Friday, June 3, 2016

இன்று நல்ல நாள்

" எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருப்பதில்லை. அதேசமயத்தில் நல்லது ஒன்று கூட நடைபெறாத நாளே இருப்பதில்லை " என்ற ஒரு வாசகத்தை அண்மையில் படிக்க நேரிட்டது. அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஏற்றது என்று அப்போது அவ்வளவாக விளங்கவில்லை. படித்த சில மணி நேரத்தில் வீட்டிற்குப் பசும்பால் கொடுப்பவர் ஒருவர் அடியேனிடம் வந்தார். அதுவரையில் ஒருவருக்கு ஒருவர் அளவளாமல் இருந்தும், அடியேனது கழுத்தில் இருந்த ருத்திராக்ஷத்தைப் பார்த்ததாலோ என்னவோ  அண்மையில் வந்து ஒரு கேள்வி கேட்டார். " ஐயா, ஒரு மாதம் முன்பு எனக்கு நான்கு முக ருத்திராக்ஷம் ஒன்று கிடைத்தது. அதை வீட்டில் உள்ள சிவன் படத்தருகில் வைத்திருந்தேன். என்னிடம் பதினொரு பசுக்கள் உள்ளன. நன்றாகப் போய்க் கொண்டிருந்த பால் வியாபாரம் திடீரென்று சரிவடையத் தொடங்கியது. அசைவம் சாப்பிடும் வீட்டில் ருத்திராக்ஷம் வைத்துக் கொண்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். அதை ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடலாமா? அல்லது தங்களிடமே வேண்டுமானாலும் கொடுத்து விடட்டுமா? " என்றார்.

அவரது பேச்சில் ஒரு வித பயம் கலந்திருப்பது தெரிந்தது. ருத்திராக்ஷம் போடுபவரிடம் அதைப் போட வேண்டாம் என்ற பதிலை எதிர் பார்க்கிறாரோ? ஒருவாறு அவரை சமாதானப் படுத்தத் துணிந்தோம். " நீங்கள் வாரம் ஒரு முறை அசைவம் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். அசைவ உணவும் அப்படி ஒன்றும் மலிவாகக் கிடைப்பதில்லை என்று தெரிகிறது. மேலும் மனிதக் கழிவுகளும் ரசாயனக் கழிவுகளும் கொட்டப்படும் கடலில் பிடிபட்ட மீன்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவைகளாக இருந்தால் அம்மீன்களை உட்கொள்பவர்களுக்குக் கொடிய வியாதிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள். எனவே எந்த மாற்றத்தையும் உடனே செய்துவிடுவது கஷ்டம்தான். படிப்படியாகத் தான்  மாறியாக வேண்டும். உங்களைப் பொறுத்தவரையில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். உங்களைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும் மாறலாம். முழுவதும்  மாறியபின் அந்த ருத்திராக்ஷத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். பால் வியாபாரம் மட்டுமல்ல. எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள். குடும்பமும் செழிக்க ஆரம்பித்து விடும். அந்த நல்ல செய்தியை ஒரு மாதத்தில் நீங்களே வந்து சொல்வீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறி விடை கூறி அனுப்பி வைத்தோம்.
 
இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ருத்திராக்ஷம் போடுவதையோ  அல்லது அதை வேறிடத்தில் கொடுத்து விடுவதையோ , வியாபார முன்னேற்றத்தையோ மட்டும் நாம் இங்கு கவனிப்பதை விட ருத்திராக்ஷம் இருக்கும் இடத்தில் தூய்மையும் பக்தியும் இருக்க வேண்டும் என்று அவர் உணரத் தொடங்கி விட்டார் அல்லவா? அதைப் பாராட்டியே ஆக வேண்டும். அதைப் போட்டுக் கொள்வதை நாகரீகச் சின்னமாக நினைத்து ஆட்டம் பாட்டம் போடுவதும் கேலிக் கூத்தாக்குவதும் வாடிக்கை ஆகிப் போய் விட்ட இக்காலத்தில் இப்படியும் சிலர் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாளையும் நல்ல நாளாக ஆக்கிய அந்த அன்பருக்கும் மறைந்திருந்து நம்மை ஆட்டுவிக்கும் அந்த இறைவனுக்கும் எந்த வகையில் நன்றி செலுத்துவது?  

5 comments: