்துவிடத் துணியும்  ஆண்  வர்க்கம், அப்பழியைப் பெண்கள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது.

அரை டிராயர்,முக்கால் டிராயர், நைட்டீ என்றெல்லாம் உடுக்கும் இக்காலத்தில் . சிகையையும் பாரம்பர்ய உடைகளையும் பின்பற்றும் மிகச்சிலரின் மனம் புண்பட வேண்டுமா? அதற்கு உபன்யாச மேடையே துணை போகலாமா? அப்படியே போனாலும் அதைப் பெரிது படுத்திப் பத்திரிகையில் வெளியிட்டு அனைவரின் நகைப்புக்கு ஆளாக்க வேண்டுமா? நெற்றியில் நாமம் இட்டுக் கொள்வதைப் பிறர் பரிகசித்தால் அதை இட்டுக் கொள்ளாமல் விட்டு விடுவார்களா? ஒருவேளை ஓரிரு ஆத்துக்காரிகள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர்களை அன்பாகத் திருத்தி, சமயச் சின்னங்களின் உயர்வைத் தெரியப்படுத்த வேண்டாமா? அதை விட்டு விட்டு, ஏளனமாகப் பேசினால், சிலரின் கைத்தட்டுக்களை வேண்டுமானால் சம்பாதிக்கலாம். அதே நேரத்தில் பலரின் மனக் கசப்பையும் கூடவே சம்பாதிக்க நேரிடுகிறது. வெளிவர இருக்கும் ஒரு படத்தின் தலைப்பு, பாரம்பர்ய உடை உடுத்தும் ஒரு சாராரை மனம் நோகவைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. உபன்யாச அரங்கத்தில் எழும்பும் கேலிகளை யாரிடம் போய் முறையிடுவது?

Tuesday, April 30, 2013

விஜய வருஷ காலண்டர்


பொதுவாகவே நமது பண்பாடு அதன் தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்துவருகிறது. வாய்ச் சொல்லில் வீரர்கள் மட்டும் நிறையவே இருக்கிறார்கள்! நமது பண்பாட்டின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்வதெல்லாம்  மக்களது கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்கத்தான்! தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா என்ற சர்ச்சை வேறு. தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயர்களை எந்தப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சுவாமிமலையிலுள்ள அறுபது படிக்கட்டுக்கள் மட்டும் அப்பெயர்களைத்  தாங்கிக் கொண்டு இருக்கின்றன. மற்றவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்தாவது தெரிந்துகொண்டால் சரி!

தமிழ்ப் புத்தாண்டு தினமும் ஏதோ சம்பிரதாயமாக வந்த வேப்பம்பூ பச்சடி,பானகம்,நீர்மோரோடு நின்றுவிடுகிறது. சிலர் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். அதே சமயம், ஆங்கிலப் புத்தாண்டைப் பாருங்கள். கண் விழித்தாவது நடு ராத்திரி 12 மணிக்கு பட்டாசு வெடித்துவிட்டு sms அனுப்பி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். சில கோயில்கள் இரவு பூராவும் திறந்து வைக்கப் படுகின்றன. இவர்கள்  எல்லாம் சிவராத்திரிக்குக் கண் விழிக்கிறார்களோ இல்லையோ, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்! இதெல்லாம் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட பிறகு ஏற்பட்ட விளைவுதானே! அப்படியானால் நமது பாரம்பர்யம்,கலாசாரம் ஆகியவை எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை அதெல்லாம் பழைய பஞ்சாங்கம் என்று ஒதுக்குகிறார்களா என்று புரியவில்லை. பெண்மணிகளும் இம்மாயையில் சிக்கி, வீட்டு வாயிலில் போடும் கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் வரைகிறார்கள்.

இவ்வளவுக்கும் நடுவில் நமது பண்பாட்டில் அக்கறை உள்ளவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இன்னும் இருக்கிறார்கள் என்பதே பெருமைப் பட வேண்டிய விஷயம். நகரங்களில் வேண்டுமானால் இப்போது நடக்கும் தமிழ் ஆண்டு,மாதம்,தேதி முதலியவை தெரியாதவர்கள்  ஏராளமாக இருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னமும் தமிழ் மாதங்களும்,தேதிகளுமே நடைமுறையில் இருக்கிறது.  வைகாசி 15 ம் தேதி கும்பாபிஷேகம் வைத்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்களே தவிர அதற்கான ஆங்கிலத்தேதியைக் கும்பாபிஷேகப் பத்திரிகையைப் பார்த்தே தெரிந்து கொள்ளவேண்டும் .

கிராமத்து மக்கள் இவ்வாறு தமிழ் மாதங்களை அனுசரித்து வந்தபோதிலும் ,அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மாதக் காலண்டர் யாரும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் குறை நீங்கும்படி, சதுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள விஜய வருஷ காலண்டரைப் பார்த்தால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பக்கமாக நல்ல தாளில் நேர்த்தியாக அச்சிட்டிருக்கிறார்கள்.தெய்வங்களின் அருமையான படங்கள் ஒவ்வொரு மாத முகப்பிலும் அலங்கரிக்கின்றன. தமிழ்த் தேதிக்கு அடியில் ஆங்கில தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.விசேஷ தினங்கள், பண்டிகைகள்,நாயன்மார்களின்  குருபூஜை தினங்கள்  ,சுப முகூர்த்த நாட்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேலும் விவரம் வேண்டுவோர், சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம்,சோமங்கலம்,சென்னை என்ற முகவரியிலும், 9894190999 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். பதிப்பகத்தார்க்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும்.

