Saturday, December 27, 2014

சக்தி அருள்வாய் சிவனே

மனித உடலில்  எதிர்ப்பு சக்திகள் குறைந்தால்  நோய்கள் தாக்குவது எளிதாகி விடுகிறது என்கிறார்கள். எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே நம்மைக் கவசம் போல் காப்பாற்றும். அதற்காகச்  சத்துள்ள உணவை  உட்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.அது மட்டுமல்ல. நியமம்,விரதம், தியானம்,ஜபம் போன்றவையும் நம்மைக் கவசமாகக் காக்கின்றன என்று பெரியோர் கூறுவர்.  துன்பம் வந்தபிறகு கடவுளைத் தொழுவது, நோய்ப்பட்டபின்பு மருந்தைத் தேடுவது போலத்தான். வருமுன் காப்பதே உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பதால் பிராணாயாமம், தியானம்,ஆலய வழிபாடு  போன்றவற்றை நமது  முன்னோர் கடைப்பிடித்து, நல்வழி காட்டியுள்ளனர்.

 ஒருவகையில் பார்த்தால் ஆலயங்களையும் இவ்வரையறைக்குள் இணைத்துப் பார்க்கலாம். மேற் சொன்ன நியமம் , நெறிமுறை ஆகியவற்றோடு ஆலய பூஜைகள் நடைபெற்றால் மூர்த்தியின் சாந்நித்தியம் அதிகரித்து, வேண்டுவோர் வேண்டிய வரமனைத்தும் கிடைக்கும். . இவ்வளவு நடைபெற்றும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் ஆகமமுறையில் நடத்துவதால் மூர்த்திகரம் அதிகரிக்கிறது.

நம்மை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நோய்கள் மட்டுமல்ல. நம்மையும், நம் ஊராரையும், நம் சமயத்தையும் , நம் நாட்டையும் எதிர்க்கும் சக்திகள் ஒன்று திரண்டு வரும்போது செயலற்றுப் போய் விடுவோம். அதற்குப் பிறரைக் காரணம் காட்டுவதைக் காட்டிலும் நமக்கு எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். எதிர்ப்பு என்றால் மற்றவர்களுடன் சண்டை போடுவது என்று அர்த்தம் அல்ல. நம்மிடம் நியமமோ,மந்திர பலமோ, நம்பிக்கையோ, நித்திய வழிபாடோ  குறைந்தால் இதை எல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். எங்கோ சிலர் இன்னமும் பழைய நெறிகளோடு வாழ்வதால் இந்த அளவாவது நாம் காப்பாற்றப்படுகிறோம் .

உலகம் உய்ய அந்தணர்கள் நித்திய கர்மாவுடன்,அழல் ஓம்பவேண்டியதை, " எரி  ஓம்பிக் கலியை வாராமே  செற்றார் " என்று சம்பந்தர்  அருளுவதால் அறியலாம்.  மூவேளையிலும் காயத்திரி மந்திரத்தால் உபாசிப்பதோடு  விடுமுறை நாட்களில் ஆயிரம் முறை ஜபம் செய்வதால் தனக்கும் ஊருக்கும் நன்மை ஏற்படுவதோடு அதுவே கவசமாகக் காக்கும் என்பதையும் உணர வேண்டும். உலகியலிலிருந்து கொஞ்சமாவது விலகி நியமத்தோடு வாழ முயல வேண்டும். அப்போது எந்த எதிர்ப்புச் சக்தியும் நம்மை நெருங்க அஞ்சும். செய்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கோவில் நடைமுறைகளும் நியமத்தோடு விளங்கினால் ஆலயங்களுக்குள் தவறுகள் நடக்க இடம் தராது. இல்லாவிட்டால் சன்னதிகள் காட்சிக் கூடங்கள் ஆகி விடும். வியாபார நோக்கில்/லாப நோக்கில் செயல் படும். வழிபாட்டு நோக்கமே பாழாகி விடும். ஒரு கால பூஜையே செய்ய முடிகிறது என்னும்போது சாந்நித்தியத்தை எப்படி எதிர் பார்ப்பது ?

