Tuesday, July 17, 2018

நர்மதை நதியை வலம் வந்தவர்


நூலாசிரியர்- " கேப்டன் ஜி " 
நம்மில் பலருக்குப்  பாத யாத்திரை, கிரி வலம் போன்றவை மட்டுமே தெரிந்திருக்கும். ஒரு நதியையே வலம் வருவதைப்  பற்றி சிலர் மட்டுமே அறிந்திருப்பார்கள். அதுவும் அம்முறை தென்னிந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. நர்மதை நதியை வலம் வருவது என்பது பழங்காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. வசதிகள் இல்லாத காலத்தில் நதி வலத்தைக்  கால் நடையாகவே யாத்ரீகர்கள் செய்து வந்தார்கள். இக்காலத்திலும் நடந்து வருபவர்கள் உண்டு. 

இவ்வாறு நர்மதை வலம் வருவதற்குச் சில விதி முறைகள் உண்டு என்றும் அறிகிறோம். சுமார் 2500 கி,மீ. தூரத்தை மூன்று ஆண்டுகள்,மூன்று மாதங்கள், பதிமூன்று நாட்களில் காலால் நடந்து சென்று பூர்த்தி செய்ய வேண்டும். கையில் பணம் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது. வழியில் உள்ள கிராமவாசிகளிடம் பிக்ஷை  வாங்கியே உணவு உட்கொள்ளவேண்டும். உணவுப் பொருள்களை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொண்டு யாத்திரை செய்யக் கூடாது. காலை முதல் மாலை வரையில் மட்டுமே நடக்க வேண்டும். இரவு நேரங்களில் ஒரு கிராமத்தில் தங்கி விட்டு மறு நாள் காலை மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். விதி முறைகள் பின்பற்றுவதற்கு சிரமமாக இருக்கும் போலத் தோன்றுகிறது அல்லவா?  நமக்கு ஒத்து வராது என்று ஒதுங்குபவர்களே பெரும்பாலும் இருப்பர். 

போகாததற்கு எதாவது காரணம் சொல்லிக் கொண்டிருப்போம். மூன்று வருஷம் நடப்பதாவது! உடம்பு என்ன ஆகுமோ? வழியில் கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு எவ்வளவு நாள் காலம் தள்ள முடியும்? உணவு கிடைக்காமல் போய் விட்டால் கையில் காசும்  இல்லாமல் என்ன செய்வது? எதையும் விலை கொடுத்து வாங்க முடியாதே! ஆற்றின் அக்கரையில் ஒரு கிராமமோ கடைகளோ தென்பட்டாலும் யாத்திரையின் போது ஆற்றைப் படகிலோ பாலத்திலோ கடக்கக் கூடாது என்ற நியதி இருக்கிறதே! அடர்ந்த காட்டுக்கு நடுவில் போனால் அடுத்த கிராமம் போய்ச் சேரும் வரை யாரும் வழியில் வர மாட்டார்களே, வன விலங்குகள் வந்து விட்டால் என்ன செய்வது!  அந்த ஊர் மக்களிடம் பேசுவதற்கு அவர்களது மொழி தெரிந்திருக்க வேண்டுமே! மழைக் காலங்களில் நடக்கக் கூடாது என்றாலும், குளிர் காலங்களிலும் கடும் வெய்யிலிலும் நடப்பது அத்தனை எளிதல்லவே! இப்படி எத்தனையோ அடுக்கடுக்காகக் கேள்விகள் நம் மனத்தில் எழத்தான் செய்கின்றன. அத்தனையையும் மீறி யாத்திரை மேற்கொள்வது என்பது உறுதியான மனம் படைத்தோருக்கும்  நர்மதா தேவியின் அருள் பெற்றோருக்குமே வாய்க்கும்.

கங்கையைப் போலவே நர்மதையும் சிவ சம்பந்தம் உடையதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன் படுகையில் இருக்கும் கற்களும் சிவலிங்க பாணங்களே. அவ்வளவு புனிதம் வாய்ந்த அந்த நதி சுமார் 1300 கி.மீ.நீளம் உடையது. மத்திய பிரதேசத்தில் உற்பத்தி ஆகி மகாராஷ்டிரம் வழியாகக் குஜராத் மாநிலத்தை அடைந்து அரபிக் கடலில் சங்கமிக்கிறது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் வற்றாத நதி. அதன் இரு கரைகளிலும் நிறைய சிவாலயங்கள் உள்ளன. ஜோதிர் லிங்கத் தலங்களில் சிலவும்  இருக்கின்றன. 

ஆயுளில் ஒரு முறையாவது இந்த யாத்திரையை வடநாட்டில் பலர் மேற்கொள்கிறார்கள். வாகனங்களில் சென்றால் பதினைந்து நாட்கள் ஆகலாம். எவ்வாறாயினும் மனத்தூய்மையோடு சென்றால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம். அவ்வனுபவங்கள் பெற்றோரைக் காண்பதே புண்ணியம். அவ்வகையில் முப்பது ஆண்டுகளுக்கு முன் கால் நடையாகவே  , சுமார் 130 நாட்களில் துணை இல்லாமல் தனியாகவே இப்புனித யாத்திரையைச் செய்த பெரியவர் ஒருவரை நேரில் சந்தித்து நாமும் புனிதம் பெற்றோம் . அவர்களது அனுபவத்தைக் கேட்கும் செவிகளும் புண்ணியம் செய்தவை அல்லவா? எனவே  அப்போது நிகழ்ந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளோம். அதனை மிக விரைவில் எமது வலைத் தளத்தில் ( ardhra.org ) resources-  audio வெளியிடவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தனது யாத்திரை அனுபவங்களை மிகச் சிறந்த முறையில் அப்பெரியவர் தமக்கே உரிய பாணியில் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். அந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. வரைபடங்களுடன்,  கிராமங்களிடையே உள்ள தூரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதோடு, கிராம மக்கள் யாத்திரீகர்களிடம் காட்டும் அன்பு,உபசாரம் ஆகியவற்றை மெய் சிலிர்க்கும் வகையில் இந்த நூலில் வர்ணிக்கிறார் ஆசிரியர். நூலைப் படிக்கும் பொது நம்மை அறியாமலேயே நாமும் அவருடன் நர்மதையை வலம் செய்வது போன்ற உணர்வைப் பெறுகிறோம். நமக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறோம். 

இந்நூலாசிரியர் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் கன்னியாகுமரியிலும் அருணாசலப் பிரதேசத்திலும் உள்ள விவேகானந்தா  கேந்திரங்களில் பணியாற்றிவிட்டுத்  தற்போது சென்னை மயிலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ணா மடத்தில் கௌரவப் பணி ஆற்றுகிறார். இராணுவத்தில் பணி செய்தபோது நெடும் தூரங்கள் நடந்தது இப்பாத யாத்திரை செய்வதற்கு மிகவும் உதவியது என்கிறார் இவர். 

நூலைப் பற்றியும்,யாத்திரை பற்றிய  விவரங்களை மேலும்  பெறுவதற்கும் அப்பெரியவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Captain K.K. Venkatraman, Sri Ramakrishna Mutt Mylapore, Chennai-4                kkv198788@gmail.com   Mobile: 9445561454