Thursday, December 25, 2014

ஸ்ரீ வாஞ்சியத்தில் நடந்த அட்டூழியம்

குப்த கங்கையும் திருக்கோயிலும் 
சிவமுக்தி தரும் தலங்களுள்  நன்னிலத்திற்கு 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  ஸ்ரீ வாஞ்சியமும்  ஒன்று. மூவர் தேவாரமும் இதற்கு உண்டு. திருவாசகத்திலும் இதன் பெருமை  பேசப்படுகிறது. கார்த்திகை ஞாயிறுகளில் இங்கு உள்ள குப்த கங்கை என்ற திருக்குளத்தில் நீராடுவோர் ஏராளம். வெளிப் பிராகாரத்தில் யமனுக்குத் தனி சன்னதியும் உண்டு. இங்கு மட்டுமே, சுவாமிக்கு யம வாகனம் உண்டு. இப்படிப் பல்வேறு பெருமைகளை ஏற்கனவே கொண்டுள்ள இத்தலத்திற்கு மேலும் நாம் பெருமை சேர்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாகக் களங்கம் விளைவிக்கக் கூடாது. இதை  எல்லாத்   தலங்களுக்கும் பொதுவாகச் சொல்வதாகக் கருத வேண்டும்.

 திருவள்ளுவர் எத்தனையோ நீதிகளை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றும், இன்று நாம் நடை முறையில் பார்ப்பது என்ன ? கள் உண்ணாமை, புலால் உண்ணாமை என்று அவர் சொல்லியும் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் மக்களை என்னென்பது!   வாயளவில் குறளைப் புகழ்ந்து விட்டு இரட்டை வேடம் போடும் போலிகளா  தமிழர் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது ?  வெட்கப்பட வேண்டிய விஷயம் .

இவர்கள் எப்படியாவது தொலையட்டும் ,  திருத்தப் பட மாட்டாத ஜன்மங்கள் என்று விட்டு விடுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எதையாவது தின்றுவிட்டு வீட்டோடு  இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நடுத் தெருவிலும் மக்கள் மத்தியிலும் அட்டகாசம் செய்கிறார்கள். நம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற திமிர் வேறு!  இந்த அக்கிரமத்தைக் கோவிலிலும் சென்று தொடருகிறார்கள். என்பதைக் காணும் போது கேவலமாக இருக்கிறது. குடித்த வாடையோடு இவர்களும் சேவார்த்திகள் அருகில் நிற்க எப்படித்தான் துணிந்து வருகிறார்களோ தெரியவில்லை. குடித்துவிட்டு சுவாமி தூக்க வருபவர்களைக் கோவில் நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது?

சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல்லக்கின் உள்ளே, சிலர் குடித்துவிட்டுக் கிடந்ததைச் செய்தித் தாளில் பார்த்தோம். அதன் பின்னர் கோவிலார் என்ன விசாரணை செய்தார்கள் என்பதோ என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றோ மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஸ்ரீவாஞ்சியம் கோவில் வளாகத்திற்குள் உள்ள நிர்வாக அதிகாரியின் அறையில் இப்படிப்பட்ட செயல்கள் நடந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு அறநிலையத்துறை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது அந்த வாஞ்சிநாதப் பெருமானுக்கே  தெரியும்.

கார்த்திகை ஞாயிறுகளில் நம்பிக்கையோடு செல்லும் பக்தர் கூட்டம் இம்முறைகேட்டை ஏன் தட்டிக் கேட்பதில்லை? உள்ளூர்க் காரர்களும் ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை? மடாதிபதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. இதில் அவர்களது பங்கு முக்கியம் இல்லையா? ஆர்வலர்கள் பலர் முகநூலில் கருத்துத் தெரிவிப்பதோடு சரி. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் ஏற்படப்போவதில்லை. களத்தில்  இறங்கி எதிர்க்க வேண்டிய காலம் இது. முன்னின்று நடத்துவார் எவரும் இல்லாதது குற்றத்தை மறைமுகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது போல இருக்கிறது.  இந்த அக்கிரமத்தைப் பத்திரிக்கையாவது வெளிக்கொண்டு வந்ததால் அரசின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உண்டு. அப்பத்திரிகைக்கு நமது நன்றி.

சேவார்த்திகள் தங்களுக்கு உள்ள உரிமைகளை  மறந்து விடுவது நல்லதல்ல. கோவில் வளாகத்துள் செருப்போடு திரிபவர்களையும், எச்சில் துப்புவோரையும்,திருக் குளத்தை அசுத்தப்படுத்துவோரையும் ,மலஜலம் கழிப்போரையும் சீட்டு விளையாடுவோரையும், குடிபோதையில் வருவோரையும் தட்டிக் கேட்கத் தயங்கம் காட்ட வேண்டாம். இதையெல்லாம் அவர்கள் வேறு எங்காவது செய்து தொலையட்டும். ஆலயத்தின் புனிதம் கெடும்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காணாதது போல் நமக்கேன் என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு வந்தது போதும். இனியாவது தட்டிக்  கேட்போம். திருத்துவோம். கோயில்களின் புனிதம் காப்போம்.நல்ல சமுதாயம் உருவாக நம்மால் ஆனதைச் செய்வோம்.  

No comments:

Post a Comment