Tuesday, December 16, 2014

கோயிற் கலைப் பாதுகாப்பு

கலைகள் கற்கப்படவேண்டியவை. ஆதரிக்கப்படவேண்டியவை. நுட்பமாக ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டியவை. பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியவையும் கூட. அதேபோல் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதெல்லாம் நெடுங்காலமாக நடந்துவந்தபோதிலும், இந்த விஞ்ஞான யுகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. வலைத்தளங்கள் மூலமும் செய்தித் தாள்கள் மூலமும்,பத்திரிகைகள் மூலமும் நம் வீட்டுக்கே வந்து சேர்ந்து விடுகின்றன.

எத்தனையோ கலைகள் இருந்தபோதிலும், கோயில் சம்பந்தமான  கற்சிற்ப- உலோக சிற்ப - மர  சிற்ப வேலைகள் பல தலைமுறைகள் ஆனாலும் அக்கலைஞர்களின் பெருமையைப் பகர்வதாக  இருப்பதை மறுக்க முடியாது. இவை எல்லாம் நேரில் சென்று அனுபவிக்க வேண்டியவை. நேரில் செல்ல முடியாதவர்கள்  புகைப்படங்கள் மூலம் அவற்றின் அழகை உணரமுடிகிறது என்றாலும் அதன் மறுபக்கம் அச் சிற்பங்களுக்கே ஆபத்து விளைவிப்பதாக ஆகிவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

 நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு, படங்களை வெளியிட்டுப்  பத்திரிகைகள் ஊதிக் கெடுத்து விட்டன. விக்கிரங்களின் மதிப்பை வியாபார ரீதியில் மதிப்பிட்டுச்  செய்திகளை வெளியிடுகின்றன. இந்தத் தவறான அணுகு முறையால்  பலர் அவற்றைக் களவாடத் துணிந்து விட்டனர். களவு போனவற்றில் சில மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவையும் பெரும்பாலும் உரிய கோயில்களில் சேர்ப்பிக்கப் படாமல் பாதுகாப்பு என்ற பெயரில் வேறு மையங்களுக்கு அடைக்கலமாக அனுப்பி வைக்கப் படுகின்றன.

தேர்நிலைகளுக்குப் பாதுகாப்பு இல்லாததால் மரச் சிற்பங்கள் பல இடங்களில் களவாடப்பெற்று சக்கரமும்,மரக்கட்டைகளுமே எஞ்சிய நிலையில் தேர்கள் காட்சி அளிப்பதைக் கண்டால் மனம் பதறுகிறது. புதிதாகச் செய்யப்படும் தேர்களில் பழைய கலைநுட்பத்தைக் காண முடியுமா?

உற்சவ மூர்த்திகளின் நிலையும் அதேபோலத் தான். பத்திரிகைகளும் வலைத்தளங்களும் படங்களை வெளியிடுவதால் அவற்றுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆலய மூலவர்களையும் உற்சவர்களையும் புகைப்படம் எடுத்துப்  பத்திரிகைகளிலும், முகநூலிலும் (Face book) வலைத்தளங்களிலும், வெளியிடுகிறார்கள். தகுந்த பாதுகாப்பு இல்லாத ஆலயங்கள் ஏராளமாக இருப்பது தெரிந்தும் இவ்விதம் செய்யலாமா? எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் செய்தோம் என்பர். ஆனால் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லாத நிலையை அது ஏற்படுத்தக்கூடும் என்று இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

பிராகாரங்களில் உள்ள மூர்த்திகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எந்த மூர்த்தியையும் தயவு செய்து படம் எடுத்து வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அன்னியர் படைஎடுப்பினால் பல கலைச் செல்வங்களை இழந்தோம். பணத்தாசை பிடித்த நம் நாட்டுக் கயவர்கள் எஞ்சியவற்றைக் களவாடவோ அன்னியருக்கு விற்கவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இது வரை வெளியிட்ட படங்களே போதும். முடிந்தால் இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள படங்களை, உரியவர்கள் பெரிய மனத்தொடு நீக்கிவிடுவது இன்னும் நல்லது.

இவ்வளவு களவு போயும் அறநிலையத்துறை உறங்கிக்கொண்டு இருப்பது வேதனை தான். சுற்றுச் சுவரே இல்லாமல் ஆலயங்கள் இருப்பதைக் கண்டும் காணதது போல் இருப்பதுதான்  அவர்கள் செய்யும் நிர்வாக லட்சணமா ? உற்சவர்களை  இடம் மாற்றி விட்டது போல் ,தேவ -    கோஷ்டங்களையும்  மூலவர்களையும் அப்படி மாற்றிவிடுவார்களோ என்னவோ?

வேதனைக் குரல் எழுப்ப வேண்டியவர்களும் , மடாதிபதிகளும் வாய் திறவாமல் இருப்பது அதை விட வேதனை. அதற்காக நாமும் மௌனிகளாகி விடக் கூடாது. மூர்த்தி களவாடப்பட்ட ஊரிலேயே அவ்வூர் மக்கள் கவலைப்படாமல் இருக்கும்போது நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அடியார் கூட்டங்கள் இவ்வளவு இருந்தும் கோயில்களுக்கு எப்பொழுது விடியல் வருமோ தெரியவில்லை. பாட்டுப் பாடுவதும், வாத்தியங்கள் இசைப்பதும் மட்டுமா நமது பொறுப்பு? பாதுகாப்பே பறந்தோடும்போது எதை நோக்கிப் பாடுவது? எதை நோக்கி இசைக் கருவிகளை முழக்குவது? 

No comments:

Post a Comment