Saturday, May 28, 2016

இப்படியும் சிவதருமம் செய்யலாமே

தானம் என்பதும் ஒருவகையில் பார்த்தால் தவம்தான்.  தவம் செய்யாதவர்கள் தானத்தை செய்வதன் மூலம் தவம் செய்த பலனைப் பெறலாம் . அன்ன  தானம் உயர்ந்தது தான். ஆனால் எங்கே யாருக்கு அது செய்யப்படுகிறது என்பது அதை விட முக்கியம். பிரதோஷம் நடைபெறும் பல சிவாலயங்களில்  அண்டா அண்டாவாகப் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்வோர்  ஏழை எளியவர்களாகவோ  அல்லது தேசாந்திரிகளாகவோ இருந்தால் பரவாயில்லை. அண்டையிலுள்ள  வீடுகளிலிருந்து வருபவர்களும் கைகளை நீட்டுகிறார்கள். பிரசாதம் என்ற அளவில் கொடுத்தாலும் பரவாயில்லை. (அதுவும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.)வரிசையில் சென்று பெரிய தொன்னைகளில் சுண்டல்,சாத வகைகள் போன்றவை விநியோகிக்கப்படுகின்றன. அப்படி விநியோகம் செய்தால் தான் கூட்டம் வருகிறது என்ற வியாக்கியானம் வேறு !!

பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தது போக, பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்போடு செல்பவர்களுக்கு என்ன சொல்வது?  இவ்வளவு இருந்தும், பலர் அந்த நாட்களில் உபவாசம் மேற்கொள்வதை இன்றும் பார்க்கிறோம். எடுத்துச் சொல்பவர்கள் இல்லாமல் போய் விட்டதால் இப்படி ஆகி விட்டதா என்று தெரியவில்லை. பரமேசுவரன் ஆலகால நஞ்சை உண்டு அகில உலகங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றிய வேளை யில் நாம் அந்த கருணைக்குத் தலை வணங்க வேண்டியது போக வயிற்றுக்கு இரை தேடுவது கொடுமை !!

முற்காலத்தில் திருவிழாக்களைக் காண்பதற்காகப்  பக்கத்து ஊர்களிலிருந்தும் தொலைவிலிருந்தும் யாத்திரையாக வருபவர்கள் தங்க இடமும் உண்ண உணவும் பல சத்திரங்கள்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. உள்ளூரில் உள்ள ஏழை மக்களும் தங்களால் இயன்ற உபகாரமாகத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தந்தனர். இக்காலத்தில் அன்னதானம் செய்கிறோம் என்ரு நினைத்துக் கொண்டு , வயிறார உண்டு விட்டு வருபவர்களுக்குப்  பிரதோஷ நேரத்தில் அன்ன  தானம் செய்வதைத்  தவறு என்று எவரும் சொல்வதாகத் தெரியவில்லை.

ஏதோ செய்துவிட்டுப் போகட்டுமே, சிவதருமமாக  நினைத்துக் கொள்ளலாமே என்று சமாதானம் சொல்பவர்களும் உண்டு. கோயில் இடிந்து கிடந்து பூஜைகள் நின்று விட்டதைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறவர்களின் வெட்டிப் பேச்சுக்களில் இதுவும் ஒன்று. இவர்களில் எத்தனை பேர் சிவதருமமாகத் தங்கள் வீட்டு வைபவங்கள் நடைபெறும்போது பூஜையற்ற கோயில்களை எண்ணிப் பார்க்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் சொந்த கிராமத்துக் கோயில்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று பார்க்கிறார்கள்?  கோயில்களில் பணிபுரியும்  சிப்பந்திகளின் நலனைப் பற்றி சிந்தித்ததுண்டா?  அன்றாடம் செய்யும் ஊதாரிச் செலவுகளின் சிறு துளியையாவது அந்தப் பக்கம் திருப்பி விட்டிருப்பார்களா?

பொழுது விடிந்து பொழுது போனால் பணப் புழக்கத்தில் மூழ்கியிருக்கும் வியாபாரிகளாவது இதைப் பற்றி சிந்திக்கலாம். அண்மையில் ஒரு கல்யாண மண்டப மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ணத்தை வெளியிட்டோம். வழக்கமாக எல்லோரும் சொல்வது  போல் " என்ன  செய்வது? காலத்தின் கோலம் " என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. அவரிடம் ஒரு யோசனை சொன்னோம். மண்டப வாடகையாகப் பல ஆயிரங்கள் கட்டணம் பெறும்போது கூட ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயை சேர்த்து வாங்கிக் கொண்டால் அத்தொகையை ஆலய பராமரிப்புக்காக வைத்துக் கொள்ளலாம். அப்படிச் சொல்லிக் கேட்டால் யாரும் கொடுக்கப் போவதில்லை. ஆகவே இவ்வாறு மறைமுகமாகப் பெறப்படவேண்டியிருக்கிறது. மாதம் சராசரியாக ஒரு மண்டபத்தில் நான்கு திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு மாதமும் 2000 முதல் 4000 வரை இப்புனிதப் பணிக்காக சேர்ந்து ஆண்டு முடியும் போது பெரிய தொகையாகச் சேர்ந்து விடும். இதே போல் புடவை வியாபாரம் செய்பவர்கள் புடவை விலையோடு ஐம்பதோ அல்லது நூறோ சேர்த்து விற்றால் அந்த அதிகத் தொகையைக் கொண்டு பல ஆலயங்களையும் சிப்பந்திகளையும் காப்பற்றலாம். ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் இதுபோல் சிந்திக்கலாம்.

நிலவருமானமோ, அரசாங்க உதவியோ  இல்லாத நிலையில் இதுபோன்ற மாற்று வழிகள் மூலம் சிவதருமத்தை செய்ய முடியும். ஆம்! மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும். அந்த எண்ணத்தை  எல்லோரது மனதிலும் தோன்றும்படி அருளவேண்டும் என்று ஈசுவரனைப் பிரார்த்திப்போம். சிவகிருபை இருந்து விட்டால் நடக்காதது எது?

Saturday, May 7, 2016

தவத்திற்கு அழகு

தன்னுடைய சொந்த பந்தங்களைத் துறந்து விட்டுக் காவி உடை தரித்துவிட் ட எல்லோரையுமா உலகம் கொண்டாடுகிறது?  பஞ்சேந்திரியங்களை அடக்கித்  தவம் செய்பவர்களையே மக்கள் நாடுவர். ஆகவே, வெளியில் காவி உடையோடு  சமயச் சின்னங்களைத்  தரித்துக் கொண்டால் மட்டும் போதாது. காவி உடை மேல் பட்டாடைகளை அணிந்தும், வெற்று மார்புடனும்  மக்கள் மத்தியில்  வலம் வரும் துறவிகளைப் ( ? ) பற்றி என்ன  சொல்வது?  அவர்களது சீடர்களும் அதைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகிறார்கள். பிறருக்கு முன் உதாரணமாக இருந்து காட்டவேண்டி யவர்களே நெறி மாறி நடக்கும்போது  மற்றவர்களால் என்ன  செய்ய முடியும்.?

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மூர்த்தி நாயனார் என்பவர்  மதுரைப் பெருமானுக்கு சந்தனம் அளித்துவரும் நியமத்தோடு வாழந்தவர். அவருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் சமணர்கள் செய்துவிடவே, தனது முழங்கையால் சந்தனக் கல்லில் கை நரம்பும் தோலும் கரையும்படி தேய்த்தார். அவரது பக்திக்கு இரங்கிய பரமேசுவரன் அவருக்கு மதுரையை ஆளுமாறு அருளினான். அரசரானபோதும் தனது சந்தனம் அளிக்கும் கைங்கரியத்திலிருந்து அவர் தவறவே இல்லை. அமைச்சர்களை நோக்கிய மூர்த்திநாயனார்," விபூதியே எனக்கு அபிஷேகப் பொருளாகவும், ருத்ராக்ஷமே ஆபரணமாகவும், ஜடாமுடியே கிரீடமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை ஆள்வேன்" என்றார். இந்த மூன்றாலும் ஆண்ட அவரை, சுந்தரர், " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும்  அடியேன் " என்று சிறப்பித்துப்  பாடியிருக்கிறார். . ஓரு அரசர் இவ்வாறு வாழ்ந்து காட்டியபோது, துறவிகள் , தாம் மேற்கொண்ட துறவறத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டியது  எவ்வளவு  அவசியம் என்பதை  சொல்ல வேண்டியதில்லை. .வையகத்தை நல்ல வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசனுக்கும் ஆசானுக்கும் உண்டு. அதை மூர்த்தி நாயனார்  வரலாற்றில் சேக்கிழார் கோடிட்டுக் காட்டுகிறார்:

" வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே
 செய்யும் அபிடேகமும் ஆக; செழுங் கலன்கள்
ஐயன் அடையாளமுமாக; அணிந்து தாங்கும்
மொய்புன் சடை மாமுடியே முடி ஆவது என்றார்."  