திருக்குளங்களைச் சுற்றிலும் சிறுநீர் கழிப்பது, குப்பைகளைக் கொட்டுவது என்று நெறிகெட்டு இருக்கும்போது, திருக்குளத்தின் புனிதத்துவத்தை எப்படிக் காப்பாற்றுவது ? அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? அனைத்து  நதிகளும் வந்து சேரும் புனிதம் வாய்ந்த கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் பாருங்கள் !  இப்படி அதன் சாந்நித்தியம் பறிபோவதால் பிற மதத்தவர்  குளத்தைச் சுற்றித் தங்கள் பிரசார போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் !  இதற்கெல்லாம் மூல காரணம் என்ன ? நம்மை நாம் சுத்தப் படுத்திக் கொள்ளாமல் மனம் அழுக்கேற விட்டிருக்கிறோம் என்பதே. நமது ஆலயம், நமது திருக்குளம் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். இந்த சுய சக்தியை / ஆத்ம சக்தியைத் தான் எதிர்ப்பு சக்தி என்கிறோம். பிரளய  காலத்தில் மீண்டும் சிருஷ்டி பீஜத்தைக் கும்பத்திலிருந்து வெளிக் கொணர்ந்து உலகைத் தோற்றுவித்துக் காத்தருளும் ஆதி கும்பேசுவரப் பெருமானே இந்த ஞானத்தையும் சக்தியையும் அருள வேண்டும். 

Thursday, December 25, 2014

ஸ்ரீ வாஞ்சியத்தில் நடந்த அட்டூழியம்

குப்த கங்கையும் திருக்கோயிலும் 
சிவமுக்தி தரும் தலங்களுள்  நன்னிலத்திற்கு 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  ஸ்ரீ வாஞ்சியமும்  ஒன்று. மூவர் தேவாரமும் இதற்கு உண்டு. திருவாசகத்திலும் இதன் பெருமை  பேசப்படுகிறது. கார்த்திகை ஞாயிறுகளில் இங்கு உள்ள குப்த கங்கை என்ற திருக்குளத்தில் நீராடுவோர் ஏராளம். வெளிப் பிராகாரத்தில் யமனுக்குத் தனி சன்னதியும் உண்டு. இங்கு மட்டுமே, சுவாமிக்கு யம வாகனம் உண்டு. இப்படிப் பல்வேறு பெருமைகளை ஏற்கனவே கொண்டுள்ள இத்தலத்திற்கு மேலும் நாம் பெருமை சேர்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாகக் களங்கம் விளைவிக்கக் கூடாது. இதை  எல்லாத்   தலங்களுக்கும் பொதுவாகச் சொல்வதாகக் கருத வேண்டும்.

 திருவள்ளுவர் எத்தனையோ நீதிகளை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றும், இன்று நாம் நடை முறையில் பார்ப்பது என்ன ? கள் உண்ணாமை, புலால் உண்ணாமை என்று அவர் சொல்லியும் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் மக்களை என்னென்பது!   வாயளவில் குறளைப் புகழ்ந்து விட்டு இரட்டை வேடம் போடும் போலிகளா  தமிழர் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது ?  வெட்கப்பட வேண்டிய விஷயம் .

இவர்கள் எப்படியாவது தொலையட்டும் ,  திருத்தப் பட மாட்டாத ஜன்மங்கள் என்று விட்டு விடுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எதையாவது தின்றுவிட்டு வீட்டோடு  இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நடுத் தெருவிலும் மக்கள் மத்தியிலும் அட்டகாசம் செய்கிறார்கள். நம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற திமிர் வேறு!  இந்த அக்கிரமத்தைக் கோவிலிலும் சென்று தொடருகிறார்கள். என்பதைக் காணும் போது கேவலமாக இருக்கிறது. குடித்த வாடையோடு இவர்களும் சேவார்த்திகள் அருகில் நிற்க எப்படித்தான் துணிந்து வருகிறார்களோ தெரியவில்லை. குடித்துவிட்டு சுவாமி தூக்க வருபவர்களைக் கோவில் நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது?

சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல்லக்கின் உள்ளே, சிலர் குடித்துவிட்டுக் கிடந்ததைச் செய்தித் தாளில் பார்த்தோம். அதன் பின்னர் கோவிலார் என்ன விசாரணை செய்தார்கள் என்பதோ என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றோ மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஸ்ரீவாஞ்சியம் கோவில் வளாகத்திற்குள் உள்ள நிர்வாக அதிகாரியின் அறையில் இப்படிப்பட்ட செயல்கள் நடந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு அறநிலையத்துறை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது அந்த வாஞ்சிநாதப் பெருமானுக்கே  தெரியும்.

