Saturday, May 28, 2016

இப்படியும் சிவதருமம் செய்யலாமே

தானம் என்பதும் ஒருவகையில் பார்த்தால் தவம்தான்.  தவம் செய்யாதவர்கள் தானத்தை செய்வதன் மூலம் தவம் செய்த பலனைப் பெறலாம் . அன்ன  தானம் உயர்ந்தது தான். ஆனால் எங்கே யாருக்கு அது செய்யப்படுகிறது என்பது அதை விட முக்கியம். பிரதோஷம் நடைபெறும் பல சிவாலயங்களில்  அண்டா அண்டாவாகப் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்வோர்  ஏழை எளியவர்களாகவோ  அல்லது தேசாந்திரிகளாகவோ இருந்தால் பரவாயில்லை. அண்டையிலுள்ள  வீடுகளிலிருந்து வருபவர்களும் கைகளை நீட்டுகிறார்கள். பிரசாதம் என்ற அளவில் கொடுத்தாலும் பரவாயில்லை. (அதுவும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.)வரிசையில் சென்று பெரிய தொன்னைகளில் சுண்டல்,சாத வகைகள் போன்றவை விநியோகிக்கப்படுகின்றன. அப்படி விநியோகம் செய்தால் தான் கூட்டம் வருகிறது என்ற வியாக்கியானம் வேறு !!

பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தது போக, பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்போடு செல்பவர்களுக்கு என்ன சொல்வது?  இவ்வளவு இருந்தும், பலர் அந்த நாட்களில் உபவாசம் மேற்கொள்வதை இன்றும் பார்க்கிறோம். எடுத்துச் சொல்பவர்கள் இல்லாமல் போய் விட்டதால் இப்படி ஆகி விட்டதா என்று தெரியவில்லை. பரமேசுவரன் ஆலகால நஞ்சை உண்டு அகில உலகங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றிய வேளை யில் நாம் அந்த கருணைக்குத் தலை வணங்க வேண்டியது போக வயிற்றுக்கு இரை தேடுவது கொடுமை !!

முற்காலத்தில் திருவிழாக்களைக் காண்பதற்காகப்  பக்கத்து ஊர்களிலிருந்தும் தொலைவிலிருந்தும் யாத்திரையாக வருபவர்கள் தங்க இடமும் உண்ண உணவும் பல சத்திரங்கள்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. உள்ளூரில் உள்ள ஏழை மக்களும் தங்களால் இயன்ற உபகாரமாகத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தந்தனர். இக்காலத்தில் அன்னதானம் செய்கிறோம் என்ரு நினைத்துக் கொண்டு , வயிறார உண்டு விட்டு வருபவர்களுக்குப்  பிரதோஷ நேரத்தில் அன்ன  தானம் செய்வதைத்  தவறு என்று எவரும் சொல்வதாகத் தெரியவில்லை.

ஏதோ செய்துவிட்டுப் போகட்டுமே, சிவதருமமாக  நினைத்துக் கொள்ளலாமே என்று சமாதானம் சொல்பவர்களும் உண்டு. கோயில் இடிந்து கிடந்து பூஜைகள் நின்று விட்டதைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறவர்களின் வெட்டிப் பேச்சுக்களில் இதுவும் ஒன்று. இவர்களில் எத்தனை பேர் சிவதருமமாகத் தங்கள் வீட்டு வைபவங்கள் நடைபெறும்போது பூஜையற்ற கோயில்களை எண்ணிப் பார்க்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் சொந்த கிராமத்துக் கோயில்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று பார்க்கிறார்கள்?  கோயில்களில் பணிபுரியும்  சிப்பந்திகளின் நலனைப் பற்றி சிந்தித்ததுண்டா?  அன்றாடம் செய்யும் ஊதாரிச் செலவுகளின் சிறு துளியையாவது அந்தப் பக்கம் திருப்பி விட்டிருப்பார்களா?

பொழுது விடிந்து பொழுது போனால் பணப் புழக்கத்தில் மூழ்கியிருக்கும் வியாபாரிகளாவது இதைப் பற்றி சிந்திக்கலாம். அண்மையில் ஒரு கல்யாண மண்டப மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ணத்தை வெளியிட்டோம். வழக்கமாக எல்லோரும் சொல்வது  போல் " என்ன  செய்வது? காலத்தின் கோலம் " என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. அவரிடம் ஒரு யோசனை சொன்னோம். மண்டப வாடகையாகப் பல ஆயிரங்கள் கட்டணம் பெறும்போது கூட ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயை சேர்த்து வாங்கிக் கொண்டால் அத்தொகையை ஆலய பராமரிப்புக்காக வைத்துக் கொள்ளலாம். அப்படிச் சொல்லிக் கேட்டால் யாரும் கொடுக்கப் போவதில்லை. ஆகவே இவ்வாறு மறைமுகமாகப் பெறப்படவேண்டியிருக்கிறது. மாதம் சராசரியாக ஒரு மண்டபத்தில் நான்கு திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு மாதமும் 2000 முதல் 4000 வரை இப்புனிதப் பணிக்காக சேர்ந்து ஆண்டு முடியும் போது பெரிய தொகையாகச் சேர்ந்து விடும். இதே போல் புடவை வியாபாரம் செய்பவர்கள் புடவை விலையோடு ஐம்பதோ அல்லது நூறோ சேர்த்து விற்றால் அந்த அதிகத் தொகையைக் கொண்டு பல ஆலயங்களையும் சிப்பந்திகளையும் காப்பற்றலாம். ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் இதுபோல் சிந்திக்கலாம்.

நிலவருமானமோ, அரசாங்க உதவியோ  இல்லாத நிலையில் இதுபோன்ற மாற்று வழிகள் மூலம் சிவதருமத்தை செய்ய முடியும். ஆம்! மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும். அந்த எண்ணத்தை  எல்லோரது மனதிலும் தோன்றும்படி அருளவேண்டும் என்று ஈசுவரனைப் பிரார்த்திப்போம். சிவகிருபை இருந்து விட்டால் நடக்காதது எது?

2 comments:

  1. கஷ்டமான நிலையில் உள்ள ஆலயங்களை நல்ல வருமானமுள்ள புடவை மற்றும் நகைக் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும் ஒவ்வொரு விற்பனைக்கும் ஒரு 50 ரூ அதிகமாக கோவில் திருப்பணி உபயம் என்ற கணக்கில் பில் கொடுத்து வசூலித்து கோவிலுக்காகச் செலவழிப்பது என்பது மிக நல்ல கருத்து. தமிழ் நாட்டு நகரங்களில் உள்ள கடைகள் நிச்சயமாக இந்தப் பணியை ஆரம்பிக்கலாம்.னிறைய பிரதிகள் விற்கும் ஏதாவது ஒரு பக்திப் பத்திரிகையில் இது குறித்து எழுதினால் இப்பணி துவங்கக் கூடும். கடவுள் அருள் கிட்டட்டும்.

    ReplyDelete
  2. அன்ன தானம் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது....thanks for your information

    ReplyDelete