Tuesday, March 26, 2013

சிவாசார்ய வந்தனம் - V


உலக நன்மைக்காகச்  செய்யப்படும் பரார்த்த பூஜைக்கு உரியவர்கள்  சிவாச்சார்யர்கள் ஆவார்கள். சிவாகமப்படி காலம் தோறும்  நியமத்துடன் இப்பூஜைகள் நடைபெறுவதற்காக அரசர்கள் பலர் நிபந்தங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். காலப்போக்கில், இத்தருமங்கள் யாவும்  சரிவரப் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவை விரைவாகத் திருத்தம் பெற வழி வகைகள் செய்யப்படாமல் இருப்பதால், பல கிராமங்களில் பூஜைகள் ஒரு காலம் நடைபெறுவதே சிரமமாக இருக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆலய சிப்பந்திகளே ஆவார்கள். கோயில் மேளங்களும், மடைப்பள்ளி ஊழியர்களும், ஓதுவார்களும், இப்பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் சிவாசார்யர்கள் மட்டுமே. அவர்களிலும் பலர்,வறுமையால் பெரிதும் துன்பப்படுகின்றனர். அரசாங்கமோ அவர்களது நிலைக்கு இரக்கப்படுவதாகத் தெரியவில்லை. கொடுக்கும் இருநூறு- முன்னூ று ரூபாய்  சம்பளத்தையும் ஒவ்வொரு மாதமும் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏராளமான கிராமக் கோயில்கள் பூட்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் பூர்வீக கிராமக் கோயில்களுக்குத் தங்களால் ஆன உதவியைச் செய்யலாம். இன்னும் கொஞ்சம் வசதி உள்ளவர்கள், திருப்பணிக்கு உதவலாம். இன்னும் சிலர், பூஜைப் பொருள்களுக்கும், சிவாசார்யாரது சம்பளத்திற்கும் உதவ முன்வரவேண்டும். இதைத் தங்கள் கடமையாகக் கருதினால் நல்லது. வறுமையில் வாடும் பலரது வாழ்வில் ஒளி ஏற்றினால் நாமும் நமது குடும்பமும் சிவனருள் பெறலாம் அல்லவா? "முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று பாடிக்கொண்டு மட்டும் இருக்காமல் அதைச்  செயலிலும் காட்டினால் உயர்ந்தது தானே?

கடந்த இரு ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட்சபை, கிராமங்களில் உள்ள சிவாலயங்க ளில்  பரம்பரையாகப் பூஜை செய்துவரும் சிவாச்சார்யர்கள் இருபது பேரை அவர்களது துனைவியார்களோடு அர்ச்சித்து, கௌரவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி , திருவாரூருக்கு அண்மையில் உள்ள சாட்டியக்குடி என்ற தலத்தில் உள்ள    ஸ்ரீ  வேதநாயகி  சமேத ஸ்ரீ  வேதபுரீச்வர ஸ்வாமி ஆலயத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. சாட்டிய முனிவரால் வழிபடப்பெற்ற இத்தலத்தைக் கருவூர்த்தேவர் திருவிசைப்பா பதிகத்தால் போற்றியுள்ளார். இத் தலத்தின் அருகிலுள்ள வலிவலம் , வடகரை,பொரவாச் சேரி,பெரிய குத்தகை ஆகிய தலங்களின் சிவாசார்யர்களும் தங்கள் துனைவிமார்களோடு வந்திருந்து சிறப்பித்துத் தந்தார்கள்.

கணபதி பூஜை,புண்யாவசனம் ஆகியவை நடைபெற்றபின்னர் , ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. புதிய வஸ்திரங்கள் மற்றும் மலர் அலங்காரம் செய்த பிறகு, சுவாமிக்கு ருத்ர த்ரிசதியும் அம்பாளுக்கு அஷ்டோத்திரமும் செய்யப்பெற்று, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஐந்து தலத்து சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புதிய வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின் , அர்ச்சனைகளும் தீபாராதனைகளும் செய்விக்கப்பட்டு  சம்பாவனை செய்யப்பட்டு,அவர்களின்  ஆசி பெறப்பட்டது. நிறைவாக மாகேச்வர பூஜையும் நடைபெற்றது. தலத்து ஓதுவா மூர்த்தி, மேளக் காரர், பிற சிப்பந்திகள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். நமது சபை அண்மையில் துவக்கியுள்ள Ardhra Foundation என்ற அமைப்பு இதுபோன்ற சிவபுண்யங்களை மேலும் மேலும் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ முருகப்பன்,ஸ்ரீ வெங்கடேசன்,ஸ்ரீ கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோருக்குச் சிவனருள் துணை நிற்பதாக.

இது போன்ற நிகழ்ச்சிகள் அன்பர்களால் பல ஊர்களிலும் நடத்தப்பெற வேண்டும் . கிராமக் கோயில்களில் தீபம் இல்லாதிருக்கும் நிலை வரவே கூடாது. அதற்கு இறைவன் நிச்சயம் துணையிருப்பான். வாடிய வாட்டம் தவிர்ப்பவன் அவன். அனைவரையும் துன்பக்கடலில் இருந்து கரை ஏற்றும் தோணியாவானும் அவனே. இது போன்ற பணிகள் ஊர் தோறும் நடைபெறச் செய்யும் மனத் தெளிவையும்  அப்பரமனே அருள வேண்டும்.