கார்த்திகை ஞாயிறுகளில் நம்பிக்கையோடு செல்லும் பக்தர் கூட்டம் இம்முறைகேட்டை ஏன் தட்டிக் கேட்பதில்லை? உள்ளூர்க் காரர்களும் ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை? மடாதிபதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. இதில் அவர்களது பங்கு முக்கியம் இல்லையா? ஆர்வலர்கள் பலர் முகநூலில் கருத்துத் தெரிவிப்பதோடு சரி. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் ஏற்படப்போவதில்லை. களத்தில்  இறங்கி எதிர்க்க வேண்டிய காலம் இது. முன்னின்று நடத்துவார் எவரும் இல்லாதது குற்றத்தை மறைமுகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது போல இருக்கிறது.  இந்த அக்கிரமத்தைப் பத்திரிக்கையாவது வெளிக்கொண்டு வந்ததால் அரசின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உண்டு. அப்பத்திரிகைக்கு நமது நன்றி.

சேவார்த்திகள் தங்களுக்கு உள்ள உரிமைகளை  மறந்து விடுவது நல்லதல்ல. கோவில் வளாகத்துள் செருப்போடு திரிபவர்களையும், எச்சில் துப்புவோரையும்,திருக் குளத்தை அசுத்தப்படுத்துவோரையும் ,மலஜலம் கழிப்போரையும் சீட்டு விளையாடுவோரையும், குடிபோதையில் வருவோரையும் தட்டிக் கேட்கத் தயங்கம் காட்ட வேண்டாம். இதையெல்லாம் அவர்கள் வேறு எங்காவது செய்து தொலையட்டும். ஆலயத்தின் புனிதம் கெடும்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காணாதது போல் நமக்கேன் என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு வந்தது போதும். இனியாவது தட்டிக்  கேட்போம். திருத்துவோம். கோயில்களின் புனிதம் காப்போம்.நல்ல சமுதாயம் உருவாக நம்மால் ஆனதைச் செய்வோம்.  

Tuesday, December 16, 2014

கோயிற் கலைப் பாதுகாப்பு

கலைகள் கற்கப்படவேண்டியவை. ஆதரிக்கப்படவேண்டியவை. நுட்பமாக ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டியவை. பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியவையும் கூட. அதேபோல் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதெல்லாம் நெடுங்காலமாக நடந்துவந்தபோதிலும், இந்த விஞ்ஞான யுகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. வலைத்தளங்கள் மூலமும் செய்தித் தாள்கள் மூலமும்,பத்திரிகைகள் மூலமும் நம் வீட்டுக்கே வந்து சேர்ந்து விடுகின்றன.

எத்தனையோ கலைகள் இருந்தபோதிலும், கோயில் சம்பந்தமான  கற்சிற்ப- உலோக சிற்ப - மர  சிற்ப வேலைகள் பல தலைமுறைகள் ஆனாலும் அக்கலைஞர்களின் பெருமையைப் பகர்வதாக  இருப்பதை மறுக்க முடியாது. இவை எல்லாம் நேரில் சென்று அனுபவிக்க வேண்டியவை. நேரில் செல்ல முடியாதவர்கள்  புகைப்படங்கள் மூலம் அவற்றின் அழகை உணரமுடிகிறது என்றாலும் அதன் மறுபக்கம் அச் சிற்பங்களுக்கே ஆபத்து விளைவிப்பதாக ஆகிவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

 நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு, படங்களை வெளியிட்டுப்  பத்திரிகைகள் ஊதிக் கெடுத்து விட்டன. விக்கிரங்களின் மதிப்பை வியாபார ரீதியில் மதிப்பிட்டுச்  செய்திகளை வெளியிடுகின்றன. இந்தத் தவறான அணுகு முறையால்  பலர் அவற்றைக் களவாடத் துணிந்து விட்டனர். களவு போனவற்றில் சில மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவையும் பெரும்பாலும் உரிய கோயில்களில் சேர்ப்பிக்கப் படாமல் பாதுகாப்பு என்ற பெயரில் வேறு மையங்களுக்கு அடைக்கலமாக அனுப்பி வைக்கப் படுகின்றன.

