Sunday, September 11, 2011

திருக்குளமும் நந்தவனமும்



ஸ்ரீ பரமேச்வரன், பலவகைப்பட்ட நீர் நிலைகளின் வடிவங்களாகவே இருப்பதாக ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. சிறு வாய்க்கால் நீராகவும், மலையிலிருந்து விழும் அருவியாகவும், மடுக்களில் உள்ள நீராகவும் ஓடை நீராகவும், நதியாகவும், சிறு குட்டைகளில் உள்ள நீராகவும் ,கிணறுகளில் உள்ள நீராகவும், மழை நீராகவும், பிரளய நீராகவும் இருப்பதாக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்த்தாவது, ஜலத்தைக் கண்டவுடன் சிவஸ்வரூபம் என்ற எண்ணம நமக்கு வரவேண்டும். பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றான திருவானைக்காவை, "செழு நீர்த் திரளைச் சென்று ஆடினேனே" என்றும், "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்" என்று திருவாலங்காட்டையும் அப்பர் பெருமான் பாடியிருக்கிறார். நீர் மற்றும் நதிகளின் பெயரோடு சேர்ந்து, "ஜலகண்டேஸ்வரர்" என்றும் "கங்கா ஜடேஸ்வரர்" என்றும் சுவாமி பெயர்கள் வழங்கப்படுகின்றன. பல ஊர்களின் ஸ்தல புராணங்களில், தீர்த்தப் படலம் என்று தனியாக ஒரு படலமே பாடியிருக்கிறார்கள். திருவிடை மருதூர் காருண்யம்ருத தீர்த்தமும், மதுரையின் பொற்றாமரையும், ஸ்ரீ வாஞ்சியத்தின் குப்த கங்கையும், வேதாரண்யம் மணிகர்ணிகையும், திருவெண்காட்டு முக்குளமும், சிதம்பரம் சிவகங்கையும், திருவாரூர் கமலாலயமும், வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்தத் தீர்த்தமும் சில உதாரணங்களாக இங்கு எடுத்துக் காட்டலாம். ராமேச்வரத்தில் தீர்த்தமாடுதல் பிரசித்தமாகக் காணப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் பெருமையை அறியாதார் இலர்.


சில ஊர்களில், அருகில் உள்ள நதிகளில் தீர்த்தவாரியும் , அதற்காகவே அமைக்கப் பட்ட ஸ்நான கட்டங்களும் உள்ளன. காவிரிக் கரையில் உள்ள மாயூரம், திருவையாறு, கும்பகோணம்,கொடுமுடி,பவானி, திருப்பராய்த்துறை போன்ற தலங்கள் இவ்வகையில் அடங்கும்.



இத்தனை பெருமை வாய்ந்த தீர்த்தங்களையும், நதிகளையும் நாம் நன்கு பராமரிப்பதில்லை. திருக்குளங்கள் பாசி பிடித்தும்,குப்பைகளோடும் காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் கோயிலுக்கு வெளியில் உள்ள திருக்குளங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. அவற்றை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். இன்னும் பல இடங்களில் குளங்கள் வறண்டும் , செடிகள் முளைத்தும் பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. ஆலயத் திருப்பணி செய்பவர்களும் நிதிப் பற்றாக்குறை காரணமாகக் குளங்களைத் தூய்மைப் படுத்த முடிவதில்லை. கிராம சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் வாயிலாக இக் குளங்கள் தூர்வாரப்பெற்றுக் காப்பாற்றப்படவேண்டும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி உண்டு. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். செய்வார்களா??


"வ்ருக்ஷேப்ய:" என்று ஸ்ரீ ருத்ரம், மரங்களின் வடிவாகவே சுவாமி இருப்பதாகப் போற்றுகிறது. மரமாகவும் செடியாகவும் கொடியாகவும் மரக் கிளைகளாகவும், உலர்ந்த கட்டையாகவும் அதில் ஈச்வரன் குறிப்பிடப்படுகிறான். வில்வவனேச்வரர்,வடாரண்யேச்வரர், தர்பாரண்யேச்வரர், ஏகாம்பரேச்வரர் முதலிய நாமங்கள் விருக்ஷங்களோடு தொடர்பு உடையவை. மற்ற ஊர்களில் குறைந்தது வில்வ வ்ருக்ஷமாவது பிராகாரத்தில் வளர்க்கப்படவேண்டும். திருப்பணி செய்வோர் ,நந்தவன அபிவிருத்திக்குக் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது. பல இடங்களில் இலவசமாகவே மரக் கன்றுகளைத் தருகிறார்கள். நாம் அவற்றைப் பயன் படுத்திக்கொள்வதில்லை. கேட்டால், "யார் தினம் தண்ணீர் ஊற்றுவது? " என்கிறார்கள். எனவே, கிராமக் கோயில்களில் சுவாமிக்கு சார்த்துவதற்கு பூக்களோ மாலைகளோ இருப்பதில்லை. ஒருக்கால் நந்தவனத்தில் பூக்கள் இருந்தாலும் அவற்றை பூஜா காலத்தில் பறித்துத் தருவார் இல்லை!! முருக நாயனார் கதையையும், செருத்துணை நாயனார் கதையையும் எறிபத்த நாயனார் கதையையும் இருந்த இடத்திலிருந்தே குருபூஜைக்காகப் பாராயணம் செய்வதைவிட, அன்றைய தினமாவது ஒரு கோயிலுக்குச் சென்று புஷ்ப கைங்கர்யம் செய்யலாமே. அதுதான் உண்மையான குருபூஜையும் கூட. நந்தவனங்களும் குளங்களும் அழிவதைப் பார்த்துக்கொண்டே , "காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்று இருந்த இடத்திலேயே தேவாரம் பாடிக்கொண்டு இருப்பதைவிட, சம்பந்தரின் உபதேசத்தை ஏற்று செயல் படுத்துவதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.


சிவனருளால் ஏற்பட்ட இந்த சிந்தனையைத் தலைமேற்கொண்டு நம்மால் இயன்ற அளவில் நந்தவனப் பணியும் திருக்குளப் பணியும் செய்ய நமது சபை தீர்மானித்துள்ளது. இதற்கான செயல் திட்டங்கள், அணுகு முறைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் அடியார்களின் ஈடுபாடும் நம்மை முன்னின்று நடத்தும் சிவனருளும் இப்பணிக்கும் உறுதுணையாக இருக்கும். "முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"