உள்ளத்து அழுக்கை நீக்கி இருள் நீக்கி அருள் தர வல்ல குருநாதரை நாடினால் குருவருளால் சிவனருள் எளிதில் பெறலாம். " தவத்திற்கு அழகு  சிவத்தைப் பேணுதல்"  என்பதால் இங்கு பேணுதல் என்பதைத்  தவத்தால் பேணுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு தவம் செய்வதால் குருவினது ஆற்றல் பன்மடங்கு பெருகும். எனவே , " என்பும் உரியர் பிறக்கு" என்றார் வள்ளுவர்.

காஞ்சி பெரியவர்கள் , சேஷாத்ரி சுவாமிகள்,ரமண மகரிஷிகள் போன்றோர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து தவம் செய்து காட்டியவர்கள். " நாட்டில் மக்கள் நெறி தவறி  நடக்கிறார்கள் என்றால் நான் செய்த தவம் போதாது என்று அர்த்தம். . முதலில் நான் மேலும் தவம் செய்து உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வேன்" என்று ஒருமுறை காஞ்சி பெரியவர்கள் சொன்னார்கள்.  

தவத்திற்கும் நெறி உண்டு. அந்த நெறியைக் காட்டி மன இருளை மாய்க்க வல்லவரே சற்குரு. அவரையே, திருமூலர்,  "  குருட்டினை  நீக்கும் குரு"  என்கிறார். அதுவரையில் முகத்தில் கண் கொண்டு காணும்  மூடர்களாக இருந்தவர்களை அகத்தில் கண் கொண்டு காணச் செய்து ஆனந்த மயமாக்கும் சற்குரு நாதர் கிடைக்க  நாமும்  தவம் செய்திருக்க  வேண்டும்.   தாயுமானார் சொல்லியதுபோல, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று முறையாக யாத்திரை செய்யும் போது சற்குரு  வாய்ப்பதும் உண்டு. அருளாளர்களுக்கு  இறைவனே சற்குருநாதனாக  எழுந்தருளுகிறான். திருத் துறையூர் என்ற தலத்தை அடைந்து " தவ நெறி தந்தருள்" என்று வேண்டிய சுந்தரருக்கு அவ்விதமே பெருமான் அருளினான். அங்கு சுவாமிக்கு சிஷ்ட குருநாதர் என்ற பெயர் உண்டு. அதேபோன்று திருப்பெருந்துறையில்(ஆவுடையார் கோயிலில்) மாணிக்க வாசகருக்காகக்  குருந்தமரத்தடியில் ஞானாசிரியனாக அருளினான் சிவபெருமான் .

மலைப் பிரதேசங்களிலும் காடுகளிலும் அவதூதர்களாக இரவில் யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தும், தவம் செய்தும் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அப்படியெல்லாம் இப்போது ஒருவேளை இல்லாமல் போனாலும் துறவறம் ஏற்றவர்கள் கால் நடையாகவே சென்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தங்கி, மக்களை நல்வழிப்படுத்தும் நெறியிலிருந்து மாறிவிட்டால் யார்தான் அவர்களைக் கரை ஏற்றுவார்கள்? நகர வாழ்க்கை வாழ்பவர்களையே சந்திப்பதும் அங்கே தங்குவதும் தவத்திற்கு இடையூறாகவே அமையும். தவத்திற்கு அழகான சிவத்தைப் பேணுவதிலும் சிரத்தை குறைய ஆரம்பித்து விடும். இருவேளை பூஜைகள் ஒரு வேளை  ஆகி விடும். அதர்மத்தில் மூழ்கியுள்ள மக்களைத் திருத்த வழி இல்லாமல் போய் விடும். நாளடைவில் துறவறத்தை ஏற்று மக்களை நன்நெறிப்படுத்துவோர்  எண்ணிக்கையும் குறைந்து விடுமோ என்ற அச்சமும் எழுகிறது. தவநெறி தந்தருளும் தயாபரனாகிய ஞான பரமேசுவரனே இதற்கும் வழி காட்ட வேண்டும்