தேர்நிலைகளுக்குப் பாதுகாப்பு இல்லாததால் மரச் சிற்பங்கள் பல இடங்களில் களவாடப்பெற்று சக்கரமும்,மரக்கட்டைகளுமே எஞ்சிய நிலையில் தேர்கள் காட்சி அளிப்பதைக் கண்டால் மனம் பதறுகிறது. புதிதாகச் செய்யப்படும் தேர்களில் பழைய கலைநுட்பத்தைக் காண முடியுமா?

உற்சவ மூர்த்திகளின் நிலையும் அதேபோலத் தான். பத்திரிகைகளும் வலைத்தளங்களும் படங்களை வெளியிடுவதால் அவற்றுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆலய மூலவர்களையும் உற்சவர்களையும் புகைப்படம் எடுத்துப்  பத்திரிகைகளிலும், முகநூலிலும் (Face book) வலைத்தளங்களிலும், வெளியிடுகிறார்கள். தகுந்த பாதுகாப்பு இல்லாத ஆலயங்கள் ஏராளமாக இருப்பது தெரிந்தும் இவ்விதம் செய்யலாமா? எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் செய்தோம் என்பர். ஆனால் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லாத நிலையை அது ஏற்படுத்தக்கூடும் என்று இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

பிராகாரங்களில் உள்ள மூர்த்திகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எந்த மூர்த்தியையும் தயவு செய்து படம் எடுத்து வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அன்னியர் படைஎடுப்பினால் பல கலைச் செல்வங்களை இழந்தோம். பணத்தாசை பிடித்த நம் நாட்டுக் கயவர்கள் எஞ்சியவற்றைக் களவாடவோ அன்னியருக்கு விற்கவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இது வரை வெளியிட்ட படங்களே போதும். முடிந்தால் இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள படங்களை, உரியவர்கள் பெரிய மனத்தொடு நீக்கிவிடுவது இன்னும் நல்லது.

இவ்வளவு களவு போயும் அறநிலையத்துறை உறங்கிக்கொண்டு இருப்பது வேதனை தான். சுற்றுச் சுவரே இல்லாமல் ஆலயங்கள் இருப்பதைக் கண்டும் காணதது போல் இருப்பதுதான்  அவர்கள் செய்யும் நிர்வாக லட்சணமா ? உற்சவர்களை  இடம் மாற்றி விட்டது போல் ,தேவ -    கோஷ்டங்களையும்  மூலவர்களையும் அப்படி மாற்றிவிடுவார்களோ என்னவோ?

வேதனைக் குரல் எழுப்ப வேண்டியவர்களும் , மடாதிபதிகளும் வாய் திறவாமல் இருப்பது அதை விட வேதனை. அதற்காக நாமும் மௌனிகளாகி விடக் கூடாது. மூர்த்தி களவாடப்பட்ட ஊரிலேயே அவ்வூர் மக்கள் கவலைப்படாமல் இருக்கும்போது நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அடியார் கூட்டங்கள் இவ்வளவு இருந்தும் கோயில்களுக்கு எப்பொழுது விடியல் வருமோ தெரியவில்லை. பாட்டுப் பாடுவதும், வாத்தியங்கள் இசைப்பதும் மட்டுமா நமது பொறுப்பு? பாதுகாப்பே பறந்தோடும்போது எதை நோக்கிப் பாடுவது? எதை நோக்கி இசைக் கருவிகளை முழக்குவது? 

Monday, December 1, 2014

உழவாரப் பணி செய்ய ஏற்ற காலம்

திருப்பணி என்றால் கோயிலைப் புதிப்பிக்கும் கட்டுமானப் பணி  மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இறைவனுக்குச் செய்யப்படும் எல்லாப்பணிகளும் திருப்பணிகள். பிற வேலைகளைப் " பணி" என்று மட்டும் குறிப்பிடுகிறோம். கோவிலைச் சுத்தம் செய்யும் அலகைத் " திரு அலகு " என்கிறோம்.கோவிலுக்கு அலகிடுதல்,மெழுகுதல்,பூமாலை தொடுத்துச் சார்த்தச் செய்தல்,நந்தவனத்தையும், திருக்குளத்தையும் நன்கு பராமரித்தல், உழவாரப்பணி செய்தல் முதலியவை இத் "திருப்பணி" யில் அடங்கும். எனவே அடியார்களும் தம்மால் இயன்றவரை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது தினமும் செய்து வர வேண்டும். உழவாரம் கையில் ஏந்தி நித்தலும் திருக்கோயிலைச் சுத்தம் செய்துவந்தார் திருநாவுக்கரசர். ஆனால் நாமோ. " என் கடன் பணி செய்து கிடப்பதே "என்று வாயளவில் மட்டும் சொல்லிக்கொண்டு, பிராகாரங்களில் புதர்கள் மண்டிக் கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டுக்  கோவிலுக்குச் சென்று வருகிறோம்.

பல ஊர்களில் உழவாரப் பணி மன்றங்கள் செயல் படுகின்றன. மாதம் தோறும் குழுக்களாகச் சென்று உழவாரப்பணி செய்கிறார்கள். மாதம் ஒரு கோவில் என்று இப்படிச் செய்தாலும், ஒரு விஷயத்தை நாம் இங்கே  குறிப்பிட வேண்டியிருக்கிறது. மண்வெட்டி, கடப்பாரை அரிவாள் ஆகியவற்றால் செடி,கொடி மரங்களை அகற்றினாலும் பல இடங்களில் அவை வேரோடு முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை. அடுத்த மழை பெய்ததும் அவை மீண்டும் அதே இடத்தில் ஆக்ரோஷத்துடன் வளர ஆரம்பித்து விடுகின்றன. பணி மன்றமோ மீண்டும் அதே கோவிலுக்குச் செல்லாமல் வேறு கோவில்களுக்குச் சென்று  உழவாரம் செய்வதால், ஏற்கனவே உழவாரம் செய்த அரும் பணி வீணாகப் போய் விடுகிறது.

உழவாரப்பணி செய்வதற்கு ஏற்ற காலம் மழைக் காலம் என்று பலமுறை சொல்லியும், பழையபடி சௌகரியப்பட்ட நாட்களில் செய்யும் முறையே பின்பற்றப்படுவதால் எதிர் பார்த்த பலன் விளைவதில்லை.மழை பெய்து நின்றவுடன் பூமி ஈரமாக இருப்பதால், ஒரு  அடி வரை வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளைப் ப்ராகாரங்களிளிருந்து கையாலேயே வேரோடு பிடுங்கி விட முடியும். இதனால் உபகரணங்களைக் கொண்டு நாள் முழுவதும் செய்தும் வேரோடு அகற்ற முடியாமல் போவது தடுக்கப்படுகிறது. நெடிது வளர்ந்த மரங்களையும் முட்புதர்களையும் மட்டும் பிற நாட்களில் வெட்டலாம். இதன்மூலம் பெரும்பாலான சிறு முட் செடிகள் வளர்ந்து பெரிய மரங்கள் ஆவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.

உழவாரப்பணிகளைப் பெரும்பாலும் வெளியூர்க்காரர்களே வந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரியோ அல்லது உள்ளூர் மக்களோ போதிய கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மரங்கள் மண்டிப்போய் மதில்களும் மண்டபங்களும் விழும் அபாயம் நேரிடுகிறது. பிராகாரங்கள் வலம் வரும் நிலையில் இல்லை. மேலும் பாம்புப் புற்றுக்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. மழைகாலங்களில் பாம்புகள் கோவிலுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றன. நிலைமை இப்படி இருந்தும் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை! உள்ளூர் மக்கள் மழை நின்றவுடன் கைகளால் ஆளுக்குப் பத்து செடிகளைக் களைந்தாலே ஓரளவு பிராகாரங்கள் சுத்தமாகிவிடும். எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் வந்து செய்து கொள்ளட்டும் என்று இருப்பது தவறு. நம் ஊர்க் கோவிலுக்கு நாம் தான் முன்னின்று பணி செய்ய வேண்டும். அடுத்தவர்கள் துணை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படித் துணை செய்ய முன்வருபவர்களுக்கு வேண்டிய தேவைகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

நாம் கோவிலுக்குச் செல்வதால் கோவிலுக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் விளைய வேண்டும். இதை மனத்தில் வைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யப்போக வேண்டும்.அப்பொழுது நமக்கும் அடியார்களுடன் இணைந்து பணி ஆற்றும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. சுய நல எண்ணம் நம்மை விட்டு நீங்கத் தொடங்கி விடும். செய்து பார்த்தால் தானே அதன் அருமை புரியும்?